A Promised Land

27 அக்டோபர் 2014

சினிமா என்பது வெறும்பொழுதுபோக்கு ஊடகம் மாத்திரமா?


சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு ஊடகம் என்ற ரீதியிலேயே இந்தியர்கள் சினிமாவை அணுகுகின்றார்கள். ஆனால் சினிமா என்பது வெறுமனே ஒரு பொழுதுபோக்கு ஊடகமா என்ற கேள்வியினை கேட்கவேண்டிய நேரம் இது. சினிமா என்றால் பொழுதுபோக்கு ஊடகம் என்ற மாயையை தவறான எண்ணத்தினை மக்கள் மத்தியில் புகுத்தியவர்கள் யார்? ஏன் அவ்வாறு மாற்றினார்கள் என்பதற்கு பின்னால் பல அரசியல் காரணங்கள் புதைந்து கிடக்கும் என்பதுதான் உண்மை.

சினிமா என்பது ஒரு இனத்தின் அரசியலைப் காத்திரமாக பேசும் கலை. உண்மையிலே கலை என்பது காலத்தின் கண்ணாடி. ஒரு இனத்தின் வாழ்வியலை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தெரியப்படுத்தவும் அரசுகளையும் அதிகாரத்தவர்களையும் கேள்விகேட்கக்கூடிய ஒரு மிகப்பலம்வாய்ந்த ஊடகம். இந்த சினிமா என்ற மிகமுக்கியமான அசையும் காட்சி ஊடகம் 20ம் நூற்றாண்டின் லுமினஸ் சகோதரர்களின் மிகமுக்கியமான கண்டுபிடிப்பு. இந்த சினிமாவால் பல அரசுகளே ஆட்டம் கண்டிருக்கின்றன. பல இயக்குனர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார் பலர் நாடுகடத்தப்பட்டிருக்கின்றார்கள் அத்தோடு படைப்புக்கள் அதிகார வர்க்கத்தினால் தடை செய்யப்பட்டிருக்கின்றன. இவை உலக சினிமா வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றன. சினிமா ஒரு பொழுதுபோக்கு ஊடகம் என்றால் ஏன் இவ்வளவு மோசமான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கவேண்டும் என்ன கேள்வி இயல்பாகவே சினிமா தொடர்பாக சாதாரண அறிவுள்ள ஒருவருக்கு எழவேண்டும்

இந்தியாவில் சினிமாவை அரசியல் காரணங்களுக்காக பொழுதுபோக்கு ஊடகமாக மாற்றி வைத்திருக்கின்றார்கள். ஒரு நல்ல சினிமா என்பது பார்வையாளனுடைய சிந்தனையை இன்னொருகட்டத்திற்கு தூண்டிவிடவேண்டும். அதுவே நல்ல சினிமா. தமிழ் சினிமாவின் ஆரம்ப கட்டங்களில் நடிகர்கள் பெரிய திரையில் சண்டைபிடிப்பார்கள் பார்வையாளர்கள் அதை பார்ப்பார்கள். ஆனால் இன்று நடப்பது என்ன இரசிகர்கள் நடிகர்களுக்காக பிரிந்து தங்களுக்கிடையில் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள் நடிகர்கள் அமைதியாக இவற்றை பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இதற்கு காரணம் யார்? யார் இதற்கு பொறுப்புகூறவேண்டும்? இன்றும் தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் என்று கேட்டால் 70 களில் 80 களில் வெளிவந்த படங்களையே பெரும்பாலானோர் கூறுவார்கள் காரணம் என்ன அந்தக் காலப்பகுதியில் வெளிவந்த திரைப்படங்கள் தரமானவையாகவும் காத்திரமான படைப்புக்களாகவும் இருந்தன. இன்று வெளிவரும் திரைப்படங்கள் வெறும் வன்முறையினையையும் ஹீரோயிசத்தையும் பெண்களின் உடலையும் சதையையும் முன்னிறுத்தியே வெளிவந்துகொண்டிருக்கின்றன. அண்மையில் புதிய சில இளம் இயக்குனர்கள் நம்பிக்கை தருகின்றனர் ஆனாலும் அவர்களும் எவ்வளவுநாள் இந்த மாயையை தாக்குப்பிடிப்பார்கள் என்பது கேள்விக்குரிய விடயம்தான்.

இந்தியாவில் கலையை கொலைசெய்து இன்று அதை வியாபாரமாக்கிவிட்டார்கள். ஒருசில நாட்களில் பலநூறுகோடி சம்பாதிக்கும் வழியாகவே சினிமாவை பயன்படுத்துகின்றார்கள். பார்வையாளர்களுடை பலவீனங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி  இவற்றை செய்வது வியாபாரிகளுக்கு இலகுவாக இருக்கின்றது. ஒரு சில சமூகப்பொறுப்புள்ள இயக்குனர்களைத்தவிர மற்ற எல்லோருமே இயக்குனர் என்ற நிலையிலிருந்து விடுபட்டு வியாபாரிகளாகவே இன்று திரைப்படங்களை இயக்கிக்கொண்டிருக்கின்றார்கள். மக்கள் இந்த மாயையிலிருந்து விடுபட்டு தெளிவு பெற்றால் மாத்திரமே நல்ல காத்திரமான சினிமாவை நாங்கள் பார்க்கமுடியும்.



vathees@gmail.com

26 அக்டோபர் 2014

இனி அவனுக்கு மீண்டும் விருது

முதலாவது ஹிரு கோல்டன் விருதுகள் 2014 விழா நேற்று கொழும்பில் இடம்பெற்றது இந்த முதலாவது விருதுவழங்கும் விழாவில் கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையில் வெளிவந்த திரைப்படங்களில் சிறந்தவை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டன. இந்த விழாவில் பொலிவூட் நாயகர்கள் விவேக் ஒப்ராய் பிபாஷாபாசு அனில் கபூர் போன்றவர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.



இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் 2012ல் இலங்கையில் தலைசிறந்த இயக்குனாரன அசோக ஹந்தகமவின் நெறியாள்கையில் வெளிவந்த “இனி அவன்” தமிழ்த் திரைப்படத்துக்கு 5 விருதுகள் கிடைத்திருந்தது. இந்தப்படத்தில் நடித்த தர்ஷன் தர்மராஜ் சிறந்த நடிகருக்கான விருதினையும், நிரஞ்சனி சண்முகராஜா சிறந்த துணை நடிகைக்கான விருதினையும் அஜித் ராமநாயக்க சிறந்த படத்தொகுப்புக்கான விருதினையும் அசோக ஹந்தகம சிறந்த இயக்குனருக்கான விருதினையும் பெற்றனர். அத்தோடு சிறந்த படமாக இனி அவன் திரைப்படமும் விருது பெற்றது.                                                      
                                                                                                                         Asoka Handagama




                                                       விருது வென்ற தர்ஷன் மற்றும் நிரஞ்சனி


இனி அவன் திரைப்படம் 2012ம் ஆண்டு கான்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டதோடு சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ரொரொண்டோ, பேர்ளின், டோக்கியோ, போன் பல சர்வதேச திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

* இலங்கையின் சினிமாவில் ஒரு தமிழன் சாதிக்கின்றான் எனும்போது மிகவும் பெருமையாக இருக்கின்றது

23 அக்டோபர் 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வைக்கோற்பட்டறை நாயா?


மேலே தலைப்பில் குறிபிபட்ட விடயம் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வெளிப்படையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சித்த விடயம். இலங்கையின் கடந்த வார பீக் செய்திகள் எல்லாம் யாழ்ப்பாணத்திற்கான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விஜயமும் யாழ்தேவியின் மீள்வருகையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புறக்கணிப்பும்தான்.



இலங்கை ஜனாதிபதி தன்னுடைய அரசியல் செல்வாக்கை தென்னிலங்கையில் அதிகரித்துக்கொள்ளவும் அடுத்த ஆண்டில் இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலை கருத்தில் கொண்டுமே தன்னுடைய யாழ் விஜயத்தினை ஏற்பாடு செய்திருக்கின்றார் என்பது பலருடைய கருத்து. அங்கே இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டங்களில் அவர் தெரிவித்த கருத்துக்களும் மேலுள்ள கூற்றுக்கு மேலும் வலுச் சேர்ப்பதாகவுமே காணப்பட்டது. யாழ்தேவி பயணத்தினை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தயை ஊடகங்கள் முதன்மையாக காட்டியிருந்தாலும் அதையும் தாண்டி பல செயற்திட்டங்களை அவர் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்திருந்தார். அவற்றில் பாடசாலைகளுக்கு ஆய்வுகூடங்கள் மற்றும் பல திட்டங்கள் என்பவை அடங்கும். இவை பெரிதாக ஊடகங்களால் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் ஏற்றுக்கூடியவையா? 



இதேவேளை வடக்கு மாகாண சபையினை தன்னுடைய கையில் வைத்திருக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஜனாதிபதியின் இந்த யாழ் விஜயத்தினை வெளிப்படையாகவே புறக்கணித்திருந்தது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்போ எம்பிக்களோ வடமாகாணசபை உறுப்பினர்களோ யாருமே எந்த வித நிகழ்வுகளிலும் பங்கெடுக்கவில்லை. ஆனால் வடமாகாணசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் நிகழ்வுகளில் பங்கெடுத்தனர்.


யுத்தம் முடிந்த பின்னர் மனித சிவில் உரிமைகள் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை மற்றும் இராணுவ பிரசன்னம் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் காணப்படுகின்றது இதுபோன்ற நிலையில் மகிந்தவின் விஜயம் அரசியலை அடிப்படையாக கொண்டது ஆகவேதான் இவ்விஜயத்தினை புறக்கணிக்கின்றோம் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். இதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கலாம் ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வடமாகாண அபிவிருத்திக்கூட்டத்தில் பங்குபற்றாமல் விட்டது விமர்சிக்கவேண்டிய ஒன்று. சிவில் உரிமைகள் கிடைக்கவில்லை எனப்போரடுவது ஏற்கத்தக்கதுதான் ஆனால் அதைக்காட்டி மக்கள் வாழம் பிரதேசங்களில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்பாடுகளில் பங்குபற்றாமல் இருப்பது விமர்சிக்க வேண்டியது.


வடக்கின் காப்பட் வீதிகளில் தாங்கள் சொகுசாக பயணிக்க சொகுசு வாகனங்களை அரசாங்கத்திடம் கேட்டு வாங்குவதில் வடமாகாணசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இருக்கின்ற ஆர்வம் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டு பெற்றுக் கொள்வதற்கு அல்லது பெற்றுக் கொடுப்பதற்கு இல்லாமல் இருக்கின்றது. 


என்ன நடந்தாலும் மக்கள் மஹிந்தவுக்கு வாக்களிக்கமாட்டார்கள் டக்ளசுக்கு வாக்களிக்கமாட்டார்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பான (இலங்கை தமிழரசு கட்சி) தமக்கே வாக்களிப்பார்கள் என்ற ஒரு நம்பிக்கையினை வைத்துக்கொண்டு தமிழரசு கட்சியினர் எழுந்தமானமாக செயற்படுகின்றனர். ஆனால் மக்கள் எவ்வளவுநாள்தான் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பின்னாலே போவார்கள் என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால் தமிழர்கள் தாங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதை மிகத் தெளிவாக தெரிந்து வைத்திருக்கின்றார்கள். வேறு வழிகள் இல்லாத காரணத்தினால் விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களிக்கின்றார்கள் என்பதுதான் உண்மை.


இலங்கைத் தமிழரசு கட்சியின் தமிழீழ கனவில் சிக்கி சின்னாபின்னமாகி இறுதியில் அழிந்துபோனது அப்பாவி மக்களும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும்தான். அந்த அழிவு போர் எம்மோடே போகட்டும் எங்களுடைய எதிர்கால சந்ததிக்கு வேண்டாம் என்பதுதான் இன்று இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களின் எதிர்பார்ப்பு. அதற்கு இன்றைய நவீனகால அரசியலை சமாளிக்கும் திறனுடைய பலமான தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் அணியொன்று தமிழர்களுக்கு தேவை. அதுதான் காலத்தின் கட்டாயம்கூட. அவ்வாறு ஒரு இளைய அணியொன்று  அரசியலில் எழுமானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவு இறுதி செய்யப்படு புதிய அரசியல் எழுற்சி ஒன்று ஏற்படும். ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற நிலையில் தமிழர்கள் இன்று இருக்கின்றார்கள். காரணம் இன்றைய நாட்டின் சூழல் பலமான இளைஞர் அணியொன்றை அரசியலில் கட்டியெழுப்ப சந்தர்ப்பத்தினை வழங்குமா என்பது முக்கியமான கேள்வி. அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்ற பழமொழிதான் இந்த இடத்தில் எனக்கு நினைவுக்கு வருகின்றது.

கத்தி... தமிழர்களுக்கு நிலத்தடி நீரின் அருமை இனியாவது புரியுமா?

கத்தி படம் பார்த்துவிட்டேன். தனிப்பட்ட ரீதியில் எனக்கு இந்தப் படம் பிடித்திருக்கின்றது காரணம் படத்தினுடைய பிரதான கரு. (இந்த கதையினை கோபி என்பவரிடமிருந்துமுருகதாஸ் 4 வருடங்களுக்கு முன்னர் களவாடியுள்ளாராம். அதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்குத்தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகளும் நடைபெற்றதாம். 

அடுத்த உலகப்போர் என்ற ஒன்று வருமானால் அது நீருக்காகவே இருக்கும் என்று ஆய்வாளர்கள் பொதுவாக கூறுகின்றார்கள். அது உண்மையும்கூட. நிலத்தடி நீர் என்ற மிக்பெரிய கருவினை மைய்யமாக வைத்து இந்தக் கதை முருகதாஸினால்(??????) எழுதப்பட்டிருக்கின்றது. இலங்கையில் இருக்கின்றவர்களுக்கு நிலத்தடி நீர் தொடர்பான அறிவு எந்தளவுதூரம் இருக்கு என்று எனக்குத் தெரியாது ஆனால் காலம்கடந்து வந்திருந்தாலும் இந்தப் படம் நிலத்தடி நீர் தொடடர்பாக  தமிழ்நாட்டின் சமூகமட்டத்தில் ஒரு பரவலான கலந்துரையாடலை ஏற்படுத்த வேண்டும். அதன்மூலம் தமிழ்நாட்டுக்கு கீழேயுள்ள எஞ்சியுள்ள நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட வேண்டும்

விஜய் இந்த Powerful கதையினை தனது அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தியிருக்கின்றார் படத்தில் வன்முறையினையையும் ஹீரோயிஸத்தையும்  தவிர்த்திருக்கலாம்

எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் ஒரு Corporate  கம்பனி இன்னுமொரு Corporate கம்பனிக்கு எதிராக எப்போதும் வேலைசெய்யாது ஆனால் லைக்கா என்ற மிகப்பெரிய Corporate கம்பனி இந்த குளிர்பான மற்றும் மெதேன் வாயு உற்பத்தியில் ஈடுபடும் உலகலாவிய ரீதியில்மிகப் பலம்பொருந்திய Corporate நிறுவனங்களுக்கு எதிரான கதையினைகூறும் படத்தை எடுத்திருப்பதுதான் ஆச்சரியமளிக்கின்றது.

விஜய் என்ற நடிகனை தவிர்த்து எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக உலகளவில் இருக்கப்போகும் இந்த நிலத்தடிநீர்ப் பிரச்சனையினை காலதாமதமாக கையிலெடுத்திருந்தாலும் கோபி என்றவரிடம் இந்த கதையினை களவாடி இந்த கதையினை இயக்குனர் முருகதாசு  இயக்கியிருக்கின்றார்.

இந்த திரைப்படம் சமூகமட்டத்தில் அதுவும் குறிப்பாக இந்தியாவின் கிராமங்கள் நகரங்களில் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை தோற்றுவிக்கவேண்டும் அதனூடாக மிகவும் பெறுமதிவாய்ந்த அத்தியாவசியமான நீர் அதுவும் நிலத்தடி நீர் தொடர்பான விளிப்புணர்வு ஒன்று ஏற்படுத்தப்படவேண்டும் என்பது நிலத்தடி நீர் பாதுகாக்கப்படவேண்டும் என்று சிந்திக்கின்ற என்னுடைய அவா.

*இந்தக் கதையினை சொந்தமாக எழுதிய கோபி என்ற அந்த சமூக சிந்தனைவாதிக்கு  ஒரு சல்யூட் (இது தொடர்பான கோபியினுடைய நண்பரின் பேஸ்புக் பதிவு - http://goo.gl/F0L5sq)

*கதையினை களவாடிய முருகதாஸிற்கு ஒரு *^*&#@#%$@ 

22 அக்டோபர் 2014

ஒரு மனிதனின் நடத்தையில் செல்வாக்கு செலுத்துபவை

உகண்டாவை ஆட்சி செய்த இடி அமீனைப் பற்றி பிரபு சங்கர் எழுதிய புத்தகத்தை 3வது முறையாகவும் வாசித்து முடித்திருக்கின்றேன். இதற்கு காரணம் சாதரணமாக இருந்த ஒருவன் பின்னர் இராணுவ வீரனாகி இராணுவ கொமாண்டர் ஆகி பின்பு உகண்டாவினுடைய தலையெழுத்தையே மாற்றியிருக்கின்றான் என்றால் அது எப்படி சாத்தியம் என்ற தேடல்தான் மட்டுமல்லாது அவனுடைய கொடூர செயல்களுக்கு பின்னால் இருந்த காரணிகளை ஆராய வேண்டும் என்ற ஆவலும்தான்.


ஒருவனுடைய குணவியல்புகளை தீர்மானிப்பதில் அவனது குடும்பம் அவனது குல கோத்திரம் மற்றும் அவன்சார்ந்த இனக்குழுவினரது வாழ்க்கைமுறை மற்றும் அவர்களுடைய கலை கலாச்சாரம் இவை எல்லாமே அடங்குகின்றது. இடி அமீன் ஒரு மோசமான மனித மாமிசம் சாப்பிடும் சர்வதிகாரியாக பல அட்டூழியங்களை செய்த ஒரு கொடுங்கோலனாக இருப்பதற்கு காரணமும் அவனுடைய இனக்குழுவின் வாழ்க்கை முறையே என்பது புலனாகின்றது. அவனுடைய இனக்குழுவில் இரத்தம் குடிப்பது கொலை செய்வது போன்றவை பெரிய வியமாக காணப்படவே இல்லை. சிறுவயதுமுதலே அவற்றை நேரிலே கண்டுவந்திருந்த அவனுக்கு உகண்டாவின் ஆட்சியினை கைப்பற்றியவுடன் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள எவ்வளவு கொடூரமான செயல்களை செய்யமுடியுமோ அவ்வளவையும் செய்வதற்கு இலகுவாக முடிந்தது. அவன் மனித மாமிசம் உண்டதற்குகூட அவர்களது இனக்குழுவில் நடைமுறையில் இருந்து மூட நம்பிக்கையே இதற்கு காரணமாக இருந்திருக்கின்றது.


ஒரு மனிதனுடைய நடத்தையில் அவனைச் சார்ந்த சமூகம் பாரிய செல்வாக்கை செலுத்துகின்றது என்பதுதான் உண்மை. சமூகம் என்னும் போது அவனுடைய குடும்பமும் அடக்கம்.

20 அக்டோபர் 2014

ஐய்யய்யோ கத்தி(கள்)... இதுதான் றியல் கத்தி

தலைப்பைப் பார்த்து என்னவோ ஏதாவென்று பதறியடிச்சு ஓடிந்த அனைவருக்கும் நன்றிகள்

இங்கே நான் பகிரும் இந்த வீடியோ இலங்கையில் தயாரிக்கப்பட்டு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுவென்ற குறும் திரைப்படம். இதனுடைய பெயர் கத்திகள். இதை 2008ம் ஆண்டு என்னுடைய நண்பர் ஆனந்த ரமணன் இயக்கியிருந்தார்.

14 அக்டோபர் 2014

How Old Are You?


மேலே உள்ள தலைப்பு அண்மையில் மலையாள சினிமாவில் வெளிவந்த மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று. இரண்டு நாட்களுக்கு முன்னம் இந்தத் திரைப்படத்தினைப் பார்த்தேன். படம் பிடித்துப் போய்விட்டது. இன்றுதான் அதைப்பற்றி கிறுக்குவதற்று நேரம் கிடைத்தது. இது அந்தப் படத்தினைப் பற்றி விமர்சனம் அல்ல அந்தப் படம் தொடர்பாக நான் கிறுக்கியவை. 


தெற்காசியாவில் அதுவும் இலங்கை மற்றும் இந்தியாவில் பெரும்பாலும் ஆணாதிக்க சமூகங்க கட்டமைப்புக்களுடன்தான் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். பெண்கள் மனைவி என்ற ஸ்தானத்தை திருமணத்தின் மூலம் பெற்றுக்கொண்டு கணவனுக்கு சேவை புரிபவளாகளும் பிள்ளைகளை பெற்று பராமரிப்பவளாகவுமே பெரும்பாலும் இருந்து கொண்டிருக்கின்றாள். படித்து வேலையில் இருப்பவர்கள்கூட இந்த ஆணாதிக்க சமூகத்தின் இறுக்கமான கட்டமைப்புக்களுக்குள் சிக்குண்டு தங்களுடைய கனவுகளை குடும்பத்திற்காக மூட்டைகட்டி ஒரு மூலையில்போட்டுவிட்டு வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். விதிவலக்காக பல பெண்கள் இந்த ஆணாதிக்க சமூகத்திலிருந்து வெளியே வந்து பெண்களுக்கான உரிமைகளை குடும்பத்திலும் சமூகத்திலும் வென்றெடுக்க போராடிக்கொண்டிருக்கின்றார்கள். அதில் சில பெண்கள்  ஏனைய பெண்களுக்கு கட்டமைப்பிலிருந்து வெளியே வருவதற்கு முன்மாதியாகவும் இருக்கின்றார்கள். இது ஒரு மிகப்பெரிய பரந்துபட்ட தலைப்பு. இந்தத் தலைப்பினை பிரதான கருப்பொருளாக எடுத்துக்கொண்டு பெண்களுக்கு சமூகக் கட்டமைப்புகளிலிருந்து வெளியே வருவதற்கான ஒரு ஆரம்ப்பப் புள்ளியை அல்லது ஒரு உந்துசக்தியை வழங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் இந்த “How Old Are You?”. 



வருவாய் துறை அலுவலகத்தில் சாதாரண கிளாக்காக பணிபுரியும் நிருபமாவின் கணவன் ராஜீவ்ஆகாசவானிவானொலி அறிவிப்பாளன். அவனுடைய நீண்டகால கனவு  அயர்லாந்து நாட்டுக்கு சென்று குடியேற வேண்டும் என்பதே. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள். நிருபமா தனது கும்பமே தனக்கு எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருப்பவள். அவளுடைய வயதை காரணம்காட்டி அயர்லாந்து செல்வதற்கான விண்ணப்பம் நிராகரிககப்படுகின்றது. அதேவேளை எதிர்பாராத விதமாக நிருபமா தன்னுடைய மகள் ஊடாக கேட்ட ஒரு கேள்வி காரணமாக இந்தியாவின் ஜனாதிபதி நிருபமாவை சந்திக்க விருப்பப்படுகின்றார். ஜனாதிபதியினை சந்திக்கச்செல்லும் நிருபமா எதிர்பாராமல் நடந்த சம்பவம் ஒன்றின் காரணமாக ஜனாதிபதியை நேரில் சந்தித்தும் அவருடன் பேசமுடியாமல் போய்விடுகின்றது. இதன் காரணணமாக அவர் சமூகவலைத்தளங்களில் கேலிக்கு உட்படுகின்றாள். இதேவேளை நிருபமாவின் கணவனுக்கும் மகளுக்கும் அயர்லாந்து செல்வதற்கான விசா கிடைக்கின்றது. இருவரும் நிருபமாவை விட்டுவிட்டு அயர்லாந்து பயணிக்கின்றனர். பின்னர் நிருபமாவினுடைய பள்ளித்தோழி ஒருவரை சந்திக்கும் நிருபமா அதன்மூலம் கல்லூரிக்காலங்களில் அவள் ஒரு சிறந்த ஆளுமையுள்ள ஒருத்தியாக இருந்ததையும் தற்போது திருமணம் முடித்து குடும்பத்துக்காகவே வாழும் ஒரு சாதாரண பெண்ணாக மாறிவிட்டதையும் காண்கின்றாள். மீண்டும் நிருபமாவினுடைய ஆளுமையை வெளியே கொண்டுவர அந்த நண்பி முயற்சிக்கின்றாள். அதிலே வெற்றியும் அடைகின்றாள். இதன் பின்னர் நிருபமா சமூகத்தில் மிகப்பெரிய பொறுப்புக்களை முன்னெடுக்கும் நிலைக்கு உயரும் நிலையினை அடியும்போது அயர்லாந்திலிருக்கும் கணவன் ஊர் திரும்பி அவளுக்கு அயர்லாந்து செல்ல விசா கிடைத்துவிட்தென்றும் மகளுக்கு சரியான உணவு இல்லை ஆகவே நிருபமா வந்தால்எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுகின்றான். அவள் குடும்பத்திற்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு அயர்லாந்து போகின்றாளா அல்லது தொடர்ந்தும் இந்தியாவிலே இருந்து தன்னுடைய கனவுகளை நனவாக்கின்றாள் என்பதுதான் படத்தினுடைய சாராம்சம். 


கேரளாவில் மட்டுமல்ல பொதுவாக தெற்காசியாவுக்கும் பொதுவான இந்த பரந்துபட்ட தலைப்பினை மிக அழகாக Bobby Sanjay திரைக்கதையாக்க அதை திரைப்படமாக கொடுத்திருக்கின்றார் இயக்குனர் Rosshan Andrrews
இந்தப்பட்ம் ஆணணாதிக்க கட்டமைப்புக்குள் சிக்கி தன்னுடைய கனவுகளையும் ஆசைகளையும் மூலையில் போட்டு வைத்திருக்கும் பெண்கள் தங்களுடைய நிலையினை உணரவும் பெண்கள் சாதிப்பதற்கு அவர்களுடைய வயது ஒன்றும் பெருட்டே இல்லை என்பதையும் 140 நிமிடங்களுக்குள் மிக அழகாக காட்டியிருக்கன்றார் இயக்குனர். இதில் நிருபமா கதாபாத்திரத்திற்கு வரும் மஞ்சு வாரியர் தன்னுடைய நடிப்பினால் நிருபமா பாத்திரத்திற்கு உயிர்கொடுத்திருக்கின்றார். அத்தோடு சமூகத்தில் காணப்படும் மிகப்பெரிய சிக்கலுடைய பெண்கள் அடக்குமுறை மற்றும் ஆணாதிக்க மனோநிலை மற்றும் கட்டமைப்பு பிரச்சனையை மிக எளிதாக இந்தப் படத்தின்மூலம்  காட்டி அவற்றை தகர்த்துக்கொண்டு பெண்கள் சமூக மட்டத்திற்கு எவ்வாறு உயரலாம் என்பதை இந்தப்படம் மிகத்தெளிவாக காட்டியிருக்கின்றது. கட்டாயம் மலையாளம் பேசுவோர் மாத்திரமல்லாது எல்லா மொழி பேசுபவர்களும் பார்க்கவேண்டிய ஒரு மிகச்சிறந்த படம்.