A Promised Land

தமிழ்நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 அக்டோபர் 2014

சினிமா என்பது வெறும்பொழுதுபோக்கு ஊடகம் மாத்திரமா?


சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு ஊடகம் என்ற ரீதியிலேயே இந்தியர்கள் சினிமாவை அணுகுகின்றார்கள். ஆனால் சினிமா என்பது வெறுமனே ஒரு பொழுதுபோக்கு ஊடகமா என்ற கேள்வியினை கேட்கவேண்டிய நேரம் இது. சினிமா என்றால் பொழுதுபோக்கு ஊடகம் என்ற மாயையை தவறான எண்ணத்தினை மக்கள் மத்தியில் புகுத்தியவர்கள் யார்? ஏன் அவ்வாறு மாற்றினார்கள் என்பதற்கு பின்னால் பல அரசியல் காரணங்கள் புதைந்து கிடக்கும் என்பதுதான் உண்மை.

சினிமா என்பது ஒரு இனத்தின் அரசியலைப் காத்திரமாக பேசும் கலை. உண்மையிலே கலை என்பது காலத்தின் கண்ணாடி. ஒரு இனத்தின் வாழ்வியலை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தெரியப்படுத்தவும் அரசுகளையும் அதிகாரத்தவர்களையும் கேள்விகேட்கக்கூடிய ஒரு மிகப்பலம்வாய்ந்த ஊடகம். இந்த சினிமா என்ற மிகமுக்கியமான அசையும் காட்சி ஊடகம் 20ம் நூற்றாண்டின் லுமினஸ் சகோதரர்களின் மிகமுக்கியமான கண்டுபிடிப்பு. இந்த சினிமாவால் பல அரசுகளே ஆட்டம் கண்டிருக்கின்றன. பல இயக்குனர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார் பலர் நாடுகடத்தப்பட்டிருக்கின்றார்கள் அத்தோடு படைப்புக்கள் அதிகார வர்க்கத்தினால் தடை செய்யப்பட்டிருக்கின்றன. இவை உலக சினிமா வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றன. சினிமா ஒரு பொழுதுபோக்கு ஊடகம் என்றால் ஏன் இவ்வளவு மோசமான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கவேண்டும் என்ன கேள்வி இயல்பாகவே சினிமா தொடர்பாக சாதாரண அறிவுள்ள ஒருவருக்கு எழவேண்டும்

இந்தியாவில் சினிமாவை அரசியல் காரணங்களுக்காக பொழுதுபோக்கு ஊடகமாக மாற்றி வைத்திருக்கின்றார்கள். ஒரு நல்ல சினிமா என்பது பார்வையாளனுடைய சிந்தனையை இன்னொருகட்டத்திற்கு தூண்டிவிடவேண்டும். அதுவே நல்ல சினிமா. தமிழ் சினிமாவின் ஆரம்ப கட்டங்களில் நடிகர்கள் பெரிய திரையில் சண்டைபிடிப்பார்கள் பார்வையாளர்கள் அதை பார்ப்பார்கள். ஆனால் இன்று நடப்பது என்ன இரசிகர்கள் நடிகர்களுக்காக பிரிந்து தங்களுக்கிடையில் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள் நடிகர்கள் அமைதியாக இவற்றை பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இதற்கு காரணம் யார்? யார் இதற்கு பொறுப்புகூறவேண்டும்? இன்றும் தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் என்று கேட்டால் 70 களில் 80 களில் வெளிவந்த படங்களையே பெரும்பாலானோர் கூறுவார்கள் காரணம் என்ன அந்தக் காலப்பகுதியில் வெளிவந்த திரைப்படங்கள் தரமானவையாகவும் காத்திரமான படைப்புக்களாகவும் இருந்தன. இன்று வெளிவரும் திரைப்படங்கள் வெறும் வன்முறையினையையும் ஹீரோயிசத்தையும் பெண்களின் உடலையும் சதையையும் முன்னிறுத்தியே வெளிவந்துகொண்டிருக்கின்றன. அண்மையில் புதிய சில இளம் இயக்குனர்கள் நம்பிக்கை தருகின்றனர் ஆனாலும் அவர்களும் எவ்வளவுநாள் இந்த மாயையை தாக்குப்பிடிப்பார்கள் என்பது கேள்விக்குரிய விடயம்தான்.

இந்தியாவில் கலையை கொலைசெய்து இன்று அதை வியாபாரமாக்கிவிட்டார்கள். ஒருசில நாட்களில் பலநூறுகோடி சம்பாதிக்கும் வழியாகவே சினிமாவை பயன்படுத்துகின்றார்கள். பார்வையாளர்களுடை பலவீனங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி  இவற்றை செய்வது வியாபாரிகளுக்கு இலகுவாக இருக்கின்றது. ஒரு சில சமூகப்பொறுப்புள்ள இயக்குனர்களைத்தவிர மற்ற எல்லோருமே இயக்குனர் என்ற நிலையிலிருந்து விடுபட்டு வியாபாரிகளாகவே இன்று திரைப்படங்களை இயக்கிக்கொண்டிருக்கின்றார்கள். மக்கள் இந்த மாயையிலிருந்து விடுபட்டு தெளிவு பெற்றால் மாத்திரமே நல்ல காத்திரமான சினிமாவை நாங்கள் பார்க்கமுடியும்.



vathees@gmail.com

03 ஜூலை 2010

உங்களுக்கு இலங்கை தமிழர் நாங்கள்தானா கிடைத்தோம் ?

"இலங்கைத்தமிழர்" தமிழ் உணர்வு" இலங்கையில் நடைபெறும் விழாக்களில் கலந்துகொள்ளும் சினிமா துறையினருக்கு தடை" "இலங்கைக்கு சென்றால் தடை" இலங்கை "இலங்கை" இவ்வாறான சொற்களை கேட்டு இணையங்களில் பார்த்து எனக்கு அலுத்துவிட்டதுடன் சம்பந்தப்பட்வர்களின்மீது கோபமும்தான் வருகின்றது. இன்று தமிழ் நாட்டில் அரசியல் செய்யவேண்டும் என்றால் ஏதோ ஒரு வகையில் இலங்கை பிரச்சனையை கையில் எடுக்க வேண்டிய நிலையில் தமிழ் நாட்டின் அரசியல் கலாச்சாரம் மாறிவிட்டதோ என எண்ணத்தோன்றும் அளவிற்கு நிலமை சென்றுவிட்டது.

இந்த எதிர்ப்பு அரசியல் கலாச்சராம் சில ஆண்டுகளுக்கு முன்னமே மிகவும் மும்முரமாக வெளித்தெரிய ஆரம்பித்தது என்றாலும் ஆரம்பம்தொட்டு சிறு சிறு எதிர்ப்புக்கள் இருந்தன ஆனாலும் இவ்வளவு தூரத்திற்கு அவை இருக்கவில்லை. எதிர்ப்புக்களால் மேலும் மேலும் துன்பப்படபோவது இங்கிருக்கும் தமிழ் மக்கள் என்பதை எல்லோரும் உணர்ந்துகொள்ள வேண்டும். வடபகுதியில் எரிக்கும் வெயிலின் மத்தியிலும் கொட்டும் மழையின் வெள்ளத்திலும் பொருளாதார ரீதியாகவும் எல்லா வகையாலும் நாளாந்தம் தங்கள் வாழ்க்கையினை நடத்துவதற்கு அம்மக்கள் படும்பாடு குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து அறிக்கைகளை வெளியிடும் தமிழ் உணர்வாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் எங்கு தெரியப்போகின்றது. இவர்களுடைய ஒரே நோக்கம் இலங்கைத்தமிழரை பயன்படுத்தி சந்தர்ப்ப அரசியல் செய்வதுதான். இந்த எதிர்ப்பரசியலுக்குள் தற்போது தமிழ் சினமாவும் சிக்கியிருப்பது பெரும் வேதனையான விடயம் என்றாலும் தமிழ் சினிமாவில் அரசியல் கலந்திருப்பது சாராதரணமான ஒன்றுதானே.

இவற்றைபற்றி பந்தி பந்தியாக எழுதுவதற்கு எனக்கு உடன்பாடு இல்லை. எனக்குள்ளும் இவர்களின் மேல் இந்த சமூகத்தின்மேல் பல உலக நியதிகளின்மேல் நியாயமான கோபம் இருக்கிறது ஆனாலும் நியாயமான கோபங்களுடன் வாழும் சாமானியன் என்று என்னால் கூறமுடியாமல் இருக்கிறது ஏனென்றால் தொழிலால் நான் ஒரு ஊடகவியலாளன். தமிழ் உணர்வாளர்களின் எதிர்புக்களை இலங்கையில் இருக்கும் பெரும்பாலான தமிழர்கள் விரும்பவில்லை என்பதையும் உங்கள் எதிர்ப்புக்களால் தொடர்ந்தும் பாதிக்கப்படபோவது இலங்கையில் இருக்கும் தமிழர்களாகிய நாங்களே என்பதை எதிர்பாளர்களும் சம்பந்தப்பட்வர்களும் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே எனது கோரிக்கை.