A Promised Land

03 ஜூலை 2010

உங்களுக்கு இலங்கை தமிழர் நாங்கள்தானா கிடைத்தோம் ?

"இலங்கைத்தமிழர்" தமிழ் உணர்வு" இலங்கையில் நடைபெறும் விழாக்களில் கலந்துகொள்ளும் சினிமா துறையினருக்கு தடை" "இலங்கைக்கு சென்றால் தடை" இலங்கை "இலங்கை" இவ்வாறான சொற்களை கேட்டு இணையங்களில் பார்த்து எனக்கு அலுத்துவிட்டதுடன் சம்பந்தப்பட்வர்களின்மீது கோபமும்தான் வருகின்றது. இன்று தமிழ் நாட்டில் அரசியல் செய்யவேண்டும் என்றால் ஏதோ ஒரு வகையில் இலங்கை பிரச்சனையை கையில் எடுக்க வேண்டிய நிலையில் தமிழ் நாட்டின் அரசியல் கலாச்சாரம் மாறிவிட்டதோ என எண்ணத்தோன்றும் அளவிற்கு நிலமை சென்றுவிட்டது.

இந்த எதிர்ப்பு அரசியல் கலாச்சராம் சில ஆண்டுகளுக்கு முன்னமே மிகவும் மும்முரமாக வெளித்தெரிய ஆரம்பித்தது என்றாலும் ஆரம்பம்தொட்டு சிறு சிறு எதிர்ப்புக்கள் இருந்தன ஆனாலும் இவ்வளவு தூரத்திற்கு அவை இருக்கவில்லை. எதிர்ப்புக்களால் மேலும் மேலும் துன்பப்படபோவது இங்கிருக்கும் தமிழ் மக்கள் என்பதை எல்லோரும் உணர்ந்துகொள்ள வேண்டும். வடபகுதியில் எரிக்கும் வெயிலின் மத்தியிலும் கொட்டும் மழையின் வெள்ளத்திலும் பொருளாதார ரீதியாகவும் எல்லா வகையாலும் நாளாந்தம் தங்கள் வாழ்க்கையினை நடத்துவதற்கு அம்மக்கள் படும்பாடு குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து அறிக்கைகளை வெளியிடும் தமிழ் உணர்வாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் எங்கு தெரியப்போகின்றது. இவர்களுடைய ஒரே நோக்கம் இலங்கைத்தமிழரை பயன்படுத்தி சந்தர்ப்ப அரசியல் செய்வதுதான். இந்த எதிர்ப்பரசியலுக்குள் தற்போது தமிழ் சினமாவும் சிக்கியிருப்பது பெரும் வேதனையான விடயம் என்றாலும் தமிழ் சினிமாவில் அரசியல் கலந்திருப்பது சாராதரணமான ஒன்றுதானே.

இவற்றைபற்றி பந்தி பந்தியாக எழுதுவதற்கு எனக்கு உடன்பாடு இல்லை. எனக்குள்ளும் இவர்களின் மேல் இந்த சமூகத்தின்மேல் பல உலக நியதிகளின்மேல் நியாயமான கோபம் இருக்கிறது ஆனாலும் நியாயமான கோபங்களுடன் வாழும் சாமானியன் என்று என்னால் கூறமுடியாமல் இருக்கிறது ஏனென்றால் தொழிலால் நான் ஒரு ஊடகவியலாளன். தமிழ் உணர்வாளர்களின் எதிர்புக்களை இலங்கையில் இருக்கும் பெரும்பாலான தமிழர்கள் விரும்பவில்லை என்பதையும் உங்கள் எதிர்ப்புக்களால் தொடர்ந்தும் பாதிக்கப்படபோவது இலங்கையில் இருக்கும் தமிழர்களாகிய நாங்களே என்பதை எதிர்பாளர்களும் சம்பந்தப்பட்வர்களும் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே எனது கோரிக்கை.