A Promised Land

17 மார்ச் 2013

பாலாவின் பரதேசி!



இயக்குனர் பாலா மற்றும் அவருடைய உயிரை உலுக்கும் படங்கள் தொடர்பாக பத்திரிகைகளில் கேட்டறிந்திருந்தாலும் தியட்டரில் பார்த்த அவருடைய முதற்படம் “பிதாமகன்”. உயர்தரம் படித்துக்கொண்டிருந்த காலத்தில் யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் பார்த்தேன். அதன் பின்னரே தேடிவாங்கி "சேது" மற்றும் "நந்தா" படங்களை பார்த்திருந்தேன். பிதாமகன் படம் பார்த்ததிலிருந்து அதற்குப் பிறகு வெளிவந்த நான்கடவுள், அவன் இவன் மற்றும் தற்போது வெளிவந்திருக்கும் பரதேசிவரை தியட்டரிலேயே பார்த்திருக்கின்றேன். அதுவும் பாலாவின் படங்களை நண்பர்களுடன் சென்று பார்க்காமல் தனியாகவே பார்ப்பது வழக்கம். இந்த படங்கள் எல்லாமே ஒருவகையின் என்னைப்பாதித்ததுண்டு.

பாலா போன்ற கலைப்பட இயக்குனர்கள் உண்மைகளை எடுத்து ஜதார்த்தமாகவும் சிலஇடங்களில் ஜதார்த்தத்தைதாண்டி சில காட்சிகளை அமைத்து அதனுடைய தாக்கத்தினை பார்வையாளர்களுக்கு வழங்கிவிடுவார்கள். இவர்களுடைய படம் முடிவடையும்போது பார்வையாளர்களுடைய மனதை கலங்கடித்துவிடும். அந்தவகையில் நேற்றுப் பார்த்த பரதேசி படம் என்னை மிகவும் Disturb பண்ணிவிட்டது. 
தேயிலைத்தோட்டத்து வாழ்க்கையின் ஆரம்பத்தை அல்லது அவர்கள் வெள்ளையர்களின் தேயிலைதோட்டங்களில் வேலை செய்வதற்கு தங்களது சொந்த ஊரிலிருந்த எவ்வாறு ஏமாற்றி அழைத்து வரப்பட்டார்கள் அங்கே எவ்வாறு வேலைவாங்கப்பட்டார்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பதை தனக்கே உரிய வன்முறைப்பாணியில் இந்தப்படத்தில் சொல்லியிருக்கின்றார் இயக்குனர் பாலா. 

இந்தப் படத்தில் நடித்த அதர்வா, வேதிகா, தன்ஷிகா உட்பட பெரும்பாலும் படத்திலே இருந்த எல்லோரும் தங்களது பாத்திரங்களை வெகுசிறப்பாகவே செய்திருக்கின்றார்கள். "நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு" இது இயக்குனர் பாலாவின் எல்லாப்படங்களிலுமே இருக்கின்ற ஒரு சிறப்பு.
பின்ணணி இசைதான் படத்தினுடைய மிகப்பெரிய பிரச்சனையே. பின்ணணி இசை இல்லாமலேயே இந்த படத்தினை வெளியிட்டிருக்கலாம் என்று படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது தோன்றியது எனக்கு.
சில இடங்களில் பின்ணணி இசை காட்சியுடன் ஒட்டாமலேயே வேறு ஒரு திசையில் பயணிக்கிறது. ஜீவி இப்படியான படங்களுக்கு பின்ணணி இசைவழங்குவதற்கு இன்னும் பக்குவப்படவில்லை என தோன்றுகிறது. அத்தோடு வெள்ளையர்களால் கொடுமைப்பட்டதை இன்னும் கூடுதலாக காட்டியிருக்கலாம்.  மொத்தத்தில் எல்லோரும் கட்டாயம் பார்க்கவேண்டிய உயிரினை உலுக்கும் இயக்குனர் பாலாவின் படம் பரதேசி.



அண்மையில் இயக்குனர் பாலா நடிகர்களை தாக்குவதுபோலவும் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டுவதுபோலவும் வீடியோக்கள் வெளிவந்து சர்ச்சையினை தோற்றுவித்திருக்கினறது. நானும் அந்த வீடியோவை பார்த்தேன் ஆனால் வீடியோவில் காட்டப்பட்டவை காட்சியில் வந்திருப்பவையே ஆகவே ஒரு காட்சியை எப்படி நடிக்கவேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு காட்டும்போது எடுக்கப்பட்டவீடியோக்கள்தான் அவை. மேலும் திரைப்படங்களில் பயன்படுத்தம் அந்த தடிக்களால் அடிக்கும்போது வலி ஏற்படாது சத்தம் மட்டுமேவரும் சோ அதைப்பற்றி பெரிதாக வெளியில் இருப்பவர்கள் அலட்டிக்கொள்ளவோ அல்லது அதை தூக்கிப்பிடித்துக்கொண்டு மனிதஉரிமை மீறல் என்று கூக்குரலிடவோ தேவையில்லை என்பதே இந்தத்துறைக்குள் உதவி இயக்குனராக இருக்கும் என்னுடைய கருத்து.


என்னைப் பொறுத்தளவில் பாலா போன்ற இயக்குனர்கள் அவ்வாறுதான் இருப்பார்கள். தாங்கள் நினைப்பதுபோல நடிகர்கள் நடிக்கவில்லையென்றால் பேச்சு ஏச்சுக்கள் வாங்கவேண்டி வரும் சிலவேளைகளில் அடியும் வாங்கவேண்டிவரும். ஏன் சிலவேளைகள் உதவி இயக்குனர்கள்தான் கெட்டவார்த்தை திட்டுக்களையும் அடிகளையும் வாங்கவேண்டிவரும். இதை நான் இங்கு ஏன் சொல்கின்றேன்என்றால் எல்லாம் என்னுடைய அனுபவம்தான். இலங்கையின் சிங்கள இயக்குனர் அசோக ஹந்தகமகூட நடிகர்கள் சரியாக நடிக்கவில்லையென்றால் நடிகர்களுடன் கடுமையாக நடந்துகொள்வார். சிலவேளைகளில் எங்களுடனும் கடுமையாகத்தான் நடந்துகொள்வார். இவ்வாறான இயக்குனர்கள் அவர்களுக்கு தேவையான நடிப்பை எவ்வாறாயினும் நடிகர்களை கஷ்டப்படுத்தியாவது பெறவே முயற்சிப்பார்கள் என்பதே உண்மை. ஆகவே அதைப்பற்றி வெளியிலுள்ளவர்கள் அலட்டிக்கொள்ளாமல் இருப்பதே சாலச்சிறந்தது.

02 பிப்ரவரி 2013

மதங்கள்

"மொழிதான்" ஒரு இனத்தின் அடையாளம். "மதம் அல்ல" என்பதை முதலில் எல்லோரும் புரிந்து புரிந்துகொள்ளுங்கள்.

"மக்களுக்காக உருவாக்கப்பட்ட மதங்கள்" என்பது இப்போது "மதங்களுக்காக மக்கள்"என்ற நிலையில் வந்துநிற்கின்றது. இது ஆரோக்கியமான ஒரு எதிர்கால சமூகத்திற்கு சவாலாக மாறிவிட்ட/மாறப்போகும் ஒரு பிரச்சனை.

மதங்களை கோவில்களுக்குள்ளும் தேவாலையங்களுக்குள்ளும் பள்ளிவாசல்களுக்குள்ளும் இல்லாமல் வீதிக்கும் பொதுவெளிக்குள்ளும் கொண்டுவருவதே இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம்.  புரிந்துகொள்ளுங்கள்.

24 ஜனவரி 2013

விஸ்வரூபமும் பொதுபலசேனாவும் & முஸ்லிம்களும்


ஒரு படத்தை தடை செய்வதையோ காட்சிகளை தணிக்கை என்ற ரீதியில் அகற்றுவதையோ சினிமாத்துறைக்குள் இருப்பவன் என்ற ரீதியல் மட்டுமல்லாது பொதுவான பார்வையாளனாகவும் கண்டிக்கின்றேன் வன்மையக எதிர்கின்றேன். ஒரு திரைப்படத்தை உருவாக்க ஒரு இயக்குனர் எவ்வளவு கஷ்டங்களைப்படவேண்டியிருக்கிறது ஆனாலும் சில மலினமான விடயங்களுக்காகவும் உப்புச்சப்பில்லாத காரணங்களையும் முன்நிறுத்தி அதனை முடக்க நினைப்பது முட்டாள்த்தனம்.

படம்பார்த்த ஒரு "குழு" படத்தை தடைசெய்ய கோருகிறார்கள் என்றவுடன் எந்தவித சிந்திப்புக்களும் இல்லாது படத்தை தடைசெய்யவேண்டும் எனக் கோருவது எம்முடைய இந்த உலகத்தில் இன்னமும் "சுயபுத்தியுடன்" செயற்படாது "சொல்புத்தியில்" இயங்கும் சிலரும் வாழ்கின்றார்கள் என்பதை நினைவுபடுத்த வைக்கின்றார்கள். உண்மையான முஸ்லிம்/உண்மையான கிறீஸ்வதன்/உண்மையான ஹிந்து ஒருபோதும் படைப்புக்களுடாக தான் சார்ந்த மதம்மீது தொடுக்கப்படும் விமர்சனங்களுக்காக அந்த படைப்பையே தடைசெய்ய  கோரமாட்டான்.

அந்தவகையில் நேற்று தமிழ் நாட்டில் தடைசெய்யப்பட்ட கமல் ஹாசனுடைய விஸ்வரூபம் படம் இன்று இலங்கையிலும் மறு அறிவித்தல்வரை   தடை செய்திருப்பதானது நல்ல சினிமாவை சமூகத்தில் கொண்டுவருவதற்கான முயற்சிகளை முடக்கும் நடவடிக்கைகளில் ஒன்று.

"இலங்கை அரசு படங்களை தடை செய்வதென்பது புது விடயமல்ல 2006ம் ஆண்டளவில் இலங்கையின் திரைப்பட நெறியாளர் அசோக ஹந்தகம இயக்குனரது “அக்ஷரய” என்ற ஒரு திரைப்படம் இலங்கையின் நீதித்துறைக்கு எதிராக எடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டி இலங்கை அரசங்கத்தினால் தடைசெய்யப்பட்டது. அதுமட்டுமல்லாது இயக்குனரை சிறையில் அடைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதே அரசாங்கம் அண்மையில் இலங்கையில் நீதித்துறையினை குற்றம்சாட்டியதோடு மட்டுமல்லாது நீசியரசரையும் பதவியிலிருந்து தூக்கிவீசியிருந்தது. இன்று அந்த “அக்ஷரய” திரைப்படம் வெளிவந்திருக்குமானால் அரசாங்கத்தால் அமோகமாக வரவேற்கப்பட்டிருக்கும் என்பதே உண்மை. அதை இன்றைய பத்திரிகை ஒன்றின் பேட்டியில் அன்று படத்தை தடைசெய்த அமைச்சரே அன்று தான் எடுத்த முடிவு பிழையானதொரு முடிவு என்று கருத்து தெரிவித்திருக்கின்றார்"

இந்த சம்பவத்தினை நான் ஏன் இங்கு குறிபிட்டேன் என்றால் படைப்புக்குள்ளும் தனக்கு சாதமானவற்றை தேடும் குறுகிய மனப்பாங்குடன் பல சமூகங்கள் மட்டுமல்லஅரசாங்களும் செயற்பட்டு வருகின்றன.

அதுமட்டுமல்லாது நாளை (25.01.2013) கொழும்பில் இந்த படத்துக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் செய்யப்போகின்றார்களாம். குறைந்தது இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக "பொது பலசேனா" செய்யும் அட்டூழியங்களுக்காக போராடாமல் மௌனியாக இருந்துகொண்டு வெறும் அறிக்கைகளைவிடும் இவர்கள் "கமலின் படைப்புக்கு" எதிராகப் போராட வெளிக்கிடுவது முஸ்லிம்களையும் அவர்களது சமூகத்தையும் நோக்கி மேலும் கேள்விகள் விமர்சனங்கள் கேட்கப்படுவதை அதிகரிக்க செய்யுமே தவிர குறைக்கப்போவதில்லை என்பது மட்டும் உண்மை

22 ஜனவரி 2013

தற்போதைய சூழலும் தேசியமட்ட பிரச்சினையும்...!

இலங்கையின் செய்தி இணையத்தளமான தமிழ்மிரரில் வெளிவந்த என்னுடைய ஆக்கத்தின் மீள்பதிவே இது.


விடுதலைப் போராட்டம் ஒன்று தோற்கடிக்கப்பட்டால் அந்த குழு சார்ந்த மக்களுடைய அபிலாசைகள், கோரிக்கைகள் வென்றவர்களால் செவிசாய்க்கப்படாது. இது மன்னர் காலங்களில் இருந்தே கடைப்பிடித்து வந்த ஒரு நடைமுறை. ஆனால் வெற்றிபெற்ற கில்லாடி ஆட்சியாளர்கள் அபிவிருத்தி என்ற பெயரில் தங்களது செயற்றிட்டங்களை பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் முன்னெடுத்துச் செல்வார்கள். ஆனால் அந்த அபிவிருத்தி திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு சிறிய புள்ளியாகவே இருப்பார்கள். அவர்களுடைய வீடுகள் சாதாரணமானவையாகவோ ஓலைக்குடிசைகளாகவோ அல்லது தறப்பாளால் மூடப்பட்டவையாகவோ அல்லது தகரங்களினால் வேயப்பட்டதாகவே காணப்படும். 

ஆனால் அவர்களுடைய குடிசைகளை சூழ இருந்த சாதாரண செம்மண் பாதைகள் பிரதான பாதைகளாக அபிவிருத்தி அடையும். புதிய புதிய பிரமாண்டமான கட்டடங்கள் கட்டப்படும். 24 மணிநேர மின்சார வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும். அவர்களுடைய வாழ்க்கையை  மேம்படுத்துவதே தங்களது உச்ச குறிக்கோளென கூறிக்கொண்டு அந்த மக்களுடைய குறைந்தபட்ச வருமானத்தையும் பிடுங்கும் நோக்கில் அவர்களைச் சூழ புதிது புதிதாக லீசிங் மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் முளைக்கும். அம்மக்களோ இண்ஸ்டோல்மெண்டில் ரிவி பெட்டி வாங்கி தங்களது ஆஸ்த்தான நாயகர்கள் எதிரிகளை பறந்து பறந்து பந்தாடும் காட்சிகளையும் பாடல் காட்சிகளையும் பார்த்து புல்லரித்துப்போவார்கள்.

இவற்றையெல்லாம் அப்பிரதேசத்தால் பயணம் செய்பவர்களும் பார்த்து பூரித்துப்போவார்கள். இந்த புல்லரிப்பையும் பூரிப்பையும்தான் ஆள்பவர்களும் எதிர்பார்த்திருப்பார்கள். ஆகவே அவர்களும் பூரிப்படைவார்கள்.

இந்தப் புல்லரிப்புக்களுக்கும் பூரிப்புக்களுக்கும் இடையில் பாதிக்கப்பட்ட இனக்குழுவைச் சார்ந்த பாதிக்கப்படாத மக்கள் - பாதிப்புக்குள்ளாகாத பிரதேசங்களில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். பாதிப்புக்கு உள்ளானவர்களும் பாதிப்படையாதவர்களும் (பெரும்பான்மையானோர்) சாதிப் பிரச்சினையை வீட்டுக்குள்ளும் உரிமைப் பிரச்சினையை வெளியிலுமாக காட்டிக்கொண்டிருப்பார்கள். அவர்களைச் சுற்றி கொலை, கொள்ளை, வன்புணர்வு, பால்நிலை சமத்துவமின்மை, பிரதேசவாதம் போன்ற பல கொடிய விடயங்கள் சிறிது சிறிதாக ஆரம்பித்து பூதாகரமாக பெரியளவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்.

இவற்றையெல்லாம் பார்த்து, கேட்டு “எங்கட கலாசாரம் நாசமாக போகுது” என்று கூக்குரல் இட்டுக்கொண்டிருப்பார்கள். இவ்வாறு சமூகப் பிரச்சினைகள் அதிகரிக்க அதிகரிக்க தேசிய மட்டத்தில்
இனப் பிரச்சினைக்காக குரல்கொடுக்கும் தன்மையில் பாரிய மாற்றமொன்று ஏற்படும். இது ஆரோக்கியமான ஒன்று அல்ல.

இனப்பிரச்சினை காணப்படுகின்ற இலங்கை போன்ற நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மையினரின் மத்தியில் மேலே குறிப்பிட்டது போன்ற சமூகப்பிரச்சினைகள் ஏற்படுவது சிறந்ததன்று. ஏனென்றால் சமூகப்பிரச்சினைகளை மூடி மறைத்துக்கொண்டு தேசிய மட்டத்தில் பிரச்சினையை கதைப்பதற்கோ தீர்ப்பதற்கோ செல்லமுடியாது. அப்படிப் போனால் மீண்டும் ஆரம்ப புள்ளிக்கே வந்து நிற்கவேண்டிவரும் (இப்போது நிற்பதுபோல).

தற்போதைய சூழலுக்கு ஏற்ப உலக அரசியலை விளங்கிக்கொண்டு இலங்கைத் தமிழர்களுடைய உரிமை பிரச்சினையை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்லவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. ஆனால் அதற்கு முன்னர் சமூகப் பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய கட்டாயம் மிகப்பெரிய சவாலாக இலங்கை தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் காணப்படுகின்றது. ஆகவே சமூகப் பிரச்சினைகள் தோன்றும் மூல காரணியை கண்டுபிடித்து அதை கேள்வி கேட்கவேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் இருக்கின்றது.

http://tamil.dailymirror.lk/2010-08-31-14-50-37/57399-2013-01-21-13-25-43.html

21 ஜனவரி 2013

“சித்தார்த்தனும்” “கௌதம புத்தரும்”



எதிர்வரும் வாரம் முதல் இலங்கையின் திரையரங்குகளில் “சித்தார்த்த” என்ற சிங்களப்படம் திரைக்கு வரவிருக்கின்றது. யார் இந்த கௌதம சித்தார்த்த என்றால் கி.மு 500ம் ஆண்டுகளில் நேபளத்தின் லும்பினி எனுமிடத்தையாண்ட அரசனின் புத்திரன். தன்னுடைய வாழ்க்கையில் பெறக்கூடிய அதியுச்ச இன்பங்களையெல்லாம் உட்சபட்சமாக அனுபவித்த அரசிளங்குமாரன். அதன் பின்னரே அவனுக்கு ஆசைகளின் மேல் வெறுப்பு ஏற்பட்டு அரண்மனை சொகுசு வாழ்க்கையினைவிட்டு வெளியேறி துறவு பூண்டு அரசமரத்தின் கீழ் ஞானம் அடைந்து கௌதம புத்தரானவர் என்று வரலாறுகள் கூறுகின்றன. இது தொடர்பான தகவல்களை  http://ta.wikipedia.org/s/58x  இந்த விக்கிபீடியா முகவரியில் விரிவாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

இந்த சித்தார்த்தரை பற்றிய திரைப்படமே வெளிவரவிருக்கின்றது. இது தொடர்பாக இந்த திரைப்படத்தினுடைய இயக்குனர் அண்மையில் ஊடகமொன்றுக்கு பேட்டிகொடுத்திருந்தார். அதில் அவர் இந்த சித்தார்த்த திரைப்படத்தினுடைய கதையினை இந்தியாவில் இருக்கின்ற ஒரு இயக்குனரிடம் காட்டியதாகவும் அதற்கு அவர் இதை நல்ல ஒரு திரைக்கதை எழுத்தாளரிடம் கொடுத்த எழுதும்படியும் கூறியிருக்கின்றார். அதன்பிரகாரம் பொலிவூட் திரைக்கதை எழுத்தாளரினைக் கொண்டு சித்தார்த்த திரைக்கதை எழுதப்பட்டிருக்கின்றது. ஆனால் அந்த எழுத்தாளர் எழுதிய திரைக்கதை எமது நாட்டுக்கு உகந்தது அல்ல என்று கூறி மீண்டும் திரைக்கதையினை இயக்குனரும் அவருடைய குழுவினரும் இங்கேயே எழுதி அதனையே படமாக்கியிருக்கின்றார்கள்.

உண்மையில் அந்த பொலிவூட் எழுத்தாளர் எழுதிய திரைக்கதை உண்மையில் சித்தார்த்தருடைய வாழ்க்கையினை சரியான முறையில் சொல்லியிருந்திருக்க வேண்டும். ஆனால் அது இவர்களுக்கு பிடிக்காமல் போனதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஏனென்றால் இலங்கையை பொறுத்தளவில் பிறந்த நாளிலிருந்தே புத்தர் ஞானமடைந்தவர் என்பதாகவே இலங்கை பௌத்தர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே “சித்தார்த்த” திரைப்படத்தினுடைய கதை நிற்சயமாக இலங்கையில் வாழுகின்ற பௌத்தர்களை திருப்பத்திப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டிருக்கும் என்பதை இயக்குனரின் பேட்டியிலிருந்து ஊகிக்கலாம். அதுமட்டுமல்லாது இந்த திரைப்படத்தினை 30ஆயிரம் பௌத்த துறவிகளுக்கு இலவசமாக திரையிட்டுக் காட்டப்போகின்றார்களாம். ஆகவே 30 ஆயிரம் பௌத்த துறவிகளும் 30 ஆயிரம் விகாரைகளில் இதைப்பற்றி சொன்னார்களானால் படம் நிற்சயம் இலங்கையில் சுப்பஹிட்ஸ் ஆகிவிடும். அடுத்த 3 மாதத்திற்கு இலங்கையின் திரையரங்குகளில் “சித்தார்த்த” தான்.



20 ஜனவரி 2013

"யாழ்ப்பாணமும்" உடைக்கட்டுப்பாடும்


முற்குறிப்பு -  இது ஒரு கட்டுரையல்ல என்னுடைய ஆதங்கம். விரும்பினால் தொடர்ந்து வாசியுங்கள் இல்லாவிட்டால் தயவுசெய்து வாசிக்காதீர்


அண்மையில் இணையத்தில் ஒரு செய்தியினை பார்க்கக்கிடைத்தது. “யாழில் குட்டைப் பாவாடைஅணியும் பெண்களுக்கு எச்சரிக்கை” என்ற தலைப்பிலேயே அந்த செய்தியினை பார்க்கமுடிந்தது. உள்ளே சென்று பார்த்தால் ஆங்கே ஆண்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த இணையத்தளத்தில் செய்தியினைப்போட்டவன் பெண்களை மட்டும் குறிவைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது போலவாகவே தலைப்பினை அமைத்திருந்தான். இந்த செய்தியினை நான் பேஸ்புக்கில் பகிரும் போது “யாழில் இருக்கின்ற மனநோய் வியாதியுள்ள நாய்களில் சிலதுதான் இப்படியான சுவரொட்டியுடன் சம்பந்தப்பட்டிருக்கும்” என்று கூறியிருந்தேன்.

இந்த செய்தியைப்பார்த்தவுடன் எனக்கு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது அவர்கள் உடைதொடர்பாக போட்டிருந்த சட்டங்களும் அந்தசட்டங்களை அமுல்படுத்தில விதமும்தான் நினைவுக்கு வந்தன. அதுவும் ஆண்களுக்குத்தான்  விசேடமாக உடைதொடர்பான கட்டுப்பாடுகள் அங்கே காணப்பட்டன. (வன்னியில் இருந்தவர்களை;தவிர எத்தனை பேருக்கு அப்படியான சட்டங்கள் அங்கு இருந்தனவென்று தெரியுமோ தெரியாது) ஏனென்றால் இந்த சட்டத்தால் என்னுடைய உறவுக்கார அண்ணா ஒருவர் நேரடியாக பாதிக்கப்பட்ட சம்பவம் ஞாபகத்திற்கு வந்ததுதான் காரணம். இந்த சம்பவம் இடம்பெற்றது 2000ம் ஆண்டு காலப்பகுதி.
அதுவும் புதுக்குடியிருப்பில் இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்திய “கானகன்” என்ற காவல்துறை உறுப்பினரைத்தான் எனக்கு உடனடியாக ஞாபகம் வந்தது. எனக்கு உறவினர்முறையான ஒரு அண்ணாவின் அம்மா வவுனியா சென்று திரும்பிவரும்போது கொண்டுவந்த இருபக்;கமும் வெளிப்புறமாக பொக்கட்டுக்கள் உள்ள ஒரு நீளக்காற்சட்டையினையே (ஜீன்ஸ்) அவர் அன்று போட்டுக்கொண்டு வீதிக்கு வந்திருந்தார். அவருடன் நானும் செல்லும்போது வீதியில் நின்ற கானகன் இதைகண்டுவிட்டான். உடனேயே அண்ணாவை மறிச்சு பேசிவிட்டு தன்னிடம் இருந்த பிளேட் ஒன்றினால் வெளியில் இருந்த காற்சட்டை பொக்கட்டுக்களை வெட்டி எடுத்துவிட்டு இனி இப்படியான உடுப்பு போட்டால் உள்ளுக்கதான் இருக்க வேண்டிவரும் என்று எச்சரிக்கை செய்துவிட்டு அனுப்பினான். நாம் எதுவும் பேசமால் வாய்மூடி மௌனியாக சென்றுவிட்டோம். அன்று அந்த அண்ணா திருப்பி ஏதாவது கதைக்க போயிருந்தா “பற்பொடி தரேக்குள்ளதான் விடிஞ்சுட்டுது” என்று தெரிந்துகொள்ளும் நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கும்.


இவ்வாறு வன்னிக்குள் நாங்கள் இடம்பெயர்ந்து 6 வருடங்கள் இருந்தபோது விரும்பியோ விரும்பாமலோ வெளி உலகுடன் தொடர்பற்ற ஒரு மூடிய இறுக்கமான கட்டமைப்புக்குள் வாழவேண்டிய நிலையொன்று ஏற்பட்டது. அதனாலேயே 2003ம் ஆண்டு சமாதானப்பேச்சுவார்த்தை ஆரம்பித்து பாதை திறந்தவுடன் “யாழ்ப்பாணத் தமிழர்களகளாகிய” நாம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீண்டும் இராணுவக்கட்டுப்பாடான யாழ்ப்பாணத்திற்கு ஓடவேண்டிய நிலை ஏற்பட்டது. (போராளி, மாவீரர் குடும்பங்களை தவிர)


இதை நான் ஏன் இங்கு சொல்லுகின்றேன் ஏன்றால் சமூகப்பிரச்சனைகள் அதிகரிக்க அதிகரிக்க அவற்றின் ஆரம்ப காரணிகளை பிற்போக்குத்தனங்களை கண்டுபிடித்து அதை இல்லாமல் செய்வதற்கு முயற்சிக்காமல் இவ்வாறு போஸ்டர் அடித்து சமூகத்தை பயமுறுத்தி அதன் ஊடான காரியம் சாதிக்க நினைப்பது படுமுட்டாள்தனம். குட்டைப்பாவாடை அணிவதால்தான் அல்லது உள்ளாடை வெளியில் தெரிய போவதால்தான் யாழ்ப்பாணக் கலாச்சாரம்(?) அழிகின்றது என யாரும் நினைத்தாலே அவன் உண்மையிலேயே ஒரு மனநோய் வியாதி உள்ளவன்தான். இப்படியான மனநோய் வியாதி உள்ளவர்கள் இப்போது சமூகத்தில் அதிகரித்து செல்வது ஆரோக்கியமான விடயமல்ல.

ஏராளமான குப்பைகளை உள்ளே மூடிமறைத்துக்கொண்டு வெளியே போலியான ஒரு பொய் வாழ்க்கையினையே நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இந்த போலிப் பொய் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு எம்மத்தியில் இருக்கும் சமூகத்தில் இருக்கும் பிற்போக்குத்தனங்களை அதுவும் முதலில் தமது குடும்ப மட்டத்திலிருந்து அகற்ற முயற்சிசெய்யவேண்டும். அவ்வாறு செய்தாலே ஆரோக்கியமான சமூகம் ஒன்று எதிர்காலத்தில் தோன்றும்.

பிற்குறிப்பு : விடுதலைப் புலிகளைப்பற்றி சொல்லியிருக்கிறேன் யாழ்ப்பாணத்தைப்பற்றி புலம்பியிருக்கிறேன் ஆனா யாழில நிக்கிற ஆமிக்காரரைப்பற்றி ஒண்டுமே சொல்லேல்லையே எண்டு யாராவது நினைச்சா அது உங்கட முட்டாள்தனம்தான்.