A Promised Land

சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 ஏப்ரல் 2018

விக்ரம்...!




நடிகர் விக்ரம்!, தன்னுடைய அபரிமிதமான அர்ப்பணிப்பான  நடிப்பால் தமிழ் சினிமா இரசிகர்களை மட்டுமல்லாது உலக சினிமா இரசிகர்களையும் கவர்ந்தவர்.  ரசியில்லா நடிகர் என தமிழ் சினிமா ஓரங்கட்டியபோது அது தவறு என கண்முன் நிரூபித்துக் காட்டிய ஒரு கலைஞன். இயக்குனர் பாலாவால் சேது படத்தின் மூலம் செதுக்கப்பட்ட முத்து. வலகது கை செய்வதை இடது கை அறியாமல் இருக்கட்டும் என்று ஒரு பண்டையகூற்று எம்மத்தியில் இருக்கின்றது. அதற்கேற்றது போலவே  சத்தமில்லாமல் பலருக்கு உதவிகள் செய்து விட்டு அமைதியாக இருக்கும் ஒரு நல்ல மனிதன். நடிகர் கமலஹாசனுக்கு பின்னர் நான் விரும்பும் நடிகன். இப்படி நான் இரசிக்கும் நடிகர் விக்ரமைப்பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். 

நேற்று (ஏப்ரல் 17) விக்ரமின் பிறந்தநாள். 

விக்ரம் என்றவுடன் எனக்கு உடனேயே ஞாபகம் வருவது விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் இயக்குனர் பாலாவின் "இவன் தான் பாலா"  புத்தகத்தில் விகரம் தொடர்பில் இயக்குனர் பாலா சிலாகித்து எழுதியிருக்கும் குறிப்புக்கள்தான் காலத்தால் அழியதவை. 

பாலா தனது சேது படத்தின் படப்பிடிப்பு சினிமா தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் நின்று போனதால் மனமுடைந்து போயிருந்த நேரத்தில் தன் பிரச்னையை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத விக்ரம் ஒருநாள் பாலவிடம் வந்து ‘வீட்ல கொஞ்சம் கஷ்டமா இருக்கு பாலா. ராதிகா ஒரு டெலிஃபிலிம் பண்ணக் கூப்பிடறாங்க. போனா, கொஞ்சம் பைசா கிடைக்கும்!’’ என்று கேட்கவும் அதில் நடிப்பதற்கு உடனேயே விக்ரமை பாலா அனுப்பி வைத்திருக்கிறார். விக்ரம் அந்த டெலிஃபிலிம் முடித்துவிட்டு  திரும்பி வந்தபோது சம்பளமாக கிடைத்த அறுபதாயிரம் ரூபாவையும் கொண்டுவந்து ‘பாலா, நீங்களும் பணத்துக்கு சிரமப்படறீங்கதானே. அறுபதாயிரம் ரூபா குடுத்தாங்க. இதுல எனக்கு பாதி, உங்களுக்குப் பாதி’’ என வலுக்கட்டாயமாக பாலவின் கையில் திணித்துவிட்டுப் போயிருக்கிறார். 

தன்னுடைய கஸ்டத்திலும் மற்றவருடைய கஸ்டத்தையும் புரிந்துகொண்டு உதவி செய்த நல்ல மனம் கொண்ட விக்ரம் இன்று இந்தளவு தூரம் உயர்ந்திருப்பது அவரது மனிதத்தன்மைக்கு இயற்கை கொடுத்த பரிசே! 

மேலும் மேலும் சிகரம் தொட வாழ்த்துக்கள்! 

பிதாமகன் விக்ரமுடன் இயக்குனர் பாலா

06 டிசம்பர் 2014

"தக்கல புருது கெனெக்" | "The Stranger Familiar" - இது விமர்சனமில்லை





ஒரு கலைப்படைப்பு என்பது அது சார்ந்த சமூகத்தினை உண்மையாகவும் ஆழமாகவும் பிரதிபலிக்கும்போது அந்த கலைப்படைப்பும் அது கூறவரும் கருத்தும் வீரியமாகவும் மிகவும் ஆழமாகவும் பார்வையாளனின் மனதில் தாக்கத்தினையும் ஏற்படுத்திவிடும்.அத்தோடு ஒவ்வொரு பார்வையாளனையும் அவனுடைய கருத்தியலின் அடிப்படையில் வித்தியாசமாக சிந்திக்கத் தூண்டிவிடும். அல்லது படம் ஆரம்பிக்கும்போது இருந்த பார்வையாளனின் நிலையினை இன்னொரு கட்டத்திற்கு நகர்த்திவிடும். ஒரு திரைப்படம் இவ்வாறான நிலைகளில் ஏதாவது ஒன்றையாவது பார்வையாளனுக்கு தோற்றுவிக்குமாக இருந்தால் அந்தக் கலைப்படைப்பு ஏதோவொரு வகையில் சிறந்த கலைப்படைப்பாக இருக்கும் என்று கூறமுடியும் என்பது உண்மை.

நேற்று ஐரோப்பிய திரைப்பட விழாவின் இறுதிநாளில் இலங்கையின் இளம் இயக்குனர் மலித் ஹேகொடவின "தக்கல புருது கெனெக்" |
"The Stranger Familiar" திரைப்படம் திரையிடப்பட்டது. சாதாரண ஒரு கணவன் மனைவிக்குள் திருமணத்திற்கு பின்னர் ஏற்படும் பிரச்சனையை மைய்யமாக வைத்து அழகாக திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது. அதற்குள் இலங்கையின் அரசியலும் பேசப்படுகின்றது சிங்கள சமூகத்தின் இன்றைய நிலையையும் அப்படியே பிரதிபலிக்கின்றது. ஆரம்பம்முதலே படிப்படியாக பார்வையாரை சிறிது சிறிதாக தன்னுடை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இறுதியில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் படம் முடிவடைகின்றது.

ஒரு தமிழனாக இலங்கை அரசியலில் சற்று ஆர்வம் உள்ள தமிழன் என்றவகையில் இந்தத் திரைப்படம் என்றை சற்று சிந்திக்க தூட்டியிருக்கின்றது. இந்தப் படத்தை சிங்கள கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனை என்ற விடயத்தினைத்  தாண்டி இலங்கையின் தமிழ் சிங்கள முரண்பாட்டுடன் தொடர்புபடுத்தியே ஆரம்பம் முதல் இறுதிவரை என்னால் பார்க்க முடிந்தது. இந்தக் கோணத்தில் திரைப்படத்தினை பார்த்தபோது 2014ம் ஆண்டில் ஆரம்பிக்கும் படம் 1948ல் நிறைவடைவது போன்றதொரு நிலைப்பாட்டை எனக்குள் தோற்றுவித்திருக்கின்றது. சிலவேளை இயக்குனரோ அல்லது திரைக்கதை ஆசிரியரோ இவ்வாறான ஒரு கோணத்தில் சிந்தித்து திரைக்கதையினை அமைத்திருக்கலாம் அல்லது அமைத்திருக்காமல் இருந்திருக்கலாம் ஆனால் திரைப்படம் இந்தக்கோணத்திலும் ஒரு பார்வையாளனை சிந்திக்க வைத்திருக்கின்றது எனும்போது அது இந்தத்திரைப்படத்தின் வெற்றியாகவே என்னால் கருத முடிகின்றது.

இயக்குனர் அசோக ஹந்தகமவின் இனி அவன் திரைப்படம் வெளிவந்தபோகூட இலங்கையின் பிரபல சிங்கள விமர்சகர் உபுல் ஷாந்த சண்ணஸ்கல கூட அந்தப்படத்தினை இது ஒரு 100 வீதமான சிங்கள படம் ஆனால் தமிழ் மொழியில் வெளிவந்திருக்கின்றது என்று கூறியிருந்தார் ஆனால் அந்தக்கதை அது இடம்பெறும் சூழல் என்பன முற்றுமுழுதாக தமிழ்ச் சூழலாக இருந்தது. ஆகவே ஒவ்வொரு பார்வையாளனும் தன்னுடைய கருத்தியலுடன் ஒரு கலைபடைப்பை பார்க்கும் விதங்கள் வேறுபட்டவை.



இந்தப்படத்தின் திரைக்கதையினை பூபதி நளின் எழுதியிருக்க மலித் ஹேகொட இயக்கியிருக்கின்றார். இருவருக்கும் இந்த திரைப்படமே தங்களது முதலாவது திரைப்படம். தரமான ஒரு திரைப்படத்தின் படைப்பாளிகள் என்பதையும் தாண்டி இவர்கள் இருவரும் என்றுடைய நண்பர்கள் என்ற ரீதியில் பெருமைப்பட்டுக் கொள்கின்றேன்.ஏற்கனவே இத்ததிரைப்படம் லண்டன் சர்வதேச திரைப்பட விழா உட்பட பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தன் உருவாக்கத்தல் இயக்குனரின் நண்பர்களின் பங்கு மிக அதிகம். பெரிய பட்ஜெட்டும் இல்லை சாதாரண ஒரு சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். ஆனால் சிங்கள சமூகத்தை பிரதிபலிக்கும் விலாசமாக கதைக்கருவை கொண்டிருக்கின்றது. சாதாரண பொதுமக்களின் பார்வைக்கு இத்திரைப்படம் எப்போது வருமென்று தெரியவில்லை ஆனால் திரைப்பட விழாக்களில் திரையிடப்படும்போது இந்தப்படத்தினை பார்க்கத்தவறவிடாதீர்கள்.


27 அக்டோபர் 2014

சினிமா என்பது வெறும்பொழுதுபோக்கு ஊடகம் மாத்திரமா?


சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு ஊடகம் என்ற ரீதியிலேயே இந்தியர்கள் சினிமாவை அணுகுகின்றார்கள். ஆனால் சினிமா என்பது வெறுமனே ஒரு பொழுதுபோக்கு ஊடகமா என்ற கேள்வியினை கேட்கவேண்டிய நேரம் இது. சினிமா என்றால் பொழுதுபோக்கு ஊடகம் என்ற மாயையை தவறான எண்ணத்தினை மக்கள் மத்தியில் புகுத்தியவர்கள் யார்? ஏன் அவ்வாறு மாற்றினார்கள் என்பதற்கு பின்னால் பல அரசியல் காரணங்கள் புதைந்து கிடக்கும் என்பதுதான் உண்மை.

சினிமா என்பது ஒரு இனத்தின் அரசியலைப் காத்திரமாக பேசும் கலை. உண்மையிலே கலை என்பது காலத்தின் கண்ணாடி. ஒரு இனத்தின் வாழ்வியலை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தெரியப்படுத்தவும் அரசுகளையும் அதிகாரத்தவர்களையும் கேள்விகேட்கக்கூடிய ஒரு மிகப்பலம்வாய்ந்த ஊடகம். இந்த சினிமா என்ற மிகமுக்கியமான அசையும் காட்சி ஊடகம் 20ம் நூற்றாண்டின் லுமினஸ் சகோதரர்களின் மிகமுக்கியமான கண்டுபிடிப்பு. இந்த சினிமாவால் பல அரசுகளே ஆட்டம் கண்டிருக்கின்றன. பல இயக்குனர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார் பலர் நாடுகடத்தப்பட்டிருக்கின்றார்கள் அத்தோடு படைப்புக்கள் அதிகார வர்க்கத்தினால் தடை செய்யப்பட்டிருக்கின்றன. இவை உலக சினிமா வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றன. சினிமா ஒரு பொழுதுபோக்கு ஊடகம் என்றால் ஏன் இவ்வளவு மோசமான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கவேண்டும் என்ன கேள்வி இயல்பாகவே சினிமா தொடர்பாக சாதாரண அறிவுள்ள ஒருவருக்கு எழவேண்டும்

இந்தியாவில் சினிமாவை அரசியல் காரணங்களுக்காக பொழுதுபோக்கு ஊடகமாக மாற்றி வைத்திருக்கின்றார்கள். ஒரு நல்ல சினிமா என்பது பார்வையாளனுடைய சிந்தனையை இன்னொருகட்டத்திற்கு தூண்டிவிடவேண்டும். அதுவே நல்ல சினிமா. தமிழ் சினிமாவின் ஆரம்ப கட்டங்களில் நடிகர்கள் பெரிய திரையில் சண்டைபிடிப்பார்கள் பார்வையாளர்கள் அதை பார்ப்பார்கள். ஆனால் இன்று நடப்பது என்ன இரசிகர்கள் நடிகர்களுக்காக பிரிந்து தங்களுக்கிடையில் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள் நடிகர்கள் அமைதியாக இவற்றை பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இதற்கு காரணம் யார்? யார் இதற்கு பொறுப்புகூறவேண்டும்? இன்றும் தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் என்று கேட்டால் 70 களில் 80 களில் வெளிவந்த படங்களையே பெரும்பாலானோர் கூறுவார்கள் காரணம் என்ன அந்தக் காலப்பகுதியில் வெளிவந்த திரைப்படங்கள் தரமானவையாகவும் காத்திரமான படைப்புக்களாகவும் இருந்தன. இன்று வெளிவரும் திரைப்படங்கள் வெறும் வன்முறையினையையும் ஹீரோயிசத்தையும் பெண்களின் உடலையும் சதையையும் முன்னிறுத்தியே வெளிவந்துகொண்டிருக்கின்றன. அண்மையில் புதிய சில இளம் இயக்குனர்கள் நம்பிக்கை தருகின்றனர் ஆனாலும் அவர்களும் எவ்வளவுநாள் இந்த மாயையை தாக்குப்பிடிப்பார்கள் என்பது கேள்விக்குரிய விடயம்தான்.

இந்தியாவில் கலையை கொலைசெய்து இன்று அதை வியாபாரமாக்கிவிட்டார்கள். ஒருசில நாட்களில் பலநூறுகோடி சம்பாதிக்கும் வழியாகவே சினிமாவை பயன்படுத்துகின்றார்கள். பார்வையாளர்களுடை பலவீனங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி  இவற்றை செய்வது வியாபாரிகளுக்கு இலகுவாக இருக்கின்றது. ஒரு சில சமூகப்பொறுப்புள்ள இயக்குனர்களைத்தவிர மற்ற எல்லோருமே இயக்குனர் என்ற நிலையிலிருந்து விடுபட்டு வியாபாரிகளாகவே இன்று திரைப்படங்களை இயக்கிக்கொண்டிருக்கின்றார்கள். மக்கள் இந்த மாயையிலிருந்து விடுபட்டு தெளிவு பெற்றால் மாத்திரமே நல்ல காத்திரமான சினிமாவை நாங்கள் பார்க்கமுடியும்.



vathees@gmail.com

26 அக்டோபர் 2014

இனி அவனுக்கு மீண்டும் விருது

முதலாவது ஹிரு கோல்டன் விருதுகள் 2014 விழா நேற்று கொழும்பில் இடம்பெற்றது இந்த முதலாவது விருதுவழங்கும் விழாவில் கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையில் வெளிவந்த திரைப்படங்களில் சிறந்தவை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டன. இந்த விழாவில் பொலிவூட் நாயகர்கள் விவேக் ஒப்ராய் பிபாஷாபாசு அனில் கபூர் போன்றவர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.



இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் 2012ல் இலங்கையில் தலைசிறந்த இயக்குனாரன அசோக ஹந்தகமவின் நெறியாள்கையில் வெளிவந்த “இனி அவன்” தமிழ்த் திரைப்படத்துக்கு 5 விருதுகள் கிடைத்திருந்தது. இந்தப்படத்தில் நடித்த தர்ஷன் தர்மராஜ் சிறந்த நடிகருக்கான விருதினையும், நிரஞ்சனி சண்முகராஜா சிறந்த துணை நடிகைக்கான விருதினையும் அஜித் ராமநாயக்க சிறந்த படத்தொகுப்புக்கான விருதினையும் அசோக ஹந்தகம சிறந்த இயக்குனருக்கான விருதினையும் பெற்றனர். அத்தோடு சிறந்த படமாக இனி அவன் திரைப்படமும் விருது பெற்றது.                                                      
                                                                                                                         Asoka Handagama




                                                       விருது வென்ற தர்ஷன் மற்றும் நிரஞ்சனி


இனி அவன் திரைப்படம் 2012ம் ஆண்டு கான்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டதோடு சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ரொரொண்டோ, பேர்ளின், டோக்கியோ, போன் பல சர்வதேச திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

* இலங்கையின் சினிமாவில் ஒரு தமிழன் சாதிக்கின்றான் எனும்போது மிகவும் பெருமையாக இருக்கின்றது

20 செப்டம்பர் 2014

A Gun & A Ring

அண்மையில் கொழும்பில்இடம்பெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரே ஒரு தமிழ்த் திரைப்படம் A Gun & A Ring. அதை திரையரங்கில் சென்று பார்க்கமுடியாது போய்விட்டது காரணம் இந்தப்படம் திரையிடப்பட்ட அதேநாளிலேயே என்னுடைய குறும்படமும் வேறு ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டது. இதனால் திரையரங்கில் திரைப்படத்தினை பார்க்க முடியவில்லை. சரி விடயத்திற்கு வருவோம். நான் திரையிடப்பட்ட இரண்டு முறையும் பார்கமுடியாமல் போன காரணத்தினால் இயக்குனர் தந்த இணைய முகவரியில் இந்தப்படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. பரவலாக இந்தப்படத்தினைப் பற்றி ஏற்கனவே பலர் தமது பார்வைகளை முன்வைத்தபடியால் நான் அவற்றைப்பற்றிக் கதைக்காமல் வேறு சில விடயங்களை கதைக்கலாம் என முடிவு செய்திருக்கின்றேன்.

சும்மா சப்பைப்படங்களை ஒருபோதும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடுவதற்கு தெரிவு செய்யமாட்டார்கள். ஆனால் இந்தப்படம் ஷங்காய் திரைப்படவிழாவில் திரையிடுவதற்கு முதல்முறையாக உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட்டபோதே இந்தப்படத்தில் ஏதோ விசயம் இருக்கவேண்டும் என ஊகித்திருந்தேன். கொழும்பில் இடம்பெறும் சர்வதேச திரைப்பட விழாவில் எந்தவொரு தமிழ்ப்படமும் இல்லையென தெரியவந்தபோது (தமிழ்நாட்டுப்படங்களை இங்கே திரையிட ஏற்பாட்டாளர்கள் விரும்பியிருந்தபோதும் இந்திய தயாரிப்பாளர்கள் விரும்பாத காரணத்தினால் சில படங்களை திரையிடமுடியாமல் போய்விட்டது) நான் இந்தத்திரைப்படத்தினை கொழும்பில் திரையிட முன்மொழிந்திருந்தேன். இதன் பிறகே அவசர அவசரமான இயக்குன லெனின் அவர்களை தொடர்பு கொண்டு திரைப்படத்தை வாங்கி கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவினுடைய ஏற்பாட்டாளர்களிடம் கொடுத்திருந்தேன். அவர்களுக்கும் படம் பிடித்துப்போக படத்தினை தணிக்கைக்கு அனுப்பி தணிக்கையும் கிடைத்தபடியால் இலங்கைப் பார்வையாளர்களுக்கு இந்த அருமையான படத்தினை பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இதற்கு காரணமாகவிருந்த அனோமா ராஜகருணா, அசோக ஹந்தகம மற்றும் பிரசன்ன விதானகே ஆகியோருக்கு நன்றி கூறவேண்டும்.

இந்தப் படத்தில் எனக்கு பிடித்தது படத்தினுடைய திரைக்கதை கதாபாத்திரங்களின் தெரிவு இசை மற்றும் இயக்கம். ஒளிப்பதிவு சரியில்லை என பல தமிழ் பார்வையாளர்கள் கூறியபோதும் நான் இந்தப்படத்தினைப் பார்க்கும்போது ஒளிப்பதிவு இந்தப் படத்தின் கதையினை எந்தஒரு இடத்திலும் சிக்கலாக்கவில்லை ஆகவே எனக்கு ஒளிப்பதி தொடர்பில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

பொதுவாக சர்வதேச திரைப்படவிழாக்களில் ஒரு படத்தினை தெரிவு செய்யும் போது அந்தப் படத்தின் கதையின் நேர்மை மிகமுக்கியமான இடத்தில் இருக்கின்றது. இந்தப் படம் உலகலாவிய ரீதியில் வெளிவரும் தமிழ்ப் படங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் முக்கியமான இடத்தில் இருக்கின்றது. காரணம் இந்தப்படத்தின் கதையில் இருக்கின்ற நேர்மை. இயக்குனர் கதையினை சிக்கலான திரைக்கதையினூடு சொல்லமுற்படும்போது அதை கவனமாக கையாண்ட விதம் ஆகிய இரண்டையும் முக்கியமாக கூறலாம். ஒவ்வொரு பாத்திரங்களுக்கும் ஒவ்வொரு பின்னணி. சில பாத்திரங்களின் பின்னணியை இயக்குனர் கூறும்போதும் சில பாத்திரங்களின் பின்னணி கூறப்பட்டிருக்கவில்லை. அப்படி கூறவும் தேவையில்லை. பார்வையாளனாகிய என்னை அவற்றை ஊகிக்க விடுவது இன்னும் சாலச் சிறந்தது. மற்றையது கதாபாத்திரங்கள். ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் மிகப்பொருத்தமானவர்களை தெரிவு செய்திருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டியது.

அடுத்தது இசை. இந்தப் படத்திற்கு இசை மற்றுமொரு பலம். இந்தப் படத்தின் கதையினை இன்னும் ஆழமாக பார்வையாளனுக்கு கொண்டு சேர்ப்பதில் இசை முக்கிய இடத்தில் இருக்கின்றது. திரைக்கதைக்கு தேவையான இடத்தில் இசையினை சரியாக பயன்படுத்தியிருக்கின்றார் இயக்குனர்.


இறுதியாக படத்தில் சொல்லப்பட்ட அரசியல் சொல்லப்பட்ட விதம் தொடர்பில் எனக்கு சில முரண்பாடுகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி தரமான ஒரு தமிழ்ப் படமாக இந்தப் படத்தினைக் கருதலாம். அந்தவகையில் இந்தப் படத்தினை உருவாக்கிய இயக்குனர் லெனின் அவர்களும் இந்த பணத்தினை செலவு செய்து உருவாக்கிய விஷ்ணு முரளியும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இலங்கைத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவரும் திரைப்படங்களில் மிகவும் முக்கியமான இடத்தில் இந்த கன் அன் ரிங் திரைப்படம் இருக்கின்றது என்பதனை மிகவும் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம்.

Official Page https://www.facebook.com/aGunANDaRing 

29 டிசம்பர் 2010

காவலன் படத்தினை வெற்றிபெறச்செய்வோம்

தலைப்பை பார்த்தவுடன் விஜய் இரசிகர்கள் மிகுந்த சந்தோசமடைவார்கள் என்று நினைக்கின்றேன் சந்தோசப்பட்டால் மட்டும் போதாது சூட்டோடு சூடாக (எவன்டா அவன் அங்க சூடா என்ன வேணும் என்று கேட்கிறது?) எனக்குரிய சன்மானத்தினை வழங்கவேண்டும் என்று விஜயினுடைய இரசிகர்களைஅன்புடன் கேட்டுக்கொண்டு விடயத்திற்கு வருகிறேன்.

அண்மைக்காலமாக விஜய் நடித்த படங்கள் எல்லாம் பலத்த சாதனைகளை தோல்வியில் நிலைநாட்டிக்கொண்டிருப்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும் தொடர் தோல்விகள் தயாரிப்பாளர்களுக்கு தொடர் நட்டங்கள் இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகளை விஜய் தனது படங்களின்மூலம் சந்தித்தும் விஜய் திருந்துவதாக இல்லைப்போல்லாதான் தெரிகின்றது.  இந்தா வருகிறது அந்தா வருகிறது பொங்கலுக்கு வருகிறது என்று தியட்டர் இல்லாமல் காவலன் படத்தினுடைய வெளியீடு தள்ளிப்போய்கொண்டே இருக்கிறது. இந்த லட்சணத்தில மன்மதன் அம்பு படம் தோற்கவேணும் அப்போதுதான் காவலன் படம் வெளியிடுவதற்கு தியட்டர் கிடைக்கும் என்று கேனைத்தனமாக புலம்பிக்கொண்டு இருக்கும் விஜய் இரசிகர்களும் இருக்கிறார்கள் என்று இந்த நேரத்தில் சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. 

நான் உண்மையிலேயே விஜயினுடைய எதிர்பாளன்தான் ஆனால்பாருங்கோ எனக்கே விஜயினுடைய தோல்விப்படங்களை பார்த்து போரடிச்சுப்போச்சு பின்ன மொக்கை படங்களை தொடர்ந்து தந்தால் தோல்விக்குமேல் தோல்வி வராமல் வெற்றியா வரும் என்று விஜய் எதிர்ப்பாளர்கள் கேட்கிறது தெரிகின்றது (இப்போதெல்லாம் விஜய் இரசிகர்களே விஜயை திட்டுகிறஅளவுக்கு நிலமை ஆகியிருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது) அதோட இன்னும் எவ்வளவு நாள்தான் நாங்களும் மொக்கை படங்களையே பார்க்கிறது அதனான இனி வரும் படங்களின் கதைகளையாவது சரியாக தெரிவு செய்யவேண்டும் இதுதான் எனது கோரிக்கை. அதனால மொக்கை படமாக இருந்தாலும் காவலன் படமாவது வெற்றிபெறவேண்டும் என்று என்னுடைய உள்மனம் சொல்லுது ஆகவே மொக்கை படமாக இருந்தாலும் பரவாயில்லை சினிமா இரசிகர்களே காவலன் படத்தை பத்து பதினைந்து தடவையாவது தியட்டருக்கு சென்று பார்த்து படத்தினை வெற்றிபெறச்செய்யவேண்டும் என்று தாழ்மையாக வேட்டுக்கொள்ளுகிறேன். விஜய் காவலனுக்கு பிறகாவது நல்ல கதைகளை தெரிவு செய்து நடிகவேணும் என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட விருப்பம்கூட.

அப்புறம் விஜய் அவருடைய அப்பாவோட சேர்ந்து பல சொங்கித்தனமாக செய்யக்கூடாத விடயங்களை செய்வதற்கு தயாராகிறமாதிரி கதையெல்லாம் அடிபடுகிறது அதுதான் அவருடைய அரசியல் மேட்டர். அதற்காக விஜயை அரசியலுக்கு வரவேண்டாம் என்று சொல்லி நான் அவருடைய ஜனநாயக உரிமையை தடுக்க விரும்பவில்லை. அரசியலுக்கு வாங்கோ வந்து மக்களுக்கு நல்லதை செய்யுங்கோ ஆனால் சரியான நேரத்தில அரசியலுக்கு வாங்கோ என்றுதான் நான் கூறுகிறேன்.
விஜய்க்கும் ஆறாவது அறிவு என்ற ஒன்று இருக்குது என்று நான் நம்புறன் அதைவைச்சு அவர் நல்ல நேரத்தில நல்ல முடிவொன்றை எடுப்பார் என்று நான் நம்புறன்.

கடைசியிலையும் சொல்லுறன் மொக்கைபடமாக இருந்தாலும் எப்படியாவது காவலன் படத்தினை வெற்றிபெறச் செஞ்சிடுங்கோ இது இந்த விஜய் எதிர்பாளனின் தாழ்மையான வேண்டுகோள் அம்புட்டுத்தான் விசியம்...

27 டிசம்பர் 2010

சூடா என்ன இருக்கு என்று கேட்டது தப்பா? - அம்பு


தலைப்பை பார்த்தவுடனே பல அன்பு உள்ளங்களுக்கு(எப்புடியெல்லாம் ஐஸ் வைக்கவேண்டியிருக்கு) என்ன சொல்லவாறன் என்பது விளங்கியிருக்கும். பதிவே போடுறதில்லை என்று ஒரு குறிக்கோளேட இருந்தவனை கடைசியில விளக்கப்பதிவு எழுத வைச்சிட்டிங்களே.

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் அப்புடி நான் என்னத்தைய்யா கேட்டுட்டன்? சூடா என்ன இருக்கு" என்றுதானே கேட்டன் அந்த கடையில் வேலைசெய்த அந்த நண்பர் கொஞ்சம் நகைச்சுவையுணர்வு மிக்கவராக இருந்துவிடார் அவ்வளவுதான். அதைப்போய் உலக அளவில பேமஸ் ஆக்கிட்டிங்களேய்யா... இப்புடி என்னை புலம்ப வைச்சிட்டிங்களே. என்னுடன் அன்று கடைக்கு வந்த அந்த இரு நண்பர்களுக்கும் ஏதாவது செய்யணும்போல இருக்கு. உங்களுடைய கடமையுணர்வு புல்லரிக்க வைக்குதைய்யா...

------------------------
அண்மையில் மன்மதன் அம்பு திரைப்படம் பார்த்தேன் சமூகத்தில் இருக்கும் மிகப்பெரிய சவாலான விடயமான சந்தேகத்தினை கையில் எடுத்திருக்கின்றார் கமல்.

படத்தின் கதை - நான் சொல்லப்போறதில்லை போய் தியட்டுரில பாருங்கோ


நடிப்பு -
கமல் - ம்..ம்... நடிப்பு என்றாலே கமல் என்று ஒரு வரலாறே இருக்கு. கமலினுடைய நடிப்பைபற்றி நான்சொல்லித்தான் தெரியோணுமாக்கும்

மாதவன் - பட்டையை கிளப்பியிருக்கிறாரு மாதவன்

த்ரிஷா - பொண்ணு சும்மா அந்தமாதிரி நடிச்சிருக்கு. பின்ன கமல்படத்தில நடிக்க வந்துட்டு குருவி திருப்பாச்சி இதுபோன்ற படத்தில நடிச்சமாதிரி
நடிக்கமுடியுமே

சங்கீதா - அம்மணி கலக்கியிருக்கிறா அதுவும் அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் பின்னிட்டீங்க போங்க

ஏனையவர்களும் நன்றாக நடித்திருக்கின்றார்கள் குறிப்பாக ரமேஷ் அர்விந், சங்கீதாவின் மகனாகவரும் அந்த சுட்டி பையன், குஞ்சு குறூப்

இசை - நீலவானம் பாடல் மற்றும் பின்ணணி இசையில் கலக்கியிருக்கின்றார் தேவி ஶ்ரீ பிரசாத் என்பதைவிட கமல் DSPயை நன்றாக வேலைவாங்கியிருக்கின்றார் என்று சொல்லவேண்டும்

ஒளிப்பதிவு - இந்த படத்தில் ஒளிப்பதிவினைப்பற்றி சொல்லவேண்டும் அற்புதமாக படமாக்கியிருக்கின்றார் புதியவரான மனுஷ நந்தன். இவருடைய முதல்படத்திலேயே கலக்கியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

படத்தொகுப்பு - நீலவானம் பாடல் தொகுப்பு செய்யப்பட்ட விதம் அருமை. அத்துடன் படத்தொகுப்பும் அருமையாக இருக்கின்றது. ஷான் முஹம்தம் என்ற புதியவர்தான் படத்தொகுப்பு. முதல்படத்திலேயே நன்றாக வேலைசெய்திக்கின்றார்

இயக்கம் - கே.எஸ். இரவிக்குமார்   தனது பாணியிலேயே படத்தை இயக்கியிருக்கின்றார் ஆனாலும் படத்தின் பெரும்பாலான பகுதியில் கமலே
தனித்துவமாக தெரிகின்றார்
மொத்தத்தில் ஒரு கமலுடைய இரசிகனாக எனக்கு படம் திருப்தி அம்புட்டுத்தானுங்கோ...

இதை விமர்சனம் எண்டு நீங்க நினைச்சால்அதுக்கு கம்பனி பொறுப்பாகாது

எனக்கு பிடித்த கமலின் 10 படங்கள் (விளக்கங்களை பின்பு ஒரு பதிவில் விளக்கமாக தருகிறேன்)


1. 16 வயதினிலே
2.சலங்கைஒலி
3.குணா
4.நாயகன்
5.மூன்றாம்பிறை
6.குருதிப்புனல்
7. இந்தியன்
8.விருமாண்டி
9.அன்பேசிவம்
10.தசாவதாரம்