சினிமா என்பது ஒரு இனத்தின் அரசியலைப் காத்திரமாக பேசும் கலை. உண்மையிலே கலை என்பது காலத்தின் கண்ணாடி. ஒரு இனத்தின் வாழ்வியலை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தெரியப்படுத்தவும் அரசுகளையும் அதிகாரத்தவர்களையும் கேள்விகேட்கக்கூடிய ஒரு மிகப்பலம்வாய்ந்த ஊடகம். இந்த சினிமா என்ற மிகமுக்கியமான அசையும் காட்சி ஊடகம் 20ம் நூற்றாண்டின் லுமினஸ் சகோதரர்களின் மிகமுக்கியமான கண்டுபிடிப்பு. இந்த சினிமாவால் பல அரசுகளே ஆட்டம் கண்டிருக்கின்றன. பல இயக்குனர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார் பலர் நாடுகடத்தப்பட்டிருக்கின்றார்கள் அத்தோடு படைப்புக்கள் அதிகார வர்க்கத்தினால் தடை செய்யப்பட்டிருக்கின்றன. இவை உலக சினிமா வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றன. சினிமா ஒரு பொழுதுபோக்கு ஊடகம் என்றால் ஏன் இவ்வளவு மோசமான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கவேண்டும் என்ன கேள்வி இயல்பாகவே சினிமா தொடர்பாக சாதாரண அறிவுள்ள ஒருவருக்கு எழவேண்டும்
இந்தியாவில் சினிமாவை அரசியல் காரணங்களுக்காக பொழுதுபோக்கு ஊடகமாக மாற்றி வைத்திருக்கின்றார்கள். ஒரு நல்ல சினிமா என்பது பார்வையாளனுடைய சிந்தனையை இன்னொருகட்டத்திற்கு தூண்டிவிடவேண்டும். அதுவே நல்ல சினிமா. தமிழ் சினிமாவின் ஆரம்ப கட்டங்களில் நடிகர்கள் பெரிய திரையில் சண்டைபிடிப்பார்கள் பார்வையாளர்கள் அதை பார்ப்பார்கள். ஆனால் இன்று நடப்பது என்ன இரசிகர்கள் நடிகர்களுக்காக பிரிந்து தங்களுக்கிடையில் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள் நடிகர்கள் அமைதியாக இவற்றை பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இதற்கு காரணம் யார்? யார் இதற்கு பொறுப்புகூறவேண்டும்? இன்றும் தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் என்று கேட்டால் 70 களில் 80 களில் வெளிவந்த படங்களையே பெரும்பாலானோர் கூறுவார்கள் காரணம் என்ன அந்தக் காலப்பகுதியில் வெளிவந்த திரைப்படங்கள் தரமானவையாகவும் காத்திரமான படைப்புக்களாகவும் இருந்தன. இன்று வெளிவரும் திரைப்படங்கள் வெறும் வன்முறையினையையும் ஹீரோயிசத்தையும் பெண்களின் உடலையும் சதையையும் முன்னிறுத்தியே வெளிவந்துகொண்டிருக்கின்றன. அண்மையில் புதிய சில இளம் இயக்குனர்கள் நம்பிக்கை தருகின்றனர் ஆனாலும் அவர்களும் எவ்வளவுநாள் இந்த மாயையை தாக்குப்பிடிப்பார்கள் என்பது கேள்விக்குரிய விடயம்தான்.
இந்தியாவில் கலையை கொலைசெய்து இன்று அதை வியாபாரமாக்கிவிட்டார்கள். ஒருசில நாட்களில் பலநூறுகோடி சம்பாதிக்கும் வழியாகவே சினிமாவை பயன்படுத்துகின்றார்கள். பார்வையாளர்களுடை பலவீனங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இவற்றை செய்வது வியாபாரிகளுக்கு இலகுவாக இருக்கின்றது. ஒரு சில சமூகப்பொறுப்புள்ள இயக்குனர்களைத்தவிர மற்ற எல்லோருமே இயக்குனர் என்ற நிலையிலிருந்து விடுபட்டு வியாபாரிகளாகவே இன்று திரைப்படங்களை இயக்கிக்கொண்டிருக்கின்றார்கள். மக்கள் இந்த மாயையிலிருந்து விடுபட்டு தெளிவு பெற்றால் மாத்திரமே நல்ல காத்திரமான சினிமாவை நாங்கள் பார்க்கமுடியும்.
vathees@gmail.com