A Promised Land

இலங்கைத்தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கைத்தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 அக்டோபர் 2014

இனி அவனுக்கு மீண்டும் விருது

முதலாவது ஹிரு கோல்டன் விருதுகள் 2014 விழா நேற்று கொழும்பில் இடம்பெற்றது இந்த முதலாவது விருதுவழங்கும் விழாவில் கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையில் வெளிவந்த திரைப்படங்களில் சிறந்தவை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டன. இந்த விழாவில் பொலிவூட் நாயகர்கள் விவேக் ஒப்ராய் பிபாஷாபாசு அனில் கபூர் போன்றவர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.



இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் 2012ல் இலங்கையில் தலைசிறந்த இயக்குனாரன அசோக ஹந்தகமவின் நெறியாள்கையில் வெளிவந்த “இனி அவன்” தமிழ்த் திரைப்படத்துக்கு 5 விருதுகள் கிடைத்திருந்தது. இந்தப்படத்தில் நடித்த தர்ஷன் தர்மராஜ் சிறந்த நடிகருக்கான விருதினையும், நிரஞ்சனி சண்முகராஜா சிறந்த துணை நடிகைக்கான விருதினையும் அஜித் ராமநாயக்க சிறந்த படத்தொகுப்புக்கான விருதினையும் அசோக ஹந்தகம சிறந்த இயக்குனருக்கான விருதினையும் பெற்றனர். அத்தோடு சிறந்த படமாக இனி அவன் திரைப்படமும் விருது பெற்றது.                                                      
                                                                                                                         Asoka Handagama




                                                       விருது வென்ற தர்ஷன் மற்றும் நிரஞ்சனி


இனி அவன் திரைப்படம் 2012ம் ஆண்டு கான்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டதோடு சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ரொரொண்டோ, பேர்ளின், டோக்கியோ, போன் பல சர்வதேச திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

* இலங்கையின் சினிமாவில் ஒரு தமிழன் சாதிக்கின்றான் எனும்போது மிகவும் பெருமையாக இருக்கின்றது

23 அக்டோபர் 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வைக்கோற்பட்டறை நாயா?


மேலே தலைப்பில் குறிபிபட்ட விடயம் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வெளிப்படையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சித்த விடயம். இலங்கையின் கடந்த வார பீக் செய்திகள் எல்லாம் யாழ்ப்பாணத்திற்கான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விஜயமும் யாழ்தேவியின் மீள்வருகையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புறக்கணிப்பும்தான்.



இலங்கை ஜனாதிபதி தன்னுடைய அரசியல் செல்வாக்கை தென்னிலங்கையில் அதிகரித்துக்கொள்ளவும் அடுத்த ஆண்டில் இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலை கருத்தில் கொண்டுமே தன்னுடைய யாழ் விஜயத்தினை ஏற்பாடு செய்திருக்கின்றார் என்பது பலருடைய கருத்து. அங்கே இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டங்களில் அவர் தெரிவித்த கருத்துக்களும் மேலுள்ள கூற்றுக்கு மேலும் வலுச் சேர்ப்பதாகவுமே காணப்பட்டது. யாழ்தேவி பயணத்தினை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தயை ஊடகங்கள் முதன்மையாக காட்டியிருந்தாலும் அதையும் தாண்டி பல செயற்திட்டங்களை அவர் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்திருந்தார். அவற்றில் பாடசாலைகளுக்கு ஆய்வுகூடங்கள் மற்றும் பல திட்டங்கள் என்பவை அடங்கும். இவை பெரிதாக ஊடகங்களால் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் ஏற்றுக்கூடியவையா? 



இதேவேளை வடக்கு மாகாண சபையினை தன்னுடைய கையில் வைத்திருக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஜனாதிபதியின் இந்த யாழ் விஜயத்தினை வெளிப்படையாகவே புறக்கணித்திருந்தது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்போ எம்பிக்களோ வடமாகாணசபை உறுப்பினர்களோ யாருமே எந்த வித நிகழ்வுகளிலும் பங்கெடுக்கவில்லை. ஆனால் வடமாகாணசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் நிகழ்வுகளில் பங்கெடுத்தனர்.


யுத்தம் முடிந்த பின்னர் மனித சிவில் உரிமைகள் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை மற்றும் இராணுவ பிரசன்னம் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் காணப்படுகின்றது இதுபோன்ற நிலையில் மகிந்தவின் விஜயம் அரசியலை அடிப்படையாக கொண்டது ஆகவேதான் இவ்விஜயத்தினை புறக்கணிக்கின்றோம் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். இதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கலாம் ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வடமாகாண அபிவிருத்திக்கூட்டத்தில் பங்குபற்றாமல் விட்டது விமர்சிக்கவேண்டிய ஒன்று. சிவில் உரிமைகள் கிடைக்கவில்லை எனப்போரடுவது ஏற்கத்தக்கதுதான் ஆனால் அதைக்காட்டி மக்கள் வாழம் பிரதேசங்களில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்பாடுகளில் பங்குபற்றாமல் இருப்பது விமர்சிக்க வேண்டியது.


வடக்கின் காப்பட் வீதிகளில் தாங்கள் சொகுசாக பயணிக்க சொகுசு வாகனங்களை அரசாங்கத்திடம் கேட்டு வாங்குவதில் வடமாகாணசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இருக்கின்ற ஆர்வம் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டு பெற்றுக் கொள்வதற்கு அல்லது பெற்றுக் கொடுப்பதற்கு இல்லாமல் இருக்கின்றது. 


என்ன நடந்தாலும் மக்கள் மஹிந்தவுக்கு வாக்களிக்கமாட்டார்கள் டக்ளசுக்கு வாக்களிக்கமாட்டார்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பான (இலங்கை தமிழரசு கட்சி) தமக்கே வாக்களிப்பார்கள் என்ற ஒரு நம்பிக்கையினை வைத்துக்கொண்டு தமிழரசு கட்சியினர் எழுந்தமானமாக செயற்படுகின்றனர். ஆனால் மக்கள் எவ்வளவுநாள்தான் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பின்னாலே போவார்கள் என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால் தமிழர்கள் தாங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதை மிகத் தெளிவாக தெரிந்து வைத்திருக்கின்றார்கள். வேறு வழிகள் இல்லாத காரணத்தினால் விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களிக்கின்றார்கள் என்பதுதான் உண்மை.


இலங்கைத் தமிழரசு கட்சியின் தமிழீழ கனவில் சிக்கி சின்னாபின்னமாகி இறுதியில் அழிந்துபோனது அப்பாவி மக்களும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும்தான். அந்த அழிவு போர் எம்மோடே போகட்டும் எங்களுடைய எதிர்கால சந்ததிக்கு வேண்டாம் என்பதுதான் இன்று இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களின் எதிர்பார்ப்பு. அதற்கு இன்றைய நவீனகால அரசியலை சமாளிக்கும் திறனுடைய பலமான தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் அணியொன்று தமிழர்களுக்கு தேவை. அதுதான் காலத்தின் கட்டாயம்கூட. அவ்வாறு ஒரு இளைய அணியொன்று  அரசியலில் எழுமானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவு இறுதி செய்யப்படு புதிய அரசியல் எழுற்சி ஒன்று ஏற்படும். ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற நிலையில் தமிழர்கள் இன்று இருக்கின்றார்கள். காரணம் இன்றைய நாட்டின் சூழல் பலமான இளைஞர் அணியொன்றை அரசியலில் கட்டியெழுப்ப சந்தர்ப்பத்தினை வழங்குமா என்பது முக்கியமான கேள்வி. அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்ற பழமொழிதான் இந்த இடத்தில் எனக்கு நினைவுக்கு வருகின்றது.

03 ஜூலை 2010

உங்களுக்கு இலங்கை தமிழர் நாங்கள்தானா கிடைத்தோம் ?

"இலங்கைத்தமிழர்" தமிழ் உணர்வு" இலங்கையில் நடைபெறும் விழாக்களில் கலந்துகொள்ளும் சினிமா துறையினருக்கு தடை" "இலங்கைக்கு சென்றால் தடை" இலங்கை "இலங்கை" இவ்வாறான சொற்களை கேட்டு இணையங்களில் பார்த்து எனக்கு அலுத்துவிட்டதுடன் சம்பந்தப்பட்வர்களின்மீது கோபமும்தான் வருகின்றது. இன்று தமிழ் நாட்டில் அரசியல் செய்யவேண்டும் என்றால் ஏதோ ஒரு வகையில் இலங்கை பிரச்சனையை கையில் எடுக்க வேண்டிய நிலையில் தமிழ் நாட்டின் அரசியல் கலாச்சாரம் மாறிவிட்டதோ என எண்ணத்தோன்றும் அளவிற்கு நிலமை சென்றுவிட்டது.

இந்த எதிர்ப்பு அரசியல் கலாச்சராம் சில ஆண்டுகளுக்கு முன்னமே மிகவும் மும்முரமாக வெளித்தெரிய ஆரம்பித்தது என்றாலும் ஆரம்பம்தொட்டு சிறு சிறு எதிர்ப்புக்கள் இருந்தன ஆனாலும் இவ்வளவு தூரத்திற்கு அவை இருக்கவில்லை. எதிர்ப்புக்களால் மேலும் மேலும் துன்பப்படபோவது இங்கிருக்கும் தமிழ் மக்கள் என்பதை எல்லோரும் உணர்ந்துகொள்ள வேண்டும். வடபகுதியில் எரிக்கும் வெயிலின் மத்தியிலும் கொட்டும் மழையின் வெள்ளத்திலும் பொருளாதார ரீதியாகவும் எல்லா வகையாலும் நாளாந்தம் தங்கள் வாழ்க்கையினை நடத்துவதற்கு அம்மக்கள் படும்பாடு குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து அறிக்கைகளை வெளியிடும் தமிழ் உணர்வாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் எங்கு தெரியப்போகின்றது. இவர்களுடைய ஒரே நோக்கம் இலங்கைத்தமிழரை பயன்படுத்தி சந்தர்ப்ப அரசியல் செய்வதுதான். இந்த எதிர்ப்பரசியலுக்குள் தற்போது தமிழ் சினமாவும் சிக்கியிருப்பது பெரும் வேதனையான விடயம் என்றாலும் தமிழ் சினிமாவில் அரசியல் கலந்திருப்பது சாராதரணமான ஒன்றுதானே.

இவற்றைபற்றி பந்தி பந்தியாக எழுதுவதற்கு எனக்கு உடன்பாடு இல்லை. எனக்குள்ளும் இவர்களின் மேல் இந்த சமூகத்தின்மேல் பல உலக நியதிகளின்மேல் நியாயமான கோபம் இருக்கிறது ஆனாலும் நியாயமான கோபங்களுடன் வாழும் சாமானியன் என்று என்னால் கூறமுடியாமல் இருக்கிறது ஏனென்றால் தொழிலால் நான் ஒரு ஊடகவியலாளன். தமிழ் உணர்வாளர்களின் எதிர்புக்களை இலங்கையில் இருக்கும் பெரும்பாலான தமிழர்கள் விரும்பவில்லை என்பதையும் உங்கள் எதிர்ப்புக்களால் தொடர்ந்தும் பாதிக்கப்படபோவது இலங்கையில் இருக்கும் தமிழர்களாகிய நாங்களே என்பதை எதிர்பாளர்களும் சம்பந்தப்பட்வர்களும் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே எனது கோரிக்கை.