A Promised Land

YarlDevi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
YarlDevi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23 அக்டோபர் 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வைக்கோற்பட்டறை நாயா?


மேலே தலைப்பில் குறிபிபட்ட விடயம் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வெளிப்படையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சித்த விடயம். இலங்கையின் கடந்த வார பீக் செய்திகள் எல்லாம் யாழ்ப்பாணத்திற்கான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விஜயமும் யாழ்தேவியின் மீள்வருகையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புறக்கணிப்பும்தான்.



இலங்கை ஜனாதிபதி தன்னுடைய அரசியல் செல்வாக்கை தென்னிலங்கையில் அதிகரித்துக்கொள்ளவும் அடுத்த ஆண்டில் இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலை கருத்தில் கொண்டுமே தன்னுடைய யாழ் விஜயத்தினை ஏற்பாடு செய்திருக்கின்றார் என்பது பலருடைய கருத்து. அங்கே இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டங்களில் அவர் தெரிவித்த கருத்துக்களும் மேலுள்ள கூற்றுக்கு மேலும் வலுச் சேர்ப்பதாகவுமே காணப்பட்டது. யாழ்தேவி பயணத்தினை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தயை ஊடகங்கள் முதன்மையாக காட்டியிருந்தாலும் அதையும் தாண்டி பல செயற்திட்டங்களை அவர் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்திருந்தார். அவற்றில் பாடசாலைகளுக்கு ஆய்வுகூடங்கள் மற்றும் பல திட்டங்கள் என்பவை அடங்கும். இவை பெரிதாக ஊடகங்களால் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் ஏற்றுக்கூடியவையா? 



இதேவேளை வடக்கு மாகாண சபையினை தன்னுடைய கையில் வைத்திருக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஜனாதிபதியின் இந்த யாழ் விஜயத்தினை வெளிப்படையாகவே புறக்கணித்திருந்தது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்போ எம்பிக்களோ வடமாகாணசபை உறுப்பினர்களோ யாருமே எந்த வித நிகழ்வுகளிலும் பங்கெடுக்கவில்லை. ஆனால் வடமாகாணசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் நிகழ்வுகளில் பங்கெடுத்தனர்.


யுத்தம் முடிந்த பின்னர் மனித சிவில் உரிமைகள் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை மற்றும் இராணுவ பிரசன்னம் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் காணப்படுகின்றது இதுபோன்ற நிலையில் மகிந்தவின் விஜயம் அரசியலை அடிப்படையாக கொண்டது ஆகவேதான் இவ்விஜயத்தினை புறக்கணிக்கின்றோம் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். இதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கலாம் ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வடமாகாண அபிவிருத்திக்கூட்டத்தில் பங்குபற்றாமல் விட்டது விமர்சிக்கவேண்டிய ஒன்று. சிவில் உரிமைகள் கிடைக்கவில்லை எனப்போரடுவது ஏற்கத்தக்கதுதான் ஆனால் அதைக்காட்டி மக்கள் வாழம் பிரதேசங்களில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்பாடுகளில் பங்குபற்றாமல் இருப்பது விமர்சிக்க வேண்டியது.


வடக்கின் காப்பட் வீதிகளில் தாங்கள் சொகுசாக பயணிக்க சொகுசு வாகனங்களை அரசாங்கத்திடம் கேட்டு வாங்குவதில் வடமாகாணசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இருக்கின்ற ஆர்வம் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டு பெற்றுக் கொள்வதற்கு அல்லது பெற்றுக் கொடுப்பதற்கு இல்லாமல் இருக்கின்றது. 


என்ன நடந்தாலும் மக்கள் மஹிந்தவுக்கு வாக்களிக்கமாட்டார்கள் டக்ளசுக்கு வாக்களிக்கமாட்டார்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பான (இலங்கை தமிழரசு கட்சி) தமக்கே வாக்களிப்பார்கள் என்ற ஒரு நம்பிக்கையினை வைத்துக்கொண்டு தமிழரசு கட்சியினர் எழுந்தமானமாக செயற்படுகின்றனர். ஆனால் மக்கள் எவ்வளவுநாள்தான் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பின்னாலே போவார்கள் என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால் தமிழர்கள் தாங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதை மிகத் தெளிவாக தெரிந்து வைத்திருக்கின்றார்கள். வேறு வழிகள் இல்லாத காரணத்தினால் விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களிக்கின்றார்கள் என்பதுதான் உண்மை.


இலங்கைத் தமிழரசு கட்சியின் தமிழீழ கனவில் சிக்கி சின்னாபின்னமாகி இறுதியில் அழிந்துபோனது அப்பாவி மக்களும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும்தான். அந்த அழிவு போர் எம்மோடே போகட்டும் எங்களுடைய எதிர்கால சந்ததிக்கு வேண்டாம் என்பதுதான் இன்று இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களின் எதிர்பார்ப்பு. அதற்கு இன்றைய நவீனகால அரசியலை சமாளிக்கும் திறனுடைய பலமான தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் அணியொன்று தமிழர்களுக்கு தேவை. அதுதான் காலத்தின் கட்டாயம்கூட. அவ்வாறு ஒரு இளைய அணியொன்று  அரசியலில் எழுமானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவு இறுதி செய்யப்படு புதிய அரசியல் எழுற்சி ஒன்று ஏற்படும். ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற நிலையில் தமிழர்கள் இன்று இருக்கின்றார்கள். காரணம் இன்றைய நாட்டின் சூழல் பலமான இளைஞர் அணியொன்றை அரசியலில் கட்டியெழுப்ப சந்தர்ப்பத்தினை வழங்குமா என்பது முக்கியமான கேள்வி. அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்ற பழமொழிதான் இந்த இடத்தில் எனக்கு நினைவுக்கு வருகின்றது.

13 அக்டோபர் 2014

யாழ்தேவி... ஒரு உணர்வுபூர்வமான உறவுப்பாலம்



ஒரு நாட்டின் போக்குவரத்து என்பது அந்த நாட்டின் அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமானதொன்றாகும். எந்தவொரு நாட்டில் போக்குவரத்து மேம்பட்டு காணப்படுகின்றது அந்த நாடு அபிவிருத்தி அடைந்த நாடாகவோ அல்லது அபிவிருத்தியினை வேகமாக எட்டுவதற்கு பயணித்துக் கொண்டிருக்கும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடாகவே கருதமுடியும். 

இலங்கையில் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான உறவுப்பாலமாக இருப்பது என்னவென்று கேட்டால் ஒன்று ஏ9 பிரதான வீதி மற்றையது யாழ்தேவி புகையிரதம். இந்த இரண்டு போக்குவரத்து சேவையிலும் புகையிர சேவையானது மிகவும் புகழ்வாய்ந்தது. வடற்கிற்கும் தெற்குக்கும் இடையிலான உண்மையான உறவுப்பாலம் எதுவென கேட்டால் யாழ்தேவி புகையிரதத்தினைத்தான பலரும் கூறுவார்கள். உண்மையும் அதுதான். 

1956ம் ஆண்டு வடக்கிற்கான பயணத்தினை ஆரம்பித்த யாழ்தேவி 1990களில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் காரணமாக வவுனியாவரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் 2009 யுத்தம் முடிவுற்றதன் பின்னர் சிறிது சிறிதாக பளை வரை பயணித்த புகையிரத சேவை இன்று முதல் 13.10.2014 யாழ்ப்பாணம்வரை தனது சேவையினை 14 ஆண்டுகளிற்கு பின்னர் ஆரம்பிக்கின்றது. இந்திய அரசின் நிதியுதவியிலேயே இந்த புகையிரதசேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தியோக பூர்வமாக யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத சேவையினை இன்று ஆரம்பித்து வைக்க இருக்கின்றார். 

90களின் பிற்பகுதியில் பிறந்த யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த பலரும் இன்றைக்கு பிற்பாடு புகையிரதத்தினை நேரில் பார்க்கும் வாய்ப்பினைப் பெறப்போகின்றார்கள். அது ஒரு உணர்வு பூர்வமான தருணமாக இருக்கப் போகின்றது. அத்தோடு வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான பிரயாணங்களை இது மேலும் இலகுபடுத்தப் போகின்றது. 

யாழ்ப்பாணத்திற்கு புகையிரதசேவை வருவதானது யாழ்ப்பாணத்திற்கு சாதகமான பல விடயங்களையும் பாதகமான பல விடயங்களையும் கொண்டுவரப் போகின்றது. இவற்றையெல்லாம் தாண்டி 2 தசாப்தங்களுக்கு மேலானா வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலாக ஒரு இடைவெளியினை இது இல்லாமல் செய்யப்போகின்றது என்பது முற்றிலும் உண்மை.