A Promised Land

06 பிப்ரவரி 2012

பொறாமை - சிறிய ஒரு கதை


ஆரோக்கியமான போட்டி ஒருவரை அவருடைய நல்லநிலைமைக்கும் அவனுடைய முன்னேற்றத்திற்கும் காரணமான அமைந்துவிடும். ஆனால் பொறாமை என்பது மிகவும் ஆபத்தான ஒன்று. அது மனிதர்களுடன் இயல்பாகவே இருக்கும் ஒன்றாகும். இந்தப் பொறாமை பலருடைய வாழ்க்கையையே தலைகீழாக திருப்பிபோட்டுவிடக்கூடியது. வகுப்பில் சகமாணவர்களுடன் போட்டி போட்டு படிக்கவேண்டும் பொறாமை இருக்கக்கூடாது என்று என்னுடைய ஆரம்பக்கல்வி தமிழ் ஆசிரியர் வகுப்பில் கூறியது இப்போதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது

சிறிய ஒரு கதை


ஒரு ஊரிலே ஒரு பரம ஏழை அன்றாடம் ஒருவேளை உணவுக்கே அல்லல்பட்டுக்கொண்டு இருக்கின்றான். ஒருநாள் அந்தக்கிராமத்திற்கு கொடைவள்ளலான சாமியார் ஒருவர் வருகின்றார். அவரைப்பார்ப்பதற்கு சென்ற அந்த ஏழை குடியானவன் அந்த சாமியாரை பசந்தித்து தனக்கு செல்வங்கள் கிடைத்து தான் நன்றாக வாழ வரமருளவேண்டும் என்று அவரை கோருகின்றான். அவனது கோரிக்கைக்கு இரக்கப்பட்ட சாமியார் அவனைப்பார்த்து உனக்கு நான் சகல சௌபாக்கியங்களும் கிடைத்து வளமான வாழ்க்கை வாழ்வதற்காக நீ கேட்பதை  தருவேன் ஆனால் ஒரு நிபந்தனையோடுதான் தருவேன் எனக்கூறுகின்றார். அந்த நிபந்தனை என்னவென்றால் நீ உன்னுடைய செழிப்பான வாழ்க்கைக்கு எவ்வளவு செல்வங்களை கேட்கின்றாயோ அதேபோல இரண்டு மடங்கானவற்றை உன்னுடைய எதிர் வீட்டுக்காரன் பெறுவான் என்ற நிபந்தனையை போடுகின்றர். அதற்கு அந்தக் ஏழைக்குடியானவன் கலவரமடைந்து யோசிப்பதைப்பார்த்த சாமியார் நீ இன்று வீடு சென்று நன்றாக சிந்தித்து உனக்கு என்ன வேண்டும் என நாளை நீ என்னிடம் வந்து கூறு ஆனால் நீ கேட்பதைப்போல இருமடங்கு உன் எதிவீட்டுக்காரனுக்கு கிடைக்கும் என்று கூறி அனுப்பிவைக்கின்றார். அதேபோல அடுத்தநாளும் அந்தக்ஏழைக்குடியானவன் சாமியாரைப் பார்ப்பதற்கு வருகின்றான. சாமியார் அவனைப்பார்த்து உனக்கு என்ன வேண்டும் என தீர்மானித்து விட்டாயா என கேட்கின்றார் அதற்கு அந்த ஏழைக் குடியானவன் எனது ஒரு கண்ணை எடுத்துவிடுங்கள் நான் சந்தோசமாக இருப்பேன் என்று கூறுகின்றான். இதைத்தான் பொறாமையின் உச்சக்கட்டம் என்று கூறுமுடியும். தனக்கு கிடைப்பதைப்போல இருமடங்கு எதிர்வீட்டுக்காரனுக்கு கிடைக்கும் என்று தெரிகின்றபோது அவனுடைய பொறாமையின் உச்ச வெளிப்பாடக தனது ஒரு கண்ணை எடுத்துவிடும்படி கேட்கின்றான்.

இது ஒரு நான் கேள்விப்பட்ட கற்பனைக்கதையாக இருந்தாலும் பொறாமையின் உச்சக்கட்டத்தை கூறிநிற்கின்றது. பொறாமை என்பது ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமின்றி சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் பரந்துபட்டு இருக்கின்றது. மனிதர்கள் பொறாமையை விட்டு ஆரோக்கியமான போட்டியுடன் செயற்பட்டால் நல்லஒரு நிலையை அடைமுடியும் என்பது வெளிப்படை உண்மை.