A Promised Land

07 செப்டம்பர் 2018

28 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்படும் மயிலிட்டி பாடசாலை



விடுவிக்கப்பட்ட பாடசாலையின் தற்போதைய தோற்றம்

ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் கல்வியின் பங்கு இன்றியமையாத இன்றைய நவீன உலகில் கல்வி புகட்டும் பல பாடசாலைகள் இன்னும் பாதுகாப்பு படைகளின் பிடிக்குள் சிக்கியிருக்கும் துன்பகரமானதொரு நிலைமையே இலங்கையின் தமிழ் மக்கள் செறிந்துவாழும் வடக்கு கிழக்கு பகுதியில் காணப்படுகின்றது. 

ஏறத்தாள முப்பது வருட அகிம்சைப் போராட்டமும் முப்பதுவருட ஆயதப் போராட்டமும் நம்நாட்டுத் தமிழர்களின் வாழ்க்கையிலும் பண்பாட்டிலும் பாரியளவு தாக்கத்தை செலுத்தியிருந்தாலும் கல்வியில் அந்தளவிற்கு பெரியளவான தாக்கத்தினை செலுத்த முடியவில்லை என்பதனை வடக்கு கிழக்கின் தொடர்ச்சியான சிறந்த கல்வி பெறுபேறுகள் கட்டியம் கூறி நிற்கின்றன. 
இந்த வகையிலேயே முப்பது வருட ஆயுதப் போராட்டம் தமிழ் மக்களை தமது சொந்த இடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேறச் செய்தது மாத்திரமல்லாது அவர்களுடைய இடங்களில் பாதுகாப்பு படையினரின் முகாம்களுடன் கூடிய உயர் பாதுகாப்பு வலையங்களை உருவாக்கியிருந்தது. இந்த உயர் பாதுகாப்பு வலையங்களுக்குள் மக்களின் நிலங்கள், விவசாய நிலங்கள், பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவை சிக்கிக் கொண்டன. 

இந்த நிலையிலேயே அண்மையில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு வருகை தந்திருந்த அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்கள் உணர்வு பூர்வமான சில கோரிக்கைகளை விடுத்திருந்தார். அவற்றில் முதன்மையானது மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்தின் விடுவிப்பு. 

யுத்த காலத்தில் பாதுகாப்பு படைகள் கைவசப்படுத்திய பொதுமக்களுடைய காணிகள் அவர்களுக்கு மீளவும் வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாகவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் உடனடியாகவே அந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களை அழைத்து இந்தப் பாடசாலை விடுவிப்பு தொடர்பில் கேட்டறிந்ததுடன் உடனடியாகவே இராணுவத் தளபதியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாடசாலையை விடுவிப்பதற்கான உத்தரவினையும் வழங்கியதுடன் அந்த நிகழ்வில் உரையாற்றும் போது இன்றும் இரண்டு வாரங்களில் மயிலிட்டி பாடசாலை விடுவிக்கப்படும் என்று அப்பகுதி மக்களின் உற்காச கரகோசத்திற்கு மத்தியில் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே செப்டெம்பர் 06 ஆந் திகதி மயிலிட்டி வடக்கு கலைமகள் வித்தியாலயம் பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படுகின்றது. அது மட்டுமல்லாது யாழ் மாவட்டத்தின் வெவ்வேறு பிரதேசங்களில் இதுவரையும் விடுவிக்கப்படாதிருந்த பொதுமக்களின் காணிகளின் ஒரு தொகுதியும் அன்றைய தினம் விடுவிக்கப்பட இருப்பதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்திருக்கின்றமையானது எதிர்பார்ப்புக்களுடனிருந்த மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் இராணுவக் கட்டளை தளபதியுடன் பாடசாலை விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடும் ஜனாதிபதி 
1818 ஆம் ஆண்டு அமெரிக்க மிஷனரி சபையினைச் சேர்ந்த டானியல் பூவர் என்பவரால் 33 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலையை 1963 இல் அரசு பொறுப்பேற்று கொண்டாலும் தொடர்ந்தும் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயரிலேயே 1975 ஆம் ஆண்டுவரை இயங்கி வந்திருந்தது. 1975 ஆம் ஆண்டு தமிழ் அரசியல் தலைவரான தந்தை செல்வா அவர்களினாலேயே இந்தப் பாடசாலைக்கு மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம் எனப் பெயர் சூட்டப்பட்டது. 
931 மாணவர்களுடனும் 26 ஆசிரியர்களுடனும் இயங்கிவந்த இப்பாடசாலை 1987 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக வேறு இடத்தில் இயங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாலும் பின்னர் 87 ஆம் ஆண்டே மீண்டும் சொந்த இடத்தில் மீள் இயங்க தொடங்கியபோதும் மாணவர்களின் எண்ணிக்கை 871 ஆக வீழ்ச்சியடைந்திருந்தது. 

1990 ஆம் ஆண்டு மீண்டும் ஆரம்பமான உள்நாட்டுப் போர் காரணமாக 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 18 ஆம் திகதி மயிலிட்டி மக்கள் இடப்பெயர்வை சந்தித்ததன் காரணமான இப்பாடசாலை சுன்னாகம் திருஞான சம்பந்தர் வித்தியலயத்தில் மாலை நேரப் பாடசாலையாக 123 மாணவர்களுடனும் 12 ஆசிரியர்களுடனும் இயங்கியது. மாலை நேரப் பாடசாலையாக அங்கு இயங்கியதன் காரணமாக மாணவர்களின் வரவு சரிபாதியாக வீழ்ச்சியடையவும் பின்னர் சுன்னாகம் வினைல்ஸ் தனியார் கல்வி நிலையத்தில் காலை நேர பாடசாலையாக இயங்கத் தொடங்கியது. 

தற்போதைய பாடசாலை இயங்கிவரும் நிலை
பின்னர் 1993 ஆம் ஆண்டு இப்பாடசாலை தனது தனித்துவத்தினை இழந்து மல்லாகம் மகா வித்தியலயத்துடன் இயங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அதன் பின்னர் ஏற்பட்ட உள்நாட்டு மோதல்களால் மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம் உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் பல பாடசாலைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டதுடன் அவை கூட்டுப் பாடசாலைகளாகவே தற்காலிக கொட்டகைகளில் இயங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. 1996 ஆம் ஆண்டுமுதல் தற்போதுவரை சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் தற்காலிக கொட்டகைகளை அமைத்து இயங்கிவரும் இப்பாடசாலைக்கு ஜனாதிபதி அவர்களின் உத்தரவிற்கமைய தற்போது விடிவு கிடைத்திருக்கின்றது. 

தற்போது பாடசாலை இயங்கிவரும் ஒரு கட்டிடம்

மயிலிட்டி கிராமத்தின் ஒரு பகுதி ஏற்கனவே பாதுகாப்பு படையினரால் விடுவிக்கப்பட்டிருந்தும் பாடசாலை பகுதி இதுவரை விடுவிக்கப்படாதிருந்தமை காரணமாக மயிலிட்டியில் மீளக்குடியேறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பேரூந்துகளில் சுன்னாகத்திற்கு பிரயாணம் செய்தே தமது கல்வியினை தொடரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். தற்போது அவர்களுக்கும் தமது சொந்த ஊரிலேயே தமது காலடிக்குள் இருக்கும் பாடசாலையில் கல்வியினை தொடரக்கூடிய வாய்ப்பு கிட்டியிருப்பது அம்மக்களுக்கும் மாணவர்களுக்கும் மகிழ்ச்சியினை தோற்றுவிக்கும்.  


ஆனாலும் இந்தப் பாடசாலையினை உடனடியாக மீளவும் இயங்கவைப்பதற்கு தற்போதிருக்கும் முக்கிய சவால், பாசாலைக்கு தேவையான வளங்களை உடனடியாக பெற்றுக் கொடுப்பதேயாகும். இதற்குரிய நடவடிக்கைகளை யாழ் மாவட்ட அரச அதிபரும் மீள்குடியேற் அமைச்சரும் மேற்கொள்ள வேண்டும். பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தியில் அரசாங்கத்தின் பங்கு மிக்கியமானதாக காணப்படும் அதேவேளை உள்ளுரிலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் இப்பாடசாலையின் பழைய மாணவர்களுக்கும் சிறியளவேனும் பங்கு இருக்கின்றது என்பது மறுக்கமுடியாத ஒன்று. அதையுணர்ந்து அவர்களும் ஆக்கபூர்வமான பங்களிப்பினை இந்தப் பாடசாலை சமூகத்திற்கு வழங்கவேண்டும். 

தற்காலிக வகுப்பறை கட்டிடம்
இதேவேளை காங்கேசந்துறை, மயிலிட்டி மற்றும் பலாலி பிரதேசங்களில் இன்னும் விடுவிக்கப்படாமல் ஆறு பாடசாலைகள் காணப்படுகின்றன. காங்கேசந்துறை மகா வித்தியாலயம், காங்கேசந்துறை றோமன் கத்தோலிக்க பாடசாலை, மயிலிட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலை, வசாவிளான் சி.வேலுப்பிள்ளை வித்தியாலயம், பலாலி மேற்கு அமெரிக்கன் மிஷன் வித்தியாலயம் மற்றும் சித்திவிநாயகர் வித்தியாலயம் ஆகியனவே வலிகாமம் வடக்கு பிரதேத்தில் இன்றும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படும் பாடசாலைகளாகும். 

இதற்கு முன்னர் இருந்த எந்த அரச தலைவரும் தமிழ் மக்கள் மீது கொண்டிருக்காத கரிசனையை தற்போதைய அரச தலைவர் கொண்டிருப்பது தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி இலங்கையின் முழு சிறுபான்மை மக்களுக்குமே வரப்பிரசாதம். மூன்று தசாப்த கோர யுத்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு அபிவிருத்தி மிகவும் அத்தியாவசியம். ஆகவே தமது குறுகிய சுய இலாபங்களுக்காக அடையாள அரசியலை மட்டுமே முன்னெடுத்து பிரச்சினைகளை மேலும் சிக்கலுக்குள் தள்ளிவிட முயற்சிக்கும் பிரிவினரின் கபடத்தனங்களை இனங்கண்டு அடையாள அரசியலுடன் இணைந்த அபிவிருத்தியினையும் முன்னெடுக்க தேவையான அழுத்தங்களை மக்கள் பிரதிநிதிகளுக்கும் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும் வழங்கவேண்டிய பொறுப்பு தமக்கு இருக்கின்றது என்பதை உணர்ந்து செயற்பட வேண்டிய தருணம் இதுதான் என்பதை தமிழ் மக்கள் புரிந்து செயற்பட வேண்டும்.  

(கடந்த 06 ஆம் திகதி யாழிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் பிரசுரமாகியிருந்த எனது கட்டுரை)

21 ஆகஸ்ட் 2018

புத்தெழுச்சிபெறும் வடக்கு - மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி


யாழ் குடாநாட்டின் மயிலிட்டி மீன்பிடித் துறைமுத்தினை மீண்டும் முழுஅளவில் இயங்க வைப்பதற்கான முதற்கட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் இம்மாதம் 22 ஆம் திகதி ஜனதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட இருக்கின்றது.

80 களில் நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் மூன்;றில் ஒருபகுதியினை பெற்றுக்கொடுத்த முன்னணி மீன்பிடித் துறைமுமாக இருந்த மயிலிட்டி உள்நாட்டு போர் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அரச படைகளிடம் சிக்கியது. பலாலி விமானப் படைத்தளத்தை சுற்றி முப்படைகளின் முகாம்கள் வேரூன்ற ஆரம்பித்ததிலிருந்து வலி வடக்கு பிரதேசம் அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டமையினால் பலாலி மயிலிட்டி வளலாய் காங்கேசந்துறை, ஊறணி, தெல்லிப்பளை போன்ற யாழ் குடாநாட்டின் கரையோர பாரம்பரிய வசிப்பிடங்களிலிருந்து அப்பகுதி மக்கள் வெளியேற நிப்பந்திக்கப்பட்டனர். 

அவ்வாறு வெளியேறிய மக்கள் பல காலங்கள் வழிமேல் விழிவைத்து காத்திருந்த போதிலும் நீண்ட காலமாக அவர்களது பூர்வீக இடங்களுக்கு திரும்பும் வாய்ப்பு கிட்டவில்லை. ஆயினும் தாம் இழந்த நிலத்தினை மீளப்பெறும் முயற்சியில் உறுதியாக இருந்த அம்மக்களுக்கு 26 ஆண்டுகள் கடந்த நிலையிலேயே விமோசனம் கிடைத்தது. நாட்டின் பாதுகாப்பை பொறுத்த வரையில் கேந்திர முக்கியத்துவம் கொண்ட பிரதேசமாக இப்பிரதேசம் விளங்கியதால் இப்பிரதேசத்தை விடுவிப்பதற்கு படைத்தரப்பினை இணங்கவைப்பது மிகக் கடினமான காரியமாகவே இருந்தது. ஆயினும் மக்களின் சொந்த நிலங்களை மீண்டும் அவர்களுக்கே பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக 27 ஆண்டுகளின் பின்னர் கடந்த வருடம் நடுப்பகுதியில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீண்டும் மக்களின் உபயோகத்திற்காக பெற்றுக்கொடுக்கும் வாய்ப்பு கிட்டியது. 

ஆயினும் பல ஆண்டுகளாக கவனிப்பாரற்று கைவிடப்பட்ட நிலையில் இருந்துவந்த அத்துறைமுகத்தை இயங்கவைக்க வேண்டுமாயின் முற்றுமுழுதாக புனரமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதை உணர்ந்த அரசாங்கம் அப்பணியினை மீன்பிடி மற்றும் நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சினூடாக முன்னெடுப்பதற்கு தீர்மானித்தது. இவ் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முற்றாக சேதமடைந்திருக்கும் துறைமுகத்தின் இறங்குதுறை மற்றும் ஐஸ் களஞ்சியம், எரிபொருள் களஞ்சியம் உள்ளிட்ட சகல அடிப்படை வசதிகளையும் செய்வதுடன் இப்பணிகளின் முதற்கட்டமாக தற்போதைய துறைமுகப் படுக்கையினை ஆழப்படுத்தல், 80 மீற்றர் நீளமான துறைமுக மேடைய அமைத்தல், வலை தயாரிக்கும் நிலையம், தகவல் பரிமாற்று நிலையம், மீனவ சனசமூக நிலையம், கண்காணிப்பாளர் அலுவலகம், மீனவர் சங்கக் கட்டிடம், நீர் மற்றும் மின்சார வசதி, மலசலகூட வசதி, சமிஞ்ஞை விளக்கு கோபுரங்கள் ஆகியன உருவாக்கப்பட இருக்கின்றன. 

அதன் இரண்டாம் கட்டமாக தற்போதைய துறைமுகத்தை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் மீன் ஏலவிற்பனை நிலையம், கழிவு நீர் மற்றும் கழிவு பொருட்களை அகற்றும் செயற்திட்டம், நிர்வாக கட்டிடம், மின் பிறப்பாக்கிகள், ரேடார் கட்டுப்பாட்டுப் பிரிவு, உணவகம், அலுவலகர்கள் தங்குமிட வசதி மற்றும் உள்ளக வீதிப் புனரமைப்பு ஆகிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. 
இந்நிர்மாணப் பணிகளின்போது அரச மற்றும் அரச படைத்தரப்பினர்களுடன் இத்துறைமுகத்தின் பயனாளிகள் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம் மயிலிட்டி துறைமுகத்தை இலங்கை மீன்பிடித் துறையின் ஒரு முக்கிய கேந்திர நிலையாக மாற்றியமைக்கக் கூடிய வாய்ப்பு கிடைப்பதுடன் இப்பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கும் இழந்த வாழ்க்கையை மீளவும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக அமையும். 

30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இன்னல்களை சந்தித்த சமூகத்தை விடிவைநோக்கி கொண்டு செல்வதற்கான பல வாய்ப்புகள் தற்போது ஆங்காங்கே உருவாகி வருகின்றன. அன்று தனிமனித விருப்பு வெறுப்பே நம்நாட்டின் அரசியல் என்றிருந்த நிலைமாறி மற்றவர்களின் உணர்ச்சிகளையும் உரிமைகளையும் மதித்தே முடிவுகளை எடுக்க வேண்டுமென்ற சிந்தனை இன்றைய அரச தலைமைத்துவத்திடம் இருப்பதே அதற்கு காரணமாகும். அதனாலேயே பல தசாப்தங்களாக கனவாக இருந்துவந்த பல விடயங்கள் ஒவ்வொன்றாக நனவாகி வருகின்றன என்பதை தமிழ்ச் சமூகம் உணர்ந்து கொள்வது அவசியமாகும். தமிழ் சமூகத்தின் எதிர்காலம் இந்த சிந்தனை மாற்றத்திலேயே தங்கியிருக்கின்றது. 

கடல் வளம் என்பது ஒரு நாட்டுக்கு கிடைக்கும் இயற்கையின் மாபெரும் கொடையாகும். ஒரு தீவு தேசம் என்றவகையில் எமது நாட்டைச்சுற்றி வளமான கடற்பரப்பு அமைந்திருப்பது நம்மவர்களின் பாக்கியமே. அதிலும் குறிப்பாக தமிழ் மக்கள் செறிந்துவாழும் வடகிழக்கு பிரதேசம் நாட்டின் மொத்த கடற்பரப்பின் பெரும்பகுதியினை கொண்டிருப்பதால் தமிழ் சமூகத்தின் இருப்பு மீது இந்த கடலின் தாக்கம் மிக அதிகமானதாக இருந்து வருகின்றது. 

அந்தவகையில் நமது நாட்டுக்கும் வடபகுதி மீனவ சமூகத்திற்கும் பொருளாதார ரீதியில் பாரிய பங்களிப்பை செய்துவந்த மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் மூன்று தசாப்தங்களின் பின்னராவது அப்பகுதி மீனவ சமுதாயத்திடம் மீண்டும் கிடைக்கப் பெறுவதன் மூலம் மிகுந்த பயனை அடையக் கூடியதாக இருக்கும். குறிப்பாக 2015 ஆம் ஆண்டுக்கு முன் சர்வதேச மீன் ஏற்றுமதியில் எமக்கு விதிக்கப்பட்டிருந்த ஐரோப்பிய நாடுகளின் தடை நீங்கி மீன் ஏற்றுமதிக்கான ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைக்கப் பெற்றிருக்கும் இந்த நிலையில் அதனை சிறந்த முறையில் உபயோகப்படுத்திக் கொள்ள வடபுல மீனவ சமூகம் முன்வருமாக இருப்பின் அதனால் அடையக்கூடிய பயன் மிகப்பாரியதாக இருக்கும். இத்தகைய வாய்ப்புக்களை சாதகமாக்கிக் கொள்வதற்கு உள்நாட்டு அதிகாரிகளும் புலம்பெயர் தமிழ் சமூகமும் சிறந்த ஒத்துழைப்பை வழங்கும் பட்சத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் வடபகுதியையும் அம்மக்களின் பொருளாதாரத்தையும் சிறந்த நிலைமைக்கு கொண்டுவருவதற்கு அது ஏதுவாக அமையும். 

அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை என்ற விமர்சனத்தை முன்வைத்தவாறு வெறுமனே அடையாள அரசியலை முதன்மைப்படுத்துவதற்கு பதிலாக அடையாளத்துவ அரசியலுடன் இணைந்ததான அபிவிருத்தி அரசியலை முன்னெடுப்பதற்கு வடபுல தமிழ் சமூகம் முனையும் பட்சத்திலேயே இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களின் உரிய பலனை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். அத்தோடு அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கு பொருளாதார கட்டமைப்பு இன்றியமையாததாக அமைகின்றது என்பதை புரிந்து கொள்வதன் மூலம் தமிழ் சமூகம் தமக்கு கிடைக்கின்ற வாய்ப்புக்களை சாதகமாக பயன்படுத்த முன்வரவேண்டும்.

(யாழ் மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெறுவதை முன்னிட்டு தமிழ்மிரர் பத்திரிகையில் ஆகஸ்ட் 21வெளிவந்த  )

24 ஜூன் 2018

வடக்கின் சிறார்களுக்கு நன்மைகளை கொண்டுவந்த "சிறுவர்களை பாதுகாப்போம்" தேசிய செயற்திட்டம்


சிறுவர்களைப் பாதுகாப்போம் செயற்திட்டம் நாட்டின் பல பிரதேசங்களிலும் ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற அதேவேளை இந்த செயற்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சி மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றதுடன் வடக்கு மக்களுக்கு சாதகமான பல பலன்கள் ஜனாதிபதியின் கிளிநொச்சி வருகையினால் கிடைத்திருக்கின்றன.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நடைபெற்ற யுத்தம் நம்நாட்டின் சிறார்களை மிக மோசமாக பாதித்திருக்கிறது. குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசத்தின் சிறுவர்கள் உடல் உள ரீதியிலும் பௌதீக ரீதியிலும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். வடக்கில் இறுதி யுத்தம் இடம்பெற்ற கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட சிறார்கள் உடல் உள ரீதியில் மாத்திரமன்றி சமூக ரீதியிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுடைய குடும்பத்தில் ஏதேனுமொரு இழப்பினை இந்த யுத்தம் அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது.

எனவே இச்சிறுவர்களை அரவணைத்துச் செல்லவேண்டிய பொறுப்பு அரசாங்கதிற்கு இருக்கின்றது. இந்தப் பிரச்சினைகளை சரியாக புரிந்து கொண்டுள்ள ஜனாதிபதி  வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தை தெரிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   

இந்த தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக போரினால் பெற்றோரை இழந்து சிறுவர் இல்லங்களில் தங்கி கல்வி கற்றுவரும் சிறுவர்களை பாதுகாத்து அவர்களை உடல் மற்றும் உள ரீதியில் மேம்படுத்தும் நோக்கில் குறித்த சிறுவர் இல்லங்களை மேம்படுத்துவதற்கு 4.85 மில்லியன் ரூபா நிதி ஜனாதிபதி அவர்களால் அந்த நிகழ்வில் வைத்து  வழங்கப்பட்டது.  

கிளிநொச்சி மாவட்டம் மட்டுமன்றி முழு வடமாகாணத்திலும் போரின் காரணமாக அங்கவீனமடைந்துள்ள சிறுவர்கள் கல்வி கற்கும் தெரிவுசெய்யப்பட்ட 25 பாடசாலைகளில் அவர்களுக்கான விசேட பாதைகளையும் விசேட மலசலகூடங்களையும் ஏனைய பௌதீக வசதிகளையும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் மேலும் 24.95 மில்லியன் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டது.  

அதேபோல கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் சுத்தமான குடிநீர் தட்டுப்பாடு காரணமாக சிறுநீரக நோய் பரவி வருவதை கண்டறியப்பட்டிருக்கின்றது. ஆகையால் சிறிநீரக நோயிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு 1000 சிறிய நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இந்நிகழ்வில் வைத்து வழங்கப்பட்டன. சிறுநீரக நோயின் பரவலை கட்டுப்படுத்தவும் தூய நீரின் பயன்பாடு தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் இந்த செயற்பாடு ஒரு ஆரம்பமாக அமையும்.


ஒழுக்கமுள்ள எதிர்கால பிரஜைகளை நம்நாட்டில் உருவாக்க வேண்டுமாயின் சிறுவர்கள் தனது பாலர் வகுப்பிலிருந்தே ஒழுக்கத்தினையும் சமூகம் மீதான மனித நேயத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு அடித்தளமாக அமைவது இந்த முன்பள்ளிக் கல்வியே. ஆகையினால் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முன்பள்ளிகளுக்கு தேவையான வசதி வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பற்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. அந்த அமைச்சின் நிதியொதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளிகளுக்கு தேவையான நூல்கள், கற்றல் உபகரணங்கள் மற்றும் முன்பள்ளி உபகரணங்கள் என்பன அன்றைய நிகழ்வின்போது ஜனாதிபதி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு கிளிநொச்சி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் பாதுகாப்பற்று வாழும் குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களை இனங்கண்டு அவர்களை பொருளாதார மற்றும் பௌதீக ரீதியில் மேம்படுத்துவதற்காக சிறுவர் நன்நடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை திணைக்களத்தினால்  பாதுகாப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக சிறுவர்களின் பாதுகாப்பு குடும்பத்தினுள்ளேயே உறுதிப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனடிப்படையில் அவ்வாறன குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அக்குடும்பங்களுக்கு பொருளார உதவிகள் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 06 குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபா வீதம் அன்றைய நிகழ்வில் ஜனாதிபதி  அவர்களால் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இடம்பெற்ற இன்னுமொரு முக்கிய விடயமாக வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்துவந்த 120.89 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதை குறிப்பிடலாம். அவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை குறிப்பிட்ட மாவட்டங்களின் செயலாளர்களிடம் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் 62.95 ஏக்கர் காணியும் கிளிநொச்சியில் 5.94 ஏக்கரும் முல்லைத்தீவில் 52 ஏக்கர் காணிகளுமே இவ்வாறு இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டது. ஆக வடக்கு கிழக்கில் படையினரின் வசிருந்த 80 வீதமான பொதுமக்களின் காணிகள் இதுவரை மீண்டும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.


சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத்திட்டதின் கிளிநொச்சி நிகழ்வுக்கு சமாந்தரமான இன்னுமொரு முக்கியமான நிகழ்வும் கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலயத்தில் அன்றைய தினமே இடம்பெற்றது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி கிளிநொச்சியில் அமைக்கப்பட் விசேட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைப்பதற்காக வருகை தந்த ஜனாதிபதி அவர்களிடம் பொருளாதார மத்திய நிலையத்திற்கு மிக அண்மையில் அமைந்துள்ள கனகபுரம் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் தமது பாடசாலைக்கு நிரந்த விளையாட்டு மைதானம் எதுவும் இல்லை. ஆகவே எமது பாடசாலைக்கு ஒரு விளையாட்டு மைதானத்தை அமைத்துத் தரும்படி வேண்டுகிறோம் ன்று ஜனாதிபதியிடம் தமது விளையாட்டு மைதானக் கோரிக்கையை முன்வைத்தார்கள்.


மாணவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த ஜனாதிபதி அவர்கள் இலங்கை விமானப்படை தளபதி கபில ஜயம்பதி அவர்களிடம்>  கனகபுரம் மகா வித்தியாலயத்திற்கான விளையாட்டு மைதானத்தை அமைத்துக் கொடுக்கும்படி உடனடியாகவே ஆலோசனை வழங்கினார்.  பாடசாலைக்கு அருகிலிருந்த அரச காணியினை கரச்சி பிரதேச செயலாளர் மற்றும் கிளிநொச்சி அரசாங்க அதிபர் ஊடாகப் பெற்று சுமார் ஐந்து மில்லியன்கள் செலவில் விமானப் படையினர் விளையாட்டு மைதானத்தை அமைத்து முடித்திருந்தனர். அதனை மாணவர்களுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசன அவர்களின் தலைமையில் இடம்பெற்றமை விசேட அம்சமகும்.



அந்த வகையில் ஜனாதிபதியின் கிளிநொச்சி விஜயமானது கிளிநொச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்லாது முழு வடமாகணத்திற்குமே நன்மையாகவே அமைந்திருந்தது.


18 ஜூன் 2018

"சிறுவர்களைப் பாதுகாப்போம்" தேசிய வேலைத்திட்டம்


சிறுவர்களே இன்றைய எமது சமூகத்தின் நாளைய சிறந்த பலனுக்காக விதைக்கப்படும் விதைகள். ஐக்கிய நாடுகளின் சர்வதேச சிறுவர் சாசனத்தின் முதலாவது சரத்தின்படி ஆண் பெண் வேறுபாடின்றி பதினெட்டு வயதுக்குட்பட்ட சகலரும் சிறுவர்களேயாவார். இந்த சாசனத்தின்படி சிறுவர்களுக்கான உரிமைகள் அனைத்தும் மனித உரிமைகளாகவே கொள்ளப்படுகின்றது. சிறுவர்கள் சமூகத்தில் முக்கியமானவர்களாக இருப்பதன் காரணமாகவே அவர்களுக்கான பாதுகாப்பு இவ்வாறு சாசன ரீதியில் எழுதப்பட்டிருக்கின்றது.

ஓவ்வொரு நாடுகளின் அரசாங்கங்களும் சிறுவர்களை பாதுகாப்பதற்கான சட்டதிட்டங்களை தமது அரசியலமைப்பில் முதன்மைப்படுத்தி சிறுவர்களை பாதுகாப்பதற்கான செயற்திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. நம்நாட்டைப் பொறுத்தவரையிலும் சிறுவர் விவகாரத்திற்கென்று அமைச்சரவை அமைச்சொன்று காணப்படுகின்றது. அது கடந்த காலத்திலும் தற்போதும் சிறுவர்களுக்காக செயற்பட்டு வருகின்றது.

நம்நாட்டில் சிறுவர்களை தொடர்பில் பணியாற்றக்கூடிய பொறிமுறையொன்று காணப்பட்டாலும் அதற்கும் மேலதிகமாக "சிறுவர்களைப் பாதுகாப்போம்" எனும் தேசிய செயற்திட்டம் ஜனாதிபதி அலுவலகத்திகன் கீழ் செயற்பட்டு வருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சிறுவர்கள் மீது கொண்டிருக்கும் அளவற்ற அன்பு மற்றும் கரிசனையின் காரணமாக, "சிறுவர்களை பாதுகாப்போம்" என்ற செயற்திட்டத்தினை தனது எண்ணக்கருவுக்கு அமைய உருவாக்கி தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தி வருகின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அமைச்சராக இருந்த காலத்திலேயே இவ்வாறான ஒரு செயற்திட்டத்தினை பொலன்னறுவை மாவட்டத்தில் மிக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திக் காட்டியிருந்தவர். "புலத்திசி தருவோ" அல்லது "பொலன்னறுவை பிள்ளைகள்" என்ற பெயரில் பொலன்னறுவை மாவட்ட சிறார்களை பாதுகாத்து அவர்களை மேம்படுத்தும் நோக்கில் இந்த செயற்திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்தியிருந்தார். அதன் காரணமாகவே முழுநாட்டு சிறுவர்களும் பயன்பெறவேண்டும் என்ற நோக்கில் இந்த தேசிய வேலைத்திட்டத்தினை ஜனாதிபதியாக பதவியேற்ற பின்பு உருவாக்கியிருந்தார்.

சிறுவர்களைப் பாதுகாப்போம் செயற்திட்டம் நாட்டின் பல பிரதேசங்களிலும் ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற அதேவேளை தற்போது வடக்கில் முதன்முறையாக கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில்  நாளை 18 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு உத்தியோக பூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட இருக்கின்றது.  

மூன்று தசாப்பதங்களுக்கும் மேலான யுத்தம் நம்நாட்டின் சிறார்களை மிக மோசமாக பாதிப்படைய வைத்திருந்து. அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசத்தின் சிறர்கள் உடல் உள ரீதியிலும் பௌதீக ரீதியிலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தார்கள். வடக்கில் இறுதியுத்தம் இடம்பெற்ற கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட சிறார்கள் உடல் உள ரீதியில் மாத்திரமன்றி சமூக ரீதியிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுடைய குடும்பத்தில் ஏதேனுமொரு இழப்பினை இந்த யுத்தம் அவர்களுக்கு பரிசாக வழங்கிவிட்டுத்தான் சென்றிருக்கின்றது.

ஆகவே இப்பிரதேசங்களின் சிறார்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி அவர்களை அரவணைத்துச் செல்லவேண்டிய பொறுப்பு அரசாங்கதிற்கு இருக்கின்றது. இந்தப் பிரச்சினைகளை சரியாக புரிந்து கொண்டுள்ள ஜனாதிபதி அவர்கள் வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தை முதலில் தெரிவு செய்திருப்பது உண்மையிலேயே சிறந்ததொரு விடயம்.

இந்த தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக போரின் காரணமாக பெற்றோர்களை இழந்து சிறுவர் இல்லங்களில் தங்கி கல்வி கற்றுவரும் சிறுவர்களை பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கில் குறித்த சிறுவர் இலங்களை மேம்படுத்துவதற்கு தேவையான நிதியினை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி செயலகம் முன்வந்திருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் போரின் காரணமாக அங்கவீனமடைந்துள்ள சிறுவர்கள் கல்வி கற்கும்; 25 பாடசாலைகளில் அவர்களுக்கான விசேட பாதைகளையும் விசேட மலசலகூடங்களையும் ஏனைய பௌதீக வளங்களையும் இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக அபிவிருத்தி செய்து கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் குடிநீர் பிரச்சினைக்கு மேலதிகமாக தூய நீரின் தட்டுப்பாடு காரணமாக சிறுநீரக நோய் பரவி வருவதும் கண்டறியப்பட்டிருக்கின்றது. அதன் காரணமாக சிறிநீரக நோயிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு 1000 சிறிய நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளன. இதன்மூலம் சிறுநீரக நோயின் பரவலை கட்டுப்படுத்தவும் தூய நீரின் பயன்பாட்டை மக்களிடையே அறிமுகப்படுத்தி அவர்களுடைய சுகாதார பழக்கவழக்கங்களை மேம்படுத்தவும் இது உதவியளிக்கும்.

ஒரு ஒழுக்கமுள்ள பிரஜையினை நம்நாட்டில் உருவாக்க வேண்டுமாயின் அப்பிரஜை தனது பாலர் வகுப்பிலிருந்தே ஒழுக்கத்தினையும் சமூகம் தொடர்பான தனது பார்வையினையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். காரணம் பாடசாலைக் கல்வியின் அடித்தளமாக இருப்பது இந்த முன்பள்ளிக் கல்வியே. அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முன்பள்ளிகளுக்கு தேவையான வசதி வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பற்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் சமூக ரீதியிலோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் பாதுகாப்பற்று வாழும் குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களை இனங்கண்டு அவர்களை பொருளாதார மற்றும் பௌதீக ரீதியில் மேம்படுத்துவதற்கான உதவிகளை வழங்குவதற்கும் இந்த அமைச்சின் அனுசரணையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதேபோல் சிறுவர்களுக்கு போருக்கு பிந்திய உள வள ஆலோசனைகள் பல ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தாலும் சிறுவர்களைப் பாதுகாப்போம் தேசிய செயற்திட்டத்திற்கு சமாந்தரமாக அந்நிகழ்ச்சி இடம்பெறும் தினத்தில் அவ்வளாகத்திலேயே உள வள வளர்ச்சிக்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் சட்டரீதியான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்படுவதுடன் அதனை முன்னெடுப்பதற்கான நடமாடும் சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத்திட்டதின் கிளிநொச்சி நிகழ்வுக்கு சமாந்தரமான இன்னுமொரு முக்கியமான நிகழ்வும் கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைப்பதற்காக கிளிநொச்சிக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களிடம் பொருளாதார மத்திய நிலையத்திற்கு மிக அண்மையில் அமைந்துள்ள கனகபுரம் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் தமது பாடசாலைக்கு நிரந்த விளையாட்டு மைதானம் எதுவும் இல்லை. பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ள காணியையே தாம் தற்காலிக விளையாட்டு மைதானமாக பாவித்து வந்தோம். தற்போது அதுவும் இல்லாமல் போயிவிட்டது. ஆகவே எமது பாடசாலைக்கு புதிய ஒரு விளையாட்டு மைதான்தை அமைத்துத் தரும்படி கோருகின்றோம் என ஜனாதிபதியிடம் தமது விளையாட்டு மைதானக் கோரிக்கையை முன்வைத்தார்கள்.

மாணவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த ஜனாதிபதி அவர்கள் அருகில் நின்ற இலங்கை விமானப்படை தளபதி கபில ஜயம்பதி அவர்களிடம்கனகபுரம் மகா வித்தியாலயத்திற்கு விளையாட்டு மைதானம் ஒன்றினை அமைத்துக் கொடுக்கும்படி உடனடியாகவே உத்தரவிட்டார்.  பாடசாலைக்கு அருகிலிருந்த அரச காணியினை கரச்சி பிரதேச செயலாளர் மற்றும் கிளிநொச்சி அரசாங்க அதிபர் ஊடகப் பெற்று விமானப் படையினர் விளையாட்டு மைதானத்தை தற்போது அமைத்து முடித்திருக்கின்றனர்.

நாளை திங்கட்கிழமை கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தினை மாணவர்களுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கவுள்ளார்.

ஒட்டுமொத்தத்தில் ஜனாதிபதியின் நாளைய கிளிநொச்சி விஜயமானது கிளிநொச்சி மாவட்டத்திற்கும் மக்களுக்கும் அதிகளவு நன்மையையே வழங்கப் போகின்றது. குறிப்பாக நாட்டின் எதிர்கால நம்பிக்கையான சிறுவர்களுக்கு காத்திரமான பல நன்மை பயக்கும் விடயங்கள் கிடைக்கவிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். சிறுவர்களைப் பாதுகாப்போம் வேலைத்திட்டம் போரின் வடுக்களிலிருந்து மீள முயற்சிக்கும் சமூகத்திற்கு நம்பிக்கையூட்டுவதாக அமையும் அதேவேளை பிரதேசத்தின் அரசாங்க அதிகாரிகள் ஜனாதிபதி அலுவலகத்துடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணுவதன் மூலம் காத்திரமான உதவிகளை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.


(கடந்த 17.06.2018 யாழ் உதயன் பத்திரிகையில் வெளியாகிய கட்டுரை)

10 ஜூன் 2018

வினைத்திறனற்ற வடமாகாண மீன்பிடி அமைச்சு...?



வடபகுதியில் தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்பான செய்திகள் கடந்த சில நாட்களாக அதிகளவில் கவனிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. ஆரம்பத்தில் முல்லைத்தீவின் கொக்கிளாய் நாயாறு போன்ற பிரதேசங்களிலேயே தென்பகுதி மீனவர்களுடைய ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத மீன்பிடி இடம்பெற்று வந்தன. தற்போதும் அது அவ்வாறு  இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விடயம்  பற்றி தமிழ் ஊடகங்கள் பரந்த அளவில் அறிக்கையிட்டுக் கொண்டு வருவதை காணக்கூடியதாக இருந்தன.

தற்போது எழுந்துள்ள புதிய பிரச்சினை யாழ் வடமராட்சி கிழக்கில் வெளிமாவட்ட மீனவர்கள் அத்துமீறி மீன்பிடி (கடலட்டை பிடித்தல்) நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு ஆகும். தற்போது வடக்கில் பூதாகரமாகியுள்ள இவ்விடயம் தொடர்பில் செய்திகள், ஆசிரியர் தலையங்கங்கள், கட்டுரைகள் ஆகியவற்றை தமிழ்ப் பத்திரிகைகளில் நாளாந்தம் காணக்கூடியதாக இருக்கின்றது.

வடமராட்சி கிழக்கின் கடற்கரையோர பகுதியில் உள்ள பாடுகளின் (வாடியமைத்து மீன்பிடிக்கும் முறை) உரிமையாளர்கள் தமது பாடுகளையும் அதற்கான கரையோரக் காணிகளையும் குத்தகை அடிப்படையில் வெளிமாவட்ட மீனவர்களுக்கு வழங்கியிருப்பதாகவும் அவற்றைப் பெற்றுக் கொண்டவர்களே அங்கு மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அறியக்கிடைத்தது. அதற்கான சகல ஆவணங்களையும் உரிமையாளர்களே வைத்திருப்பதாக சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட வெளிமாவட்ட மீனவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். அவ்வாறான ஒருவர் 11 இலட்சம் ரூபாயினை உரிமையாளருக்கு கொடுத்தே குறிப்பிட்ட பாடுவினை வாங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். இவ்வாறு அங்கு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் வெளிமாவட்ட மீனவர்கள் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட பாடுகளுக்கு இலட்சக்கணக்கில் குத்தகைப் பணம் செலுத்தியே இவ்வாறு வாடியமைத்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பது தெரியவருகிறது. அத்தோடு சில உள்ளுர் மக்களும் உரிமையாளரிடம் பாடுவினை குத்தகைக்கு வாங்கி அதை மீண்டும் வெளிமாவட்ட மீனவர்களுக்கு குத்தகைக்கு வழங்கியிருக்கும் சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்ற. 

ஆயினும் இந்தக் காணிகள் தொடர்பிலும் தற்போது சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இந்தக் காணிகளுக்கான உறுதிகள் அவற்றிற்கான உரிமையாளர்களிடம் இருப்பதாக உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும் இக்காணிகளுக்கு பதிலாக மாற்றுக் காணிகள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதுடன் குறிப்பிட்ட காணிகள் அரச காணிகளாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மருதங்கேணி பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

எவ்வாறாயினும் வெளிமாவட்ட மீனவர்கள் பாரிய நிதிப் பலத்துடனும் பெருமளவு நவீன உபகரணங்களைக் கொண்டும் வாடியமைத்து இந்த கடலட்டை மீன்பிடியினை மேற்கொண்டு வருவதால் பாரம்பரியா மீன்பிடி முறையில் அன்றாடம் மீன்பிடித்து தமது வாழ்க்கையினை கொண்டு நடத்தும் உள்ளுர் மீனவர்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 


வடமராட்சி கிழக்கில் குத்தகைக்கு பாடுகளை எடுத்து இவ்வாறு மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மன்னார் பிரதேச முஸ்லிம் மீனவர்களும் புத்தளம் உடப்பு பகுதியைச் சேர்ந்த தமிழர்களுமேயாவார். குறிப்பிட்டளவு சிங்களவர்களும் இதில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அவர்களும் கூலிக்கு இங்கே அழைத்து வரப்பட்டிருப்பவர்கள் ஆகும். எவ்வாறாயினும் இவ்வாறான அணுகுமுறைகளால் பாதிக்கப்பட்டிருப்பதும் பாதிக்கப்படப் போவதும் தமிழ் பேசும் சமூகமே என்பதை நினைவில் கொண்டு அவர்களது வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதே இப்போது தேவையாகின்றது.

இந்த விடயம் தொடர்பாக  யாழ் மாவட்ட செயலகத்தில்  கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற வடக்கின் அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டு, இந்த அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றை நாடப்போவதாக முதலமைச்சர் அறிவித்திருக்கின்றார். முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் மருதங்கேணி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்தப் பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்ததுடன் கடற்தொழில் அமைச்சருடன் இதுதொடர்பில் கலந்துரையாடி தீர்வொன்றினைப் பெற்றுத் தருவதாக கூறியிருக்கின்றார். 

ஆனாலும், பாடுகளின் தமிழ் உரிமையாளர்கள் ஏன் அந்தப் பாடுகளை வெளிமாவட்ட மீனவர்களுக்கு குத்தகைக்கு வழங்குகின்றார்கள் என்பதற்கான காரணங்களை கண்டறிவதற்கோ அல்லது பாரம்பரிய மீன்பிடியில் ஈடுபடும் உள்ளுர் மீனவர்கள் மத்தியில் இவ்வாறான பாரிய நவீனரக மீன்பிடியினை ஊக்குவிப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் வடமாகாண மாகாண மீன்பிடி அமைச்சின் மூலம் மேற்கொள்ளக் கூடிய செயற்திட்டங்கள் தொடர்பில் கண்டறிந்து முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி வடமாகாண முதலமைச்சரும் மக்கள் பிரதிநிதிகளும் மெளனமாகவே இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

தென்னிலங்கை சிங்கள மீனவர்களும், மன்னார், உடப்பு மற்றும் நீர்கொழும்பு போன்ற பிரதேசங்களின் தமிழ் பேசும் சமூகங்களைச் சார்ந்த மீனவர்களும் வடக்கில் இவ்வாறு மீன்பிடியில் ஈடுபடுவதற்கு வருவதற்கான முக்கிய காரணம் வடமாகாண மீன்பிடி அமைச்சின் வினைத்திறனற்ற செயற்பாடேயாகும். வடமாகாணத்தின் எல்லைக்குள் கடல் வளத்தினால் பெற்றுக்கொள்ளக் கூடிய பயன்கள் என்னவென்பதை தெளிவாக இனங்கண்டு அவர்களுக்கு விழிப்புணர்வு, அறிவு மற்றும் வசதிகளை வழங்கி அவர்களுக்கும் பாரம்பரிய மீனபிடிக்கு மேலதிகமாக இவ்வாறான பாரிய, நவீன மீன்பிடி முறைகளை மேற்கொள்ளத்தக்க வகையில்  பொருளாதார ரீதியிலும் தொழில்நுட்ப ரீதியிலும் உதவிகளை வழங்கி மேம்படுத்துவதே இந்தப் பிரச்சினைக்கு தீர்வாகும்.

வடக்கின் இத்தகைய விடயங்கள் தொடர்பில் ஊடகங்களும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். அரசியல்வாதிகளும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல் என்பதின் உண்மை நிலையினை தெரிந்து கொள்ளாது  கூறினால் அப்படியே செய்தியாக்குவது ஊடக தர்மமல். ஏனென்றால் தென்னிங்கை மீனவர்கள் என்ற சொற்பதம் தெற்கின் சிங்களவர்களை குறிப்பதற்கே இவ்வளவு காலமும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. சிங்களவர்கள் நேரடியாக சம்மந்தப்படாத இந்தப் வடமராட்சி கிழக்கு மீன்பிடிப் பிரச்சினையில் அவர்கள் மீது குற்றம் சுமத்துவதுபோன்று அறியிக்கையிடுவது சிங்களவர்கள் மீது மேலும் தமிழ் மக்கள் வெறுப்பினை உமிழ்வதற்கே காரணமாக அமையும். அது தமிழ் ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளுக்கு சாதகமானதாக அமைந்தாலும் இனங்களுக்கிடையிலான பிளவினையே மேலும் அதிகரிக்க ஏதுவாக அமையும்.

இதன் காரணமாகவே வடமராட்சி கிழக்கு பகுதியில் மீன்பிடித் தொழில் செய்யும் வெளிமாவட்ட மீனவர்கள் சிலர் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களை சந்தித்து மனிதாபின அடிப்படையில் ஒரு மாத கால அவகாசத்தை கோரியிருப்பதாகவும் அத்தோடு தாம் வடக்கின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் என்றும் தம்மை தென்னிலங்கை மீனவர்கள் என அழைக்க வேண்டாமெனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். தற்போது அவர்களுக்கு தமது தொழிலினை அங்கிருந்து அகற்றிக் கொள்வதற்காக இம்மாதம் 23 ஆம் திகதிவரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

ஆகவே வடமராட்சி கிழக்கில் மீன் பிடிப்பவர்கள் மன்னார் மற்றும் புத்தளம் உடப்பு பிரதேசங்களை சேர்ந்த மீனவர்களாகவும் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்களைச் சேர்ந்தவர்களாகவுமே இருக்கின்ற நிலையில் வடக்கின் அரசியல்வாதிகளும் தமிழ் ஊடகங்களும் தமது சுய இலாபங்களுக்காகவே தென்னிலங்கை மீனவர்கள் என்ற சொற்பதத்தினை பாவிக்கின்றார்கள் என்று கருதமுடிகின்றது. அரசியல்வாதிகள் அவ்வாறு அழைத்தாலும் அதனை செய்தியாக அறிக்கையிடும் தமிழ் ஊடகங்கள் சரியா அதனைப் பிரசுரிக்க வேண்டியது அவசியமாகும்.

தமிழ் ஊடகங்களின் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் இனங்களுக்கிடையில் வெறுப்பினை மேலும் அதிகரிக்கவே செய்யும். ஆகவே உண்மையான சரியான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கவேண்டிய பொறுப்பும் கடப்பாடும் தமிழ் ஊடகங்களுக்கு உள்ளது.  அத்தோடு வடமாகாண மீன்பிடி அமைச்சானது பாரம்பரிய மீன்பிடிக்கு மேலதிகமாக இவ்வாறான சட்டரீதியாக மேற்கொள்ளக்கூடிய நவீனரக மீன்பிடிகளையும் மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தேவையான செயற்திட்ட வரைபொன்றை தயாரிக்கவும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அழுத்தங்களை வழங்கவேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கும் இருக்கின்றது என்பதை உணர்ந்து செயற்படுவதே சாலச்சிறந்தது.
  
-வதீஸ் வருணன்-