A Promised Land

20 செப்டம்பர் 2014

A Gun & A Ring

அண்மையில் கொழும்பில்இடம்பெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரே ஒரு தமிழ்த் திரைப்படம் A Gun & A Ring. அதை திரையரங்கில் சென்று பார்க்கமுடியாது போய்விட்டது காரணம் இந்தப்படம் திரையிடப்பட்ட அதேநாளிலேயே என்னுடைய குறும்படமும் வேறு ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டது. இதனால் திரையரங்கில் திரைப்படத்தினை பார்க்க முடியவில்லை. சரி விடயத்திற்கு வருவோம். நான் திரையிடப்பட்ட இரண்டு முறையும் பார்கமுடியாமல் போன காரணத்தினால் இயக்குனர் தந்த இணைய முகவரியில் இந்தப்படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. பரவலாக இந்தப்படத்தினைப் பற்றி ஏற்கனவே பலர் தமது பார்வைகளை முன்வைத்தபடியால் நான் அவற்றைப்பற்றிக் கதைக்காமல் வேறு சில விடயங்களை கதைக்கலாம் என முடிவு செய்திருக்கின்றேன்.

சும்மா சப்பைப்படங்களை ஒருபோதும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடுவதற்கு தெரிவு செய்யமாட்டார்கள். ஆனால் இந்தப்படம் ஷங்காய் திரைப்படவிழாவில் திரையிடுவதற்கு முதல்முறையாக உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட்டபோதே இந்தப்படத்தில் ஏதோ விசயம் இருக்கவேண்டும் என ஊகித்திருந்தேன். கொழும்பில் இடம்பெறும் சர்வதேச திரைப்பட விழாவில் எந்தவொரு தமிழ்ப்படமும் இல்லையென தெரியவந்தபோது (தமிழ்நாட்டுப்படங்களை இங்கே திரையிட ஏற்பாட்டாளர்கள் விரும்பியிருந்தபோதும் இந்திய தயாரிப்பாளர்கள் விரும்பாத காரணத்தினால் சில படங்களை திரையிடமுடியாமல் போய்விட்டது) நான் இந்தத்திரைப்படத்தினை கொழும்பில் திரையிட முன்மொழிந்திருந்தேன். இதன் பிறகே அவசர அவசரமான இயக்குன லெனின் அவர்களை தொடர்பு கொண்டு திரைப்படத்தை வாங்கி கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவினுடைய ஏற்பாட்டாளர்களிடம் கொடுத்திருந்தேன். அவர்களுக்கும் படம் பிடித்துப்போக படத்தினை தணிக்கைக்கு அனுப்பி தணிக்கையும் கிடைத்தபடியால் இலங்கைப் பார்வையாளர்களுக்கு இந்த அருமையான படத்தினை பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இதற்கு காரணமாகவிருந்த அனோமா ராஜகருணா, அசோக ஹந்தகம மற்றும் பிரசன்ன விதானகே ஆகியோருக்கு நன்றி கூறவேண்டும்.

இந்தப் படத்தில் எனக்கு பிடித்தது படத்தினுடைய திரைக்கதை கதாபாத்திரங்களின் தெரிவு இசை மற்றும் இயக்கம். ஒளிப்பதிவு சரியில்லை என பல தமிழ் பார்வையாளர்கள் கூறியபோதும் நான் இந்தப்படத்தினைப் பார்க்கும்போது ஒளிப்பதிவு இந்தப் படத்தின் கதையினை எந்தஒரு இடத்திலும் சிக்கலாக்கவில்லை ஆகவே எனக்கு ஒளிப்பதி தொடர்பில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

பொதுவாக சர்வதேச திரைப்படவிழாக்களில் ஒரு படத்தினை தெரிவு செய்யும் போது அந்தப் படத்தின் கதையின் நேர்மை மிகமுக்கியமான இடத்தில் இருக்கின்றது. இந்தப் படம் உலகலாவிய ரீதியில் வெளிவரும் தமிழ்ப் படங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் முக்கியமான இடத்தில் இருக்கின்றது. காரணம் இந்தப்படத்தின் கதையில் இருக்கின்ற நேர்மை. இயக்குனர் கதையினை சிக்கலான திரைக்கதையினூடு சொல்லமுற்படும்போது அதை கவனமாக கையாண்ட விதம் ஆகிய இரண்டையும் முக்கியமாக கூறலாம். ஒவ்வொரு பாத்திரங்களுக்கும் ஒவ்வொரு பின்னணி. சில பாத்திரங்களின் பின்னணியை இயக்குனர் கூறும்போதும் சில பாத்திரங்களின் பின்னணி கூறப்பட்டிருக்கவில்லை. அப்படி கூறவும் தேவையில்லை. பார்வையாளனாகிய என்னை அவற்றை ஊகிக்க விடுவது இன்னும் சாலச் சிறந்தது. மற்றையது கதாபாத்திரங்கள். ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் மிகப்பொருத்தமானவர்களை தெரிவு செய்திருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டியது.

அடுத்தது இசை. இந்தப் படத்திற்கு இசை மற்றுமொரு பலம். இந்தப் படத்தின் கதையினை இன்னும் ஆழமாக பார்வையாளனுக்கு கொண்டு சேர்ப்பதில் இசை முக்கிய இடத்தில் இருக்கின்றது. திரைக்கதைக்கு தேவையான இடத்தில் இசையினை சரியாக பயன்படுத்தியிருக்கின்றார் இயக்குனர்.


இறுதியாக படத்தில் சொல்லப்பட்ட அரசியல் சொல்லப்பட்ட விதம் தொடர்பில் எனக்கு சில முரண்பாடுகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி தரமான ஒரு தமிழ்ப் படமாக இந்தப் படத்தினைக் கருதலாம். அந்தவகையில் இந்தப் படத்தினை உருவாக்கிய இயக்குனர் லெனின் அவர்களும் இந்த பணத்தினை செலவு செய்து உருவாக்கிய விஷ்ணு முரளியும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இலங்கைத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவரும் திரைப்படங்களில் மிகவும் முக்கியமான இடத்தில் இந்த கன் அன் ரிங் திரைப்படம் இருக்கின்றது என்பதனை மிகவும் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம்.

Official Page https://www.facebook.com/aGunANDaRing