A Promised Land

இலங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06 டிசம்பர் 2014

"தக்கல புருது கெனெக்" | "The Stranger Familiar" - இது விமர்சனமில்லை





ஒரு கலைப்படைப்பு என்பது அது சார்ந்த சமூகத்தினை உண்மையாகவும் ஆழமாகவும் பிரதிபலிக்கும்போது அந்த கலைப்படைப்பும் அது கூறவரும் கருத்தும் வீரியமாகவும் மிகவும் ஆழமாகவும் பார்வையாளனின் மனதில் தாக்கத்தினையும் ஏற்படுத்திவிடும்.அத்தோடு ஒவ்வொரு பார்வையாளனையும் அவனுடைய கருத்தியலின் அடிப்படையில் வித்தியாசமாக சிந்திக்கத் தூண்டிவிடும். அல்லது படம் ஆரம்பிக்கும்போது இருந்த பார்வையாளனின் நிலையினை இன்னொரு கட்டத்திற்கு நகர்த்திவிடும். ஒரு திரைப்படம் இவ்வாறான நிலைகளில் ஏதாவது ஒன்றையாவது பார்வையாளனுக்கு தோற்றுவிக்குமாக இருந்தால் அந்தக் கலைப்படைப்பு ஏதோவொரு வகையில் சிறந்த கலைப்படைப்பாக இருக்கும் என்று கூறமுடியும் என்பது உண்மை.

நேற்று ஐரோப்பிய திரைப்பட விழாவின் இறுதிநாளில் இலங்கையின் இளம் இயக்குனர் மலித் ஹேகொடவின "தக்கல புருது கெனெக்" |
"The Stranger Familiar" திரைப்படம் திரையிடப்பட்டது. சாதாரண ஒரு கணவன் மனைவிக்குள் திருமணத்திற்கு பின்னர் ஏற்படும் பிரச்சனையை மைய்யமாக வைத்து அழகாக திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது. அதற்குள் இலங்கையின் அரசியலும் பேசப்படுகின்றது சிங்கள சமூகத்தின் இன்றைய நிலையையும் அப்படியே பிரதிபலிக்கின்றது. ஆரம்பம்முதலே படிப்படியாக பார்வையாரை சிறிது சிறிதாக தன்னுடை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இறுதியில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் படம் முடிவடைகின்றது.

ஒரு தமிழனாக இலங்கை அரசியலில் சற்று ஆர்வம் உள்ள தமிழன் என்றவகையில் இந்தத் திரைப்படம் என்றை சற்று சிந்திக்க தூட்டியிருக்கின்றது. இந்தப் படத்தை சிங்கள கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனை என்ற விடயத்தினைத்  தாண்டி இலங்கையின் தமிழ் சிங்கள முரண்பாட்டுடன் தொடர்புபடுத்தியே ஆரம்பம் முதல் இறுதிவரை என்னால் பார்க்க முடிந்தது. இந்தக் கோணத்தில் திரைப்படத்தினை பார்த்தபோது 2014ம் ஆண்டில் ஆரம்பிக்கும் படம் 1948ல் நிறைவடைவது போன்றதொரு நிலைப்பாட்டை எனக்குள் தோற்றுவித்திருக்கின்றது. சிலவேளை இயக்குனரோ அல்லது திரைக்கதை ஆசிரியரோ இவ்வாறான ஒரு கோணத்தில் சிந்தித்து திரைக்கதையினை அமைத்திருக்கலாம் அல்லது அமைத்திருக்காமல் இருந்திருக்கலாம் ஆனால் திரைப்படம் இந்தக்கோணத்திலும் ஒரு பார்வையாளனை சிந்திக்க வைத்திருக்கின்றது எனும்போது அது இந்தத்திரைப்படத்தின் வெற்றியாகவே என்னால் கருத முடிகின்றது.

இயக்குனர் அசோக ஹந்தகமவின் இனி அவன் திரைப்படம் வெளிவந்தபோகூட இலங்கையின் பிரபல சிங்கள விமர்சகர் உபுல் ஷாந்த சண்ணஸ்கல கூட அந்தப்படத்தினை இது ஒரு 100 வீதமான சிங்கள படம் ஆனால் தமிழ் மொழியில் வெளிவந்திருக்கின்றது என்று கூறியிருந்தார் ஆனால் அந்தக்கதை அது இடம்பெறும் சூழல் என்பன முற்றுமுழுதாக தமிழ்ச் சூழலாக இருந்தது. ஆகவே ஒவ்வொரு பார்வையாளனும் தன்னுடைய கருத்தியலுடன் ஒரு கலைபடைப்பை பார்க்கும் விதங்கள் வேறுபட்டவை.



இந்தப்படத்தின் திரைக்கதையினை பூபதி நளின் எழுதியிருக்க மலித் ஹேகொட இயக்கியிருக்கின்றார். இருவருக்கும் இந்த திரைப்படமே தங்களது முதலாவது திரைப்படம். தரமான ஒரு திரைப்படத்தின் படைப்பாளிகள் என்பதையும் தாண்டி இவர்கள் இருவரும் என்றுடைய நண்பர்கள் என்ற ரீதியில் பெருமைப்பட்டுக் கொள்கின்றேன்.ஏற்கனவே இத்ததிரைப்படம் லண்டன் சர்வதேச திரைப்பட விழா உட்பட பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தன் உருவாக்கத்தல் இயக்குனரின் நண்பர்களின் பங்கு மிக அதிகம். பெரிய பட்ஜெட்டும் இல்லை சாதாரண ஒரு சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். ஆனால் சிங்கள சமூகத்தை பிரதிபலிக்கும் விலாசமாக கதைக்கருவை கொண்டிருக்கின்றது. சாதாரண பொதுமக்களின் பார்வைக்கு இத்திரைப்படம் எப்போது வருமென்று தெரியவில்லை ஆனால் திரைப்பட விழாக்களில் திரையிடப்படும்போது இந்தப்படத்தினை பார்க்கத்தவறவிடாதீர்கள்.


27 அக்டோபர் 2014

சினிமா என்பது வெறும்பொழுதுபோக்கு ஊடகம் மாத்திரமா?


சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு ஊடகம் என்ற ரீதியிலேயே இந்தியர்கள் சினிமாவை அணுகுகின்றார்கள். ஆனால் சினிமா என்பது வெறுமனே ஒரு பொழுதுபோக்கு ஊடகமா என்ற கேள்வியினை கேட்கவேண்டிய நேரம் இது. சினிமா என்றால் பொழுதுபோக்கு ஊடகம் என்ற மாயையை தவறான எண்ணத்தினை மக்கள் மத்தியில் புகுத்தியவர்கள் யார்? ஏன் அவ்வாறு மாற்றினார்கள் என்பதற்கு பின்னால் பல அரசியல் காரணங்கள் புதைந்து கிடக்கும் என்பதுதான் உண்மை.

சினிமா என்பது ஒரு இனத்தின் அரசியலைப் காத்திரமாக பேசும் கலை. உண்மையிலே கலை என்பது காலத்தின் கண்ணாடி. ஒரு இனத்தின் வாழ்வியலை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தெரியப்படுத்தவும் அரசுகளையும் அதிகாரத்தவர்களையும் கேள்விகேட்கக்கூடிய ஒரு மிகப்பலம்வாய்ந்த ஊடகம். இந்த சினிமா என்ற மிகமுக்கியமான அசையும் காட்சி ஊடகம் 20ம் நூற்றாண்டின் லுமினஸ் சகோதரர்களின் மிகமுக்கியமான கண்டுபிடிப்பு. இந்த சினிமாவால் பல அரசுகளே ஆட்டம் கண்டிருக்கின்றன. பல இயக்குனர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார் பலர் நாடுகடத்தப்பட்டிருக்கின்றார்கள் அத்தோடு படைப்புக்கள் அதிகார வர்க்கத்தினால் தடை செய்யப்பட்டிருக்கின்றன. இவை உலக சினிமா வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றன. சினிமா ஒரு பொழுதுபோக்கு ஊடகம் என்றால் ஏன் இவ்வளவு மோசமான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கவேண்டும் என்ன கேள்வி இயல்பாகவே சினிமா தொடர்பாக சாதாரண அறிவுள்ள ஒருவருக்கு எழவேண்டும்

இந்தியாவில் சினிமாவை அரசியல் காரணங்களுக்காக பொழுதுபோக்கு ஊடகமாக மாற்றி வைத்திருக்கின்றார்கள். ஒரு நல்ல சினிமா என்பது பார்வையாளனுடைய சிந்தனையை இன்னொருகட்டத்திற்கு தூண்டிவிடவேண்டும். அதுவே நல்ல சினிமா. தமிழ் சினிமாவின் ஆரம்ப கட்டங்களில் நடிகர்கள் பெரிய திரையில் சண்டைபிடிப்பார்கள் பார்வையாளர்கள் அதை பார்ப்பார்கள். ஆனால் இன்று நடப்பது என்ன இரசிகர்கள் நடிகர்களுக்காக பிரிந்து தங்களுக்கிடையில் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள் நடிகர்கள் அமைதியாக இவற்றை பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இதற்கு காரணம் யார்? யார் இதற்கு பொறுப்புகூறவேண்டும்? இன்றும் தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் என்று கேட்டால் 70 களில் 80 களில் வெளிவந்த படங்களையே பெரும்பாலானோர் கூறுவார்கள் காரணம் என்ன அந்தக் காலப்பகுதியில் வெளிவந்த திரைப்படங்கள் தரமானவையாகவும் காத்திரமான படைப்புக்களாகவும் இருந்தன. இன்று வெளிவரும் திரைப்படங்கள் வெறும் வன்முறையினையையும் ஹீரோயிசத்தையும் பெண்களின் உடலையும் சதையையும் முன்னிறுத்தியே வெளிவந்துகொண்டிருக்கின்றன. அண்மையில் புதிய சில இளம் இயக்குனர்கள் நம்பிக்கை தருகின்றனர் ஆனாலும் அவர்களும் எவ்வளவுநாள் இந்த மாயையை தாக்குப்பிடிப்பார்கள் என்பது கேள்விக்குரிய விடயம்தான்.

இந்தியாவில் கலையை கொலைசெய்து இன்று அதை வியாபாரமாக்கிவிட்டார்கள். ஒருசில நாட்களில் பலநூறுகோடி சம்பாதிக்கும் வழியாகவே சினிமாவை பயன்படுத்துகின்றார்கள். பார்வையாளர்களுடை பலவீனங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி  இவற்றை செய்வது வியாபாரிகளுக்கு இலகுவாக இருக்கின்றது. ஒரு சில சமூகப்பொறுப்புள்ள இயக்குனர்களைத்தவிர மற்ற எல்லோருமே இயக்குனர் என்ற நிலையிலிருந்து விடுபட்டு வியாபாரிகளாகவே இன்று திரைப்படங்களை இயக்கிக்கொண்டிருக்கின்றார்கள். மக்கள் இந்த மாயையிலிருந்து விடுபட்டு தெளிவு பெற்றால் மாத்திரமே நல்ல காத்திரமான சினிமாவை நாங்கள் பார்க்கமுடியும்.



vathees@gmail.com

26 அக்டோபர் 2014

இனி அவனுக்கு மீண்டும் விருது

முதலாவது ஹிரு கோல்டன் விருதுகள் 2014 விழா நேற்று கொழும்பில் இடம்பெற்றது இந்த முதலாவது விருதுவழங்கும் விழாவில் கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையில் வெளிவந்த திரைப்படங்களில் சிறந்தவை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டன. இந்த விழாவில் பொலிவூட் நாயகர்கள் விவேக் ஒப்ராய் பிபாஷாபாசு அனில் கபூர் போன்றவர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.



இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் 2012ல் இலங்கையில் தலைசிறந்த இயக்குனாரன அசோக ஹந்தகமவின் நெறியாள்கையில் வெளிவந்த “இனி அவன்” தமிழ்த் திரைப்படத்துக்கு 5 விருதுகள் கிடைத்திருந்தது. இந்தப்படத்தில் நடித்த தர்ஷன் தர்மராஜ் சிறந்த நடிகருக்கான விருதினையும், நிரஞ்சனி சண்முகராஜா சிறந்த துணை நடிகைக்கான விருதினையும் அஜித் ராமநாயக்க சிறந்த படத்தொகுப்புக்கான விருதினையும் அசோக ஹந்தகம சிறந்த இயக்குனருக்கான விருதினையும் பெற்றனர். அத்தோடு சிறந்த படமாக இனி அவன் திரைப்படமும் விருது பெற்றது.                                                      
                                                                                                                         Asoka Handagama




                                                       விருது வென்ற தர்ஷன் மற்றும் நிரஞ்சனி


இனி அவன் திரைப்படம் 2012ம் ஆண்டு கான்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டதோடு சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ரொரொண்டோ, பேர்ளின், டோக்கியோ, போன் பல சர்வதேச திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

* இலங்கையின் சினிமாவில் ஒரு தமிழன் சாதிக்கின்றான் எனும்போது மிகவும் பெருமையாக இருக்கின்றது

23 அக்டோபர் 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வைக்கோற்பட்டறை நாயா?


மேலே தலைப்பில் குறிபிபட்ட விடயம் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வெளிப்படையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சித்த விடயம். இலங்கையின் கடந்த வார பீக் செய்திகள் எல்லாம் யாழ்ப்பாணத்திற்கான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விஜயமும் யாழ்தேவியின் மீள்வருகையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புறக்கணிப்பும்தான்.



இலங்கை ஜனாதிபதி தன்னுடைய அரசியல் செல்வாக்கை தென்னிலங்கையில் அதிகரித்துக்கொள்ளவும் அடுத்த ஆண்டில் இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலை கருத்தில் கொண்டுமே தன்னுடைய யாழ் விஜயத்தினை ஏற்பாடு செய்திருக்கின்றார் என்பது பலருடைய கருத்து. அங்கே இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டங்களில் அவர் தெரிவித்த கருத்துக்களும் மேலுள்ள கூற்றுக்கு மேலும் வலுச் சேர்ப்பதாகவுமே காணப்பட்டது. யாழ்தேவி பயணத்தினை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தயை ஊடகங்கள் முதன்மையாக காட்டியிருந்தாலும் அதையும் தாண்டி பல செயற்திட்டங்களை அவர் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்திருந்தார். அவற்றில் பாடசாலைகளுக்கு ஆய்வுகூடங்கள் மற்றும் பல திட்டங்கள் என்பவை அடங்கும். இவை பெரிதாக ஊடகங்களால் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் ஏற்றுக்கூடியவையா? 



இதேவேளை வடக்கு மாகாண சபையினை தன்னுடைய கையில் வைத்திருக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஜனாதிபதியின் இந்த யாழ் விஜயத்தினை வெளிப்படையாகவே புறக்கணித்திருந்தது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்போ எம்பிக்களோ வடமாகாணசபை உறுப்பினர்களோ யாருமே எந்த வித நிகழ்வுகளிலும் பங்கெடுக்கவில்லை. ஆனால் வடமாகாணசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் நிகழ்வுகளில் பங்கெடுத்தனர்.


யுத்தம் முடிந்த பின்னர் மனித சிவில் உரிமைகள் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை மற்றும் இராணுவ பிரசன்னம் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் காணப்படுகின்றது இதுபோன்ற நிலையில் மகிந்தவின் விஜயம் அரசியலை அடிப்படையாக கொண்டது ஆகவேதான் இவ்விஜயத்தினை புறக்கணிக்கின்றோம் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். இதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கலாம் ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வடமாகாண அபிவிருத்திக்கூட்டத்தில் பங்குபற்றாமல் விட்டது விமர்சிக்கவேண்டிய ஒன்று. சிவில் உரிமைகள் கிடைக்கவில்லை எனப்போரடுவது ஏற்கத்தக்கதுதான் ஆனால் அதைக்காட்டி மக்கள் வாழம் பிரதேசங்களில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்பாடுகளில் பங்குபற்றாமல் இருப்பது விமர்சிக்க வேண்டியது.


வடக்கின் காப்பட் வீதிகளில் தாங்கள் சொகுசாக பயணிக்க சொகுசு வாகனங்களை அரசாங்கத்திடம் கேட்டு வாங்குவதில் வடமாகாணசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இருக்கின்ற ஆர்வம் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டு பெற்றுக் கொள்வதற்கு அல்லது பெற்றுக் கொடுப்பதற்கு இல்லாமல் இருக்கின்றது. 


என்ன நடந்தாலும் மக்கள் மஹிந்தவுக்கு வாக்களிக்கமாட்டார்கள் டக்ளசுக்கு வாக்களிக்கமாட்டார்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பான (இலங்கை தமிழரசு கட்சி) தமக்கே வாக்களிப்பார்கள் என்ற ஒரு நம்பிக்கையினை வைத்துக்கொண்டு தமிழரசு கட்சியினர் எழுந்தமானமாக செயற்படுகின்றனர். ஆனால் மக்கள் எவ்வளவுநாள்தான் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பின்னாலே போவார்கள் என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால் தமிழர்கள் தாங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதை மிகத் தெளிவாக தெரிந்து வைத்திருக்கின்றார்கள். வேறு வழிகள் இல்லாத காரணத்தினால் விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களிக்கின்றார்கள் என்பதுதான் உண்மை.


இலங்கைத் தமிழரசு கட்சியின் தமிழீழ கனவில் சிக்கி சின்னாபின்னமாகி இறுதியில் அழிந்துபோனது அப்பாவி மக்களும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும்தான். அந்த அழிவு போர் எம்மோடே போகட்டும் எங்களுடைய எதிர்கால சந்ததிக்கு வேண்டாம் என்பதுதான் இன்று இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களின் எதிர்பார்ப்பு. அதற்கு இன்றைய நவீனகால அரசியலை சமாளிக்கும் திறனுடைய பலமான தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் அணியொன்று தமிழர்களுக்கு தேவை. அதுதான் காலத்தின் கட்டாயம்கூட. அவ்வாறு ஒரு இளைய அணியொன்று  அரசியலில் எழுமானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவு இறுதி செய்யப்படு புதிய அரசியல் எழுற்சி ஒன்று ஏற்படும். ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற நிலையில் தமிழர்கள் இன்று இருக்கின்றார்கள். காரணம் இன்றைய நாட்டின் சூழல் பலமான இளைஞர் அணியொன்றை அரசியலில் கட்டியெழுப்ப சந்தர்ப்பத்தினை வழங்குமா என்பது முக்கியமான கேள்வி. அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்ற பழமொழிதான் இந்த இடத்தில் எனக்கு நினைவுக்கு வருகின்றது.

19 பிப்ரவரி 2011

உலககிண்ண கிரிக்கட் 2011

உலககிண்ண கிரிக்கட்போட்டி ஆரம்பமானப்போகின்றது எங்கு பார்த்தாலும் கதைத்தாலும் கிரிக்கட்தான். இந்தமுறை இந்தியா இலங்கை வங்கதேசம் ஆகிய மூன்று தென்னாசிய நாடுகள் இணைந்து உலகக்கிண்ண கிரிக்கட்போட்டியை நடத்துவது சிறப்பு. எனக்கு கிரிக்கட் விளையாடுவதில் அவ்வளவு ஈடுபாடு இல்லாவிட்டாலும் தொலைக்காட்சியில் கிரிக்கட் பார்ப்பவன். இலங்கை கிரிக்கட் அணியினுடைய இரசிகன். எனக்கு தெரிந்து பல பதிவுலக நண்பர்கள் நாளாந்தம் இதுதொடர்பாக விரிவாகவும் விலாவாரியாகவும் பதிவு எழுதிவருகின்றார்கள். 


இதுவரைகாலமும் ஒரு சர்வதேச போட்டியைகூட நேரடியாக ஆடுகளங்களில் பார்த்ததில்லை இப்பபோது முதன்முறையாக சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது அதுவும் என்னுடைய நண்பர்களுடன் சென்று பார்ப்பதற்கான சந்தர்ப்பம். இலங்கையில் உலகக்கிண்ணப்போட்டியொன்று நடைபெறும்போது அதை தவறவிடக்கூடாது என்று நினைத்திருந்தேன் இப்போது லோஷன் அண்ணா மற்றும் கோபியின் தயவில் கையில் ரிக்கட்டுகள் கிடைத்திருக்கின்றன அதுவும் இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி.
நல்ல ஒரு விறுவிறுப்பான போட்டியாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.


இந்தமுறை உலககிண்ணத்தை இலங்கையே வெல்லவேண்டும் என்பது என்னுடை எதிர்பார்ப்பு. ஆனால் மற்றைய அணிகளையும் குறைத்து மதிப்பிடமுடியாது இலங்கை தவிர இந்தியாவுக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றது அதைவிட நான் எதிர்பார்ப்பது பாக்கிஸ்தான் அணியினரை ஏனென்றால் அவர்கள் எப்போது வெல்வார்கள் எப்போது தோற்பார்கள் என்று கூறமுடியாதிருக்கின்றது அதனால் இந்தமுறை பாக்கிஸ்தானையும் கிண்ணத்தை கைப்பற்றும் அணியினுடைய பட்டியலுக்குள் நான் வைத்திருக்கின்றேன். இதற்கு மற்றுமொரு காரணம் பாக்கிஸ்தான் அணித்தலைவர் அப்ரிடி.



எந்த அணிகிண்ணத்தை சுவீகரித்தாலும் சந்தோஷம்தான் அதிலும் குறிப்பாக இலங்கை கிண்ணத்தை கைப்பற்றினால் இலங்கை அணியினுடைய இரசிகன் என்ற வகையில் மேலும் சந்தோஷப்படுவேன். பொறுத்திருந்து பார்ப்போம் எந்த அணி வெற்றி பெறுகின்றதென்று.... 

04 மார்ச் 2010

தேர்தல் கூத்துக்கள்

தேர்தல் என்று ஒன்று வந்தவிட்டாலே பரபரப்புக்களுக்கு குறைவிருக்காது. கட்சி தாவல்கள் அடிதடி சண்டைகள் என்று இவற்றை அடுக்கிக்கொண்டு போகலாம். ஆனால் இங்கு நான் சொல்லப்பொவது எனக்கு தெரிந்த கூத்துக்களைதான்

தேர்தலில் வேட்பாளருக்குரிய இலக்கங்களை பெறும்போது கட்சிகளினால் மேற்கொள்ளப்படும் கூத்துக்கள். இது சம்பந்தமாக நான் சில நாட்களுக்கு முன்னமே அறியக்கூடியதாக இருந்தது. அதாவது மலையகத்தில் போட்டியிடும் ஒரு பிரபல்ய தமிழ் கட்சிக்கு எப்போது தேர்தலில் 8ம் 9ம் 10 வது இலக்கங்களை கட்டாயமாக வழங்க வேண்டுமாம். அதேபோல மற்றும் ஒரு கட்சிக்கு 2ம் 3ம் 4ம் இலக்கங்களை கட்டாயம் வழங்க வேண்டுமாம். இந்த இருகட்சிகளுக்கும் வழங்கப்படும் இந்த இலக்கங்களை தவிர்ந்து ஏனைய இலக்கங்களைத்தான் ஏனையோருக்கு தேர்தல் அலுவலகம் வழங்க வேண்டுமாம். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாது 1வது இலக்கத்தை பெறுவதற்காக தங்களுடைய முதல் எமுத்துக்களை மாற்றிகொள்பவர்களும் வேட்பாளர்களாக எமது நாட்டில் இருக்கின்றார்கள். அதாவது ஆங்கில முதல் எழுத்தான “A” யை தனது பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வார்களாம். இதனால் 1வது இலக்கம் தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை. ஏனென்றால் இலக்கங்கள் வழங்கும்பொது ஆங்கில எழுத்துக்களின் வரிசையிலேயே இலக்கங்கள் வழங்கப்படுவது வழமையானதினாலாகும்.

இப்படி எனக்கு தெரிந்த தேர்தல் கூத்துக்கள் இவை. ஆனால் இன்னும் எத்தனையோ கூத்துக்கள் தில்லுமுல்லுகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. உங்களுக்கும் இவ்வாறான கட்சிகளின் தில்லுமுல்லுக்ள ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள் எங்களுக்கும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். ஏனென்றால் பொதுமக்களுக்கு அரசியல்வாதிகள் கட்சிகளின் பல விடயங்கள் தெரிந்திருப்பதில்லை. இவ்வாறான ஆக்கங்கள் மூலமாகவாவது வேட்பாளர்கள் கட்சிகள் அடிக்கும் கூத்துக்களை அவர்களும் தெரிந்து கொள்ள முடியும்.

என்னை அடிக்கடி உறுத்தும் ஒரு கேள்விதான் தேர்தலில் ஒருவேட்பாள் மக்களின்மூலம் வராமல் ஏன் கட்சி தலைவர்கள் மூலம் தெரிவு செய்யப்படுகின்றார்கள் என்பதுதான். இவ்வாறு கட்சி தலைவரினால் ஒரு வேட்பாளர் நேரடியாக தெரிவு செய்யுமிடத்து அவர் மக்களுக்கு சேவைசெய்ய வேண்டிய அல்லது மக்களுக்கு பதில் சொல்ல அவசியமில்லாமல் போகின்றது. அந்த வேட்பாளர் தன்னை தெரிவு செய்த கட்சிக்கோ அல்லது தலைவருக்கே பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு இதன்மூலம் தள்ளப்படுகின்றார். ஆனால் எது எப்படியானாலும் மக்கள்தான் வாக்களிக்கவேண்டும். அது அவர்களுடைய ஜனநாயக கடமை என்பதோடு மட்டுமே நின்று விடுகின்றது அவர்ககளுடைய பங்கு. இதனால் மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் தேர்தலின் பின்னர் தவிடுபொடியாகி விடுகின்றது.