A Promised Land

26 நவம்பர் 2020

புட்டு-பிட்ஸா அரசியல்

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணாண்டோ அவ்வாறு நீதிமன்றில் தெரிவித்திருந்தமை தவறான விடயம். மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. (நேற்று (25) அவர் நீதிமன்றில் அவ்வாறு குறிப்பிட்டமைக்கு அதே நீதிமன்றில் மன்னிப்பு கோரியுள்ளார். 

அவர் புட்டு, பிட்ஸா உதாரணங்களை குறிப்பிட்டதன் மூலம் குறிப்பிட வருவது என நான் ஊகிக்கும் விடயம் என்னவென்றால் இலங்கையின் வடபகுதி மூடிய பொருளாதாரத்தில் இருந்ததென்றும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து திறந்த பொருளாதரத்தை நாமே வடக்கிற்கு கொண்டுவந்தோம் என்ற இறுமாப்பான அறிக்கையே அது.

கேரளாவுடன் இருக்கும் வரலாற்றுத் தொடர்பு காரணமாக கேரளாவின் உணவுப் பழக்கவழக்கங்கள், விவசாய முறைமைகள் சில பேச்சு வழக்குகள், யாழ்ப்பாணத் தமிழர்களுடைய வாழ்வியலில் நிரம்பியே காணப்படுகின்றது. இதை மறுப்பதற்கு இல்லை.

80 களின் நடுப்பகுதியின் பிறந்தவன் என்ற ரீதியின் என்னுடைய 23 வருடங்கள் போருடனான வாழ்க்கையுடனேயே கழிந்திருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து 1995 இல் இடம்பெயர்ந்து வன்னிக்குச் சென்று புதுக்குடியிருப்பில் 7 வருசங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் வசித்த அனுபவம் கொண்டவன் என்ற ரீதியில் அதாவது, இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார தடை விதிக்கப்பட்டிருந்த வன்னிப் பெருநிலப்பரப்புக்குள் வாழ்ந்தவன் என்ற ரீதியில் ஒரேயொரு விடயத்தை இங்கு குறிப்பிடவேண்டும்.

அதாவது மூடிய பொருளாதார சூழ்லையில் நாம் அரிசி தேங்காய் மரக்கறி போன்றவற்றை மிகவும் குறைந்த விலையில் வன்னிக்குள் எம்மால் பெறமுடிந்தது. அரிசி கிலோ 8 ரூபாய்க்கும் தேங்காய் 6–8 ரூயாக்கும் வாங்க முடிந்ததற்கான காரணம் இதே மூடிய பொருளாதாரம்தான். கடலில் இலங்கைக் கடற்படையின் அச்சுறுத்தலால் கடலுணவுக்கள் விலை கொஞ்சம் அதிகம்.

ஆகவே திறந்த பொருளாதாரத்தால் விலைவாசி உயர்ந்ததே தவிர குறையவில்லை என்பதே உண்மை. நான் பொருளாதாரம் படித்தவனோ அல்லது பொருளாதார வல்லுனனோ இல்லை அதனால் இந்த திறந்த/மூடிய பொருளாதாரம் தொடர்பில் சாதக பாதகம் தொடர்பில் அதிகம் பேசாமால் எனது அனுபவத்தினை இங்கே கூறியிருக்கிறேன்.

ஆகவே திறந்த பொருளாதாரத்தால் மக்களுக்கு நன்மையைவிட தீமைய அதிகம். இதை பிரசாத் பெர்ணாண்டோ புரிந்திருந்தால் அப்படியொரு இறுமாப்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்திருக்கமாட்டார்.

பி.கு :-

பிட்ஸா நிறுவனத்தின் இலங்கை விற்பனை முகவரும் ( Franchise) தமிழரே. இலங்கையில் உள்ள கார்கில்ஸ் புட் சிட்டி சூப்பர்மாட்கட் நிறுவனம் அந்த உரிமையையும் வைத்திருக்கின்றது. யாழ்ப்பாணத்தின் மானிப்பாயை பூர்வீகமாக சேர்ந்த பேஜ் குடும்பத்தின் சொத்தே இந்த கார்கில்ஸ் நிறுவனமும் அதன் பிட்ஸா கடைகளும் என்பதையும் இங்கே குறிப்பிட்டுக் கூறவேண்டும்.

12 நவம்பர் 2020

பகுத்தறிவாளன் மக்களை முட்டாளாக்கலாமா?

 "பகுத்தறிவாளன் மக்களை முட்டாளாக்கலாமா?" என்ன கேள்வியை பார்த்தவுடன் உங்களுக்கு நினைவுக்கு வரும் நபர் யார்? 

ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்....

.

.

.

பகுத்தறிவாளன் என்றவுடன் என்மனதுக்கு நினைவுக்கு வருபவர் நடிகர் கமல்ஹாசன். உங்களில் பலபேருக்கும் கமல்ஹாசன் என்னபெயர் மனதில் ஒருகணம் வந்துபோயிருக்கலாம். இந்திய சினிமா நடிகர்களின் முற்போக்கு சிந்தனை நிரம்பிய திரைப்படங்களை தயாரித்ததிலும் நடித்ததிலும் அதற்கு முன்மாதிரியாக செயற்படுவர்களிலும் உலகநாயகன் என்று தமிழ்சினிமா இரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கமல்ஹாசன் தொடர்பிலேயே ஒரு விடயத்தை மிகவும் சுருக்கமாக கூறிச்செல்லப் போகின்றேன். 

அதற்கு முதலில் உங்களுக்கு ஒரு விடையத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். கமல்ஹாசன் எனும் திரைப்பட நடிகரின் இரசிகன் நான். நாயகன், சலங்கையொலி போன்ற படங்களை பார்த்ததன்மூலம் அவர் திரைப்படங்கள்பால் ஈர்க்கப்பட ஒருவன்.

மக்கள் நீதி மய்யம் என்னும் பெயர் தமிழ் நாட்டில் கட்சியொன்றைத் தொடங்கி செயற்பட்டு வருபவர். நடிகள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற விதி எங்குமில்லை அத்துடன் அது அவருடைய ஜனநாயகத்தின் மீது அவருக்கு இருக்கும் உரிமை. தமிழ்நாட்டு மக்கள் விரும்பினால் அவரை முதலமைச்சராகக் கூட ஆக்கலாம். அந்த வகையில் இந்தவிடயத்தில் அவரை விமர்சிப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. 

ஆனால் பிக்பாச் எனும் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தொடர்ச்சியாக நான்க்கு முறை செயற்பட்டிருக்கின்றார். பிக்பாஸ் என்னும் ரியலிட்டி ரிவி நிகழ்ச்சியானது நெதர்லாந்து நாட்டின் பிக் ப்ரதர் (Big Brother) எனும் ரியலிட்டி ஷோவின் இந்திய வேர்ஷன்.  Endemol Shine India எனும் நிறுவனம் இந்தியாவில் இந்நிகழ்ச்சியை தயாரிப்பதற்கான உரிமையை வாங்கி ஹிந்தி தமிழ் தெலுங்கு கன்னடா மராத்தி மலையாளம் போன்ற மொழிகளில் தயாரித்து வருகிறது. 

18 பேரை ஒரு வீட்டுக்குள் அடைத்துவிட்டு அவர்கள் அடிபடுவதையும் பிடிபடுவதையும் கமராக்களால் படம்பிடித்து படத்தொகுப்பு செய்து 100 நாட்களுக்கு ஒளிபரப்பும் இந்த நிகழ்சியை பகுத்தறிவாளனக தன்னைக் காட்டிக்கொண்டு முற்போக்கான செயல்களில் ஈடுபடும் கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் மக்களிடம் கொண்டு சேர்ப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. 

பிக் பிரதர், பிக்பாஸ் போன்ற ரியலிட்டி ஷோக்கள் எப்படி ஆரம்பித்து எப்படி முடிவடைய வேண்டும் எந்தக் கதாபாத்திரம் வெல்லவேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அதன்படியே முன்னகர்த்திச் செல்லப்படுபவையா இவை காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாது எஸ்.எம்.எஸ் என்ற போர்வையில் மக்களிடம் கோடிக்கணக்கான பணத்தினை சுருட்டும் இப்படியானதொரு நிகழ்ச்சியை பாருங்கள் என்று கமல் அழைப்பு விடுப்பதும் அதைத் தொகுத்து வழங்குவதும் விமர்சிக்கக்கூடியது. 

தான் செய்வது சரியென தனது தரப்புக் காரணங்களை நடிகர் கமல்ஹாசன் நியாயப்படுத்த முடியும் ஆனால் அதையும் தாண்டி ஒரு பகுத்தறிவாளனாக / முற்போக்குவாதியாக அவர் இதனை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. 










08 நவம்பர் 2020

நான் உரையாடிய பிரபல்யமான நபர் - கலாநிதி அப்துல் கலாம்

 என்னுடைய வாழ்க்கையில் நான் பல பிரபலங்களை சந்தித்திருந்தாலும் மறக்க முடியாத சந்திப்பாக அமைந்திருந்தது இந்த்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் கலாநிதி அப்துல் கலாம் அவர்களை சந்தித்த நிகழ்வுதான்.


(Dr. Abdul Kalam in Colombo)

2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 & 27 ஆந் திகதிகளில் இலங்கையின் கொழும்பு நகரில் "மின்வலு மற்றும் சக்திவலு அமைச்சு" ஏற்பாடு செய்திருந்த “An energy approach towards a Knowledge based economy” எனும் தொனிப்பொருளிலான மாநாட்டின் சிறப்பு அதிதியாக கலாநிதி அப்துல் கலாம் கலந்து கொண்டிருந்தார்.

இந்த காலப்பகுதியில் நான் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினுடைய ஊடகப் பிரிவில் ஊடக இணைப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்த காரணத்தினால் கலாநிதி அப்துல் கலாம் அவர்கள் கந்துகொள்ளும் அந்த மாநாட்டுக்கு செல்வதற்கான சந்தர்ப்பம் மின்வலு மற்றும் சக்திவலு அமைச்சரின் ஆலோசகரால் எனக்கு கிடைத்திருந்தது.

இந்த மாநாட்டை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 2015 ஜூன் 26 மாலை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஏற்பாடாகியிருந்தது. கலாநிதி அப்துல் கலாம் அவர்கள் நிகழ்வுக்கு வருகை தந்து மாநாட்டை ஆரம்பித்து வைத்ததுடன் தனது முதன்மையுரையையும் ஆற்றிவிட்டு அதற்கு பின்னர் இரவுணவையும் முடித்துவிட்டு குறிப்பிட்ட மண்டபத்தைவிட்டு வெளியேறுகையில் நானும் எனது நண்பர்கள் இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்த மேசைக்கு அருகில் வரும்போது தாமாகவே எம்மருக்கில் நின்று "How is the Food? என்று சிரித்த முகத்துடன் கேட்டார்.

இன்ப அதிர்ச்சியில் தட்டுத் தடுமாறி எழுந்து அவருடன் தமிழில் ஒரு 45 செக்கன்கள் உரையாடினேன். எனது ஊர் யாழ்ப்பாணம் என்பதையும் கூறினேன். "அம்மா அப்பா எல்லாம் யாழ்ப்பாணத்திலையா இருக்கிறார்கள்" என்று கேட்டார். மிகவும் மென்மையாகவும் சிரித்த முகத்துடனும் கதைத்துவிட்டு சென்றார். உண்மையிலேயே இப்போது நினைத்தாலும் உடலெல்லாம் புல்லரிக்கும் ஒரு சம்பவம் அது.

ஆனால் மிகப்பெரிய கவலை என்னவென்றால் சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளையில் கலாநிதி அப்துல் கலாம் அவர்கள் எம்முடன் உரையாட வந்ததால் கைலாகு கொடுத்து அவருடன் உரையாடவோ அல்லது அந்த அவசரத்தில் புகைப்படம் எடுத்துக்கொள்ளவோ முடியாமல் போய்விட்டது.

ஆனாலும் இந்தியாவின் தலைசிறந்த எளிமையான மனிதனான கலாநிதி அப்துல் கலாம் அவர்களை நேரில் சந்தித்து உரையாடிவிட்டேன் எனும் பெருமை எனக்குள் இப்போதும் எப்போதும் இருந்துகொண்டேயிருக்கும்.


எதிர்பார்பில் பராக் ஒபாமாவின் "A Promised Land” புத்தகம்



07 நவம்பர் 2020

மோசமான விமான அனுபவம்

நான் 2009 நவம்பர் மாதம் விமானத்தில் முதன்முறையாக பயணிக்க தொடங்கியதன் பின்னர் தற்போதுவரை இந்தியா சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம், அவுஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய ஆறு நாடுகளுக்கு விமானம் மூலம் பயணம் செய்திருக்கிறேன். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அல்லது இந்தியன் ஏர்லைன்ஸில் தான் நான் வழமையாக இந்தியா பயணிப்பேன்.  

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆந் திகதி முப்பையிலிருந்து கொழும்புக்கு ஜெட் ஏர்வேஸில் பயணிதேன். இம்முறை வேலை விசியமாக நவம்பர் 4 கொழும்பிலிருந்து கொச்சினுக்கு ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸில் பயணித்திருந்தாலும் returen ticket ஜெட் ஏர்வைசில் ஏன் போட்டார்கள் என்பது என்னுடைய நிறுவன Production Booker க்கே வெளிச்சம். (கொச்சியிலிருந்து மும்பைக்கு வாகனம் மூலம் பயணம் மேற்கொண்ட அனுபவம் தொடர்பில் பின்னர் எழுதுவேன்)

(கோளாறு ஏற்பட்ட விமானம்)

விமனத்தில் ஏறும்போதே அவ்விமானம் கொஞ்சம் பழைய விமானமாக இருந்தது கொஞ்சம் உறுத்தியது. TV Screenகூட இல்லாத பழைய விமானம். மாலை 5:30 க்கு புறப்பட வேண்டிய விமானம் நாம் விமானத்தினுள் ஏறிய பின்பும்கூட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒன்ரரை மணிநேர தாமதத்தின் பின்னன் சுமார் 7 மணிக்கு மும்பையிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்டது.

(விமானத்தின் உட்புற தோற்றம்)

புறப்பட்டு ஒரு பிரச்சினையுமில்லாமல் புனே நகரையும் தாண்டி பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானியிடமிருந்து ஒரு தகவல் "விமானத்தில்.ஒரு சிறிய தொழில்நுட்பக் கோளாறு. நான் இப்போது மீண்டும் மும்மையை நோக்கி விமானத்தை செலுத்தப்போகிறேன்."

(விமானத்தின் தரவுகளை உள்ளக wifi இணைப்பு மூலம் தொலைபேசியில் பார்த்தேன். இவ்விடத்தில் விமானம் மும்பைக்கு திரும்பியது)

விமானத்தில் ஒரு திடீர் பதைபதைப்பு. திடிரென்று விமானத்தின் உயரம் கடகடவென்றும் இறங்கத் தொடங்கியது. விமானத்தில் இன்னும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. விமானப் பணிப்பெண்கள் மிகவும் அமைதியாக பயணிகளை சாந்தப்படுத்தினர். ஒருவரையும் இருக்கையைவிட்டு எழுந்திருக்க விடவில்லை. எனக்கு இரு ஆசனத்திற்கு முன்னால் அமர்ந்திருந்த வெளிநாட்டுக் காரர் ஒருவர் பெரிய சத்தமாக என்ன நடக்கிறது? விமானியுடன் நான் பேச வேண்டும் என்னும் கோபப்பட்டு சத்தம்போட்டுக் கொண்டிருந்தார். விமானப் பணிப்பெண்கள் அது முடியாது. அமைதியாக இருங்கள் என்று காட்டமாக கூறிவிட்டனர்.

எனக்கு மறுபுறத்தில் வயதான இரண்டு சிங்கள அம்மாமார் பௌத்த பிரித்தை ஓதிக்கொண்டு புத்தபிரானை நோக்கி வழிபடத் தொடங்கனர்.

நான் அப்போது ஒரு விடயத்தை யோசித்தேன் அதாவது விமானத்தின் கோளாறு பெரியதாக இருந்தால் விமானத்தை புனே விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு விமானி நடவடிக்கை எடுத்திருப்பார். ஆனால் அவர் முப்பைக்கு மீண்டும் செல்வதால் கோளாறு அவ்வளவு பெரியதாக இருக்க வாய்ப்பில்லை. தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் ஏதேனும் பிரச்சினை இருக்கலாம் என்று எனக்கு நானே கூறி என்னை சாந்தப்படுத்தினேன்.

ஆனாலும்ன் உள்மனதில் ஒர் பதைபதைப்பு. வெளிக்காட்டாமல் எனது தொலைபேசியின் FLIGHT MOOD ஐ அகற்றிவிட்டுப் பார்த்தேன். தொலைபேசி Roamimg Signal ஏதும் இல்லை. அந்த நேரத்தில் என்னக்கு ஒரு யோசனை தோன்றியது. கடகடவென்று எனது அம்மாவுக்கும் தம்பிக்கும் ஒரு குறுந்தகவலைத் தட்டிவிட்டேன்.

அதாவது "நான் கொழும்பை நோக்கி பயணிக்கும் விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக மும்பை விமனநிலையத்துக்கு திரும்பவும் போய்க்கொண்டிருக்கிறது. இந்த குறுந்தகவல் உங்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் ஒன்று நான் மும்பை விமான நிலையத்தில் இறஙகியிருப்பேன் அல்லது விமானம் எங்காவது விழுந்திருக்கும்"

அதன்பின் அமைதியாக அப்படியே இருந்துவிட்டேன்.

சரியாக 27 நிமிடங்களில் அதாவது இரவு 8:12 க்கு விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது. அம்மா தமிபியிடமிருந்தும் அழைப்புக்கள். வந்திருந்தன. பத்திரமாக இருக்கிறேன் என்பதை தெரியப்படுத்தியதன் பின்னரே அவர்கள் சாந்தமடைந்தனர்.

(செல்பி)

இதேவேளை மாற்று விமான ஏற்பாட்டை ஜெட் ஏர்வேஸ் அங்கு செய்திருந்தது. ஒரு மணி தாதமத்திற்கு பின்னர் வேறொரு விமானத்தில் கொழும்பு புறப்பட்டோம்.

இரவு 11:50 மணிக்கு கொழும்பில் பத்திரமாக தரையிறங்கினோம். அப்போது விமானி தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டபோது தனக்கு ஒத்துழைத்தமைக்கு எமக்கு நன்றி கூறினார்.

(மாற்று விமானம்)

இப்படியான ஒரு விமான பயண அனுபவத்தை நான் பெற்றிருக்கவில்லையாததால் இதுவே எனது மோசமான விமான பயணமாக அமைந்திருந்தது. எனது நிறுவனத்துக்கும் எனது அனுபவம் தொடர்பில் விபரித்து மின்னஞசல் அனுப்பி இனி ஜெட் ஏர்வைஸில் டிக்கட் முன்பதிவு செய்ய வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டேன். அதேவேளை அடுத்த நாளே ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் மின்னஞசல் ஒன்றை அனுப்பியிருந்தது.

06 நவம்பர் 2020

எதிர்பார்பில் பராக் ஒபாமாவின் "A Promised Land” புத்தகம்

புத்தக வாசகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ள அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி  பராக் ஒபாமா எழுதியுள்ள "A Promised Land” புத்தகம் இம்மாதம் 17ஆந் திகதி உலகெங்கும் வெளியிடப்பவுள்ளது. 

25 மொழிகளில் சமநேரத்தில் வெளியிடப்படவுள்ள இப்புத்தகம் உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான வாசகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்துள்ள புத்தகமென்று தெரிவிக்கப்படுகின்றது. 

இரண்டு முறை அமெரிக்காவின் ஜனாதிபதியாக பணியாற்றிய பராக் ஒபாமா தனது ஜனாதிபதி பதவிக்கால நினைவுகளை இரண்டு அத்தியாயங்கள் கொண்ட புத்தகமாக வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதோடு அதனுடைய முதலாவது அத்தியாயமே "A Promised Land”  என்ற பெயரில் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அமேசன் தளத்தில் இந்த புத்தகத்திற்கான முன்பதிவு ஏலவே ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நீங்களும் இந்த "A Promised Land”  புத்தகத்தை வாங்க விருப்பினால் தற்போதே அமேசன் தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.  

முன்பதிவு செய்வதற்கு - இங்கே கிளிக்குக

To buy this book - Click Here