A Promised Land

02 ஜனவரி 2016

மட்டத்தேள் கடியும் பச்சை மிளகாய் விலையும்


மிகுந்த கோலாகலமாக 2016ம் ஆண்டும் வெகுவிமாசையாக மலந்துள்ளது. 2015ம் வருடத்தினைப் போலல்லாது இந்த வருடமானது  மக்களின் மனங்களில் பயங்கள் இல்லாமல் சுதந்திரமாக வருடப் பிறப்பினை வெடி கொழுத்தி கொண்டாடக்கூடியதாக இருந்தது எனும் பொழுது சற்று ஆறுதல். 

இந்தப் புத்தாண்டு மட்டத்தேள் கடியுடன்தான் ஆரம்பித்திருக்கின்றது. புத்தாண்டு விடுமுறையில் ஊருக்கு வந்து காலாறியபோது விசமற்ற மட்டத்தேள் ஒன்று (கடிச்சு 18 மணித்தியாலம் தாண்டியும் இன்னமும் உயிரோட இருக்கிறதால)  சமையம்பார்த்து காலைக் கவ்விவிட்டது. வழமையான கட்டெறும்பு கடிபோலல்லாது கொஞ்சம் வித்தியாசமாக கடுமையாக வலிக்கும்போதுதான் கடிச்சது மட்டத்தேள் என்பதை கண்டுபிடித்து அதற்கு மரண தண்டனை கொடுக்கக்கூடியதாக இருந்தது. 



என்னடாப்பா வருசத்தண்டே "மட்டத்தேள் கடி, மரண தண்டனை" எல்லாம்
நன்மைக்குத்தான் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டு கண்ணயர்ந்து கண்முழித்தால் இன்று மதிய சமையலுக்கு மரக்கறி வாங்க கடைக்கு போட்டு வா என்று அம்மா கோரிக்கை. சரியெண்டு பையினையும் தூக்கிக்கொண்டு ஊரிலையே மிகவும் பிரபல்யமான “மலர் கடை” க்கு போய் 100கிராம் பச்சமிளகாய் போடுங்கோ எண்டால் பதிலுக்கு 100 கிராம் பச்சமிளகாயின்ட விலை 100 ரூபாய் கிலோ 1000 ரூபாய் போடட்டா என்று பதிலுக்கு கேட்கவும் அப்படியே புது வருடத்தின் இரண்டாவது அதிர்ச்சி. பச்சமிளகாய்கு அடிச்ச காலம் என்று நினைத்துக்கொண்டு 50 கிராம் தாங்கோ எண்டு வாங்கிக்கொண்டு வீட்டபோய் அம்மாட்டை சொன்னால் உனக்கு தெரியாதே எண்டு சாராதரணமாகக் கேட்கிறா. (வருசம் முழுக்க கடையிலையே சாப்பிட்டா பச்சமிளகாய்ட விலை எப்படித் தெரியும்)

மக்களே பச்சைமிளகாய் ஆராட்சியாளர்களின் ஆராட்சியின்படி 6000 ஆண்டு காலத்திற்கும் முன்பிலிருந்தே காரத்தை உணவில் அதிகரிப்பதற்காக உணவில் பயன்படுத்தும் இந்தப் பச்சை மிளகாய் விலை இப்படி கிடுகிடுவென  ஏறியதால் நீங்கள் ஒவ்வொருவரும் வீடுகளில் பச்சமிளகாயனை உற்பத்தி செய்தால் உங்களுடைய வீட்டுத் தேவைக்கான பச்சமிளகாய்களை நீங்களே உற்பத்தி செய்துகொள்ளக் கூடியதாக இருக்கும். வீணான செலவினையும் குறைத்துக் கொள்ளலாம். இதை இந்த 2016ம் ஆண்டின் மிகமுக்கியமான தீர்மானமாக எடுத்துக்கொள்ளுங்கள். 

வருடம் பிறந்து 2வது நாளெண்டாலும் பரவாயில்லை இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்களே!

09 அக்டோபர் 2015

“தீபன்” சர்வதேச திரைப்பட விழா கொழும்பு 2015 இன் ஆரம்பத் திரைப்படம் (IFFC2015)






எதிர்வரும் நவம்பர் மாதம் 6ம் திகதி “Come and be enlightened“ என்ற தொனிப்பொருளின்கீழ் கொழும்பில் ஆரம்பமாக இருக்கின்ற 2வது “சர்வதேச திரைப்பட விழா கொழும்பு 2015” இன் ஆரம்பத் திரைப்படமாக உலகின் புகழ்பெற்ற திரைப்பட விழாவான கான்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான தங்கப்பனை விருதினை (Palme d’Or award) வென்ற “தீபன்” திரைப்படம் திரையிடப்பட இருப்பதாக சர்வதேச திரைப்பட விழா கொழும்பினுடைய விழா இயக்குனர் Asoka Handagama அவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழர்களுடைய கதையினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தில் இலங்கையைச் சேர்ந்தவரும் தற்போது புலம் பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வாழும் Shobasakthi என்று அறியப்பட்ட ஜே.அன்டனிதாசன் அவர்கள் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த திரையிடலுக்கு தீபன் திரைப்பட இயக்குனர் Jacques Audiard மற்றும் ஷோபா சக்தி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் வேலைப்பழு காரணமாக இயக்குனராலும் புலம்பெயர்ந்து வசிப்பதன் காரணமாக பாதுகாப்பு காரணங்களால் ஷோபா சக்தியாலும் இந்த ஆரம்ப விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்று விழா இயக்குனர் அசோக ஹந்தகம தெரிவித்தார்.

கடந்த வருடத்தினைப் போன்றே இம்முறையும் 50 மேற்பட்ட சர்வதேச திரைப்படங்கள் இத்திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கின்றன. அத்தோடு “Asian Competition” பிரிவில் 10 திரைப்படங்கள் போட்டியிடுவதோடு இலங்கையிலிருந்து தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் “Mosaic of Sri Lankan New Cinema Competition” பிரிவில் சிறந்த திரைப்படத்தினை தெரிவு செய்து “Cinema of Tomorrow” என்ற விருது NETPAC குழு அங்கத்தவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு வழங்கப்பட இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இத்திரைப்பட விழாவில் பிரான்ஸ் மற்றும் ஜப்பானிய திரைப்படங்கள் “French Film Corner” மற்றும் “Japanese Cinematic Flavour” ஆகிய பிரிவுகளின்கீழ் திரையிடப்பட இருக்கின்றன.

“Documentary and Short Film Corner” இல் திரையிடப்படும் இலங்கையின் குறும்படங்களில் சிறந்த 4 குறும்படங்கள் சர்வதேச திரைப்பட விழா கொழும்பின் பங்காளிகளில் ஒருவரான சிலோண் தியட்டர்ஸ் (Ceylon Theaters)நிறுவனத்தால் திரைப்பட விழாவின் இறுதிநாளில் “Reegal Award” விருது ஊடாக கௌரவிக்கப்பட இருக்கின்றன.

இதுதவிர திரைப்பட விழா இடம்பெறும் சமகாலத்தில் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற சினிமா இயக்குனர்கள் மற்றும் நிபுணர்களினால் "Master Class" பயிற்சிகளும் நடாத்தப்படும்

கடந்த வருடம் போலவே Directors Guild of Sri Lanka ஆனது ஜப்பானின் Okinawa International Movie Festival உடன் இணைந்து இவ்விழாவினை நடாத்துவதோடு இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் (Sri Lanka Film Corporation) பூரண ஒத்துழைப்பினை வழங்குகின்றது.



www.iffcolombo.com (November 6th - 11th)

03 பிப்ரவரி 2015

"எங்களால் முடியாதது எதுவுமில்லை" Widows of the North (Sri Lanka)


இந்த ஆவணப்படத்தினை முடிந்தளவு Share செய்யுங்கள்
Please share this Documentary Film

"எங்களால் முடியாதது எதுவுமில்லை" Widows of the North (Sri Lanka) with English Subtitle 

எங்களுடைய நாட்டில் இடம்பெற்ற போரானது பெண்கள் தலைமைத்துவ குடும்பங்கள் ஏராளமானவற்றை உருவாக்கிவிட்டு சென்றிருக்கின்றது. இந்த ஆவணப்படம் போரினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கபட்டு தங்களுடைய கணவனை பிள்ளைகளை இழந்தவர்கள் உடல் மற்றும் உளப்பாதிப்புக்கு உள்ளான பெண்கள் அதிலிருந்து மீண்டுவந்து சமூகத்தில் சுயமாக தலைநிமிர்ந்து வாழ ஒரு ஆரம்ப புள்ளியாக இருக்கும்.

https://www.facebook.com/video.php?v=1091185054230203&pnref=story






The three decade long civil war created more than one generation of widows and women-headed-households in Sri Lanka. In such a situation, it is of grave importance that these war-affected women are given the right assistance to rejoin society and provide for their families, who now solely depend on them for survival. “Engalal Mudiyathathu Ethuvumillai” (Widows of the North) is a film which traces the experiences of such women, who have been affected directly and indirectly by the war. These women have not only managed to survive, but have risen to achieve great feats as both single mothers and members of their society. We hope this documentary film will be a source of inspiration for women with similar experiences, who have lost loved ones and experienced physical and mental trauma, as a result of many years of violence, displacement and conflict.

15 டிசம்பர் 2014

4th Agenda Short Film Festival - 2014



கடந்த 12- 14ம் திகதிவரை கொழும்பில் 4வது முறையாக நேற்று இடம்பெற்று முடிந்த
அஜண்டா 14 குறும்திரைப்பட விழாவில் முதன்முறையாக 20க்கும் மேற்பட்ட தமிழ்க் குறும்படங்கள் பங்குபற்றியிருந்தன அதில் விமல்ராஜின் “திரைக்கதையில் அவள்” கலிஸின் “குரும்பை” றினோசனின் “ஆனந்தி” மாதவனின் “அப்பால்” சமிதனின் “நான் நீ அவர்கள்”, சிவராஜின் "பை" ஆகிய குறும்படங்கள் திரையிடலுக்காக தெரிவுசெய்யப்பட்டு பார்வையாளர்களுக்காக திரையிடப்பட்டன.  அத்தோடு சிங்கள தமிழ் என்ற வேறுபாடு இல்லாமல் குறும் திரைப்படங்கள் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.


குறும்திரைப்பட விழாவின் நேற்றைய இறுதிநாளான நேற்று 14.12.2015 இடம்பெற்ற விருது வழங்கும் விழாவில் பிரதம விருந்தினராக இலங்கையின் திரைப்பட இயக்குனர் அசோக ஹந்தகம கலந்து கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராக 45 வருடங்களுக்கு முன்னர் “காகமும் மனிதர்களும்” என்ற குறும்படத்தினை இயக்கி இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற சுகதபால செனரத் யாப்பா கலந்து சிறப்பித்தார். அத்தோடு சுவிஸ்லாந்தின் உயஸ்தானிகர், கனடாவின் உயஸ்தானிகர், Goethe Institute Director உட்பட பல வெளிநாட்டு உள்நாட்டு பிரமுகர்கள் மற்றும் திரைப்படத்துறை சார்ந்தோரும் கலந்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு வருடமும் இந்த திரைப்பட விழாவை அனோமா ராஜகருணா மற்றும் அவருடைய அஜண்டா 14 நிறுவனம் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இந்த ஆண்டு விருது வழங்கும் விழாவின் நடுவர்களாக திரைப்பட இயக்குனர் தர்மசிரி பண்டாரநாயக்க, ஒளிப்பதிவாளர் எம்.டி. மகிந்தபால, திரைப்பட விமர்சகர் காமினி வியாங்கொட, திரைப்பட விமர்சகர் முரளீதரன் மயூரன், இந்தியாவின் Documentary Filmmaker Ein Lal  ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.


மாதவனின் “அப்பால்” குறும்படம் Most Gender Sensitive Short film  பிரிவில் சிறந்த படமாக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. அப்பால் திரைப்படத்துடன் இன்னும் இரு சிங்கள குறுந் திரைப்படங்கள் விருதுக்கு முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேபோல் 24 வயதுக்க்கு குறைந்த குறும்பட இயக்குனர்களில் சிறந்த இயக்குனரை தெரிவு செய்து வழங்கப்படும் Most Promising short film maker விருதனையும் “அப்பால்” குறும்படத்தை இயக்கியமைக்காக மாதவன் பெற்றுக்கொண்டார். அதேவேளை சிறந்த அனிமேசன் குறும் திரைப்படத்திற்கான விருதினை “Good boys land” குறும்படத்தை இயக்கிய Lahiru Samarasinghe பெற்றுக்கொண்டார். மனித உரிமை தொடர்பில் பேசப்பட்ட குறும்திரைப்படத்திற்கான விருதினை “A very short film about killing” குறும்திரைப்படத்தினை இயக்கிய சுமுது அத்துகொரளை பெற்றுக்கொண்டதோடு இவர் இயக்கிய மற்றுமொரு குறும் திரைப்படமான “Hole in the wall” இந்த ஆண்டுக்கான சிறந்த குறும் திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. அதேவேளை இந்த ஆண்டுக்கான “Jury” விருது “Beyond the Reality” குறும்திரைப்படத்திற்காக சுஜித் ராஜபக்ச பெற்றுக்கொண்டார். விருது வென்றவர்களுக்கு ஒவ்வொரு விருதுடனும் தலா 20 ஆயிரம் ரூபா பணப்பரிசில்களும் சிறந்த குறும் படத்திற்கு 150 ஆயிரம் ரூபா பணப்பரிசும் மேலதிகமாக வழங்கப்பட்டதுடன் சிறந்த குறும்படத்திற்கா விருதுவென்ற சுமித் அத்துக்கொரளையின் அடுத்த படத்தயாரிப்பிற்கு துணைபுரிவதாக அஜண்டா 14 திரைப்படவிழா சார்பாக உறுதி வழங்கப்பட்டது.






Mathavan Maheswaran receiving "Most Promising short film maker" Award from Director Ilango Ramanathan & Goethe Institute Director


   
Lahiru Samarasinghe receiving "Best Animation Short Film Award" 


Mathavan Maheswaran receiving "Most Gender Sensitive Short film" Award from Canadian High Commissioner & Nimalka Fernando 
 
Sujith Rajapakse receiving "Jury Award" from Ein Lal & Dharmasiri Bandaranayake



Sumudu Athukorala receiving "Best Short Film of the Year" from Filmmaker Asoka Handagama & Anoma Rajakaruna



Mr.Sugadapala Senarath Yappa honored by Anoma Rajakaruna & the Agenda 14 team. 


Pictures by Chamath Hasanka

06 டிசம்பர் 2014

"தக்கல புருது கெனெக்" | "The Stranger Familiar" - இது விமர்சனமில்லை





ஒரு கலைப்படைப்பு என்பது அது சார்ந்த சமூகத்தினை உண்மையாகவும் ஆழமாகவும் பிரதிபலிக்கும்போது அந்த கலைப்படைப்பும் அது கூறவரும் கருத்தும் வீரியமாகவும் மிகவும் ஆழமாகவும் பார்வையாளனின் மனதில் தாக்கத்தினையும் ஏற்படுத்திவிடும்.அத்தோடு ஒவ்வொரு பார்வையாளனையும் அவனுடைய கருத்தியலின் அடிப்படையில் வித்தியாசமாக சிந்திக்கத் தூண்டிவிடும். அல்லது படம் ஆரம்பிக்கும்போது இருந்த பார்வையாளனின் நிலையினை இன்னொரு கட்டத்திற்கு நகர்த்திவிடும். ஒரு திரைப்படம் இவ்வாறான நிலைகளில் ஏதாவது ஒன்றையாவது பார்வையாளனுக்கு தோற்றுவிக்குமாக இருந்தால் அந்தக் கலைப்படைப்பு ஏதோவொரு வகையில் சிறந்த கலைப்படைப்பாக இருக்கும் என்று கூறமுடியும் என்பது உண்மை.

நேற்று ஐரோப்பிய திரைப்பட விழாவின் இறுதிநாளில் இலங்கையின் இளம் இயக்குனர் மலித் ஹேகொடவின "தக்கல புருது கெனெக்" |
"The Stranger Familiar" திரைப்படம் திரையிடப்பட்டது. சாதாரண ஒரு கணவன் மனைவிக்குள் திருமணத்திற்கு பின்னர் ஏற்படும் பிரச்சனையை மைய்யமாக வைத்து அழகாக திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது. அதற்குள் இலங்கையின் அரசியலும் பேசப்படுகின்றது சிங்கள சமூகத்தின் இன்றைய நிலையையும் அப்படியே பிரதிபலிக்கின்றது. ஆரம்பம்முதலே படிப்படியாக பார்வையாரை சிறிது சிறிதாக தன்னுடை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இறுதியில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் படம் முடிவடைகின்றது.

ஒரு தமிழனாக இலங்கை அரசியலில் சற்று ஆர்வம் உள்ள தமிழன் என்றவகையில் இந்தத் திரைப்படம் என்றை சற்று சிந்திக்க தூட்டியிருக்கின்றது. இந்தப் படத்தை சிங்கள கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனை என்ற விடயத்தினைத்  தாண்டி இலங்கையின் தமிழ் சிங்கள முரண்பாட்டுடன் தொடர்புபடுத்தியே ஆரம்பம் முதல் இறுதிவரை என்னால் பார்க்க முடிந்தது. இந்தக் கோணத்தில் திரைப்படத்தினை பார்த்தபோது 2014ம் ஆண்டில் ஆரம்பிக்கும் படம் 1948ல் நிறைவடைவது போன்றதொரு நிலைப்பாட்டை எனக்குள் தோற்றுவித்திருக்கின்றது. சிலவேளை இயக்குனரோ அல்லது திரைக்கதை ஆசிரியரோ இவ்வாறான ஒரு கோணத்தில் சிந்தித்து திரைக்கதையினை அமைத்திருக்கலாம் அல்லது அமைத்திருக்காமல் இருந்திருக்கலாம் ஆனால் திரைப்படம் இந்தக்கோணத்திலும் ஒரு பார்வையாளனை சிந்திக்க வைத்திருக்கின்றது எனும்போது அது இந்தத்திரைப்படத்தின் வெற்றியாகவே என்னால் கருத முடிகின்றது.

இயக்குனர் அசோக ஹந்தகமவின் இனி அவன் திரைப்படம் வெளிவந்தபோகூட இலங்கையின் பிரபல சிங்கள விமர்சகர் உபுல் ஷாந்த சண்ணஸ்கல கூட அந்தப்படத்தினை இது ஒரு 100 வீதமான சிங்கள படம் ஆனால் தமிழ் மொழியில் வெளிவந்திருக்கின்றது என்று கூறியிருந்தார் ஆனால் அந்தக்கதை அது இடம்பெறும் சூழல் என்பன முற்றுமுழுதாக தமிழ்ச் சூழலாக இருந்தது. ஆகவே ஒவ்வொரு பார்வையாளனும் தன்னுடைய கருத்தியலுடன் ஒரு கலைபடைப்பை பார்க்கும் விதங்கள் வேறுபட்டவை.



இந்தப்படத்தின் திரைக்கதையினை பூபதி நளின் எழுதியிருக்க மலித் ஹேகொட இயக்கியிருக்கின்றார். இருவருக்கும் இந்த திரைப்படமே தங்களது முதலாவது திரைப்படம். தரமான ஒரு திரைப்படத்தின் படைப்பாளிகள் என்பதையும் தாண்டி இவர்கள் இருவரும் என்றுடைய நண்பர்கள் என்ற ரீதியில் பெருமைப்பட்டுக் கொள்கின்றேன்.ஏற்கனவே இத்ததிரைப்படம் லண்டன் சர்வதேச திரைப்பட விழா உட்பட பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தன் உருவாக்கத்தல் இயக்குனரின் நண்பர்களின் பங்கு மிக அதிகம். பெரிய பட்ஜெட்டும் இல்லை சாதாரண ஒரு சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். ஆனால் சிங்கள சமூகத்தை பிரதிபலிக்கும் விலாசமாக கதைக்கருவை கொண்டிருக்கின்றது. சாதாரண பொதுமக்களின் பார்வைக்கு இத்திரைப்படம் எப்போது வருமென்று தெரியவில்லை ஆனால் திரைப்பட விழாக்களில் திரையிடப்படும்போது இந்தப்படத்தினை பார்க்கத்தவறவிடாதீர்கள்.


30 அக்டோபர் 2014

இயக்குனர் முருகதாஸ் ஒரு கதைத்திருடனா?

அண்மையில் வெளிவந்த கத்தி படத்தினுடைய கதையினை தன்னுடையதுதான் என்று கோபி என்ன சமூக ஆர்வலர் உரிமை கோரியிருககின்றார். அவருடைய நேர்காணல் ஒன்றனை இன்று பார்த்தேன். பாவம் அந்த சமூகத்தை நேசிக்கும் படைப்பாளி. அவருடைய தெளிவான பேச்சு, சமூகத்தின்மீது அவருக்கு இருக்கின்ற பற்று, கத்தி படம் தொடர்பாக முருகதாஸைப் பார்த்து அவர் கேட்கின்ற ஆணித்தரமான கேள்விகள், இவற்றைப் பார்க்கும்போது இந்த கத்திபடத்தினை முருகதாஸ் கோபியிடமிருந்து களவாடியிருக்கின்றார் என்பதற்கு மேலும் சான்றாகின்றது

கஜினியும் அதற்கு பின்பு வந்த முருகதாஜின் படங்கள் எல்லாமே வேறுபடங்களை உல்டா செய்து எடுக்கப்பட்டவைதான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதேபோல இதுவரையும் தன்னுடைய படங்கள் எதிலுமே கம்யூனிசம் பற்றி வாயே திறக்காத இந்த வியாபாரி முருகதாஸ் சமூகநலனை முன்னிறுத்தி அதுவும் கம்யூனிஸ கருத்துக்களுடன் ஒரு படம் எடுத்து வெளியிடும்போது அவரை சந்தேகத்துடனே பார்க்க வேண்டியிருக்கின்றது. (அந்தக் கம்யூனிஸ கருத்தும் கோபியினுடையதாம்.) முருகதாஸ் தான் ஒரு நேர்மையாளனாக இருந்திருந்தால் கோபிக்கு எதிராக வழக்குப்போட்டிருக்கவேண்டும் அப்படிச் செய்யாமல் இது பணத்திற்காக நடைபெறும் ஏமாற்று முயற்சி என்று அறிக்கை விட்டிருக்கின்றார் இந்த முருகதாஸ்.

முருகதாஸ் ஒரு நேர்மையானவராக கம்யூனஸித்திற்கு ஆதரவானவராக இருந்திருந்தால் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கமாட்டார். இயக்குனர் என்பதையும் தாண்டி வியாபாரி என்ற நிலையிலேயே இயங்கிவரும் முருகதாஸ் இப்படிப்பட்ட ஒரு கதையினை யோசித்திருக்கமாட்டார் என்று புலப்படுகின்றது.

உண்மையிலேயே கோபியினுடைய கதை திருடப்பட்டிருந்தால் முருகதாஸ் தண்டிக்கப்படவேண்டும் அத்தோடு அதற்கான விலையினை கொடுக்கவேண்டும் அப்போதுதான் இனிவரும் காலங்களிலாவது பல உதவி இயக்குனர்களுடைய கதை திருடப்படாமல் பாதுகாக்கப்படும்.


கஜினி படத்தின் ஒரிஜினல் படமான மொமென்ரோ படத்தின் இயக்குனர் விரைவில் இந்தியா வருகின்றாராம். முருகதாஸ் அவருடைய படத்தின் கதையினை திருடியதையும் யாராவது அந்த இயக்குனரின் காதில் போட்டுக்கொடுங்கள். அந்தக் கதையினை திருடியதற்காகவும் முருகதாஸ் மீது சட்டநடவடிக்கை எடுக்கட்டும்.

முருகதாஸ் புகழ்பாடும் விஜய் டிவியும் சமூக பிரச்சனைகளை வெளிக்கொண்டுவரும் நீயாநானா கோபிநாத்தும் இந்த கதைத்திருட்டைப் பற்றி நீயா நானா செய்வார்களா இல்லாவிட்டால் வழமைபோலவே வாங்குறதை வாங்கிக்கொண்டு ஜால்ரா அடிப்பார்களா என்பது பலருடைய எதிர்பார்ப்பு.


கோபியினுடைய நேர்காணல்


27 அக்டோபர் 2014

சினிமா என்பது வெறும்பொழுதுபோக்கு ஊடகம் மாத்திரமா?


சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு ஊடகம் என்ற ரீதியிலேயே இந்தியர்கள் சினிமாவை அணுகுகின்றார்கள். ஆனால் சினிமா என்பது வெறுமனே ஒரு பொழுதுபோக்கு ஊடகமா என்ற கேள்வியினை கேட்கவேண்டிய நேரம் இது. சினிமா என்றால் பொழுதுபோக்கு ஊடகம் என்ற மாயையை தவறான எண்ணத்தினை மக்கள் மத்தியில் புகுத்தியவர்கள் யார்? ஏன் அவ்வாறு மாற்றினார்கள் என்பதற்கு பின்னால் பல அரசியல் காரணங்கள் புதைந்து கிடக்கும் என்பதுதான் உண்மை.

சினிமா என்பது ஒரு இனத்தின் அரசியலைப் காத்திரமாக பேசும் கலை. உண்மையிலே கலை என்பது காலத்தின் கண்ணாடி. ஒரு இனத்தின் வாழ்வியலை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தெரியப்படுத்தவும் அரசுகளையும் அதிகாரத்தவர்களையும் கேள்விகேட்கக்கூடிய ஒரு மிகப்பலம்வாய்ந்த ஊடகம். இந்த சினிமா என்ற மிகமுக்கியமான அசையும் காட்சி ஊடகம் 20ம் நூற்றாண்டின் லுமினஸ் சகோதரர்களின் மிகமுக்கியமான கண்டுபிடிப்பு. இந்த சினிமாவால் பல அரசுகளே ஆட்டம் கண்டிருக்கின்றன. பல இயக்குனர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார் பலர் நாடுகடத்தப்பட்டிருக்கின்றார்கள் அத்தோடு படைப்புக்கள் அதிகார வர்க்கத்தினால் தடை செய்யப்பட்டிருக்கின்றன. இவை உலக சினிமா வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றன. சினிமா ஒரு பொழுதுபோக்கு ஊடகம் என்றால் ஏன் இவ்வளவு மோசமான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கவேண்டும் என்ன கேள்வி இயல்பாகவே சினிமா தொடர்பாக சாதாரண அறிவுள்ள ஒருவருக்கு எழவேண்டும்

இந்தியாவில் சினிமாவை அரசியல் காரணங்களுக்காக பொழுதுபோக்கு ஊடகமாக மாற்றி வைத்திருக்கின்றார்கள். ஒரு நல்ல சினிமா என்பது பார்வையாளனுடைய சிந்தனையை இன்னொருகட்டத்திற்கு தூண்டிவிடவேண்டும். அதுவே நல்ல சினிமா. தமிழ் சினிமாவின் ஆரம்ப கட்டங்களில் நடிகர்கள் பெரிய திரையில் சண்டைபிடிப்பார்கள் பார்வையாளர்கள் அதை பார்ப்பார்கள். ஆனால் இன்று நடப்பது என்ன இரசிகர்கள் நடிகர்களுக்காக பிரிந்து தங்களுக்கிடையில் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள் நடிகர்கள் அமைதியாக இவற்றை பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இதற்கு காரணம் யார்? யார் இதற்கு பொறுப்புகூறவேண்டும்? இன்றும் தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் என்று கேட்டால் 70 களில் 80 களில் வெளிவந்த படங்களையே பெரும்பாலானோர் கூறுவார்கள் காரணம் என்ன அந்தக் காலப்பகுதியில் வெளிவந்த திரைப்படங்கள் தரமானவையாகவும் காத்திரமான படைப்புக்களாகவும் இருந்தன. இன்று வெளிவரும் திரைப்படங்கள் வெறும் வன்முறையினையையும் ஹீரோயிசத்தையும் பெண்களின் உடலையும் சதையையும் முன்னிறுத்தியே வெளிவந்துகொண்டிருக்கின்றன. அண்மையில் புதிய சில இளம் இயக்குனர்கள் நம்பிக்கை தருகின்றனர் ஆனாலும் அவர்களும் எவ்வளவுநாள் இந்த மாயையை தாக்குப்பிடிப்பார்கள் என்பது கேள்விக்குரிய விடயம்தான்.

இந்தியாவில் கலையை கொலைசெய்து இன்று அதை வியாபாரமாக்கிவிட்டார்கள். ஒருசில நாட்களில் பலநூறுகோடி சம்பாதிக்கும் வழியாகவே சினிமாவை பயன்படுத்துகின்றார்கள். பார்வையாளர்களுடை பலவீனங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி  இவற்றை செய்வது வியாபாரிகளுக்கு இலகுவாக இருக்கின்றது. ஒரு சில சமூகப்பொறுப்புள்ள இயக்குனர்களைத்தவிர மற்ற எல்லோருமே இயக்குனர் என்ற நிலையிலிருந்து விடுபட்டு வியாபாரிகளாகவே இன்று திரைப்படங்களை இயக்கிக்கொண்டிருக்கின்றார்கள். மக்கள் இந்த மாயையிலிருந்து விடுபட்டு தெளிவு பெற்றால் மாத்திரமே நல்ல காத்திரமான சினிமாவை நாங்கள் பார்க்கமுடியும்.



vathees@gmail.com