A Promised Land

02 ஜனவரி 2016

மட்டத்தேள் கடியும் பச்சை மிளகாய் விலையும்


மிகுந்த கோலாகலமாக 2016ம் ஆண்டும் வெகுவிமாசையாக மலந்துள்ளது. 2015ம் வருடத்தினைப் போலல்லாது இந்த வருடமானது  மக்களின் மனங்களில் பயங்கள் இல்லாமல் சுதந்திரமாக வருடப் பிறப்பினை வெடி கொழுத்தி கொண்டாடக்கூடியதாக இருந்தது எனும் பொழுது சற்று ஆறுதல். 

இந்தப் புத்தாண்டு மட்டத்தேள் கடியுடன்தான் ஆரம்பித்திருக்கின்றது. புத்தாண்டு விடுமுறையில் ஊருக்கு வந்து காலாறியபோது விசமற்ற மட்டத்தேள் ஒன்று (கடிச்சு 18 மணித்தியாலம் தாண்டியும் இன்னமும் உயிரோட இருக்கிறதால)  சமையம்பார்த்து காலைக் கவ்விவிட்டது. வழமையான கட்டெறும்பு கடிபோலல்லாது கொஞ்சம் வித்தியாசமாக கடுமையாக வலிக்கும்போதுதான் கடிச்சது மட்டத்தேள் என்பதை கண்டுபிடித்து அதற்கு மரண தண்டனை கொடுக்கக்கூடியதாக இருந்தது. 



என்னடாப்பா வருசத்தண்டே "மட்டத்தேள் கடி, மரண தண்டனை" எல்லாம்
நன்மைக்குத்தான் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டு கண்ணயர்ந்து கண்முழித்தால் இன்று மதிய சமையலுக்கு மரக்கறி வாங்க கடைக்கு போட்டு வா என்று அம்மா கோரிக்கை. சரியெண்டு பையினையும் தூக்கிக்கொண்டு ஊரிலையே மிகவும் பிரபல்யமான “மலர் கடை” க்கு போய் 100கிராம் பச்சமிளகாய் போடுங்கோ எண்டால் பதிலுக்கு 100 கிராம் பச்சமிளகாயின்ட விலை 100 ரூபாய் கிலோ 1000 ரூபாய் போடட்டா என்று பதிலுக்கு கேட்கவும் அப்படியே புது வருடத்தின் இரண்டாவது அதிர்ச்சி. பச்சமிளகாய்கு அடிச்ச காலம் என்று நினைத்துக்கொண்டு 50 கிராம் தாங்கோ எண்டு வாங்கிக்கொண்டு வீட்டபோய் அம்மாட்டை சொன்னால் உனக்கு தெரியாதே எண்டு சாராதரணமாகக் கேட்கிறா. (வருசம் முழுக்க கடையிலையே சாப்பிட்டா பச்சமிளகாய்ட விலை எப்படித் தெரியும்)

மக்களே பச்சைமிளகாய் ஆராட்சியாளர்களின் ஆராட்சியின்படி 6000 ஆண்டு காலத்திற்கும் முன்பிலிருந்தே காரத்தை உணவில் அதிகரிப்பதற்காக உணவில் பயன்படுத்தும் இந்தப் பச்சை மிளகாய் விலை இப்படி கிடுகிடுவென  ஏறியதால் நீங்கள் ஒவ்வொருவரும் வீடுகளில் பச்சமிளகாயனை உற்பத்தி செய்தால் உங்களுடைய வீட்டுத் தேவைக்கான பச்சமிளகாய்களை நீங்களே உற்பத்தி செய்துகொள்ளக் கூடியதாக இருக்கும். வீணான செலவினையும் குறைத்துக் கொள்ளலாம். இதை இந்த 2016ம் ஆண்டின் மிகமுக்கியமான தீர்மானமாக எடுத்துக்கொள்ளுங்கள். 

வருடம் பிறந்து 2வது நாளெண்டாலும் பரவாயில்லை இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்களே!