ஒரு கலைப்படைப்பு என்பது அது சார்ந்த சமூகத்தினை உண்மையாகவும் ஆழமாகவும் பிரதிபலிக்கும்போது அந்த கலைப்படைப்பும் அது கூறவரும் கருத்தும் வீரியமாகவும் மிகவும் ஆழமாகவும் பார்வையாளனின் மனதில் தாக்கத்தினையும் ஏற்படுத்திவிடும்.அத்தோடு ஒவ்வொரு பார்வையாளனையும் அவனுடைய கருத்தியலின் அடிப்படையில் வித்தியாசமாக சிந்திக்கத் தூண்டிவிடும். அல்லது படம் ஆரம்பிக்கும்போது இருந்த பார்வையாளனின் நிலையினை இன்னொரு கட்டத்திற்கு நகர்த்திவிடும். ஒரு திரைப்படம் இவ்வாறான நிலைகளில் ஏதாவது ஒன்றையாவது பார்வையாளனுக்கு தோற்றுவிக்குமாக இருந்தால் அந்தக் கலைப்படைப்பு ஏதோவொரு வகையில் சிறந்த கலைப்படைப்பாக இருக்கும் என்று கூறமுடியும் என்பது உண்மை.
நேற்று ஐரோப்பிய திரைப்பட விழாவின் இறுதிநாளில் இலங்கையின் இளம் இயக்குனர் மலித் ஹேகொடவின "தக்கல புருது கெனெக்" |
"The Stranger Familiar" திரைப்படம் திரையிடப்பட்டது. சாதாரண ஒரு கணவன் மனைவிக்குள் திருமணத்திற்கு பின்னர் ஏற்படும் பிரச்சனையை மைய்யமாக வைத்து அழகாக திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது. அதற்குள் இலங்கையின் அரசியலும் பேசப்படுகின்றது சிங்கள சமூகத்தின் இன்றைய நிலையையும் அப்படியே பிரதிபலிக்கின்றது. ஆரம்பம்முதலே படிப்படியாக பார்வையாரை சிறிது சிறிதாக தன்னுடை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இறுதியில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் படம் முடிவடைகின்றது.
ஒரு தமிழனாக இலங்கை அரசியலில் சற்று ஆர்வம் உள்ள தமிழன் என்றவகையில் இந்தத் திரைப்படம் என்றை சற்று சிந்திக்க தூட்டியிருக்கின்றது. இந்தப் படத்தை சிங்கள கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனை என்ற விடயத்தினைத் தாண்டி இலங்கையின் தமிழ் சிங்கள முரண்பாட்டுடன் தொடர்புபடுத்தியே ஆரம்பம் முதல் இறுதிவரை என்னால் பார்க்க முடிந்தது. இந்தக் கோணத்தில் திரைப்படத்தினை பார்த்தபோது 2014ம் ஆண்டில் ஆரம்பிக்கும் படம் 1948ல் நிறைவடைவது போன்றதொரு நிலைப்பாட்டை எனக்குள் தோற்றுவித்திருக்கின்றது. சிலவேளை இயக்குனரோ அல்லது திரைக்கதை ஆசிரியரோ இவ்வாறான ஒரு கோணத்தில் சிந்தித்து திரைக்கதையினை அமைத்திருக்கலாம் அல்லது அமைத்திருக்காமல் இருந்திருக்கலாம் ஆனால் திரைப்படம் இந்தக்கோணத்திலும் ஒரு பார்வையாளனை சிந்திக்க வைத்திருக்கின்றது எனும்போது அது இந்தத்திரைப்படத்தின் வெற்றியாகவே என்னால் கருத முடிகின்றது.
இயக்குனர் அசோக ஹந்தகமவின் இனி அவன் திரைப்படம் வெளிவந்தபோகூட இலங்கையின் பிரபல சிங்கள விமர்சகர் உபுல் ஷாந்த சண்ணஸ்கல கூட அந்தப்படத்தினை இது ஒரு 100 வீதமான சிங்கள படம் ஆனால் தமிழ் மொழியில் வெளிவந்திருக்கின்றது என்று கூறியிருந்தார் ஆனால் அந்தக்கதை அது இடம்பெறும் சூழல் என்பன முற்றுமுழுதாக தமிழ்ச் சூழலாக இருந்தது. ஆகவே ஒவ்வொரு பார்வையாளனும் தன்னுடைய கருத்தியலுடன் ஒரு கலைபடைப்பை பார்க்கும் விதங்கள் வேறுபட்டவை.
இந்தப்படத்தின் திரைக்கதையினை பூபதி நளின் எழுதியிருக்க மலித் ஹேகொட இயக்கியிருக்கின்றார். இருவருக்கும் இந்த திரைப்படமே தங்களது முதலாவது திரைப்படம். தரமான ஒரு திரைப்படத்தின் படைப்பாளிகள் என்பதையும் தாண்டி இவர்கள் இருவரும் என்றுடைய நண்பர்கள் என்ற ரீதியில் பெருமைப்பட்டுக் கொள்கின்றேன்.ஏற்கனவே இத்ததிரைப்படம் லண்டன் சர்வதேச திரைப்பட விழா உட்பட பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தன் உருவாக்கத்தல் இயக்குனரின் நண்பர்களின் பங்கு மிக அதிகம். பெரிய பட்ஜெட்டும் இல்லை சாதாரண ஒரு சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். ஆனால் சிங்கள சமூகத்தை பிரதிபலிக்கும் விலாசமாக கதைக்கருவை கொண்டிருக்கின்றது. சாதாரண பொதுமக்களின் பார்வைக்கு இத்திரைப்படம் எப்போது வருமென்று தெரியவில்லை ஆனால் திரைப்பட விழாக்களில் திரையிடப்படும்போது இந்தப்படத்தினை பார்க்கத்தவறவிடாதீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக