A Promised Land

09 அக்டோபர் 2015

“தீபன்” சர்வதேச திரைப்பட விழா கொழும்பு 2015 இன் ஆரம்பத் திரைப்படம் (IFFC2015)






எதிர்வரும் நவம்பர் மாதம் 6ம் திகதி “Come and be enlightened“ என்ற தொனிப்பொருளின்கீழ் கொழும்பில் ஆரம்பமாக இருக்கின்ற 2வது “சர்வதேச திரைப்பட விழா கொழும்பு 2015” இன் ஆரம்பத் திரைப்படமாக உலகின் புகழ்பெற்ற திரைப்பட விழாவான கான்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான தங்கப்பனை விருதினை (Palme d’Or award) வென்ற “தீபன்” திரைப்படம் திரையிடப்பட இருப்பதாக சர்வதேச திரைப்பட விழா கொழும்பினுடைய விழா இயக்குனர் Asoka Handagama அவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழர்களுடைய கதையினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தில் இலங்கையைச் சேர்ந்தவரும் தற்போது புலம் பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வாழும் Shobasakthi என்று அறியப்பட்ட ஜே.அன்டனிதாசன் அவர்கள் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த திரையிடலுக்கு தீபன் திரைப்பட இயக்குனர் Jacques Audiard மற்றும் ஷோபா சக்தி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் வேலைப்பழு காரணமாக இயக்குனராலும் புலம்பெயர்ந்து வசிப்பதன் காரணமாக பாதுகாப்பு காரணங்களால் ஷோபா சக்தியாலும் இந்த ஆரம்ப விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்று விழா இயக்குனர் அசோக ஹந்தகம தெரிவித்தார்.

கடந்த வருடத்தினைப் போன்றே இம்முறையும் 50 மேற்பட்ட சர்வதேச திரைப்படங்கள் இத்திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கின்றன. அத்தோடு “Asian Competition” பிரிவில் 10 திரைப்படங்கள் போட்டியிடுவதோடு இலங்கையிலிருந்து தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் “Mosaic of Sri Lankan New Cinema Competition” பிரிவில் சிறந்த திரைப்படத்தினை தெரிவு செய்து “Cinema of Tomorrow” என்ற விருது NETPAC குழு அங்கத்தவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு வழங்கப்பட இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இத்திரைப்பட விழாவில் பிரான்ஸ் மற்றும் ஜப்பானிய திரைப்படங்கள் “French Film Corner” மற்றும் “Japanese Cinematic Flavour” ஆகிய பிரிவுகளின்கீழ் திரையிடப்பட இருக்கின்றன.

“Documentary and Short Film Corner” இல் திரையிடப்படும் இலங்கையின் குறும்படங்களில் சிறந்த 4 குறும்படங்கள் சர்வதேச திரைப்பட விழா கொழும்பின் பங்காளிகளில் ஒருவரான சிலோண் தியட்டர்ஸ் (Ceylon Theaters)நிறுவனத்தால் திரைப்பட விழாவின் இறுதிநாளில் “Reegal Award” விருது ஊடாக கௌரவிக்கப்பட இருக்கின்றன.

இதுதவிர திரைப்பட விழா இடம்பெறும் சமகாலத்தில் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற சினிமா இயக்குனர்கள் மற்றும் நிபுணர்களினால் "Master Class" பயிற்சிகளும் நடாத்தப்படும்

கடந்த வருடம் போலவே Directors Guild of Sri Lanka ஆனது ஜப்பானின் Okinawa International Movie Festival உடன் இணைந்து இவ்விழாவினை நடாத்துவதோடு இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் (Sri Lanka Film Corporation) பூரண ஒத்துழைப்பினை வழங்குகின்றது.



www.iffcolombo.com (November 6th - 11th)