A Promised Land

29 ஜனவரி 2017

குழம்பிய நிலையிலுள்ள "ஈழம்" ஆதரவாளர்கள்

ஈழ ஆதரவாளர்கள் என சொல்லிக்கொள்வோர் எப்போதுதான் தெளிந்த ஒரு நிலையில் இருந்திருக்கின்றார்கள் என்று கேட்டால் பதில் எப்போதும் இல்லை என்பதுதான். எப்போதும் தாமும் குழம்பி ஏனையவர்களையும் குழப்புவதில் விண்ணர்கள் இந்த so called "ஈழம்" ஆதரவாளர்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் என்று நினைக்கின்றேன் சரியாக காலப்பகு தி நினைவில்லை பேஸ்புக்கில் ஒரு ஸ்டேடஸ் பதிந்திருந்தேன். "ஈழம் என்று அழைப்பதை விடுத்து இலங்கை என தமிழன் எப்போது அழைக்கத் தொடங்குகின்றானோ அப்போதிலிருந்தே சிங்களவர்களின் ஆதரவு தமிழர்களுக்கு கிடைக்கும் அதுவரையும் சந்தேகக் கண்ணுடந்தான் தமிழர்களின் எந்த விடயங்களையும் பார்ப்பார்கள்" இதுவே அந்த ஸ்டேட்டஸ்.

இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த உள்நாட்டு வெளிநாட்டு ஈழம் ஆதரவாளர்கள் "ஈழம் என்பது இலங்கைக்கு பழங்காலத்திலிருந்த பெயர். ஈழம் = இலங்கை, சிங்களவர்கள் அதனை புரிந்தாலே எல்லாம் சரி"
என என்னுடன் சண்டை பிடித்தார்கள்.

அப்போது இலங்கையிம் ஈழமும் ஒன்று என சண்டைபிடித்தவர்கள் தற்போது என்னடாவென்றால் ஈழம் இலங்கை இரண்டும் ஒன்றுக்கொன்று வேறுபட்டது என்பதாக கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இலங்கையில் இருந்து செயற்படும் பேஸ்புக் போராளிகள் சிலரும், ஈழம், இலங்கை இரண்டும் ஒன்றுக்கொன்று வேறுபட்டது என அடித்து சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

உண்மையிலேயே இலங்கை, ஈழம் என்பன வேறுவேறானதா என நாம் புராதன வரலாற்றுக் குறிப்புக்களைக் கொண்டு பார்ப்போமானால் இலங்கை என அழைக்கப்படும் தீவே முற்காலத்தில் ஈழம் என அழைக்கப்பட்டதற்கான சான்றுகள் பரந்து காணப்படுகின்றன.

விடுதலைப் புலிகள் கூட தமக்கு ஈழம் வேண்டும் என போராடவில்லை. தமிழீழம் (தமிழர் வாழும் வடக்கு-கிழக்கு பிரதேசம்) வேண்டுமென்ற கோரிக்கையுடனேயே போராடினார்கள். 

(ஈழம் தொடர்பில் மேலும் அறிய - http://bit.ly/2jJgU4Q) 

ஆகவே தமிழர்கள் ஈழம் இலங்கை தொடர்பில் குழம்பாமல் இருப்பதே நல்லது. அதற்கு திட்டமிட்டு குழப்புவர்களை இனம் காணவேண்டியது முக்கியமானது.

28 ஜனவரி 2017

சுமந்திரன் கொலை முயற்சித் திட்டமும் அதற்கு காரணமானவர்களும்!

நம்நாட்டின் பிரபல்யமான சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலம்பெயர்ந்து வாழும் சில தமிழர்களின் துணையுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் இந்த கொலையினை மேற்கொள்ள திட்டம் தீட்டியிருந்தமை பாதுகாப்புத் தரப்பினருக்கு தெரியவந்தமையினை அடுத்து இதனுடன் தொடர்புபட்ட அனைவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு  தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

சுமந்திரனை கொல்வதற்கான பிரதானமான காரணமாக கொலைத்திட்டம் தீட்டியவர்களால் சொல்லப்பட்ட விடயம் சுமந்திரன் துரோகி, அரசாங்கத்துடன் இணைந்து தமிழர்களைக் காட்டிக் கொடுக்கின்றார் என்பதே.

பா.உ. சுமந்திரன் இலங்கையின் தற்போதைய தமிழ் அரசியல் தலைவர்களில் மிகவும் முக்கியமானவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவராக கருதப்படும் அவருக்கு சட்டத்துறை மீதுள்ள பாண்டித்தியம் காரணமாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய அரசியலைமைப்பு திருத்தம் தொடர்பில் த.தே.கூட்டமைப்பு சார்பாக பங்குபற்றி வருபவர். புதிய அரசியலமைப்பு ஊடாக தமிழத்களுக்கான அரசியல் தீர்வினை பெறுவதில் குறியாக இருப்பவர். அதுமட்டுமில்லாமல் சிங்கள அரச தலைவர்களாலும் சிங்கள மக்கள் மற்றும் புத்திஜீவிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவர்.

இந்தப் பின்னணியிலே அவர் மீதான கொலை முயற்சித் திட்டம் முக்கியம் பெறுகின்றது. அத்துடன் இந்தத் திட்டத்துடன் புலம்பெயர் தமிழர்களின் சக்தி ஒன்றும் தொடர்புபட்டிருப்பதானது பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்திருக்கின்றது.

போர் காரணமாக 10, 15, 20 வருடங்கள் தற்காலிக வதிவிட விசாவில் மேற்குலகில் வாழ்ந்துவரும் தமிழர்களுக்கு 2009 இல் யுத்தம் சடுதியாக நிறைவுக்கு வந்ததில் பெரும் ஏமாறம் ஏற்பட்டிருந்தது. எங்கே தமது தற்காலிக வதிவிட விசா காலம் முடிந்ததும் தம்மை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி விடுவார்களோ என்ற பயம் புலம்பெயர் தமிழர்களிடம் எழுந்திருந்தது. இதன்காரணமாக இலங்கையில் மீளவும் குழப்பங்களை மேற்கொள்ள டயஸ்போரா தமிழ் சக்திகள் தொடர்ச்சியாக முயன்று வந்தன.

இது இவ்வாறு இருக்க பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ்லாந்து போன்ற நாடுகளில் வாழ்ந்த விசா முடிந்த பல தமிழர்களை அந்நாடுகள் மீளவும் இலங்கைக்கு அனுப்பியிருந்தன. தற்போதும் அனுப்பிக் கொண்டிருக்கின்றன. இதனால் அவசரமாக ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம் புலம்பெயர்ந்த தமிழ்ர்களின் சக்திக்கு காணப்பட்டது.

பா.உறுப்பினர் சுமந்திரனோ இன்னுமொருபடி மேலே போய் நம்நாட்டில் இனப்பிரச்சனைக்கான தீர்வுக்கான  அரசியல் வரைபை முழுமூச்சுடன் எவ்வித விட்டுக்கொடுப்புக்களுமின்றி முன்னெடுத்து வருவருது புலம்பெயர் தமிழர்களின் சக்திகளுக்கு கசப்பாகவே இருந்தது.

இந்நிலையிலேயே பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் விடுதலைப் புலிகளின் தோல்வியை ஜீரணிக்க முடியாத, போராட்டத்திற்கு எந்தவித ஆதரவுகளையும் வழங்காத தமிழ் இளைஞர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சிச் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன்மீது துரோகிப்பட்டம் குத்தி அவர்களை தமிழ் இனத்தின் துரோகியாக சித்தரிக்க முயன்றனர். இதற்கு இலங்கையிலுள்ள பல தமிழ் அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் மறைமுகமாக ஆதரவளித்து வந்தனர்.

இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட புலம்பெயர் தமிழர் சக்திகள் சம்பந்தனையும் சுமந்திரனையும் தமிழ் இனத்தின் துரோகிகளாக சித்தரிப்பதற்கு மறைமுகமாக வேலைசெய்யத் தொடங்கினர். இந்த பேஸ்புக் அலையால உணர்ச்சிவசப்பட்ட தமிழ் இளைஞர்கள் சம்பந்தனும் சுமந்திரனும் உண்மையிலேயே தமிழ் இனத்தின் துரோகிகள்தான் என்ற முடிவுக்கு வந்ததோடு அவர்கள் மீது சமூக வலைத்தளங்களிலும் 10 $ கொடுத்து வாங்கிய இணையத்தளங்களிலும் சேறு பூசத் தொடங்கினர்.

இந்த இளைஞர்களின் உணர்ச்சியை தமக்கு சாதகமாக பயன்படுத்த முடிவு செய்த புலம்பெயர் தமிழர்களின் சக்திகள் தம்முடன் தொடர்பில் இருக்கும் முன்னாள் போராளிகளுக்கு பணத்தாசையும் ஐரோப்பிய நாட்டாசையும் காட்டி சுமந்திரனை போட்டுத்தள்ள முடிவு செய்துள்ளன. ஆனால் விடயம் வெளியே கசிந்து தற்போது சம்பந்தப்பட்ட முன்னாள் போராளிகள் விசாரணைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். இத்துடன் அவர்களது எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.

பேஸ்புக்கில் எடுத்ததுக்கெல்லாம் சம்பந்தன் மற்றும் சுமந்திரனுக்கு துரோகிப்பட்டம் சூட்டும் இளைஞர்களின் பொறுப்பற்ற செயலே கைது செய்யப்பட்ட இந்த முன்னாள் போராளிகளுக்கு சுமந்திரனை துரோகியாக கருத வைத்துள்ளதுடன் கொலை செய்ய வேண்டுமென்ற துணிவையும் கொடுத்துள்ளது என்ற உண்மையை யாரும் மறுத்துவிட முடியாது.

இந்த நேரத்தில் கடந்த வருடம் கனடாவில் இடம்பெற்ற ஈ-குருவி நிகழ்வில் உரையாற்றும்போது நிலாந்தன் புலம்பெயர் தமிழர்களை நோக்கி குறிப்பிட்ட விடயம்தான் நினைவுக்கு வருக்கின்றது.

"பாதுக்காப்பான ஜனநாயக நாடுகளில் பாதுகாப்பாக இருந்துகொண்டு எம்மை ஜனநாயக விரோத செயல்களை செய்யத் தூண்டாதீர்கள்" என்பதானதாகவே அவருடைய அக்கோரிக்கை அமைந்திருந்தது.

22 ஜனவரி 2017

வற்றாப்பளை அம்மன் கோவில்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற கோவில்தான் வற்றாப்பளை அம்மன் கோவில். நந்திக்கடலின் ஓரத்தில் அமைந்துள்ள இக்கோவில் இலங்கைத் தமிழ் இந்துக்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்றது.

இக்கோவிலின் திருவிழாவில் இலட்சக்கணக்கனான பக்தர்கள் ஆண்டுதோறும் பங்குபற்றுவது வழக்கம். இங்கு ஏற்றப்படும் தீபமானது நந்திக்கடலின் தண்ணீரிலே எரிகின்றது என்று கூறப்படுக்கின்றது.

தற்போது இக்கோயிலின் கோபுரம் தவிர்ந்த அனைத்தும் இடிக்கப்பட்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இப்புகழ் பெற்ற கோவிலுக்கு விஜயம் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது.

09 ஜனவரி 2017

ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகிறது!

"ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுதிச்சாம்" என்று தமிழில் ஒரு பழமொழி இருக்கின்றது. இந்த பழமொழிக்கு அப்படியே பொருந்திப்போகும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த காலாண்டில் சிகரட் விற்பனை வரியால் இலங்கை அரசுக்குக் கிடைக்க வேண்டிய 13 பில்லியன் ரூபாக்கள் சிகரட் விற்பனையில் ஏற்பட்ட 45 வீத வீழ்ச்சியால் இல்லாமல் போயிருப்பதாக அண்மையில்  சிலோன் ரொபாக்கோ கம்பனி தெரிவித்துள்ளது.

சிகரட் விற்பனையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக தன்க்கு பெரு நட்டம் ஏற்பட்டுள்ளது என்பதை வெளியில் சொல்லிக்கொள்ள முடியாமல் அரசாங்கத்திற்கு பாரிய இழப்பு என்று அறிக்கை விட்டுள்ளார்கள் இந்த சிலோன் ரொபாக்கோ கம்பனியினர்.

இது உண்மையிலேயே மேலே நான் குறிப்பிட்ட பழமொழிக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கின்றது.

இவ்வளவு காலமும் ஏறுமுகமாகவே இருந்த சிகரட் விற்பனையானது திடீரென 45 வீதம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணம் என்ன என்பதை நாம் சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

நம்நாட்டவர்கள் எல்லோருக்கும் தெரியும் எம்முடைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் சுகாதார அமைச்சராக இருந்த காலப் பகுதியிலிருந்து போதைப்பொருள், புகையிலைப் பாவனைகளை தடுப்பதற்கான செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார். அவரது முயற்சியினாலேயெ சிகரட் பெட்டிகளின் மேற்பகுதியில் சிகரட் பாவனையால் ஏற்படும் நோய்கள் குறித்தான படங்கள் பொறிக்கப்பட முடிந்தது. அப்போதைய ஜனாதிபதி மகிந்த மற்றும் முன்னாள் அமைச்சர் பசிலுடன் போராடியே இந்த நிலைமையை அடைய முடிந்தது.

தான் ஜனாதிபதியாக வந்தால் போதைப்பொருள் ஒழிப்புக்கு நடவடிக்கை எடுப்பதாக 2015 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்திலும் மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்திருந்தார்.

அதன்படி 2015 இல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் போதைத்தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி ஒன்றினை நிறுவி "போதையிலிருந்து விடுதலைபெற்ற நாடு" எனும் தொனிப்பொருளில் மதுபானம் மற்றும் புகையிலைப் பாவனையை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான சமுதாலமொன்றை இலங்கையில் கட்டியெழுப்ப பாடுபட்டு வருகின்றார்.

இந்த போதைத்தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி இலங்கையின் சகல மாவட்டங்களிலும் மாவட்ட செயலகங்கள் மற்றும் பாடசாலைகள் பொலிஸ் முப்படையினர் ஆகியோருடன் மற்றும் இது குறித்த தரப்புக்களுடன் இணைந்து  மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைத்தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனைக்கமைய கடந்த 2 வருடங்களாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இந்த செயற்திட்டத்தின் தொடர்ச்சியான முயற்சியின் காரணமாகவே தற்போது சிகரட் கொள்வனவில் 45% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம். இந்த வருடத்தில் இந்த வீதம் மேலும் அதிகரிக்கும்.

இதனை ஜீரணிக்க முடியாத சிலோண் ரொபாக்கோ கம்பனி அரசாங்கத்திற்கு பில்லியன்களில் இழப்பு என்று மக்களிடையே நல்லபிள்ளைக்கு நடிக்க முயற்சிக்கின்றனர். அத்தோடு மக்களுக்கு அரசாங்கம் தொடர்பில் தவறான விம்பத்தை வழங்க இந்நிறுவனம் முயற்சிப்பது உண்மையிலேயே கண்டிக்கப்பட வேண்டியது.

ஒரு நாட்டின் அரசாங்கமும் அந்த அரசின் நிர்வாகமும் மக்களின் எதிர்கால நன்மை கருதி அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் வெற்றியை அடையலாம் என்பதற்கு இந்த ஒரு விடயமே மிகச்சிறந்த் உதாரணம். ஆகவே இவ்வாறான தவறான பிரச்சாரங்களில் சிக்கிக்கொள்வதிலிருந்து  மக்களை பாதுகாப்பதுடன்  போதையிலிருந்து விடுதலை பெற்ற இலங்கையை உருவாக்கி எம்முடைய எதிர்கால சந்த்ததிக்கு அதனை வழங்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பான முயற்சிக்கு ஆதரவளிக் உறுதிபூணுவோம்.

ஜனவரி 08, 2017

இந்த நல்லாட்சி அரசு இரண்டு வருடங்கள்தான் தாக்குப்பிடிக்கும் என ஒரு கருத்தினை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என தம்மைத்தாமே அழைத்துக் கொள்ளும் தரப்பு 2015 முதலே தெரிவித்து வருவதுடன் இலவு காத்த கிளியாக அதற்காக காத்துக் கொண்டிருக்கின்றது.
அதன் ஒரு கட்டமாக ஜனதிபதிப் பதவியிழந்து கிறுக்குப் பிடித்து விஹாரகைளில் அரசியல் செய்துவரும் மகிந்த ராஜபக்‌ஷ, அரசாங்கத்தை கவிழ்க்கப்போகிறேன். பிரதமரை கவிழ்க்கப் போகின்றேன், தற்போதை ஜனாதிபதியுடன் இணைந்து அரசாங்கத்தை நிறுவி பணியாற்ற விரும்புகிறேன் என மேடைக்கு மேடை புலம்பத் தொடங்கியிருக்கின்றார்.
அதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள்             " இம்மாத நடுப்பகுதியில் நான் ஒருவாரப் பயணமாக வெளிநாடு செல்கின்றேன். அந்த சந்தர்ப்பத்தில் முடிந்தால் செய்வதை செய்து காட்டுங்கள்" என மகிந்தவுக்கு சவால் விடுத்திருந்தார்.
அதேபோல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களும் தன்னுடையதும் சபாநாயகரதும் ஆதரவில்லாம் மகிந்தவால் ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்திருந்தார்.
அதற்கு பின்னும் அரசியல் பலமிழந்து மீண்டும் எப்படியாவது அதனை பெறவேண்டும் என துடியாய் துடித்துவரும் மகிந்த, ஜனாதிபதி மைத்ரியுடன் இணைந்து பணியாற்ற தாம் தயார் என்று மீண்டும் மீண்டும் ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றார்.
மகிந்தவின் இந்த பகல்கனவுக்கு ஜனவரி 08 ஐ முன்னிட்டு, இன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் "பேண்தகு யுகம் - மூன்றாண்டு உதயம்" எனும் கருப்பொருளில் இடம்பெற்ற பிரதான விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தகுந்த பதிலை வழங்கியிருக்கின்றார்.

2015 ஜனவரி 08 இல் 62 இலட்சத்தி ஐம்பதாயிரம் பேரளவில் தனக்கு வாக்களித்து தன்னை ஜானாதிபதியாக்கியதற்கு முதற்காரணம் சர்வதிகார மகிந்தவின் ஆட்சியை விரும்பாமல் மகிந்தவையும் அவருடனிருந்த அனைவரையும் புறக்கணித்ததாலேயே. அத்தோடு 60 வருடங்களுக்கு மேலாக இலங்கையின் இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்க சுதந்திரக் கட்சியும் எதிரும் புதிருமாகவே செயற்பட்டு வந்தது. இந்த இரண்டு கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய அரசாங்கமொன்றை அமைத்து நாம் ஆட்சி நடத்தி வருகின்றோம். ஆகவே தான் புதிதாக ஒருவருடன் இணைந்து ஆட்சி அமைக்கவேண்டிய அவசியமில்லை. புதிதாக ஆட்சியமைக்க வேண்டுமெனக் கோருபவர்கள் இந்த எமது தேசிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு நம் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியும் எனக் கூறியிருந்தார்.

ஜனநாயகத்தின் வாசல் கதவுகள் எல்லாம் மூடப்பட்டு கருத்துச் சுதந்திரம் இல்லாத, ஊடக அடக்குமுறை நிரம்பிக்காணப்பட்ட சர்வதிகார குடும்ப ஆட்சி நடத்திய மகிந்த, சகல நீதிகளையும் தன்னுடைய சர்வதிகார பலத்தினால் தகர்த்தெறிந்து 3ஆவது முறையாகவும் இந்நாட்டின் ஜனாதிபதியாக ஆகவேண்டும் என்ற பேராசையுடன் 2 வருடங்களுக்கு முன்னர் தேர்தலை நடத்தி அதில் தோல்வியடைந்து மூக்குடைபட்டு பித்துப் பிடித்து, எப்படியாவது மீண்டும் அரசியல் பலத்தினை பெற்றுவிட வேண்டுமென்ற பகல்கனவுடன் விஹாரைகளிலும் ஊடகங்களின் கமராக்களுக்கு முன்னால் புலம்பிவருகின்றார். அவருக்கும் மக்களுக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று வழங்கியிருக்கும் செய்தியானது மிக முக்கியமானது. இதை மகிந்த நன்றாகப் புரிந்துகொண்டு செயற்படுவதே சாலச் சிறந்தது.
இன்றைய இந்த விழாவில் 2017 ஆம் ஆண்டை வறுமையிலிருந்து விடுவிக்கும் ஆண்டாக ஜனாதிபதி அவர்கள் பிரகடனம் செய்துள்ளதோடு 2030 இல் வறுமையற்ற இலங்கையை நோக்கியதாகவே இப்பயணம் அமையவிருக்கின்றது.
அத்தோடு வறுமை ஒழிப்பை நோக்காகக் கொண்டு கிராம சக்தி எனும் புதிய திட்டமொன்றும் ஜனாதிபதியால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது.
ஆகவே இலங்கையை அபிவிருத்தி செய்து சிறந்ததோர் நாட்டை எதிர்கால சந்ததியினரிடம் கையளிப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட முனையும் இந்த தேசிய அரசாங்கத்திற்கு, மகிந்த ராஜபக்‌ஷ ஒத்துழைப்பு வழங்கி செயற்படுவதே அவர் நம்நாட்டுக்கு மேற்கொள்ளும் சிறந்த சேவையாக இருக்கும்.


22 ஆகஸ்ட் 2016

நான் எழுதிய புலமைப்பரிசில் பரீட்சை - (சுய புராணம்)




நான் புலமைப்பரிசில் பரீட்சை எழுதியது 1996 ஆம் ஆண்டு. அவ்வருடம்தான் நாங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து பூநகரி ஊடா புதுக்குடியிருப்புக்கு பயணித்து புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலய தற்காலிக முகாமில் தங்கியிருந்தோம். யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டு புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்றது. அத்தோடு 1995 ஆம் ஆண்டு பரீட்சையினை தவறவிட்டவர்களுக்கும் 1996 ஆம் ஆண்டே பரீட்சை இடம்பெற்றிருந்தது.

நிற்க, என்னுடைய சொந்த ஊர் இளவாலை. போரின் காரணமாக 1991 இல் இடம்பெயர்ந்து ஊரைவிட்டு ஓடத்தொடங்கி சில்லாலை மானிப்பாய், பருத்தித்துறை என பல இடங்களில் தற்காலிகமாக தங்கியிருந்து 1996 இல் நாம் வன்னிக்கு இடம்பெயர்ந்து சென்றிருந்தோம். பருத்தித்துறையில் வசிக்கும்போதே புலமைப்பரிசில் பரீட்சைக்கான தயார்ப்படுத்தல்களில் என்னுடைய தாயார் என்னை ஈடுபடுத்தியிருந்தார். 1994 என நினைக்கின்றேன் பருத்தித்துறை கலட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த என்னை ஸ்கொலஷிப்ல சித்தியடைய வைக்கவேணும் எண்டதுக்காக தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்திலும் சேர்த்திருந்தார். அப்போது கணபதிப்பிள்ளை என்ற அதிபரே அங்கு கடமையாற்றியிருந்தார். புலமைப்ரிசில் பரீட்சைக்கு ஆயத்தம் என்று அம்பிகைபாகனின் பயிற்சிப் புத்தகங்கங்களாக வாங்கிக் குவித்து ஒவ்வொருநாளும் பயிற்சி. அத்துடன் விசேட ரியூசன். (இடையே நான் செய்த குழப்படிகள் தாங்காமல் மானிப்பாயிலுள்ள அம்மப்பாவின் வீட்டுக்கு அனுப்பி படிப்பிச்சதெல்லாம் பெரிய கதை)

இப்படி படித்துக்கொண்டு இருந்த சந்தர்ப்பத்தில்தான் 1995இன் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் இலங்கை இராணுவத்தின் ஒப்பரேசன் ரிவிரச என்று நினைக்கின்றேன். அந்த ஆயுத நடவடிக்கை ஆரம்பமானது. இதனால் மானிப்பாயிலிருந்த அம்மப்பா அம்மம்மா மற்றும் பெரியம்மா கும்பத்தினரும் பருத்தித்துறையிலுள்ள எம்முடன் வந்துவிட்டனர். விடுதலைப்புலிகளும் தாம் யாழ்ப்பாணத்தைவிட்டு பின்வாங்ப் போவதாகவும் மக்கள் எல்லோரையும் தம்முடன் வரும்படி அறிவித்திருந்த நேரம். ஏற்கனவே பல ஆயிரக்கணக்கான மக்கள் வன்னிக்கு சென்றுவிட்டிருந்தனர். சென்று கொண்டிருந்தனர். நாம் இறுதியாகவே 1996 இன் நடுப்பகுதியில் (ஆனி மாதம் என்று நினைக்கின்றேன்) யாழிலிருந்து இடம்பெயர்ந்து கிளாலி ஊடாக பூநகரி சென்று அங்கிருந்து பாராவூர்தியில் புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணியம் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாமிலேயே தங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது.

அங்கு தங்கியிருக்கும் போதுதான் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவேண்டி ஏற்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து நாங்கள் இடம்பெயர்ந்திருந்ததால் நான் ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேட பரீட்சை நிலையத்திலேயே பரீட்சை எழுதியிருந்தேன். நாம் தங்கியிருந்த புதுக்குடியிருப்பிலிருந்து ஒட்டுசுட்டானுக்கு செல்ல விசேட பேரூந்தும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. யார் அதனை ஒழுங்கு செய்திருந்தார்கள் என்று ஞாபகமில்லை. தற்காலிக முகாமில் தங்கியிருந்த பல மாணவர்களும் என்னுடன் சேர்ந்து பரீட்சை எழுதியிருந்தார்கள். கிட்டத்தட்ட 8 மாதங்களாக படிக்கவில்லை. எந்தவித முன்னாயத்தங்களும் இல்லாமலேயே அப்பரீட்சைக்கு நான் தோற்றியிருந்தேன்.

பரீட்சை மண்டபத்திற்குள் நுழையும்போதே என்னுடைய பெயரிலை ஏதோ பிரச்சனை. அதையெல்லாம் சரிசெயது பரீட்சை மண்டபத்தில் அமர்ந்து பரீட்சைத் தாளை கையில் வாங்கி அவசர அவரமாக தெரிந்த கேள்விகளுக்கெல்லாம் விடையெழுதி தெரியாதவைகளுக்கு குருட்டு மதிப்பிலும் ஊகத்திலும் விடையெழுதி கடைசிப் பக்கத்தை திருப்பினால் சிங்கள மொழியிலும் கேள்கிகள் சில கேட்கப்பட்டிருந்தன. சில நிமிடங்கள் அந்த சிங்கள எழுத்துக்களை கூர்ந்து அவதானித்தேன். இப்பவும் சரியாக ஞாபகமிருக்கின்றது. ஒன்றுமே தெரியாது. நான் செய்தவேலை சிங்களத்தில கேடட்கப்பட்ட கேள்விகளை அப்படியே பார்த்து அதை விடை எழுதும் பகுதியில் அப்படியே எழுதிவிட்டேன்.

பரீட்சை எழுதி முடித்துவிட்டு நாம் மீண்டும் தற்காலிக முகாமுக்கு வந்து அதன்பிறகு 4ஆம் வட்டாரத்தில் இருந்த அம்மப்பாவிடம் படித்த மாணவன் ஒருவரின் தயவில் அவரின் வளவுக்குள் வீடு ஒன்றை அமைத்து அங்கே தங்கியிருந்தோம். சில மாதங்களில் புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளும் வெளியாகியிருந்தன. ஆனால் என்னுடைய பரீட்சை முடிவோ பருத்தித்துறை தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்திற்கு சென்றிருந்தது. அதனால் நான் சித்தி பெற்றுவிட்டேனா அல்லது சித்தியடையவில்லையா என்று தெரியாமல் போய்விட்டது. தற்போது இருப்பதுபோல் எந்தவிதத் தொலைத்தொடர்புகளும் இல்லாத நிலையில் கடிதம்மூலம் எனது தாயார் என்னுடைய பரீட்சை முடிவுகளைப் பற்றி அதிபரிடம் விசாரித்திருந்தார்.



கிட்டத்தட்ட மூன்று நான்கு மாதங்களுக்கு பின்னர் சிவப்பிரகாச அதிபரான கணபதிப்பிள்ளை அவர்களிடமிருந்து கடிதம் வந்திருந்தது. அம்மாவும் நாமும் மிகுந்த பரபரப்புடன் கடிதத்தை பிரித்தோம். 'உங்கள் மகன் 113 புள்ளிகள் பெற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருக்கின்றார்' என்று அதிபர் கணபதிப்பிள்ளை அவர்கள் அறிவித்திருந்தார். அத்துடன் அந்த வருடத்திற்கான யாழ் மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ள 96 என்றும் தெரிவித்திருந்தார். அதன் பிறகு அதிபர் எமக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஊக்கத்தொகைக்கான படிவங்கள் உள்ளிட்டவற்றை கடிதம்மூலம் அனுப்பியிருந்தார். பின்னர் 2001 இல் நான் யாழ்ப்பாணம் சென்றபோது அந்தப் பணத்தினை மொத்தமாக எடுக்கக்கூடியதாக இருந்தது. இதுதான் நான் புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய வரலாறு.

26 ஏப்ரல் 2016

பாதுகாப்பான ஜனநாயக நாடுகளில் இருந்துகொண்டு ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடத் தூண்டாதீர்!


அண்மையில் கனடாவில் இடம்பெற்ற ஈ-குருவி நிகழ்வின் சிறப்புப் பேச்சாளராக இலங்கையின் ஊடகவியலாளரான திரு நிலாந்தன் அவர்கள் பங்குபற்றி நீண்ட உரையொன்றினை நிகழ்த்தியிருந்தார். இந்த உரையானது இந்தியத் தமிழர்கள் மத்தியில் எவ்வளது தாக்கத்தை செலுத்தியதோ தெரியாது ஆனால் இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஓரளவு தாக்கத்தினை செலுத்தியது எனக் கூறலாம்.

அவர் தன்னுடைய உரையின் பிரதானமான விடயமாக ஈழத் தமிழர்கள் (இந்த “ஈழத் தமிழர்” எனும் சொற்பதம் இன்னமும் இலங்கையில் நீண்ட கலந்துரையாடலுக்கு உட்படுத்த வேண்டிய விடயம்) தமிழகத் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் இந்த மூன்று பிரிவினரும் ஒன்றுபட்டு ஒரே தேசமாக சிந்திக்கவேண்டும் அதனடிப்படையிலேயே செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் அப்படி செயற்படாவிட்டால் ஈழத் தமிழர்களுக்கு விடிவு கிடைக்காது, அதற்கு இந்த மூன்று தரப்பினரும் எவ்வகையான ரீதியில் செயற்படவேண்டும் என்றவாறாக தன்னுடைய உரையினை நிகழ்த்தியிருந்தார்.

திரு நிலாந்தன் அவர்கள் குறிப்பிட்டபடி இந்த மூன்று பிரிவினரும் ஒன்றுபட்டு சிந்தித்து செயலாற்ற முடியுமா என்பது மிகப்பிரதானமான கேள்வி. குறைந்த பட்சம் இலங்கையில் இருக்கும் தமிழர்களும் புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களும் ஒன்றுபட்டு செயற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். ஆனால் இந்தியத் தமிழர்களை இந்த இலங்கை மற்றும் புலம்பெயர் ஆகிய இரண்டு தரப்பினருடனும் ஒன்றிணைக்க முடியுமா என்பது சந்தேகமே. ஆனால் இந்தியத் தமிழர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களுடன் இணைந்து செயலாற்றும் சந்தர்ப்பங்கள் அதிகமாகவே காணப்படுகின்றது. தற்போதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த இரண்டு தரப்பினரும் செயற்பட்டு வருகின்றார்கள்.

ஆகவே இலங்கை இந்திய புலம்பெயர் ஆகிய மூன்று தமிழ்த் தரப்பினரும் இலங்கையில் தமிழ்த் தேசியத்தினை கட்டியெழுப்ப ஒரே ரீதியில் செயற்பட முடியுமா என்பது சந்தேகமே! காரணம் இந்தியத் தமிழர்கள் செல்லும் பாதையோ முற்றிலும் வேறுபட்டது. அப்படி ஒருவேளை இந்தியத் தமிழர்கள் இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழர்களுடன் செயற்பட ஆரம்பிக்கின்றார்கள் என்று வைத்துக்கொண்டால் சீனாவின் மேலாதிக்கத்தை வென்று ஆசியாவின் சண்டியனாக இல்லையில்லை வல்லரசாக முயற்சிக்கும் இந்தியா அதை எப்படி கையாளும் என்று சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை.

ஆகவே சாத்தியமில்லாத முன்று தரப்புக்களின் ஒன்றிணைவை கையில் வைத்துக்கொண்டு இந்த மூன்று தரப்பினரும் ஒன்றுபட்டால்தான் இலங்கையில் தமிழ்த் தேசியத்தினை கட்டியெழுப்ப முடியும் என்ற ஒரு மாயையினை தொடர்ந்தும் மக்கள் மத்தியில் தக்க வைத்திருக்க முயற்சிப்பதும் அபாயமானது. இலங்கையில் தமிழர்கள் தாங்களும் இலங்கையர், ஒரு தேசிய இனம் என்று கருதி செயற்படத் தொடங்கினாலேயே மாற்றங்களை காணமுடியும் என்பது என்னுடைய நம்பிக்கை. ஆனால் இந்தக் கூட்டிணைவு என்ற மாயை எப்போதும் அவர்களை அவ்வாறு சிந்தித்து செயற்படவிடாதோ என்ற அச்சம் இயல்பாகவே எழுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகின்றது.

திரு நிலாந்தன் அவர்கள் இந்த உரையாடலில் சில விடயங்களை மிகவும் நுணுக்கமான கோரிக்கையாக புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி முன்வைத்திருந்தார்.

அதில் பிரதானமான இரண்டு விடயங்களைக் குறிப்பிடலாம். முதலாவது “மிகவும் உச்சபட்ச ஜனநாயக முறைமையுள்ள நாடுகளில் மிகுந்த பாதுகாப்பாக நீங்கள் இருந்து கொண்டு, எம்மை அதாவது இலங்கையில் இருப்பவர்களை ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்காதீர்கள்" அது உங்களுடன் இணைந்து எம்மை செயலாற்றவைப்பதற்கு தடையான ஒரு காரணியாக அமைந்துவிடும்.

இரண்டாவது புலம்பெயர்ந்து வாழும் இரண்டாம் மூன்றாம் தலைமுறை தமிழர்கள் இலங்கை வந்து பணியாற்றவும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை.

உண்மையிலேயே திரு நிலாந்தன் அவர்களால் முன்வைக்கப்பட்ட சில கோரிக்கைகளில் இந்த இரண்டு கோரிக்கைகளுக்கு உள்ளும் ஆழமான அர்த்தங்கள் பொதிந்து நிற்கின்றன. இந்த இரண்டு கோரிக்கைகளையும் புலம்பெயர் தமிழர்களும் இலங்கையிலுள்ள தமிழர்களும் உள்ளாந்தமாக சரிவரப் புரிந்து கொண்டு செயற்படுவார்களெனில் இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் எதிர்காலத்தில் நன்மை கிட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவே காணப்படுகின்றது.

ஒரு நாட்டின் அரசில் எப்போதுமே வரையறையின்றி செல்வாக்குச் செலுத்துபவர்கள் அந்தந்த நாடுகளின் சிறுபான்மை மக்களான வியாபார பணக்காரர்களே என்ற உண்மை இலங்கையிலிருக்கும் தமிழர்களுக்கும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கும் சரிவரை மண்டைக்குள் உறைக்காதவரை இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்கள் எப்போதுமே தாம் தாழ்வுச் சிக்கல் நிலைக்குள் இருந்துகொண்டு  உலகத்தின் முன்னோக்கிய பயணத்தில் பின்னோக்கியே போய்க்கொண்டிருப்பார் என்பது நிஜம்.