நான் புலமைப்பரிசில் பரீட்சை எழுதியது 1996 ஆம் ஆண்டு. அவ்வருடம்தான் நாங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து பூநகரி ஊடா புதுக்குடியிருப்புக்கு பயணித்து புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலய தற்காலிக முகாமில் தங்கியிருந்தோம். யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டு புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்றது. அத்தோடு 1995 ஆம் ஆண்டு பரீட்சையினை தவறவிட்டவர்களுக்கும் 1996 ஆம் ஆண்டே பரீட்சை இடம்பெற்றிருந்தது.
நிற்க, என்னுடைய சொந்த ஊர் இளவாலை. போரின் காரணமாக 1991 இல் இடம்பெயர்ந்து ஊரைவிட்டு ஓடத்தொடங்கி சில்லாலை மானிப்பாய், பருத்தித்துறை என பல இடங்களில் தற்காலிகமாக தங்கியிருந்து 1996 இல் நாம் வன்னிக்கு இடம்பெயர்ந்து சென்றிருந்தோம். பருத்தித்துறையில் வசிக்கும்போதே புலமைப்பரிசில் பரீட்சைக்கான தயார்ப்படுத்தல்களில் என்னுடைய தாயார் என்னை ஈடுபடுத்தியிருந்தார். 1994 என நினைக்கின்றேன் பருத்தித்துறை கலட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த என்னை ஸ்கொலஷிப்ல சித்தியடைய வைக்கவேணும் எண்டதுக்காக தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்திலும் சேர்த்திருந்தார். அப்போது கணபதிப்பிள்ளை என்ற அதிபரே அங்கு கடமையாற்றியிருந்தார். புலமைப்ரிசில் பரீட்சைக்கு ஆயத்தம் என்று அம்பிகைபாகனின் பயிற்சிப் புத்தகங்கங்களாக வாங்கிக் குவித்து ஒவ்வொருநாளும் பயிற்சி. அத்துடன் விசேட ரியூசன். (இடையே நான் செய்த குழப்படிகள் தாங்காமல் மானிப்பாயிலுள்ள அம்மப்பாவின் வீட்டுக்கு அனுப்பி படிப்பிச்சதெல்லாம் பெரிய கதை)
இப்படி படித்துக்கொண்டு இருந்த சந்தர்ப்பத்தில்தான் 1995இன் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் இலங்கை இராணுவத்தின் ஒப்பரேசன் ரிவிரச என்று நினைக்கின்றேன். அந்த ஆயுத நடவடிக்கை ஆரம்பமானது. இதனால் மானிப்பாயிலிருந்த அம்மப்பா அம்மம்மா மற்றும் பெரியம்மா கும்பத்தினரும் பருத்தித்துறையிலுள்ள எம்முடன் வந்துவிட்டனர். விடுதலைப்புலிகளும் தாம் யாழ்ப்பாணத்தைவிட்டு பின்வாங்ப் போவதாகவும் மக்கள் எல்லோரையும் தம்முடன் வரும்படி அறிவித்திருந்த நேரம். ஏற்கனவே பல ஆயிரக்கணக்கான மக்கள் வன்னிக்கு சென்றுவிட்டிருந்தனர். சென்று கொண்டிருந்தனர். நாம் இறுதியாகவே 1996 இன் நடுப்பகுதியில் (ஆனி மாதம் என்று நினைக்கின்றேன்) யாழிலிருந்து இடம்பெயர்ந்து கிளாலி ஊடாக பூநகரி சென்று அங்கிருந்து பாராவூர்தியில் புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணியம் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாமிலேயே தங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது.
அங்கு தங்கியிருக்கும் போதுதான் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவேண்டி ஏற்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து நாங்கள் இடம்பெயர்ந்திருந்ததால் நான் ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேட பரீட்சை நிலையத்திலேயே பரீட்சை எழுதியிருந்தேன். நாம் தங்கியிருந்த புதுக்குடியிருப்பிலிருந்து ஒட்டுசுட்டானுக்கு செல்ல விசேட பேரூந்தும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. யார் அதனை ஒழுங்கு செய்திருந்தார்கள் என்று ஞாபகமில்லை. தற்காலிக முகாமில் தங்கியிருந்த பல மாணவர்களும் என்னுடன் சேர்ந்து பரீட்சை எழுதியிருந்தார்கள். கிட்டத்தட்ட 8 மாதங்களாக படிக்கவில்லை. எந்தவித முன்னாயத்தங்களும் இல்லாமலேயே அப்பரீட்சைக்கு நான் தோற்றியிருந்தேன்.
பரீட்சை மண்டபத்திற்குள் நுழையும்போதே என்னுடைய பெயரிலை ஏதோ பிரச்சனை. அதையெல்லாம் சரிசெயது பரீட்சை மண்டபத்தில் அமர்ந்து பரீட்சைத் தாளை கையில் வாங்கி அவசர அவரமாக தெரிந்த கேள்விகளுக்கெல்லாம் விடையெழுதி தெரியாதவைகளுக்கு குருட்டு மதிப்பிலும் ஊகத்திலும் விடையெழுதி கடைசிப் பக்கத்தை திருப்பினால் சிங்கள மொழியிலும் கேள்கிகள் சில கேட்கப்பட்டிருந்தன. சில நிமிடங்கள் அந்த சிங்கள எழுத்துக்களை கூர்ந்து அவதானித்தேன். இப்பவும் சரியாக ஞாபகமிருக்கின்றது. ஒன்றுமே தெரியாது. நான் செய்தவேலை சிங்களத்தில கேடட்கப்பட்ட கேள்விகளை அப்படியே பார்த்து அதை விடை எழுதும் பகுதியில் அப்படியே எழுதிவிட்டேன்.
பரீட்சை எழுதி முடித்துவிட்டு நாம் மீண்டும் தற்காலிக முகாமுக்கு வந்து அதன்பிறகு 4ஆம் வட்டாரத்தில் இருந்த அம்மப்பாவிடம் படித்த மாணவன் ஒருவரின் தயவில் அவரின் வளவுக்குள் வீடு ஒன்றை அமைத்து அங்கே தங்கியிருந்தோம். சில மாதங்களில் புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளும் வெளியாகியிருந்தன. ஆனால் என்னுடைய பரீட்சை முடிவோ பருத்தித்துறை தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்திற்கு சென்றிருந்தது. அதனால் நான் சித்தி பெற்றுவிட்டேனா அல்லது சித்தியடையவில்லையா என்று தெரியாமல் போய்விட்டது. தற்போது இருப்பதுபோல் எந்தவிதத் தொலைத்தொடர்புகளும் இல்லாத நிலையில் கடிதம்மூலம் எனது தாயார் என்னுடைய பரீட்சை முடிவுகளைப் பற்றி அதிபரிடம் விசாரித்திருந்தார்.
கிட்டத்தட்ட மூன்று நான்கு மாதங்களுக்கு பின்னர் சிவப்பிரகாச அதிபரான கணபதிப்பிள்ளை அவர்களிடமிருந்து கடிதம் வந்திருந்தது. அம்மாவும் நாமும் மிகுந்த பரபரப்புடன் கடிதத்தை பிரித்தோம். 'உங்கள் மகன் 113 புள்ளிகள் பெற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருக்கின்றார்' என்று அதிபர் கணபதிப்பிள்ளை அவர்கள் அறிவித்திருந்தார். அத்துடன் அந்த வருடத்திற்கான யாழ் மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ள 96 என்றும் தெரிவித்திருந்தார். அதன் பிறகு அதிபர் எமக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஊக்கத்தொகைக்கான படிவங்கள் உள்ளிட்டவற்றை கடிதம்மூலம் அனுப்பியிருந்தார். பின்னர் 2001 இல் நான் யாழ்ப்பாணம் சென்றபோது அந்தப் பணத்தினை மொத்தமாக எடுக்கக்கூடியதாக இருந்தது. இதுதான் நான் புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய வரலாறு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக