A Promised Land

09 ஜனவரி 2017

ஜனவரி 08, 2017

இந்த நல்லாட்சி அரசு இரண்டு வருடங்கள்தான் தாக்குப்பிடிக்கும் என ஒரு கருத்தினை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என தம்மைத்தாமே அழைத்துக் கொள்ளும் தரப்பு 2015 முதலே தெரிவித்து வருவதுடன் இலவு காத்த கிளியாக அதற்காக காத்துக் கொண்டிருக்கின்றது.
அதன் ஒரு கட்டமாக ஜனதிபதிப் பதவியிழந்து கிறுக்குப் பிடித்து விஹாரகைளில் அரசியல் செய்துவரும் மகிந்த ராஜபக்‌ஷ, அரசாங்கத்தை கவிழ்க்கப்போகிறேன். பிரதமரை கவிழ்க்கப் போகின்றேன், தற்போதை ஜனாதிபதியுடன் இணைந்து அரசாங்கத்தை நிறுவி பணியாற்ற விரும்புகிறேன் என மேடைக்கு மேடை புலம்பத் தொடங்கியிருக்கின்றார்.
அதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள்             " இம்மாத நடுப்பகுதியில் நான் ஒருவாரப் பயணமாக வெளிநாடு செல்கின்றேன். அந்த சந்தர்ப்பத்தில் முடிந்தால் செய்வதை செய்து காட்டுங்கள்" என மகிந்தவுக்கு சவால் விடுத்திருந்தார்.
அதேபோல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களும் தன்னுடையதும் சபாநாயகரதும் ஆதரவில்லாம் மகிந்தவால் ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்திருந்தார்.
அதற்கு பின்னும் அரசியல் பலமிழந்து மீண்டும் எப்படியாவது அதனை பெறவேண்டும் என துடியாய் துடித்துவரும் மகிந்த, ஜனாதிபதி மைத்ரியுடன் இணைந்து பணியாற்ற தாம் தயார் என்று மீண்டும் மீண்டும் ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றார்.
மகிந்தவின் இந்த பகல்கனவுக்கு ஜனவரி 08 ஐ முன்னிட்டு, இன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் "பேண்தகு யுகம் - மூன்றாண்டு உதயம்" எனும் கருப்பொருளில் இடம்பெற்ற பிரதான விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தகுந்த பதிலை வழங்கியிருக்கின்றார்.

2015 ஜனவரி 08 இல் 62 இலட்சத்தி ஐம்பதாயிரம் பேரளவில் தனக்கு வாக்களித்து தன்னை ஜானாதிபதியாக்கியதற்கு முதற்காரணம் சர்வதிகார மகிந்தவின் ஆட்சியை விரும்பாமல் மகிந்தவையும் அவருடனிருந்த அனைவரையும் புறக்கணித்ததாலேயே. அத்தோடு 60 வருடங்களுக்கு மேலாக இலங்கையின் இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்க சுதந்திரக் கட்சியும் எதிரும் புதிருமாகவே செயற்பட்டு வந்தது. இந்த இரண்டு கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய அரசாங்கமொன்றை அமைத்து நாம் ஆட்சி நடத்தி வருகின்றோம். ஆகவே தான் புதிதாக ஒருவருடன் இணைந்து ஆட்சி அமைக்கவேண்டிய அவசியமில்லை. புதிதாக ஆட்சியமைக்க வேண்டுமெனக் கோருபவர்கள் இந்த எமது தேசிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு நம் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியும் எனக் கூறியிருந்தார்.

ஜனநாயகத்தின் வாசல் கதவுகள் எல்லாம் மூடப்பட்டு கருத்துச் சுதந்திரம் இல்லாத, ஊடக அடக்குமுறை நிரம்பிக்காணப்பட்ட சர்வதிகார குடும்ப ஆட்சி நடத்திய மகிந்த, சகல நீதிகளையும் தன்னுடைய சர்வதிகார பலத்தினால் தகர்த்தெறிந்து 3ஆவது முறையாகவும் இந்நாட்டின் ஜனாதிபதியாக ஆகவேண்டும் என்ற பேராசையுடன் 2 வருடங்களுக்கு முன்னர் தேர்தலை நடத்தி அதில் தோல்வியடைந்து மூக்குடைபட்டு பித்துப் பிடித்து, எப்படியாவது மீண்டும் அரசியல் பலத்தினை பெற்றுவிட வேண்டுமென்ற பகல்கனவுடன் விஹாரைகளிலும் ஊடகங்களின் கமராக்களுக்கு முன்னால் புலம்பிவருகின்றார். அவருக்கும் மக்களுக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று வழங்கியிருக்கும் செய்தியானது மிக முக்கியமானது. இதை மகிந்த நன்றாகப் புரிந்துகொண்டு செயற்படுவதே சாலச் சிறந்தது.
இன்றைய இந்த விழாவில் 2017 ஆம் ஆண்டை வறுமையிலிருந்து விடுவிக்கும் ஆண்டாக ஜனாதிபதி அவர்கள் பிரகடனம் செய்துள்ளதோடு 2030 இல் வறுமையற்ற இலங்கையை நோக்கியதாகவே இப்பயணம் அமையவிருக்கின்றது.
அத்தோடு வறுமை ஒழிப்பை நோக்காகக் கொண்டு கிராம சக்தி எனும் புதிய திட்டமொன்றும் ஜனாதிபதியால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது.
ஆகவே இலங்கையை அபிவிருத்தி செய்து சிறந்ததோர் நாட்டை எதிர்கால சந்ததியினரிடம் கையளிப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட முனையும் இந்த தேசிய அரசாங்கத்திற்கு, மகிந்த ராஜபக்‌ஷ ஒத்துழைப்பு வழங்கி செயற்படுவதே அவர் நம்நாட்டுக்கு மேற்கொள்ளும் சிறந்த சேவையாக இருக்கும்.