A Promised Land

09 ஜனவரி 2017

ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகிறது!

"ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுதிச்சாம்" என்று தமிழில் ஒரு பழமொழி இருக்கின்றது. இந்த பழமொழிக்கு அப்படியே பொருந்திப்போகும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த காலாண்டில் சிகரட் விற்பனை வரியால் இலங்கை அரசுக்குக் கிடைக்க வேண்டிய 13 பில்லியன் ரூபாக்கள் சிகரட் விற்பனையில் ஏற்பட்ட 45 வீத வீழ்ச்சியால் இல்லாமல் போயிருப்பதாக அண்மையில்  சிலோன் ரொபாக்கோ கம்பனி தெரிவித்துள்ளது.

சிகரட் விற்பனையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக தன்க்கு பெரு நட்டம் ஏற்பட்டுள்ளது என்பதை வெளியில் சொல்லிக்கொள்ள முடியாமல் அரசாங்கத்திற்கு பாரிய இழப்பு என்று அறிக்கை விட்டுள்ளார்கள் இந்த சிலோன் ரொபாக்கோ கம்பனியினர்.

இது உண்மையிலேயே மேலே நான் குறிப்பிட்ட பழமொழிக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கின்றது.

இவ்வளவு காலமும் ஏறுமுகமாகவே இருந்த சிகரட் விற்பனையானது திடீரென 45 வீதம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணம் என்ன என்பதை நாம் சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

நம்நாட்டவர்கள் எல்லோருக்கும் தெரியும் எம்முடைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் சுகாதார அமைச்சராக இருந்த காலப் பகுதியிலிருந்து போதைப்பொருள், புகையிலைப் பாவனைகளை தடுப்பதற்கான செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார். அவரது முயற்சியினாலேயெ சிகரட் பெட்டிகளின் மேற்பகுதியில் சிகரட் பாவனையால் ஏற்படும் நோய்கள் குறித்தான படங்கள் பொறிக்கப்பட முடிந்தது. அப்போதைய ஜனாதிபதி மகிந்த மற்றும் முன்னாள் அமைச்சர் பசிலுடன் போராடியே இந்த நிலைமையை அடைய முடிந்தது.

தான் ஜனாதிபதியாக வந்தால் போதைப்பொருள் ஒழிப்புக்கு நடவடிக்கை எடுப்பதாக 2015 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்திலும் மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்திருந்தார்.

அதன்படி 2015 இல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் போதைத்தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி ஒன்றினை நிறுவி "போதையிலிருந்து விடுதலைபெற்ற நாடு" எனும் தொனிப்பொருளில் மதுபானம் மற்றும் புகையிலைப் பாவனையை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான சமுதாலமொன்றை இலங்கையில் கட்டியெழுப்ப பாடுபட்டு வருகின்றார்.

இந்த போதைத்தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி இலங்கையின் சகல மாவட்டங்களிலும் மாவட்ட செயலகங்கள் மற்றும் பாடசாலைகள் பொலிஸ் முப்படையினர் ஆகியோருடன் மற்றும் இது குறித்த தரப்புக்களுடன் இணைந்து  மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைத்தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனைக்கமைய கடந்த 2 வருடங்களாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இந்த செயற்திட்டத்தின் தொடர்ச்சியான முயற்சியின் காரணமாகவே தற்போது சிகரட் கொள்வனவில் 45% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம். இந்த வருடத்தில் இந்த வீதம் மேலும் அதிகரிக்கும்.

இதனை ஜீரணிக்க முடியாத சிலோண் ரொபாக்கோ கம்பனி அரசாங்கத்திற்கு பில்லியன்களில் இழப்பு என்று மக்களிடையே நல்லபிள்ளைக்கு நடிக்க முயற்சிக்கின்றனர். அத்தோடு மக்களுக்கு அரசாங்கம் தொடர்பில் தவறான விம்பத்தை வழங்க இந்நிறுவனம் முயற்சிப்பது உண்மையிலேயே கண்டிக்கப்பட வேண்டியது.

ஒரு நாட்டின் அரசாங்கமும் அந்த அரசின் நிர்வாகமும் மக்களின் எதிர்கால நன்மை கருதி அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் வெற்றியை அடையலாம் என்பதற்கு இந்த ஒரு விடயமே மிகச்சிறந்த் உதாரணம். ஆகவே இவ்வாறான தவறான பிரச்சாரங்களில் சிக்கிக்கொள்வதிலிருந்து  மக்களை பாதுகாப்பதுடன்  போதையிலிருந்து விடுதலை பெற்ற இலங்கையை உருவாக்கி எம்முடைய எதிர்கால சந்த்ததிக்கு அதனை வழங்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பான முயற்சிக்கு ஆதரவளிக் உறுதிபூணுவோம்.