A Promised Land

28 ஜனவரி 2017

சுமந்திரன் கொலை முயற்சித் திட்டமும் அதற்கு காரணமானவர்களும்!

நம்நாட்டின் பிரபல்யமான சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலம்பெயர்ந்து வாழும் சில தமிழர்களின் துணையுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் இந்த கொலையினை மேற்கொள்ள திட்டம் தீட்டியிருந்தமை பாதுகாப்புத் தரப்பினருக்கு தெரியவந்தமையினை அடுத்து இதனுடன் தொடர்புபட்ட அனைவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு  தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

சுமந்திரனை கொல்வதற்கான பிரதானமான காரணமாக கொலைத்திட்டம் தீட்டியவர்களால் சொல்லப்பட்ட விடயம் சுமந்திரன் துரோகி, அரசாங்கத்துடன் இணைந்து தமிழர்களைக் காட்டிக் கொடுக்கின்றார் என்பதே.

பா.உ. சுமந்திரன் இலங்கையின் தற்போதைய தமிழ் அரசியல் தலைவர்களில் மிகவும் முக்கியமானவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவராக கருதப்படும் அவருக்கு சட்டத்துறை மீதுள்ள பாண்டித்தியம் காரணமாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய அரசியலைமைப்பு திருத்தம் தொடர்பில் த.தே.கூட்டமைப்பு சார்பாக பங்குபற்றி வருபவர். புதிய அரசியலமைப்பு ஊடாக தமிழத்களுக்கான அரசியல் தீர்வினை பெறுவதில் குறியாக இருப்பவர். அதுமட்டுமில்லாமல் சிங்கள அரச தலைவர்களாலும் சிங்கள மக்கள் மற்றும் புத்திஜீவிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவர்.

இந்தப் பின்னணியிலே அவர் மீதான கொலை முயற்சித் திட்டம் முக்கியம் பெறுகின்றது. அத்துடன் இந்தத் திட்டத்துடன் புலம்பெயர் தமிழர்களின் சக்தி ஒன்றும் தொடர்புபட்டிருப்பதானது பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்திருக்கின்றது.

போர் காரணமாக 10, 15, 20 வருடங்கள் தற்காலிக வதிவிட விசாவில் மேற்குலகில் வாழ்ந்துவரும் தமிழர்களுக்கு 2009 இல் யுத்தம் சடுதியாக நிறைவுக்கு வந்ததில் பெரும் ஏமாறம் ஏற்பட்டிருந்தது. எங்கே தமது தற்காலிக வதிவிட விசா காலம் முடிந்ததும் தம்மை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி விடுவார்களோ என்ற பயம் புலம்பெயர் தமிழர்களிடம் எழுந்திருந்தது. இதன்காரணமாக இலங்கையில் மீளவும் குழப்பங்களை மேற்கொள்ள டயஸ்போரா தமிழ் சக்திகள் தொடர்ச்சியாக முயன்று வந்தன.

இது இவ்வாறு இருக்க பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ்லாந்து போன்ற நாடுகளில் வாழ்ந்த விசா முடிந்த பல தமிழர்களை அந்நாடுகள் மீளவும் இலங்கைக்கு அனுப்பியிருந்தன. தற்போதும் அனுப்பிக் கொண்டிருக்கின்றன. இதனால் அவசரமாக ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம் புலம்பெயர்ந்த தமிழ்ர்களின் சக்திக்கு காணப்பட்டது.

பா.உறுப்பினர் சுமந்திரனோ இன்னுமொருபடி மேலே போய் நம்நாட்டில் இனப்பிரச்சனைக்கான தீர்வுக்கான  அரசியல் வரைபை முழுமூச்சுடன் எவ்வித விட்டுக்கொடுப்புக்களுமின்றி முன்னெடுத்து வருவருது புலம்பெயர் தமிழர்களின் சக்திகளுக்கு கசப்பாகவே இருந்தது.

இந்நிலையிலேயே பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் விடுதலைப் புலிகளின் தோல்வியை ஜீரணிக்க முடியாத, போராட்டத்திற்கு எந்தவித ஆதரவுகளையும் வழங்காத தமிழ் இளைஞர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சிச் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன்மீது துரோகிப்பட்டம் குத்தி அவர்களை தமிழ் இனத்தின் துரோகியாக சித்தரிக்க முயன்றனர். இதற்கு இலங்கையிலுள்ள பல தமிழ் அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் மறைமுகமாக ஆதரவளித்து வந்தனர்.

இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட புலம்பெயர் தமிழர் சக்திகள் சம்பந்தனையும் சுமந்திரனையும் தமிழ் இனத்தின் துரோகிகளாக சித்தரிப்பதற்கு மறைமுகமாக வேலைசெய்யத் தொடங்கினர். இந்த பேஸ்புக் அலையால உணர்ச்சிவசப்பட்ட தமிழ் இளைஞர்கள் சம்பந்தனும் சுமந்திரனும் உண்மையிலேயே தமிழ் இனத்தின் துரோகிகள்தான் என்ற முடிவுக்கு வந்ததோடு அவர்கள் மீது சமூக வலைத்தளங்களிலும் 10 $ கொடுத்து வாங்கிய இணையத்தளங்களிலும் சேறு பூசத் தொடங்கினர்.

இந்த இளைஞர்களின் உணர்ச்சியை தமக்கு சாதகமாக பயன்படுத்த முடிவு செய்த புலம்பெயர் தமிழர்களின் சக்திகள் தம்முடன் தொடர்பில் இருக்கும் முன்னாள் போராளிகளுக்கு பணத்தாசையும் ஐரோப்பிய நாட்டாசையும் காட்டி சுமந்திரனை போட்டுத்தள்ள முடிவு செய்துள்ளன. ஆனால் விடயம் வெளியே கசிந்து தற்போது சம்பந்தப்பட்ட முன்னாள் போராளிகள் விசாரணைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். இத்துடன் அவர்களது எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.

பேஸ்புக்கில் எடுத்ததுக்கெல்லாம் சம்பந்தன் மற்றும் சுமந்திரனுக்கு துரோகிப்பட்டம் சூட்டும் இளைஞர்களின் பொறுப்பற்ற செயலே கைது செய்யப்பட்ட இந்த முன்னாள் போராளிகளுக்கு சுமந்திரனை துரோகியாக கருத வைத்துள்ளதுடன் கொலை செய்ய வேண்டுமென்ற துணிவையும் கொடுத்துள்ளது என்ற உண்மையை யாரும் மறுத்துவிட முடியாது.

இந்த நேரத்தில் கடந்த வருடம் கனடாவில் இடம்பெற்ற ஈ-குருவி நிகழ்வில் உரையாற்றும்போது நிலாந்தன் புலம்பெயர் தமிழர்களை நோக்கி குறிப்பிட்ட விடயம்தான் நினைவுக்கு வருக்கின்றது.

"பாதுக்காப்பான ஜனநாயக நாடுகளில் பாதுகாப்பாக இருந்துகொண்டு எம்மை ஜனநாயக விரோத செயல்களை செய்யத் தூண்டாதீர்கள்" என்பதானதாகவே அவருடைய அக்கோரிக்கை அமைந்திருந்தது.