ஒரு நாடானது சமூக, கலை கலாசார
மற்றும் பொருளாதார ரீதியில் அடைந்துகொள்ளும் தன்னிறைவை அபிவிருத்தி என்று கூறலாம்.
இதனை அடிப்படையாகக் கொண்டே ஒரு நாட்டினை அபிவிருத்தி அடைந்த நாடு, அபிவிருத்தி அடைந்துவரும்
நாடு மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள நாடு என வகைப்படுத்தப்படுத்தலாம்.
எமது நாடு சுதந்திரமடைந்து 70
வருடங்கள் கடந்த நிலையில் இன்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடு என்றே அழைக்கப்படுகின்றது.
எழுத்தறிவிலும் கலை கலாசார ரீதியிலும் நமது நாடு முன்னேற்றமடைந்து இருந்த போதிலும்
சமூக மற்றும் பொருளாதார ரீதியில் இன்னும் தன்னிறைவை அடைய முடியாமலிருப்பதே இதற்கு பிரதான காரணமாகும்.
வரலாற்றுக் காலம்தொட்டே எமது நாடு
விவசாயத்தினை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடாகவே இருந்து வந்தாலும் இன்னமும்
விவசயத்துறையிலும் உள்ளுர் உற்பத்தித் துறையிலும் தன்னிறைவை அடையமுடியாமலே இருக்கின்றது.
ஆசியப் பிராந்தியத்தைப் பொறுத்தளவில்
மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை நாம் உதாரணமாக எடுத்துக் கொண்டால் உள்ளுர்
உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் சிறந்த இடத்தினை மலேசியாவும் சேவை வழங்கும் நாடு என்ற
வகையில் சிங்கப்பூரும் முன்னணியில் இருந்து வருகின்றன.
அதிலும் குறிப்பாக சிங்கப்பூரானது,
துறைமுகம், கப்பற்துறை, எண்ணைய் சுத்திகரிப்பு மற்றும் வழங்கல், கல்வி, சுகாதாரம்,
விமான சேவை போன்ற துறைகளில் உலகின் முன்னணி சேவை வழங்குனராக செயற்பட்டு வருகின்றது.
வெறுமனே 704 சதுர கிலோமீட்டர்கள் சுற்றளவைக் கொண்ட இந்த நாடு சுற்றுலாத் துறையிலும்
அபரிமித வளர்ச்சியடைந்திருக்கின்றது.
எமது நாட்டைப் பொறுத்தவரை மலேசியாவுக்கும்
சிங்கப்பூருக்கும் இருக்கும் அத்தனை சிறப்பம்சங்களையும் அது கொண்டிருப்பதுடன், கிழக்குலகையும்
மேற்குலகையும் இணைக்கும் உலகத்தின் மிகமுக்கிய கேந்திர மத்திய நிலையமாக இருந்தும்கூட, பொருளாதார ரீதியில் ஏன் எமக்கு தன்னிறைவை அடைந்துகொள்ள முடியவில்லை என்ற கேள்வி எழுகின்றது.
சுதந்திரமடைந்ததற்கு பின்னர் முகம்கொடுக்க நேர்ந்த உள்நாட்டு பிரச்சினைகளே இதற்கான காரணம் என வெறுமனே கைகாட்டிவிட்டுப் தப்பிக்க முடியாது. உள்நாட்டு பிரச்சினைகளும்
ஒரு காரணமாக இருந்துவருகின்ற போதிலும் அதற்கும்
புறம்பான காரணிகளும் இருக்கின்றன.
இலங்கையைப் பொறுத்தவரையில் விவசாயத்துறை
பிரதான உற்பத்தித் துறையாக இருந்தபோதிலும், தேயிலை, இறப்பர், ஏலம், கராம்பு, கறுவாப்பட்டை
போன்ற வாசனைத் திரவியங்கள், மாணிக்க கல் உற்பத்தி, சுற்றுலாத்துறை போன்ற துறைகளும்
முக்கியமான துறைகளாகவே காணப்படுகின்றன. இவற்றில் தேயிலை உற்பத்தி மற்றும் சுற்றுலாத்துறை
ஆகியனவற்றிற்கு உலகலாவிய ரீதியில் காணப்படும் உயரிய கிராக்கியின் காரணமாக இத்துறைகள்
மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளன. ஆயினும் மேற்குறிப்பிட்ட ஏனையவற்றிற்கும் உலகலாவிய ரீதியில்
உயரிய சந்தை வாய்ப்புக்கள் இருக்கவே செய்கின்றன. ஆயினும் அவை கிராமத்தை அடிப்படையாகக்
கொண்ட உற்பத்தித் துறைகளாக இருப்பதனால் அபிவிருத்தி செய்யப்படாமலேயே இருந்து வருகின்றது.
இத்துறைகளை சரியாக இனங்கண்டு
அவற்றை அபிவிருத்தி செய்வதனூடாக தன்னிறைவடைவதை உறுதிப்படுத்தி ஏற்றுமதியினை அதிகரிக்கச்
செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை ஆட்சிக்கு வந்த முன்னைய எந்த அரசாங்கங்களும் முன்னெடுத்திருக்கவில்லை.
வறுமை ஒழிப்பு என்ற பெயரில் உதவிகளை வழங்குவதுடன் அவை நிறுத்திக் கொண்டுவிட்டன. இதன்
காரணமாக மக்கள் உற்பத்தியில் தன்னிறைவை அடையாமல் அரசாங்கத்தில் தங்கிவாழும் நிலையே
கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்தது. அதன் உச்சக்கட்டமாக அரிசியினையே இறக்குமதி செய்யவேண்டிய
துற்பாக்கிய நிலைமைக்கு நம்நாடு தள்ளப்பட்டது.
இந்தக் குறைபாட்டினை சரியாக இனங்கண்ட
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, கிராமங்களை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளை பேண்தகு ரீதியில்
அபிவிருத்தி செய்வதனூடாக வறுமையை ஒழித்து, உள்நாட்டில் தன்னிறைவை அடைக்கூடிய வழிவகைகளை
ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கில் கிராமசக்தி மக்கள் செயற்திட்டத்தினை தனது நேரடிக் கட்டுப்பாட்டின்
கீழ் கடந்த ஆண்டில் ஆரம்பித்திருந்தார்.
இச் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக
இலங்கையின் 5000 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு, அக்கிராமங்களினூடாக மேற்கொள்ளக்கூடிய
உற்பத்திகளை இனங்கண்டு அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப
ஆலோசனைகளை வழங்குவதனூடாக உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்கான வழிவகைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒவ்வொரு பிரதேச செயலாளர்கள் பிரிவிலும்
இனங்காணப்படும் கிராமங்களில் மக்களின் கூட்டு ஒத்துழைப்பின் மூலமே இந்த தன்னிறைவை ஏற்படுத்த
முயல்வதே இத்திட்டத்தின் சிறப்ப்சமாகும். அவ்வாறு ஒரு குழுவாக இணையும் மக்கள் தமக்கான
நிறுவனம் ஒன்றை உருவாக்கிக் கொள்வதுடன் உறுப்பினர் ஒருவருக்கு தலா எட்டாயிரம் ரூபாய்
என்ற விகிதத்தில் கிராமசக்தி செயற்திட்டத்தினூடாக அந்நிறுவனத்தின் முதலீட்டுக்கு தேவையான
நிதியுதவியும் அளிக்கப்படுகின்றது. அந்த நிதியினைக் கொண்டு அவர்கள் உற்பத்தியை மேற்கொள்ள
வேண்டுமென்பதுடன் சந்தைவாய்ப்பு போன்ற தேவைப்படும் மேலதிக உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக
தனியார் துறையினரின் பங்களிப்பும் பெற்றுக் கொடுக்கப்படும். இதற்கு உதரணமாக பதுளையில் உற்பத்தி செய்யப்படும் மலர்களுக்கான சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஊவா மாகாண கிராமசக்தி மலர் சங்கத்திற்கும் இலங்கையின் முன்னணி தனியார் நிறுவனமான ஹேலிஸ் தனியார் நிறுவனத்திற்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கடந்த 21 ஆம் திகதி பதுளையில் ஜனாதிபதி மைத்திரியின் தலைமையில் இடம்பெற்ற கிராமசக்தி முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டமையை குறிப்பிடலாம்.
ஹேலீஸ் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது |
இந்த அடிப்படையில் 2030 ஆம் ஆண்டளவில்
இலங்கையின் 332 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய 14,022 கிராம அலுவலர் பிரிவுகளிலும்
கிராமசக்தி மக்கள் செயற்திட்டத்தினால் நிர்வகிக்கப்படும் சுமார் பதினைந்தாயிரம் நிறுவனங்களை
நிறுவுவதனூடாக உற்பத்தியினை பெருக்குவதன் மூலம் பொருளாதாரத்தில் தன்னிறைவையடைந்த இலங்கையினை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டுப் போரினால் அதிகளவில்
பாதிப்புக்களை சந்தித்த வடக்கு கிழக்கு மாகாணங்களின்
அரச அதிகாரிகள் இந்த கிராமசக்தி செயற்திட்டத்தினை சிறந்த முறையில் உள்வாங்கி தத்தமது
பிரதேசங்களில் செயற்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தில் நலிவடைந்திருக்கும் அப்பகுதி
மக்களின் உற்பத்தியை ஊக்குவித்து, அவர்களுக்கு விமோசனத்தையும் பெற்றுக்கொடுக்கக் கூடிய
சந்தர்ப்பமும் இச்செயற்திட்டத்தினால் தற்போது ஏற்பட்டிருக்கின்றது.
அத்தோடு இலங்கையின் அமைவிடம் கேந்திர
முக்கியத்துவம்மிக்கதாக அமைந்திருப்பதால் கல்வி, சுகாதாரம், எண்ணைய் விநியோகம், கப்பற்துறை,
விமானசேவை போன்ற துறைகளிலும் சிறந்த சேவை வழங்குனராக செயற்படகூடிய சந்தர்ப்பத்தினை
உருவாக்கிக்கொள்ள கிராமசக்தி செயற்திட்டத்தினூடாக நிச்சயமாக வாய்ப்புக் கிட்டும்.
ஆகவே எல்லா வழிகளிலும் மக்களுக்கும்
நாட்டுக்கும் நன்மையை பயற்கக்கூடிய இந்த கிரமசக்தி மக்கள் செயற்திட்டத்தினூடாக எம்மக்களை
பற்றிப்பிடித்துள்ள வறுமையெனும் கொடிய அரக்கனை அகற்றி உற்பத்தியில் தன்னிறைவை பெற்றுக்
கொள்வதன் மூலம் தேசிய பொருளாதாரத்திலும் தன்னிறைவை அடைந்து கொள்ளக்கூடிய நிலைமை உருவாகும்.
(27.05.2018 ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த கட்டுரை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக