A Promised Land

21 மே 2018

"பாங்ஷு" - நீதி மறுக்கப்பட்ட இருண்ட யுகத்தை நோக்கிய ஒரு மீள்பயணம்


தென்னிலங்கையின் பிரபல சிங்கள தொலைக்காட்சியான தெரண டீவி வருடந்தோறும் சினிமா விருது நிகழ்வினை நடத்தி வருகின்றது. அதில் ஒரு விருது பிரிவுதான் "Cinema of Tomorrow" விருது. இதில் நம்நாட்டின் இளம் திரைப்பட நெறியாளர்களின் முதலாவது அல்லது இரண்டாவது திரைப்படத்தை மதிப்பிட்டு அவற்றில் சிறந்த திரைப்படத்திற்கு விருதும் ஐந்து மில்லியன் ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டு வருகின்றது. சிங்களஇ தமிழ் மொழி வேறுபாடின்றி இலங்கைக்கு உரித்தான திரைப்படங்கள் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றமை இந்த விருது வழங்கும் விழாவின் விசேட அம்சமாகும். 

இந்த வருடத்திற்கான திரைப்பட விருது வழங்கும் விழா எதிர்வரும் சனிக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ள நிலையில் "Cinema of Tomorrow" விருது போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள 06 திரைப்படங்களின் திரையில் நேற்றும் (மே-20) நேற்று முந்தினமும் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி திரையரங்கில் திரையிடப்பட்டது. 

ஒவ்வொரு காட்சியும் பார்வையாளர்களால் நிரம்பி வழிந்தது. இம்முறை தமிழ் நெறியாளர்களான சுமதி சிவமோனின் புதிய திரைப்படமான "Son's and Fathers" திரைப்படமும் விசாகேச சந்திரசேகரத்தின் "பாங்ஷு" திரைப்படமும் இந்த "Cinema of Tomorrow" விருதுக்கான போட்டிக்கு தெரிவாகியிருந்த திரைப்படங்களில் இருந்தமை விசேடமானதாகவும். இதில் பாங்சு சிங்கள திரைப்படமாவும் அமைந்திருந்தது. 

இந்த திரையிடலின் நேற்றைய (மே 20) இரு திரைப்படங்களின் காட்சிகளுக்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.  அதில் முதலாவது திரைப்படமாக இளம் இயக்குனர் கெளசல்ய மாதவ பத்திரணவின் "இக்கா" (விக்கல்) திரைப்படத்தையும் விசாகேசா சந்திரசேகரத்தின் பாங்சு திரைப்படத்தையும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. 

இதில் நெறியாளர் விசாகேசா சந்திரசேகரத்தின் "பாங்ஷு" திரைப்படம் பார்வையாளர்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன் இலங்கையின் நாளைய சினிமா தொடர்பிலான ஒரு நம்பிக்கையினை இட்டுச் சென்றிருக்கின்றது. 

சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்திற்கு எதிராக ஜேவிபியினரால் முன்னெடுக்கப்பட்டு கொடூரமாக அடக்கப்பட்ட 1971 ஆண்டு கிளர்ச்சியையோ அல்லது ஜே.ஆர். ஜயவர்த்தன - ஆர். பிரேமதாச அரசுக்கு எதிராக ஜேவிபியினர் முன்னெடுக்கப்பட்டு மிலேச்சத்தனமாக அடக்கி ஒழிக்கப்பட்ட 1988/89 கிளர்ச்சி பற்றியோ 80களின் பிற்பகுதியில் பிறந்தவர்கள் பெரிதாக அறிந்திருக்க சந்தர்ப்பம் இல்லை. 

அக்கிளர்ச்சி தொடர்பில் எழுதப்பட்ட புத்தகங்களை வாசிப்பதனூடாகவோ அதனுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தரையாடுவதனூடாகவோ அந்த கிளர்ச்சியினைப் பற்றி தெரிந்துகொள்ளக் கூடியதாக இருப்பினும் நாம் வாசிக்கும் அல்லது கேட்கும் அந்த கதைகள் எவ்வளவு தூரம் எம்மில் தாக்கம் செலுத்தும் என்பதை நிச்சயமாக கூறமுடியாது. ஆனாலும் அவற்றைப் பற்றி நேர்மையாக எடுக்கப்படும் ஒரு திரைப்படம் அதிர்ச்சியையும் தாக்கத்தையும் மிக இலகுவாக ஏற்படுத்தி விடும் என்பதற்கு நேற்று நான் பார்த்த பாங்சு திரைப்படம் ஒரு முன்னுதாரணம். 

“Frangipani” எனும் திரைப்படத்தினூடாக இலங்கையின் சினிமாத் துறையில் கால்பதித்த நெறியாளர் விசாகேசா சந்திரசேகரம் அவர்களின் இரண்டாவது படைப்புத்தான் இந்த "பாங்ஷு" திரைப்படம். இத்திரைப்படம் ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாகிக்கியதன் காரணமாகவோ என்னவோ திரைப்படம் முடிந்து சுமார் மூன்றி நிமிடங்களாகியும் கூடியிருந்த சுமார் நானூறு பேரின் கைதட்டல்களால் தரங்கனி திரையரங்கு அதிர்ந்தது.

Filmmaker Visakesa Chandrasekaram

"பாங்ஷு" திரைப்படம் 1988/89 இல் இடம்பெற்ற ஜேவிபி கிளர்ச்சியில் பங்கெடுத்த ஒரு இளைஞனின் தாயாரின் கதாபாத்திரத்தை மைய்யாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதே இந்தப் படத்திற்கான விசேட அம்சமாகும். சிங்கள சாதியக் கட்டமைப்பில் சலவைத் தொழில் செய்யும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த அத்தாய் தனது ஒரேயொரு அருமை மகன் தனது கண்முன்னேயே இனம் தொரியாத ஆயுததாரிகளால் தரதரவென்று இழுத்துச் செல்லும்போது அதைத் தடுத்து நிறுத்தமுடியாத கையாலாகாதவளாக நிற்கிறாள். தனது மகனைத்தேடி இரணுவ முகாம்களுக்கு செல்லும் அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆறு வருடங்களுக்கு பிறகு மகனுடைய எலும்புக்கூட்டினை காணும்போது விம்மி வெடித்து அழ முயற்சித்தும் கண்களில் கண்ணீர் வரண்டுபோனதால் விறைப்பாக நின்றாலும் பார்வையாளனின் கண்களில் கண்ணீரை  வரவழைத்து விடுகிறாள்.

ஆறு வருடங்களுக்கு பின்னர் உருவாக்கப்படும் காணமல் போனோரைக் கண்டறியும் விசாரணை ஆணைக்குழுவோ அத்தாய்க்கு மரணச் சான்றிதளையும் நஷ்ட ஈடாக 25 ஆயிரம் ரூபா பணத்தையும் வழங்கும்போது அதை வாங்காமல் அப்படியே திரும்பிச் செல்லும்போது பிள்ளையை தொலைத்த அத்தாயின் மனவேதனையை பார்வையாளனால் உணரக்கூடியாக இருக்கின்றது.

நீதிமன்றின் ஊடாக தன்னுடைய மகனுனின் சாவுக்கு நீதி கிடைக்கும் என்று நம்பும் அந்தத் தாய் நீதிமன்றத்தை நாடுவதுடன், தனது மகனை கடத்திச் சென்ற இராணுவ வீரனையும் அடையாளம் காட்டுகின்றாள். இராணுவ வீரனின் சகா நீதிமன்றினுள் வைத்து மிரட்டியும் அசைந்து கொடுக்காத அவள்இ நிறைமாதக் கற்பிணியான இராணுவ வீரனின் மனைவியின் “தனது கணவனுக்கு மன்னிப்பை கொடுங்கள்” என்ற இடைவிடாத கோரிக்கைக்கு அசைந்து கொடுக்கிறாளா இல்லையா என்ற முடிவுடன் திட்டமிட்டு நீதி மறுக்கப்பட்டுஇ மறக்கடிக்கப்பட்ட ஒரு துன்பரகமான வரலாற்றை மீள் பதிவுசெய்திருக்கிறது இந்த "பாங்ஷு" திரைப்படம். 

கதாபாத்திரங்களின் தெரிவு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை போன்ற எல்லாமே திரைப்படத்தின் இயக்குனர் கூறவரும் செய்தியை பார்வையாளனுக்கு எடுத்துச் செல்வதையே குறிக்கோளாக கொண்டிருக்கின்றது. அந்தளவுக்கு இந்த திரைப்படம் மிகவும் நேர்ந்தியாக எடுக்கப்பட்டிருப்பதுடன் 80களின் பிற்பகுதியில் பிறந்த என்னைப் போன்றவர்களை மீண்டும் 80களின் இருண்ட பக்கத்திற்கு மீள்பிரவேசம் செய்ய வைத்திருக்கின்றது என்று கூறினால் அது மிகையாகாது. அந்தவகையில் துணிச்சலாக இந்தக் கருவினை திரைப்படமாக கொண்டுவந்திருக்கும் இயக்குனருக்கும் இதில் பங்குபற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் சிரம் தாழ்த்தி பாராட்டுக்களை சொல்லியாக வேண்டும்.

வெளிவரும்பபோது ஒவ்வொருவரும் கட்டாயமாக  இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும். ஏனெனில் இத்திரைப்படம் சமூகமட்டத்தில் பல தளங்களில் கலந்துரையாடலுக்கு வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அத்தோடு தற்போதைய காலத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று.  இந்த வரலாற்று மீள்பிரவேசம் இனவாதத்தில் ஊறிக்கிடக்கின்ற பெரும்பான்மையான தென்னிலங்கை சிங்கள இளையோரின் கருத்தியலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நிற்சயம் வழிகோலும் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. 

அண்மையில் அமைச்சர் ராஜித சேனாரத்த,  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு அளித்த பதில் 1971 மற்றும் 1988/89 கிளர்ச்சி தொடர்பிலான சரியான வரலாற்றை அறிந்திராத தென்னிலங்கை பெரும்பான்மை இளைஞர்களை கொந்தளிக்க வைத்திருந்தது. அவ்வாறு கொந்தளித்து இனவாதத்தை கக்கியவர்களை இத்திரைப்படம் வெளிவரும்போது அதிர்ச்சிக்கு உள்ளாக்கத்தான் போகிறது. அதனாலேயே தற்காலத்துக்கு மிகவும் தேவையான திரைப்படமாக இத்திரைப்படத்தை கருத வேண்டியதாக அமைக்கிறது. 

இந்த திரைப்படத்தை பார்த்தாவது தமது சொந்த இனத்துக்கு நடந்த அநீதியினைப் தேடியறிந்து தெரிந்துகொண்டு, அதேபோலவே தமிழ் மக்களுக்கும் நடந்த அநீதியினை உணர்ந்து கொள்வார்களாக இருந்தால் அதுவே இந்த திரைப்படத்துக்கும் இயக்குனருக்கும் மாபெரும் வெற்றியாக அமையும்.

காட்சி ஊடகம் என்பது மிகவும் பலமானதொன்று. அக்காட்சி ஊடகம் சமூகங்களில் காத்திரமான மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதை நாம் கடந்தகால வரலாறுகளினூடாக கண்டுவந்திருக்கிறோம். 2000 ஆண்டுகளில் இயக்குனர் அசோக ஹந்தகமவின் “மே மகே சந்தாய்” (இது எனது சந்திரன்) திரைப்படத்தின் வருகையினூடு இலங்கையின் சினிமா புதிய பரிணாமத்தை அடைந்திருந்ததுபோல, இயக்குனர் விசாகேசா சந்திரசேகரத்தின் "பாங்ஷு" திரைப்படத்தின் வருகையுடன் தற்கால இலங்கையின் சினிமா தன்னை மீண்டும் புதுப்பித்துக்கொண்டு புதிய பரிமாணத்தில் பயணிக்க ஆரம்பித்திருக்கின்றது என்றே கூறவேண்டும்.