A Promised Land

06 மே 2018

இலஞ்சம் ஊழல் மோசடியற்ற இலங்கையை நோக்கி…


தொழில்நுட்பம் அபரிமிதமாக வளர்ச்சியடைந்துள்ள இந்த 21ஆம் நூற்றண்டிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் என்பன சட்டங்களால் கட்டுப்படுத்த முடியாதவையாகவே இருந்து வருகின்றன. உலகளாவிய ரீதியில் நாள்தோறும் மில்லியன் கணக்கான பணம் இலஞ்சம் என்ற போர்வையில் கைமாறிக் கொண்டிருக்கின்றது. 

இந்த இலஞ்சம் என்பது வெளிநாட்டு, உள்நாட்டு அரசியலில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தி வருவதை நாம் கண்கூடாக கண்டு வருகின்றோம். ஒரு நாட்டின் அரசியலை புரட்டிப் போடவும், அரசியல் தலைவர்களை இல்லாமல் செய்வதற்கும், ஆட்சியிலுள்ள அரசாங்கங்களை வீழ்த்தவும் இலஞ்சம் மற்றும் ஊழல் சம்பவங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

இலஞ்சம் மற்றும் மோசடிகள் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படுகின்றது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றால் அந்த நாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளை முதலில் இல்லாமல் ஒழித்தே ஆகவேண்டும். இது ஒரு இலகுவான விடயமல்ல. காரணம் ஊழல் மோசடிகளை மேற்கொள்பவர்கள் யார் என்றே ஊகிக்க முடியாத சிரமமான நிலையேயாகும். அரசியல்வாதிகள், அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் முதல் சாதாரண பொதுமக்கள் வரை இலஞ்ச ஊழல் மோசடிகளில் ஈடுபடுவது இன்று ஒரு சாதரண விடயமாகியிருக்கிறது. 

கடந்த வியாழக்கிழமை (மே 03) வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவரிடம் இருபது மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெறும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அலுவலகத்தின் பணிக்குழாம் பிரதானி மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோர் இலஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கொழும்பின் பிரபல சொகுசு ஹோட்டல் ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்கள். இந்த அரசாங்க உயரதிகாரிகளின் கைதும் இலங்கையில் மட்டுமில்லாது சர்வதேச ரீதியிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இலஞ்ச ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதற்கு ஒரு மனிதன் வகிக்கும் பதவிநிலையோ அல்லது சமூகத்தில் அவனுக்கு காணப்படும் அந்தஸ்தோ தடையாக இருப்பதில்லை என்பதற்கு இந்த சம்பவத்தை உதாரணமாகக் கூறலாம். 

இந்த கைது இடம்பெற்ற உடனேயே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் உடனடியாகவே குறிப்பிட்ட இரு அதிகாரிகளினதும் பதவிகளை இடைநிறுத்தியதுடன் எந்தவித அழுத்தங்களும் இன்றி  சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.  இது இலங்கையைப் பொறுத்தவரையிலேயே உண்மையில் புதிய ஒரு அரசியல் கலாசார விடயமாகவே கருதப்படுகின்றது. 

இதற்கு முன்னர் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அரசியல்வாதிகள், அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் இவ்வாறான இலஞ்ச ஊழல் மோசடிகளில் சிக்கும் போது அரசாங்கத்தின் உயர் மட்டங்கள் தமது அதிகாரங்களை பயன்படுத்தி குறிப்பிட்ட மோசடிக்காரர்களை பாதுகாக்கும் வேலையிலேயே ஈடுபட்டு வந்திருந்தமையை நாம் கண்கூடாக கண்டு வந்திருக்கின்றோம். ஆயினும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இந்த விடயத்தில் மாறுபட்டவராகவே இருக்கின்றார். எவர் தவறு செய்தாலும் குற்றம் குற்றமே என்ற நிலைப்பாட்டை அவர் கொண்டிருக்கின்றமை பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது இலங்கையில் ஊழல் மோசடிகளை ஒழிப்பது தனது பிரதான குறிக்கோள்களில் ஒன்றாகுமென பொதுமக்களுக்கு உறுதியளித்தே ஜனாதிபதியாக பதவியேற்ற அவர், தான் பொதுமக்களுக்கு உறுதியளித்தது போலவே இலஞ்ச ஊழலை  ஒழிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார் என்பதை அவருடைய இந்தச் செயற்பாடுகள் வெளிப்படுத்தி நிற்கின்றது. 

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அதுவரையும் அரசியல் தலையீடுகள் காரணமாக செயற்படாது காணப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களை 19 ஆம் சட்டதிருத்தத்தின் ஊடாக ஸ்தாபித்து ஆணைக்குழுக்களின் சுயாதீன செயற்பாடுகளை எவ்வித இடையூறுகளுமின்றி மேற்கொள்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். அத்தோடு 2016 ஆண்டு லண்டனில் இடமபெற்ற ஊழலுக்கெதிரான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு ஊழலை இல்லாதொழிப்பதற்காக அனைத்து தலைவர்களையும் ஒன்றுபடுமாறு ஜானாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார். இவ்வாறான பின்னணியிலேயே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் ஜனாதிபதி அலுவலகத்தின் உயரதிகாரியான பணிக்குழாம் பிரதானியையும் அரச மரக் கூட்டுத்தாபன தலைவரையும் எந்தவித அரசியல் தலையீடுகளும் இல்லாது கைது செய்ய முடிந்திருக்கின்றது. 

இதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக, “எமது ஆணைக்குழுவுக்கு பூரண அதிகாரங்களையும், சுதந்திரத்தையும்  தற்போதைய அரசு பெற்றுக் கொடுத்திருப்பதனால் தாம் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி சுயாதீனமாக செயற்படக்கூடிய சந்தர்ப்பம் எமக்கு கிடைத்திருக்கின்றது” என்ற இலஞ்ச ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் தலைவர் நெவில் குருகே அவர்களின் கூற்று அமைந்திருக்கின்றது. ஆணைக்குழுவின் சாதாரண விசாரணை அதிகாரியாக பணிபுரிந்து தற்போது ஆணைக்குழுவின் தலைவராக பணிபுரியும் இவர் இலங்கையில் இடம்பெறும் இலஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில் மிகுந்த அனுபவம் வாய்ந்த ஒருவர். 

இலஞ்ச ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்க உலகலாவிய ரீதியில் செயற்படும் ட்ரான்பரன்ஷி இன்டநேஷனல் அமைப்பின் தரவுகளின்படி தற்போது இலங்கையானது இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் நிறைந்த நாடுகளின் வரிசையில் 91 ஆவது இடத்தில் இருக்கின்றது.  இந்த 91 ஆவது நிலையிலிருந்து முதலாவது நிலையினை நோக்கி இலங்கை பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. ஆகையினால் தற்போது இலஞ்ச ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள “சுயாதீனமாக செயற்படக்கூடிய சந்தர்ப்பத்தை” சரியாகப் பயன்படுத்தி இலங்கையின் பொருளாதார அபிவிருத்திற்கு சவாலாக விளங்குகின்ற இலஞ்சம் மற்றும் ஊழலை முற்றாக இல்லாதொழிக்கும் நடவடிக்கையினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்பதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினதும் இலங்கை மக்களினதும் ஒரே எதிர்பார்ப்பாகும். 


(06.05.2018 ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த கட்டுரை)