உலகின் மிகவும் பலம்பொருந்திய காட்சி ஊடகமான திரைப்படத்துறையில் இயக்குனராகுவது என்பது அவ்வளவு எளிதான விடயமல்ல. அதுவும் சினிமா வர்த்தக ரீதியில் வளர்ச்சியடையாத, வெறுமனே திரைப்பட விழாக்களையும் சிறப்புக் காட்சிகளிலும் தங்கியிருக்கின்ற இலங்கைபோன்ற ஒரு நாட்டில் இருந்துகொண்டு ஒரு திரைப்பட இயக்குனராக வர விரும்புவது என்பது கடிமானதும் வலியானதுமான விடயமாகும்.
இந்த வலியினை ஒரு இளம் இயக்குனர் தனது முதலாவது படைப்பிலேயே வெளிப்படுத்துவதென்பது இலகுவான விடயமல்ல. அவ்வாறு ஒரு கதையினை கூறும் “இக்கா” (விக்கல்) தனது நட்பு வட்டத்தின் உதவியுடன் இணைந்து உணர்வுபூர்வமாக திரைப்படமாக்கியிருக்கிறார் நம்நாட்டின் புதுமுக இயக்குனரான கௌசல்ய மாதவ பத்திரண. இளையோர் ஒன்றுபட்டால் எந்த தடைகள் வந்தாலும் ஒரு விடயத்தை செய்து முடிக்கலாம் என்பதற்கு இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பு அண்மையா காலங்களின் மிகச்சிறந்த உதாரணம்.
இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் |
இலங்கையின் பிரபல தொலைக்கட்சியான தெரண வருடந்தோறும் நடத்திரும் திரைப்பட விருதுவழங்கும் விழாவில் “Cinema of Tomorrow” என்ற விருதுக்கு போட்டியிடும் திரைப்படங்கள் கடந்தவாரம் (மே 19,20) இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தரங்கனி திரையரங்கில் காண்பிக்கப்பட்டது. அந்த திரையிடலில் இந்த “இக்கா” திரைப்படத்தினையும் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.
ஒரு திரைக்கதையினை வைத்துக்கொண்டு அதனை படமாக எடுப்பதற்கு தயாரிப்பாளர்களைத் தேடி நாயாக அலையும் ஒரு சிங்கள இளைஞனை மைய்யமாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. நானும் அவ்வாறு தயாரிப்பாளரை தேடியலையும் ஒரு இளைஞன் என்ற வகையில் எனக்கு மிகவும் நெருக்கமாக இத்திரைப்படம் அமைந்தது.
தான் சந்திக்கும் தயாரிப்பாளர்கள் தமக்கு விரும்பியபடி தன்னுடைய கதையை மாற்றி எடுக்கும் படி நிர்பந்தப்படுத்துவதும், அந்தக் கதைக்கு உண்மையிலேயே தேவையான பணத்தினை வழங்கத் தயாராக இல்லாமல் குறைந்த செலவில் படத்தினை எடுக்க நிர்ப்பந்தித்தாலும் கதை விடயத்தில் எந்தவித சமரசத்தையும் மேற்கொள்ளாது அவன் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதன் காரணமாக தனது படத்திற்கான சரியான தயாரிப்பாhளரொருவரை கண்டுபிடிப்பதற்கே சிரமப்படுகின்றான.
மறுபுறத்தில் அவனது காதலியோ நீ வேலையொன்றைத் தேடிக்கொள், வீடு வாகனம் என்று எல்லா வசதிகளும் உன்னைத் தேடிவரும் அதுக்கு பின்னர் நீ விரும்புவதுபடி ஒரு படமல்ல பத்து படங்களையும் எடுக்கலாம் என ஆசைவார்த்தை காட்டுகிறாள். அதற்கும் மசியாத அவன் தனது கொள்கையில் விடாப்பிடியுடன் நிற்கிறான். தனது தந்தையிடமிருக்கு கிடைக்கும் இருபத்தைந்து இலட்சத்தையும் நவீன பொருளாதாரத்தின் சுரண்டலால் ஒரிரவிலேயே இழந்துவிட்டு அவன் நிற்கும்போது அவன் மீது எந்தவிதக் கோபமும் ஏற்படாது அரசியல் பொருளாதார முறைமையின் மீது தான்பார்வையாளனுக்கு அறக்கோபம் ஏற்படுகின்றது.
அவனது வீட்டுக்கு அருகிலிருக்கும் கடையொன்றில் வேலைசெய்யும் தமிழ் இளைஞன் ஒருவன் தமிழ் மக்களின் நகைகள் குறிப்பிட்டதோர் இடத்தில் புதைக்கப்பட்டிருப்பதாகவும் அதை எடுத்தால் நீ விரும்புவதுபோல் படத்தினை எடுக்க முடியுமெனனக் கூறவும், வேறு எல்லா வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில் அப்படியாவது தன்னுடைய கனவுப் படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசையில் மட்டக்களப்பிலுள்ள கிராமமொன்றிற்கு பயணிக்கின்றான்.
அவ்வாறு சென்றவன் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுடைய நகைகளை எடுத்து தன்னுடை கனவுத் திரைப்படத்தை இயக்க முடிந்ததா இல்லையா என்பதையும் மிகவும் அழகாக 83 நிமிடங்களுக்குள் சொல்லிவிட்டுச் செல்கின்றார்.
இதில் சினிமா எடுக்க முயற்சிக்கும்; அந்த இளைஞனாக நடித்திருக்கும் கலன என்ற நடிகர் தன்னுடைய இயல்பான நடிப்பினூடாக கதைக்கு உயிரோட்டம் அளிப்பதுடன் பார்வையாளர்களை திரைப்படத்துடன் கட்டிப் போடுகின்றார். தமிழ் இளைஞனாக நடித்திருக்கும் தம்பி ஆகாஸ் தனது இயல்பான நடிப்பினூடாக அனைவரையும் கவர்கின்றார். ஒளிப்பதிவும் இசையும் படத்துக்கு மேலும் பலம் சேர்க்கின்றது.
ஆகாஸ் தியாகலிங்கம் |
இலங்கையில் தற்போது வாழும் பெரும்பாலன இளைஞர்கள் தமது கனவுகளை தொலைத்துவிட்டு வாழ்க்கையை முன்கொண்டு செல்வதற்காக வேறு ஏதோவொன்றை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டே வருகின்றார்கள். அவர்களைச் சுற்றி அரசியல் பொருளாதார வலைகள் சூழ்ச்சிகரமாக பின்னப்பட்டு தமது கனவுகளின் பின்னால் அவர்களை ஓடவிடாடமல் தடுப்பதிலேயே இந்த காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றது.
இக்கா திரைப்படம் திரைத்துறையில் கால்பதிக்க விரும்பும் இளைஞனொருவன் முகம்கொடுக்கும் சவால்களை கதைக்கருவாகக் கொண்டிருந்தாலும் தமது கனவுகளை தொலைக்க விரும்பாமல் தொடர்ந்தும் போராடிவரும் ஏனைய எல்லாத் துறைகளின் இளையேரையும் பிரதிநிதித்துவப்படுத்திகின்றது..
நம்நாட்டின் நாளைய சினிமா தொடர்பில் பிரகாசமான நம்பிக்கையினை ஏற்படுத்தும் இத்திரைப்படத்தை இயக்கிய இயக்குனருக்கும் இத்திரைப்படத்தில் பங்குபற்றிய கலைஞர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
திரையிடலின் பின்னரான கலந்துரையாடலின்போது |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக