A Promised Land

13 அக்டோபர் 2014

கத்தி யாருக்கு ஷார்ப்? விஜய்கா அல்லது லைக்காவுக்கா?



கத்தி படம் விஜய் இரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ஒரு படம். ஆனால் தற்போது சினிமா இரசிகர்கள் எல்லோராலும் வெளிவருமா இல்லை என ஆவலோடு எதிர்பார்க்கப்படும் படம். உண்மையில் கத்தி படத்திற்கு என்னதான் பிரச்சனை? ஏன் இவ்வளவு தடை முயற்சிகள் அந்தப் படத்திற்கு? என்னுடைய ஊகங்கள் கீழே...

1. லைக்கா மொபைல் என்னும் பல்தேசிய வியாபார நிறுவனம் தமிழ் சினிமாவில் காலூன்றுவதை தடுத்தல்.

2. தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகிவிடவேண்டும் அரசியல் ஆசையில் துடித்துக்கொண்டிருக்கும் விஜய்க்கு அரசியல் மட்டத்திலிருந்து கொடுக்கபபடும் நெருக்கடியில் இதுவும் ஒன்று. 

மேலே கூறிய இரு பிரதான காரணங்களிலிலும் முதலாவது காரணமே இந்தக் கத்தி படத்திற்கு ஏற்படுத்தப்படும் தடைகளுக்கு காரணமாக இருக்கவேண்டும் என கருதவேண்டியிருக்கிறது.

சினிமா என்பது கலை என்ற ஒரு விடயத்தினையும் தாண்டி இந்தியாவில் சினிமா என்பது 100% வியாபாரமாகவே பார்க்கப்படுகின்றது.                                  இந்த வியாபாரத்தில் பைனான்ஸியர் தயாரிப்பாளர் தொடக்கம் தியட்டர் முதலாளிவரை குறுகிய காலத்தில் அதிகளவு இலாபத்தினை பார்த்துவிட வேண்டும் என துடித்துக்கொண்டிருப்பவர்கள். சாதாரணமாக இந்தியாவில் திரைப்படம் ஒன்றை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் பைனான்ஸியர்களை அணுகுவார்கள். அவர்களும் குறிப்பிட்ட கால அளவை நிர்ணயித்து பணத்தை தயாரிப்பாளர்களுக்கு வழங்குவார்கள். தயாரிப்பாளர் அதற்குப் பின்னர் படத்தை தயாரிப்பார். ஆரம்பிக்கும்போதே படத்தை திரையிடும் காலத்தினையும் தீர்மானித்துவிடுவார்கள். எல்லாமே பக்காவாக பிளான் பண்ணப்பட்டுத்தான் நடந்துகொண்டிருக்கின்றது. இதில் குறிப்பிட்ட திகதியில் படம் வெளிவராவிட்டால் படத்தின் தயாரிப்பளருக்கு சிக்கல்தான். (விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு வந்த பிரச்சனையும் அதுதான்)

இப்படி இந்திய சினிமா ஒருவரோடு ஒருவர் இணைந்த முறையில் ஒரு மாபியா ஆகவே இயங்கிக்கொண்டு வந்திருக்கின்றது இங்கே இதற்கும் கத்தி பிரச்சனைக்கும் என்ன தொடர்பு என்று உங்களுக்கு கேட்கத் தோன்றும்.
பல்லாயிரக்கணக்கான மில்லியன் முதலீட்டுடன் செயற்பட்டுவரும் லைக்கா போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் திரைப்படம் ஒன்றை தயாரிக்க வரும்போது ஏற்கவே இருந்த பைனான்ஸியர், தயாரிப்பாளர் என்ற ஒன்றுக்குள் ஒன்று பின்னப்பட்ட வலையமைப்பினை இந்த பல்தேசிய வியாபார நிறுவனங்கள் தங்கியிருக்கத்தேவையில்லை. நேரடியாகவே எத்தனை கோடிகளையும் முதலிட அவர்கள் தயாராகவிருப்பார்கள். காரணம் அவர்களில் இருக்கும் தாராள பணப்புழக்கம். இதனால் ஏற்கனவே இருந்த நடைமுறைகள் சிறிது சிறிதாக ஆட்டம் காணத் தொடங்கும் இவ்வாறு இடம் பெற்றால் ஏற்கனவே சினிமா மூலம் கொள்ளை இலாபம் கண்டு சுவை பிடிபட்ட முதலாளிகளுடைய இருப்புக்கு அரம்பத்தில் பெரிதாக சிக்கல் இல்லாவிட்டாலும் லைக்காவின் வரவு பல புதிய பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு இந்தியாவில் சினிமாவில் நேரடியாக முதலிட வாய்ப்புக்களை உருவாக்கிவிடும் இது முதலாளிகளில் இருப்பினை கேள்விக் குறியாக்கிவிடும். ஆகவே லைக்காவின் வரவை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தவேண்டும அல்லது பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனைகள் குடுத்துதமிழ் சினிமாவில் முதலிட நினைக்கின்ற ஏனைய பல்தேசிய நிறுவனங்களுக்கு பயத்தினை ஏற்படுத்தவேண்டும் இதன்மூலம் அவர்களை உள்ளே வரவிடாமல் செய்யவேண்டும். இந்தப் பின்னணிதான் கத்தி படத்திற்கும் லைக்கா நிறுவனத்திற்கும் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சனைகளுக்கு காரணம். இதற்கு இந்தப் பிரச்சனைகளுக்கு பின்னாலிருப்பவர்கள் கண்டுபிடித்த காரணங்கள்தான் லைக்கா நிறுவனம் இலங்கை அரசுடனும் ராஜபக்ஷ குடும்பத்துடனும் மிகவும் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருக்கின்ற ஒரு நிறுவனம் என்ற கருத்தினை முன்வைத்து பிரச்சனைகளை வலுவாக்கியதுதான்.

ஆனால் அந்தோ பாவம் தமிழ் சினிமா இரசிகர்கள். ஏற்கனவே நடிகர்களுக்காக பிரிந்துநின்று அடிபடும் அவர்களை இருபகுதியும் நன்றாக பயன்படுத்துகின்றார்கள். அத்தோடு இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி லைக்கா நிறுவனத்தின் எதிரிகளும் புகுந்து விளையாடுகின்றார்கள் ஆனால் இந்தப் பிரச்சனைகளுக்கு அப்பால் இந்தப் பிரச்சனைகளால் லைக்கா நிறுவனத்திற்கு இலவசமாக தங்களது நிறுவனத்தினைப் பற்றிய விளம்பரம் கிடைத்திருக்கின்றது. கத்தி பிரச்சனைக்கு முன்னர் லைக்கா பற்றி தெரிந்தும் அவர்களுடைய சேவையினை பயன்படுத்தாமல் இருந்தவர்கள் இப்போது லைக்கா நிறுவனத்தின் சிம் அட்டைகளை பாவித்து இந்தியாவுக்கு மிகக்குறைந்த செலவில் கதைத்துக் கொண்டிருக்கின்றார்களாம்.

ஆக மொத்தத்தில் கத்தி விஜய்கும் முருகதாசுக்கும் ஷாப்பா வேலை செய்கிறதோ இல்லையோ லைக்கா என்ற பல்தேசிய வியாபார நிறுவனத்திற்கு நல்ல ஷார்ப்பாகவே வேலை செய்கின்றது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று இதைத்தான் சொல்றது.

fb - வதீஸ் வருணன்- 

கருத்துகள் இல்லை: