தற்போது பிரபலமாகவுள்ள வலைப்பதிவைப்பற்றி 2005ம் ஆண்டிலேயே முதன்முதலாக அறிந்து கொண்டேன். ஆனால் அதைப்பற்றி பூரண விளக்கம் அதாவது எப்படி பதிவுகளை இடுவது என்பது பற்றி சிறுஅளவிலேனும் தெரிந்திருக்கவில்லை.ஆனாலும் பிளக்கரில் எனது
பெயரில் ஒரு வலையை ஆரம்பித்தேன். அதன் பின்னர் 2008ம் ஆண்டின் இறுதிப் பகுதியிலேயே இந்த வலைப்பதிவை மீண்டும் ஆரம்பித்து பதிவுகளை இட்டு வருகின்றேன். அதன் ஒரு கட்டமாக பலகாலமாக இருந்த template ஐ மாற்றிவிட்டு புதிதாக ஒரு template ஐ இட்டிருக்கின்றேன். இந்தக் பிதற்றல்களுக்கிடையில் என்னுடைய கணனி அனுபவத்தைபற்றியும் சிறிது சொல்ல வேண்டும் என நினைக்கின்றேன்.
நன்றாக நினைவிருக்கின்றது கணனி எனும் வார்த்தையை 90களின் பிற்பகுதியிலேயே நான் கேட்டிருக்கின்றேன். மனிதனுடைய மூளையைவிட மிகவும் திறமையானது என ஆசிரியர்கள் கூறிக் கேட்டிருக்கின்றேன். கணனியை பற்றி பல கற்பனை விவாதங்களைக்கூட நானும் என்னுடைய நண்பர்களும் நடத்தியிருக்கின்றோம். அதன் பிறகு 2000ம் ஆண்டளவில் கணனியை பாடசாலையில்தான் நேரடியாக கண்ணால் பார்த்திருக்கின்றேன். ஆனாலும் கணனியுள் புகுந்து விளையாடவேண்டும் எனும் ஆசை அல்லது ஆர்வம் எனக்குள் இருந்து கொண்டிருந்தது.
நான் யாழ்நகரில் என்னுடைய பெரியப்பாவின் வீடடிலிருந்துதான் கல்வியை கற்றுக்கொண்டிருந்தபடியால் இளவாலையில் இருக்கும் எனது வீட்டிற்கு இரண்டு மாதத்திற்கு ஒரு தடவைதான் சென்று வருவேன். 2002ம் ஆண்டு சாதாரணதரப் பரீட்சையை எழுதிவிட்டு விடுமுறையை கழிப்பதற்காக வீட்டிற்கு சென்றேன். அப்போது எனது தந்தை மத்திய கிழக்கு நாட்டிலிருந்து விடுமுறையில் வரும்போது ஒரு கணனியை வாங்கி வந்திருந்தார். 2002ம் ஆண்டு மார்கழி மாதம் 20ம் திகதிதான் முதன்முதலாக நான் கணனியை தொட்டுப்பார்த்த நாள். ஆனாலும் அதை எப்படி இயக்குவது என்று எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. அப்போது என்னுடைய தம்பிக்கு கணனியில் என்னைவிட சற்று அனுபவம் அதிகம். தம்பியின் வழிகாட்டலில் ஒருமாதிரியாக கணனியை இயக்கி கணனியில் உள்ள சீட்டு(Cards) விளையாட்டைபற்றி அறிந்து கொண்டேன்.(நாசமா போக என்று நீங்கள் கூறுவது விளங்குகிறது) அன்றிலிருந்து கணனி விளையாட்டுக்கள் விளையாடுவதும் படம் பார்ப்பதுமாக கணனியுடன் எனது விடுமுறை கழிந்து கொண்டிருந்தது.
பரீட்சை முடிவுகள் வெளியாகி உயர்தரத்தை தொடர்வதற்காக பெரியப்பாவின் வீட்டுக்கு செல்லவேண்டும். எனக்கோ போகும்பொது கணனியையும் எப்படியாவது கொண்டுபோய்விட வேண்டும் என நினைத்தேன். ஆனால் பெரியப்பா தடையாக நின்றார். "கொம்பியூட்டரை இங்க கொண்டுவந்தானென்றால் இவன் இங்க படிக்கமாட்டான் அது அங்கையே இருக்கட்டும்" அப்பாவும் அண்ணனுடைய பேச்சை தட்டாமல நீ போராசா என்று வெறும்கையுடன் அனுப்பி விட்டார்.
அதன் பிற்பாடு எங்களுடை கல்லூரியில் கணனியை ஒரு பாடமாக கற்பித்தார்கள். ஆரம்பத்தில் MS Word அதன்பின்னர் Poweroint அதன்பின்னர் Pascal எனும் கணனி மொழியையும் கற்பித்தார்கள். அன்று கணனியை எனக்கு கற்பித்த கஜன் ஆசிரியரை என்றுமே மறக்க முடியாது. கணனியை பற்றி அனறு நான் வைத்திருந்த எண்ணிலடங்காத சந்தேகங்களை தீர்த்த ஆசான் அவர். தற்போது மாலைதீவில் கணனியை கற்பிப்பதாக அறியமுடிகிறது. அன்றைய காலப்பகுதியில் தான் எனக்கு இணையத்தை பயன்படுத்த சந்தர்ப்பம் கிடைத்தது. முதலில் யாழ் நகரத்தில் அமைந்திருந்த தகவல் தொழிலநுட்ப பூங்காவிலேதான்(IT Park) இணையத்தளத்தை பயன்படுத்தும் சந்தர்ப்பம் கிட்டியது. யாகூ(Yahoo) தளத்தை முதன்முதலாக பார்த்தது இப்போதும் நன்றாக இருக்கிறது. அதன் பிறகு சிறிது காலத்தில் இணையத்தில் எனக்கென்று இலவச தளமொன்றை(ww.vathees.8m.com) உருவாக்கும் அளவிற்கு சாராசரி அறிவை பெற்றுவிட்டேன். அந்தக் காலப்பகுதியில் தான் வலைப்பதிவு பற்றி எனக்கு தெரிய வந்தது. ஆனாலும் அதைப்பற்றி எனக்கு சரியாகத் தெரியவும் இல்லை. அறிந்திருந்தோரும் அப்போது எனக்குத்தெரிந்தளவில் இல்லை. அதனால் வலைப்பதிவெழுதும் திட்டத்தை தற்காலிகமாக கைவிட்டேன் ஆனாலும் இணயத்தை பற்றி நிறையவே அறிந்துகொள்ள முற்பட்டேன். எனக்கு தேவையனவரையிலும் அறிந்து கொண்டேன்.
அன்றிலிருந்து இன்றுவரை கணனி சம்மந்தமான பல தகவல்களை பல தேடல்களின் மூலமும் அறிந்தவர்களின் மூலமும் கற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது. கூடுதலாக எனக்கு தொலைக்காட்சி வானொலி போன்ற துறையில் ஆர்வம் அதிகமாக இருந்தபடியால் அவற்றுடன் சம்பந்தப்பட்ட மென்பொருட்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருந்தது. அதாவது Audio Video Editing மென்பொருட்களை தேடிக் கற்பதிலேயே அதிக ஆர்வம் இருந்தது. தற்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
தற்போது என்னுடைய வலைப்பதிவைப் பார்க்கும்போது ஒரு பொழுதுபோக்கிற்காக ஆரம்பித்து சீரியாக செல்கின்றதுபோல தோன்றுகின்றது. சீரியசை கொஞ்சம் குறைத்தால் மிகவும் நல்லது என கூறும் நண்பர்களின் கருத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டுமென
நினைத்திருக்கின்றேன். தொடர்ந்தும் வலைப்பதிவை மெருகேற்றிக் கொண்டு எனக்கு தோன்றுபவை எனக்கு பிடித்தவற்றை தொடர்ந்தும் இந்த வலைப்பதிவின் மூலம் வெளிப்படுத்தவே விரும்புகின்றேன். ஏனென்றால் என் எண்ணங்களை எழுத்துக்களை வெளிப்படுத்த கிடைத்திருக்கும் ஒரு பொக்கிஷமாகவே வலையத்தை நான் கருதுகின்றேன். ஒவ்வொரு நாளும் பதிவு இடாவிட்டாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிற்சயமாக பதிவுகளை தமிழில் இடுவேன்.
3 கருத்துகள்:
wow Nice Template
"தற்போது என்னுடைய வலைப்பதிவைப் பார்க்கும்போது ஒரு பொழுதுபோக்கிற்காக ஆரம்பித்து சீரியாக செல்கின்றதுபோல தோன்றுகின்றது. சீரியசை கொஞ்சம் குறைத்தால் மிகவும் நல்லது என கூறும் நண்பர்களின் கருத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டுமென
நினைத்திருக்கின்றேன். "
அது தான் இங்கேயும் நடக்கிறது........... ஆனால் நான் என்ன எழுதுகிறேன் என்று எனக்கு தெரியாது....
yep
You are correct Kalai anna........
Hello Varnan! Thanks for giving the map of my village, places marked on the net.
It's also interesting to read about the folklore of Eelam Tamils.
Good Luck!
Prince Charles
London
கருத்துரையிடுக