A Promised Land

20 ஜனவரி 2009

அருகிவரும் தமிழரின் அடையாளங்கள்


பேஸ்புக் இணையத்தளத்தில் இலங்கையிலிருந்து ஒலிபரப்பாகும் வெற்றி எப் எம் வானொலியின் குழுவில் குழும அங்கத்தவர் ஒருவர் கேட்டிருந்த கேள்வி காரணமாகவே இப்படியொரு பதிவெழுதுவதற்கு எனக்கு தோன்றியது. தமிழர்கள் தற்போது இருக்கும் சூழ்நிலையில் இது போன்ற பொங்கல் விழா தேவையா என்று அந்த நண்பர் கேள்வியை கேட்டு விமர்சித்திருந்தார். ஏனென்றால் வெற்றி வானொலி தைப்பொங்கல் தினத்தன்று பொங்கல் போட்டியொன்றை கதிரேசன் ஆலயத்தில் ஒழுங்கு செய்திருந்தது. எனவே இவற்றை பற்றி ஒரு பதிவினை கட்டாயம் இடவேண்டும் என எனக்கு தோன்றியது.

தமிழர்களுடைய கலாச்சாரங்களை பண்பாடுகளை அவர்களுடைய தனித்துவமான அடையாளங்களை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வாகவே பொங்கல் போன்ற இவ்வாறான பண்டிகைகள் காண்படுகின்றன. தமிழன் ஆதிகாலந்தொட்டே இவ்வாறான கலாச்சாரங்களை
வெளிப்படுத்தும் விழாக்களை நடத்தி வந்திருக்கின்றான். அத்துடன் எங்களுடைய அடுத்த தலைமுறைகளுக்கும் எங்களுடைய தமிழ் கலாச்சாரங்களையும் பண்பாடுகளையும் கொண்டுசெல்வதற்கு பாதையாக உள்ள ஒரு வழியாகவும் இவை காணப்படுகின்றது. ஆரம்பகாலத்தில் தமிழர்கள் பொங்கலை வெகுவிமர்சையாக கொண்டாடியிருந்தார்கள். அதிகாலையிலேயே எழுந்து முற்றத்திலே கோலம் போட்டு மண்பானையில் அவர்களுடைய சுற்றத்தாருடன் மகிழ்ச்சியாக பொங்கினார்கள். அதன் பிற்பாடு தமிழர்களுடைய வீர விளையாட்டுக்களை கிராமத்தாருடன் போட்டியாக விளையாடி தங்களது அன்றைய நாளை சிறப்பாக கொண்டாடினார்கள்.

ஆனால் இன்று சூரிய ஒளிகூட புகமுடியாத மாடிமனைகளுக்குள் முற்றம் என்றால் என்னவென்று தெரியாத பிள்ளைகளுடன் சமையல் எரிவாயு அடுப்புக்களில் நான்கு சுவர்களுக்குமிடையில் பொங்கவேண்டிய சூழலுக்கு உள்ளாகியிருக்கிறோம். அதன்பிறகு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சிகளையும் கண்குளிரப் பார்த்துவிட்டு அன்றைய நாளை அப்படியே கழித்துவிடுகின்றோம். மிகவும் வருத்தம் தரும் விடயம் என்னவென்றால பணப்பரிசு கொடுத்துத்தான் தற்போது பொங்கலை பொதுஇடத்தில் பொங்கவேண்டியிருக்கிறது. பொங்கல் நாளுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கல் பற்றி பலபேருக்கு தெரியாது. இதனல் இப்போது உள்ள இளைய சந்ததிகள் இவ்வாறான விழாக்களைப்பற்றி சரியாக தெரிந்துகொள்ள முடியாதவர்களாய் அறியதவர்களாக உள்ளனர் என்பது எதிர்காலத்தில் தமிழர்களுடைய கலாச்சாரங்கள் எப்படியிருக்கப் போகின்றது என்பதை அனுமானிக்க கூடியதாக உள்ளது.

இவ்வாறான நிலமை ஏற்படுவதற்கு யாரையும் குற்றம் கூறமுடியாது. ஏனென்றால் கலாச்சாரங்கள் அருகி வருவதற்கு பல காரணங்களை குறிப்பிடலாம். இலங்கையை பொறுத்தவரையில் யுத்தமும் அதன்மூலம் ஏற்படுகின்ற புலம்பெயர்வுகளுமே முதற்காரணமாக காணப்படுகின்றது. அதன்பிறகு ஏனைய கலாச்சாரங்களின் தாக்கம் சினிமா போன்றவற்றையும் குறிப்பிட்டு கூறலாம். ஆனாலும் வருடத்தில் ஒரு நாள் இவ்வாறு வருகின்ற விழாவைக்கூட பண்பாமுகளுடன் முன்னெடுக்க முடியாதவர்களாய் இருக்கின்றோமா என சிந்திக்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது.

எனவேதான் இவ்வாறான விழாக்களை முன்னெடுப்பதற்கும் தமிழ் கலச்சாரங்கள் அழிவடைந்து விடக்கூடாது என்பதற்காக இவ்வாறான விழாக்களை பொதுவான ஓர் இடத்தில் நடாத்தவேண்டிய நிலை காணப்படுகின்றன. அவ்வாறு இல்லாமல் போனால் எதிர்காலத்தில் "பொங்கலோ அப்படியெண்டால் என்ன?" என்று கேட்கும் நிலை உருவாகும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும். தமிழர்கள் தற்போது இருக்கும் நிலையில் ஆடம்பரங்களை தவிர்த்து விழாக்களை சிறப்பாக கொண்டாடினால் மிகவும் சிறப்பாக இருக்கும். எனவே தமிழர்களுடைய பாரம்பரிய விழாக்களை முன்னெடுப்பதற்கு யாரும் பின்னிற்க கூடாது. இவற்றை முன்னெடுத்து அதன்மூலம் எங்களுடைய தனித்துவங்களை எதிர்கால சந்ததிகளும் தெரிந்துகொள்ளும் வழிவகைகளை மேற்கொள்ளும் கடப்பாடு எங்களுக்கு உள்ளதென்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடவும் கூடாது.

2 கருத்துகள்:

Sinthu சொன்னது…

அண்ணா எனக்குப் பிடித்த வானொலியைப் பற்றி எழுதியமைக்கு நன்றி..........(அவர்களுடன் நீங்கள் இணையாததன் காரணம் அறிந்தேன்)

Vathees Varunan சொன்னது…

நன்றி. என்னிடம் கேட்டிருந்தால் கூறியிருப்பேனே சிந்து