A Promised Land

24 ஜூன் 2018

வடக்கின் சிறார்களுக்கு நன்மைகளை கொண்டுவந்த "சிறுவர்களை பாதுகாப்போம்" தேசிய செயற்திட்டம்


சிறுவர்களைப் பாதுகாப்போம் செயற்திட்டம் நாட்டின் பல பிரதேசங்களிலும் ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற அதேவேளை இந்த செயற்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சி மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றதுடன் வடக்கு மக்களுக்கு சாதகமான பல பலன்கள் ஜனாதிபதியின் கிளிநொச்சி வருகையினால் கிடைத்திருக்கின்றன.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நடைபெற்ற யுத்தம் நம்நாட்டின் சிறார்களை மிக மோசமாக பாதித்திருக்கிறது. குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசத்தின் சிறுவர்கள் உடல் உள ரீதியிலும் பௌதீக ரீதியிலும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். வடக்கில் இறுதி யுத்தம் இடம்பெற்ற கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட சிறார்கள் உடல் உள ரீதியில் மாத்திரமன்றி சமூக ரீதியிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுடைய குடும்பத்தில் ஏதேனுமொரு இழப்பினை இந்த யுத்தம் அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது.

எனவே இச்சிறுவர்களை அரவணைத்துச் செல்லவேண்டிய பொறுப்பு அரசாங்கதிற்கு இருக்கின்றது. இந்தப் பிரச்சினைகளை சரியாக புரிந்து கொண்டுள்ள ஜனாதிபதி  வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தை தெரிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   

இந்த தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக போரினால் பெற்றோரை இழந்து சிறுவர் இல்லங்களில் தங்கி கல்வி கற்றுவரும் சிறுவர்களை பாதுகாத்து அவர்களை உடல் மற்றும் உள ரீதியில் மேம்படுத்தும் நோக்கில் குறித்த சிறுவர் இல்லங்களை மேம்படுத்துவதற்கு 4.85 மில்லியன் ரூபா நிதி ஜனாதிபதி அவர்களால் அந்த நிகழ்வில் வைத்து  வழங்கப்பட்டது.  

கிளிநொச்சி மாவட்டம் மட்டுமன்றி முழு வடமாகாணத்திலும் போரின் காரணமாக அங்கவீனமடைந்துள்ள சிறுவர்கள் கல்வி கற்கும் தெரிவுசெய்யப்பட்ட 25 பாடசாலைகளில் அவர்களுக்கான விசேட பாதைகளையும் விசேட மலசலகூடங்களையும் ஏனைய பௌதீக வசதிகளையும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் மேலும் 24.95 மில்லியன் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டது.  

அதேபோல கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் சுத்தமான குடிநீர் தட்டுப்பாடு காரணமாக சிறுநீரக நோய் பரவி வருவதை கண்டறியப்பட்டிருக்கின்றது. ஆகையால் சிறிநீரக நோயிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு 1000 சிறிய நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இந்நிகழ்வில் வைத்து வழங்கப்பட்டன. சிறுநீரக நோயின் பரவலை கட்டுப்படுத்தவும் தூய நீரின் பயன்பாடு தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் இந்த செயற்பாடு ஒரு ஆரம்பமாக அமையும்.


ஒழுக்கமுள்ள எதிர்கால பிரஜைகளை நம்நாட்டில் உருவாக்க வேண்டுமாயின் சிறுவர்கள் தனது பாலர் வகுப்பிலிருந்தே ஒழுக்கத்தினையும் சமூகம் மீதான மனித நேயத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு அடித்தளமாக அமைவது இந்த முன்பள்ளிக் கல்வியே. ஆகையினால் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முன்பள்ளிகளுக்கு தேவையான வசதி வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பற்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. அந்த அமைச்சின் நிதியொதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளிகளுக்கு தேவையான நூல்கள், கற்றல் உபகரணங்கள் மற்றும் முன்பள்ளி உபகரணங்கள் என்பன அன்றைய நிகழ்வின்போது ஜனாதிபதி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு கிளிநொச்சி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் பாதுகாப்பற்று வாழும் குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களை இனங்கண்டு அவர்களை பொருளாதார மற்றும் பௌதீக ரீதியில் மேம்படுத்துவதற்காக சிறுவர் நன்நடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை திணைக்களத்தினால்  பாதுகாப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக சிறுவர்களின் பாதுகாப்பு குடும்பத்தினுள்ளேயே உறுதிப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனடிப்படையில் அவ்வாறன குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அக்குடும்பங்களுக்கு பொருளார உதவிகள் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 06 குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபா வீதம் அன்றைய நிகழ்வில் ஜனாதிபதி  அவர்களால் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இடம்பெற்ற இன்னுமொரு முக்கிய விடயமாக வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்துவந்த 120.89 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதை குறிப்பிடலாம். அவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை குறிப்பிட்ட மாவட்டங்களின் செயலாளர்களிடம் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் 62.95 ஏக்கர் காணியும் கிளிநொச்சியில் 5.94 ஏக்கரும் முல்லைத்தீவில் 52 ஏக்கர் காணிகளுமே இவ்வாறு இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டது. ஆக வடக்கு கிழக்கில் படையினரின் வசிருந்த 80 வீதமான பொதுமக்களின் காணிகள் இதுவரை மீண்டும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.


சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத்திட்டதின் கிளிநொச்சி நிகழ்வுக்கு சமாந்தரமான இன்னுமொரு முக்கியமான நிகழ்வும் கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலயத்தில் அன்றைய தினமே இடம்பெற்றது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி கிளிநொச்சியில் அமைக்கப்பட் விசேட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைப்பதற்காக வருகை தந்த ஜனாதிபதி அவர்களிடம் பொருளாதார மத்திய நிலையத்திற்கு மிக அண்மையில் அமைந்துள்ள கனகபுரம் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் தமது பாடசாலைக்கு நிரந்த விளையாட்டு மைதானம் எதுவும் இல்லை. ஆகவே எமது பாடசாலைக்கு ஒரு விளையாட்டு மைதானத்தை அமைத்துத் தரும்படி வேண்டுகிறோம் ன்று ஜனாதிபதியிடம் தமது விளையாட்டு மைதானக் கோரிக்கையை முன்வைத்தார்கள்.


மாணவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த ஜனாதிபதி அவர்கள் இலங்கை விமானப்படை தளபதி கபில ஜயம்பதி அவர்களிடம்>  கனகபுரம் மகா வித்தியாலயத்திற்கான விளையாட்டு மைதானத்தை அமைத்துக் கொடுக்கும்படி உடனடியாகவே ஆலோசனை வழங்கினார்.  பாடசாலைக்கு அருகிலிருந்த அரச காணியினை கரச்சி பிரதேச செயலாளர் மற்றும் கிளிநொச்சி அரசாங்க அதிபர் ஊடாகப் பெற்று சுமார் ஐந்து மில்லியன்கள் செலவில் விமானப் படையினர் விளையாட்டு மைதானத்தை அமைத்து முடித்திருந்தனர். அதனை மாணவர்களுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசன அவர்களின் தலைமையில் இடம்பெற்றமை விசேட அம்சமகும்.



அந்த வகையில் ஜனாதிபதியின் கிளிநொச்சி விஜயமானது கிளிநொச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்லாது முழு வடமாகணத்திற்குமே நன்மையாகவே அமைந்திருந்தது.


18 ஜூன் 2018

"சிறுவர்களைப் பாதுகாப்போம்" தேசிய வேலைத்திட்டம்


சிறுவர்களே இன்றைய எமது சமூகத்தின் நாளைய சிறந்த பலனுக்காக விதைக்கப்படும் விதைகள். ஐக்கிய நாடுகளின் சர்வதேச சிறுவர் சாசனத்தின் முதலாவது சரத்தின்படி ஆண் பெண் வேறுபாடின்றி பதினெட்டு வயதுக்குட்பட்ட சகலரும் சிறுவர்களேயாவார். இந்த சாசனத்தின்படி சிறுவர்களுக்கான உரிமைகள் அனைத்தும் மனித உரிமைகளாகவே கொள்ளப்படுகின்றது. சிறுவர்கள் சமூகத்தில் முக்கியமானவர்களாக இருப்பதன் காரணமாகவே அவர்களுக்கான பாதுகாப்பு இவ்வாறு சாசன ரீதியில் எழுதப்பட்டிருக்கின்றது.

ஓவ்வொரு நாடுகளின் அரசாங்கங்களும் சிறுவர்களை பாதுகாப்பதற்கான சட்டதிட்டங்களை தமது அரசியலமைப்பில் முதன்மைப்படுத்தி சிறுவர்களை பாதுகாப்பதற்கான செயற்திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. நம்நாட்டைப் பொறுத்தவரையிலும் சிறுவர் விவகாரத்திற்கென்று அமைச்சரவை அமைச்சொன்று காணப்படுகின்றது. அது கடந்த காலத்திலும் தற்போதும் சிறுவர்களுக்காக செயற்பட்டு வருகின்றது.

நம்நாட்டில் சிறுவர்களை தொடர்பில் பணியாற்றக்கூடிய பொறிமுறையொன்று காணப்பட்டாலும் அதற்கும் மேலதிகமாக "சிறுவர்களைப் பாதுகாப்போம்" எனும் தேசிய செயற்திட்டம் ஜனாதிபதி அலுவலகத்திகன் கீழ் செயற்பட்டு வருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சிறுவர்கள் மீது கொண்டிருக்கும் அளவற்ற அன்பு மற்றும் கரிசனையின் காரணமாக, "சிறுவர்களை பாதுகாப்போம்" என்ற செயற்திட்டத்தினை தனது எண்ணக்கருவுக்கு அமைய உருவாக்கி தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தி வருகின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அமைச்சராக இருந்த காலத்திலேயே இவ்வாறான ஒரு செயற்திட்டத்தினை பொலன்னறுவை மாவட்டத்தில் மிக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திக் காட்டியிருந்தவர். "புலத்திசி தருவோ" அல்லது "பொலன்னறுவை பிள்ளைகள்" என்ற பெயரில் பொலன்னறுவை மாவட்ட சிறார்களை பாதுகாத்து அவர்களை மேம்படுத்தும் நோக்கில் இந்த செயற்திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்தியிருந்தார். அதன் காரணமாகவே முழுநாட்டு சிறுவர்களும் பயன்பெறவேண்டும் என்ற நோக்கில் இந்த தேசிய வேலைத்திட்டத்தினை ஜனாதிபதியாக பதவியேற்ற பின்பு உருவாக்கியிருந்தார்.

சிறுவர்களைப் பாதுகாப்போம் செயற்திட்டம் நாட்டின் பல பிரதேசங்களிலும் ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற அதேவேளை தற்போது வடக்கில் முதன்முறையாக கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில்  நாளை 18 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு உத்தியோக பூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட இருக்கின்றது.  

மூன்று தசாப்பதங்களுக்கும் மேலான யுத்தம் நம்நாட்டின் சிறார்களை மிக மோசமாக பாதிப்படைய வைத்திருந்து. அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசத்தின் சிறர்கள் உடல் உள ரீதியிலும் பௌதீக ரீதியிலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தார்கள். வடக்கில் இறுதியுத்தம் இடம்பெற்ற கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட சிறார்கள் உடல் உள ரீதியில் மாத்திரமன்றி சமூக ரீதியிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுடைய குடும்பத்தில் ஏதேனுமொரு இழப்பினை இந்த யுத்தம் அவர்களுக்கு பரிசாக வழங்கிவிட்டுத்தான் சென்றிருக்கின்றது.

ஆகவே இப்பிரதேசங்களின் சிறார்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி அவர்களை அரவணைத்துச் செல்லவேண்டிய பொறுப்பு அரசாங்கதிற்கு இருக்கின்றது. இந்தப் பிரச்சினைகளை சரியாக புரிந்து கொண்டுள்ள ஜனாதிபதி அவர்கள் வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தை முதலில் தெரிவு செய்திருப்பது உண்மையிலேயே சிறந்ததொரு விடயம்.

இந்த தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக போரின் காரணமாக பெற்றோர்களை இழந்து சிறுவர் இல்லங்களில் தங்கி கல்வி கற்றுவரும் சிறுவர்களை பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கில் குறித்த சிறுவர் இலங்களை மேம்படுத்துவதற்கு தேவையான நிதியினை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி செயலகம் முன்வந்திருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் போரின் காரணமாக அங்கவீனமடைந்துள்ள சிறுவர்கள் கல்வி கற்கும்; 25 பாடசாலைகளில் அவர்களுக்கான விசேட பாதைகளையும் விசேட மலசலகூடங்களையும் ஏனைய பௌதீக வளங்களையும் இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக அபிவிருத்தி செய்து கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் குடிநீர் பிரச்சினைக்கு மேலதிகமாக தூய நீரின் தட்டுப்பாடு காரணமாக சிறுநீரக நோய் பரவி வருவதும் கண்டறியப்பட்டிருக்கின்றது. அதன் காரணமாக சிறிநீரக நோயிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு 1000 சிறிய நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளன. இதன்மூலம் சிறுநீரக நோயின் பரவலை கட்டுப்படுத்தவும் தூய நீரின் பயன்பாட்டை மக்களிடையே அறிமுகப்படுத்தி அவர்களுடைய சுகாதார பழக்கவழக்கங்களை மேம்படுத்தவும் இது உதவியளிக்கும்.

ஒரு ஒழுக்கமுள்ள பிரஜையினை நம்நாட்டில் உருவாக்க வேண்டுமாயின் அப்பிரஜை தனது பாலர் வகுப்பிலிருந்தே ஒழுக்கத்தினையும் சமூகம் தொடர்பான தனது பார்வையினையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். காரணம் பாடசாலைக் கல்வியின் அடித்தளமாக இருப்பது இந்த முன்பள்ளிக் கல்வியே. அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முன்பள்ளிகளுக்கு தேவையான வசதி வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பற்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் சமூக ரீதியிலோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் பாதுகாப்பற்று வாழும் குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களை இனங்கண்டு அவர்களை பொருளாதார மற்றும் பௌதீக ரீதியில் மேம்படுத்துவதற்கான உதவிகளை வழங்குவதற்கும் இந்த அமைச்சின் அனுசரணையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதேபோல் சிறுவர்களுக்கு போருக்கு பிந்திய உள வள ஆலோசனைகள் பல ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தாலும் சிறுவர்களைப் பாதுகாப்போம் தேசிய செயற்திட்டத்திற்கு சமாந்தரமாக அந்நிகழ்ச்சி இடம்பெறும் தினத்தில் அவ்வளாகத்திலேயே உள வள வளர்ச்சிக்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் சட்டரீதியான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்படுவதுடன் அதனை முன்னெடுப்பதற்கான நடமாடும் சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத்திட்டதின் கிளிநொச்சி நிகழ்வுக்கு சமாந்தரமான இன்னுமொரு முக்கியமான நிகழ்வும் கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைப்பதற்காக கிளிநொச்சிக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களிடம் பொருளாதார மத்திய நிலையத்திற்கு மிக அண்மையில் அமைந்துள்ள கனகபுரம் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் தமது பாடசாலைக்கு நிரந்த விளையாட்டு மைதானம் எதுவும் இல்லை. பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ள காணியையே தாம் தற்காலிக விளையாட்டு மைதானமாக பாவித்து வந்தோம். தற்போது அதுவும் இல்லாமல் போயிவிட்டது. ஆகவே எமது பாடசாலைக்கு புதிய ஒரு விளையாட்டு மைதான்தை அமைத்துத் தரும்படி கோருகின்றோம் என ஜனாதிபதியிடம் தமது விளையாட்டு மைதானக் கோரிக்கையை முன்வைத்தார்கள்.

மாணவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த ஜனாதிபதி அவர்கள் அருகில் நின்ற இலங்கை விமானப்படை தளபதி கபில ஜயம்பதி அவர்களிடம்கனகபுரம் மகா வித்தியாலயத்திற்கு விளையாட்டு மைதானம் ஒன்றினை அமைத்துக் கொடுக்கும்படி உடனடியாகவே உத்தரவிட்டார்.  பாடசாலைக்கு அருகிலிருந்த அரச காணியினை கரச்சி பிரதேச செயலாளர் மற்றும் கிளிநொச்சி அரசாங்க அதிபர் ஊடகப் பெற்று விமானப் படையினர் விளையாட்டு மைதானத்தை தற்போது அமைத்து முடித்திருக்கின்றனர்.

நாளை திங்கட்கிழமை கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தினை மாணவர்களுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கவுள்ளார்.

ஒட்டுமொத்தத்தில் ஜனாதிபதியின் நாளைய கிளிநொச்சி விஜயமானது கிளிநொச்சி மாவட்டத்திற்கும் மக்களுக்கும் அதிகளவு நன்மையையே வழங்கப் போகின்றது. குறிப்பாக நாட்டின் எதிர்கால நம்பிக்கையான சிறுவர்களுக்கு காத்திரமான பல நன்மை பயக்கும் விடயங்கள் கிடைக்கவிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். சிறுவர்களைப் பாதுகாப்போம் வேலைத்திட்டம் போரின் வடுக்களிலிருந்து மீள முயற்சிக்கும் சமூகத்திற்கு நம்பிக்கையூட்டுவதாக அமையும் அதேவேளை பிரதேசத்தின் அரசாங்க அதிகாரிகள் ஜனாதிபதி அலுவலகத்துடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணுவதன் மூலம் காத்திரமான உதவிகளை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.


(கடந்த 17.06.2018 யாழ் உதயன் பத்திரிகையில் வெளியாகிய கட்டுரை)

10 ஜூன் 2018

வினைத்திறனற்ற வடமாகாண மீன்பிடி அமைச்சு...?



வடபகுதியில் தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்பான செய்திகள் கடந்த சில நாட்களாக அதிகளவில் கவனிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. ஆரம்பத்தில் முல்லைத்தீவின் கொக்கிளாய் நாயாறு போன்ற பிரதேசங்களிலேயே தென்பகுதி மீனவர்களுடைய ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத மீன்பிடி இடம்பெற்று வந்தன. தற்போதும் அது அவ்வாறு  இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விடயம்  பற்றி தமிழ் ஊடகங்கள் பரந்த அளவில் அறிக்கையிட்டுக் கொண்டு வருவதை காணக்கூடியதாக இருந்தன.

தற்போது எழுந்துள்ள புதிய பிரச்சினை யாழ் வடமராட்சி கிழக்கில் வெளிமாவட்ட மீனவர்கள் அத்துமீறி மீன்பிடி (கடலட்டை பிடித்தல்) நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு ஆகும். தற்போது வடக்கில் பூதாகரமாகியுள்ள இவ்விடயம் தொடர்பில் செய்திகள், ஆசிரியர் தலையங்கங்கள், கட்டுரைகள் ஆகியவற்றை தமிழ்ப் பத்திரிகைகளில் நாளாந்தம் காணக்கூடியதாக இருக்கின்றது.

வடமராட்சி கிழக்கின் கடற்கரையோர பகுதியில் உள்ள பாடுகளின் (வாடியமைத்து மீன்பிடிக்கும் முறை) உரிமையாளர்கள் தமது பாடுகளையும் அதற்கான கரையோரக் காணிகளையும் குத்தகை அடிப்படையில் வெளிமாவட்ட மீனவர்களுக்கு வழங்கியிருப்பதாகவும் அவற்றைப் பெற்றுக் கொண்டவர்களே அங்கு மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அறியக்கிடைத்தது. அதற்கான சகல ஆவணங்களையும் உரிமையாளர்களே வைத்திருப்பதாக சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட வெளிமாவட்ட மீனவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். அவ்வாறான ஒருவர் 11 இலட்சம் ரூபாயினை உரிமையாளருக்கு கொடுத்தே குறிப்பிட்ட பாடுவினை வாங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். இவ்வாறு அங்கு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் வெளிமாவட்ட மீனவர்கள் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட பாடுகளுக்கு இலட்சக்கணக்கில் குத்தகைப் பணம் செலுத்தியே இவ்வாறு வாடியமைத்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பது தெரியவருகிறது. அத்தோடு சில உள்ளுர் மக்களும் உரிமையாளரிடம் பாடுவினை குத்தகைக்கு வாங்கி அதை மீண்டும் வெளிமாவட்ட மீனவர்களுக்கு குத்தகைக்கு வழங்கியிருக்கும் சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்ற. 

ஆயினும் இந்தக் காணிகள் தொடர்பிலும் தற்போது சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இந்தக் காணிகளுக்கான உறுதிகள் அவற்றிற்கான உரிமையாளர்களிடம் இருப்பதாக உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும் இக்காணிகளுக்கு பதிலாக மாற்றுக் காணிகள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதுடன் குறிப்பிட்ட காணிகள் அரச காணிகளாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மருதங்கேணி பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

எவ்வாறாயினும் வெளிமாவட்ட மீனவர்கள் பாரிய நிதிப் பலத்துடனும் பெருமளவு நவீன உபகரணங்களைக் கொண்டும் வாடியமைத்து இந்த கடலட்டை மீன்பிடியினை மேற்கொண்டு வருவதால் பாரம்பரியா மீன்பிடி முறையில் அன்றாடம் மீன்பிடித்து தமது வாழ்க்கையினை கொண்டு நடத்தும் உள்ளுர் மீனவர்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 


வடமராட்சி கிழக்கில் குத்தகைக்கு பாடுகளை எடுத்து இவ்வாறு மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மன்னார் பிரதேச முஸ்லிம் மீனவர்களும் புத்தளம் உடப்பு பகுதியைச் சேர்ந்த தமிழர்களுமேயாவார். குறிப்பிட்டளவு சிங்களவர்களும் இதில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அவர்களும் கூலிக்கு இங்கே அழைத்து வரப்பட்டிருப்பவர்கள் ஆகும். எவ்வாறாயினும் இவ்வாறான அணுகுமுறைகளால் பாதிக்கப்பட்டிருப்பதும் பாதிக்கப்படப் போவதும் தமிழ் பேசும் சமூகமே என்பதை நினைவில் கொண்டு அவர்களது வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதே இப்போது தேவையாகின்றது.

இந்த விடயம் தொடர்பாக  யாழ் மாவட்ட செயலகத்தில்  கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற வடக்கின் அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டு, இந்த அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றை நாடப்போவதாக முதலமைச்சர் அறிவித்திருக்கின்றார். முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் மருதங்கேணி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்தப் பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்ததுடன் கடற்தொழில் அமைச்சருடன் இதுதொடர்பில் கலந்துரையாடி தீர்வொன்றினைப் பெற்றுத் தருவதாக கூறியிருக்கின்றார். 

ஆனாலும், பாடுகளின் தமிழ் உரிமையாளர்கள் ஏன் அந்தப் பாடுகளை வெளிமாவட்ட மீனவர்களுக்கு குத்தகைக்கு வழங்குகின்றார்கள் என்பதற்கான காரணங்களை கண்டறிவதற்கோ அல்லது பாரம்பரிய மீன்பிடியில் ஈடுபடும் உள்ளுர் மீனவர்கள் மத்தியில் இவ்வாறான பாரிய நவீனரக மீன்பிடியினை ஊக்குவிப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் வடமாகாண மாகாண மீன்பிடி அமைச்சின் மூலம் மேற்கொள்ளக் கூடிய செயற்திட்டங்கள் தொடர்பில் கண்டறிந்து முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி வடமாகாண முதலமைச்சரும் மக்கள் பிரதிநிதிகளும் மெளனமாகவே இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

தென்னிலங்கை சிங்கள மீனவர்களும், மன்னார், உடப்பு மற்றும் நீர்கொழும்பு போன்ற பிரதேசங்களின் தமிழ் பேசும் சமூகங்களைச் சார்ந்த மீனவர்களும் வடக்கில் இவ்வாறு மீன்பிடியில் ஈடுபடுவதற்கு வருவதற்கான முக்கிய காரணம் வடமாகாண மீன்பிடி அமைச்சின் வினைத்திறனற்ற செயற்பாடேயாகும். வடமாகாணத்தின் எல்லைக்குள் கடல் வளத்தினால் பெற்றுக்கொள்ளக் கூடிய பயன்கள் என்னவென்பதை தெளிவாக இனங்கண்டு அவர்களுக்கு விழிப்புணர்வு, அறிவு மற்றும் வசதிகளை வழங்கி அவர்களுக்கும் பாரம்பரிய மீனபிடிக்கு மேலதிகமாக இவ்வாறான பாரிய, நவீன மீன்பிடி முறைகளை மேற்கொள்ளத்தக்க வகையில்  பொருளாதார ரீதியிலும் தொழில்நுட்ப ரீதியிலும் உதவிகளை வழங்கி மேம்படுத்துவதே இந்தப் பிரச்சினைக்கு தீர்வாகும்.

வடக்கின் இத்தகைய விடயங்கள் தொடர்பில் ஊடகங்களும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். அரசியல்வாதிகளும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல் என்பதின் உண்மை நிலையினை தெரிந்து கொள்ளாது  கூறினால் அப்படியே செய்தியாக்குவது ஊடக தர்மமல். ஏனென்றால் தென்னிங்கை மீனவர்கள் என்ற சொற்பதம் தெற்கின் சிங்களவர்களை குறிப்பதற்கே இவ்வளவு காலமும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. சிங்களவர்கள் நேரடியாக சம்மந்தப்படாத இந்தப் வடமராட்சி கிழக்கு மீன்பிடிப் பிரச்சினையில் அவர்கள் மீது குற்றம் சுமத்துவதுபோன்று அறியிக்கையிடுவது சிங்களவர்கள் மீது மேலும் தமிழ் மக்கள் வெறுப்பினை உமிழ்வதற்கே காரணமாக அமையும். அது தமிழ் ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளுக்கு சாதகமானதாக அமைந்தாலும் இனங்களுக்கிடையிலான பிளவினையே மேலும் அதிகரிக்க ஏதுவாக அமையும்.

இதன் காரணமாகவே வடமராட்சி கிழக்கு பகுதியில் மீன்பிடித் தொழில் செய்யும் வெளிமாவட்ட மீனவர்கள் சிலர் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களை சந்தித்து மனிதாபின அடிப்படையில் ஒரு மாத கால அவகாசத்தை கோரியிருப்பதாகவும் அத்தோடு தாம் வடக்கின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் என்றும் தம்மை தென்னிலங்கை மீனவர்கள் என அழைக்க வேண்டாமெனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். தற்போது அவர்களுக்கு தமது தொழிலினை அங்கிருந்து அகற்றிக் கொள்வதற்காக இம்மாதம் 23 ஆம் திகதிவரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

ஆகவே வடமராட்சி கிழக்கில் மீன் பிடிப்பவர்கள் மன்னார் மற்றும் புத்தளம் உடப்பு பிரதேசங்களை சேர்ந்த மீனவர்களாகவும் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்களைச் சேர்ந்தவர்களாகவுமே இருக்கின்ற நிலையில் வடக்கின் அரசியல்வாதிகளும் தமிழ் ஊடகங்களும் தமது சுய இலாபங்களுக்காகவே தென்னிலங்கை மீனவர்கள் என்ற சொற்பதத்தினை பாவிக்கின்றார்கள் என்று கருதமுடிகின்றது. அரசியல்வாதிகள் அவ்வாறு அழைத்தாலும் அதனை செய்தியாக அறிக்கையிடும் தமிழ் ஊடகங்கள் சரியா அதனைப் பிரசுரிக்க வேண்டியது அவசியமாகும்.

தமிழ் ஊடகங்களின் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் இனங்களுக்கிடையில் வெறுப்பினை மேலும் அதிகரிக்கவே செய்யும். ஆகவே உண்மையான சரியான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கவேண்டிய பொறுப்பும் கடப்பாடும் தமிழ் ஊடகங்களுக்கு உள்ளது.  அத்தோடு வடமாகாண மீன்பிடி அமைச்சானது பாரம்பரிய மீன்பிடிக்கு மேலதிகமாக இவ்வாறான சட்டரீதியாக மேற்கொள்ளக்கூடிய நவீனரக மீன்பிடிகளையும் மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தேவையான செயற்திட்ட வரைபொன்றை தயாரிக்கவும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அழுத்தங்களை வழங்கவேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கும் இருக்கின்றது என்பதை உணர்ந்து செயற்படுவதே சாலச்சிறந்தது.
  
-வதீஸ் வருணன்-




03 ஜூன் 2018

2020 இற்குள் காணி விடுவிப்பு 100 வீதம் சாத்தியமாகுமா?


தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தின் பலாலிப் பிரதேசத்தில் நிலைகொண்டிருந்த படையினர் புலிகளுக்கு எதிரான போர் என்ற கோசத்துடன் மெல்ல மெல்ல முன்னேறி தமிழ் மக்களின் நிலங்களை பிடித்துக் கொண்டு வந்தனர். அப்போது உங்களது உயிர்களை காப்பாற்றிக் கொள்ள இடம்பெயர்ந்து செல்வதற்கு தயாரானபோது உங்களுடைய பாட்டன், பாட்டி அல்லது வயதான பெரியவர்கள்,  தமது சொந்த ஊரைவிட்டு நிலத்தைவிட்டு வரமாட்டோம் என்று அடம்பிடித்திருப்பார்கள். அவர்களது மனதை மாற்றுவதற்கு எவ்வளவுதான் பல காரணங்கைளை கூறினாலும் அவர்கள் தமது முடிவில் உறுதியாக நின்றிருப்பார்கள். அதனால் வலுக்கட்டாயமாக அவர்களையும் அழைத்துக் கொண்டு முன்னேறி வரும் படையினரின் தாக்குதல்களில் இருந்து உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உங்கள் வீட்டையும், ஊரையும் உடமைகளையும் அப்படியே விட்டுவிட்டு இடம்பெயர்ந்து இருப்பீர்கள். யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது இலங்கையின் ஏனைய இடங்களில் இடப்பெயர்வுகளை சந்தித்தவர்கள் இப்படியான ஒரே அனுபவத்தைத்தான் கொண்டிருப்பார்கள்.

வரலாற்றுக் காலம்தொட்டு மனிதன் தனது வாழ்க்கை முறையினை தான் வாழ்ந்த நிலத்தினை அடிப்படையாகக் கொண்டே அமைத்து வந்திருக்கிறான். அவனுக்கும் அவன் சார்ந்த நிலத்துக்குமிடையிலான தொடர்பு மிகவும் நெருக்கமானதாகவும் உணர்வுபூர்வமானதாகவும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்ததாகவே அமைந்திருந்தது.

இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான உள்நாட்டு யுத்தம் வடக்கு கிழக்கில் பல்லாயிரக் கணக்கானவர்களை அகதிகளாக்கியது. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இதன் பாதிப்பு அதிகமாகவே இருந்த்து. யாழ்ப்பாணத்தின் விவசாய உற்பத்தி வளம் பொருந்திய வலிகாம் வடக்கு பகுதியில் மாத்திரம் பல்லாயிரக்கணக்காண குடும்பங்கள் தமது வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்து அகதி முகாம்களிலும் வேறு இடங்களிலும் வசிப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

2009 இல் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமது சொந்த இடங்களில் மீளக் குடியேறி தமது வாழ்க்கையினை ஆரம்பிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இடம்பெயர்ந்திருந்த மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது. ஆனால் அவர்களுடைய அந்த எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்து தனது நாட்டு மக்களின் வாழ்க்கைப் பிரச்சினையை தீர்ப்பதற்கு மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னைய அரசாங்கம் போதுமான முனைப்புக்களை மேற்கொண்டிருக்கவில்லை. பெயரளவில் சிறிதளவு காணிகளை விடுவித்துவிட்டு ஏனைய வளம் நிறைந்த தமிழர்களின் பிரதேசங்களை உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே தொடர்ந்தும் வைத்திருந்தது. இராணுவம் இன்னுமொருபடி மேலே சென்று இனியும் தமிழர்களின் இடங்களில் ஒரு அங்குலத்தைக்கூட அவர்களுக்கு மீண்டும் வழங்க முடியாது என வெளிப்படையாகவே அறிவித்திருந்தது.  இதன் காரணமாக தமது பூர்வீக நிலங்களுக்கு மீண்டும் சென்று குடியேறுவதற்கு காத்திருந்த மக்கள் மிகுந்த விரக்திக்கு ஆளாகியிருந்தனர்.

இந்த நிலையிலேயே 2015 ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் அமோக ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேன இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். தமது நிலங்கள் தமக்கு கிடைக்குமா கிடைக்காதா என்றே தெரியாமல் விரக்தியில் இருந்த மக்களுக்கு இந்த மாற்றம் ஒரு புது நம்பிக்கையை ஏற்படுத்தியது.

அந்த நம்பிக்கையினை வீணாக்காது உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த பொதுமக்களின் காணிகளை மீண்டும் அவர்களுக்கு வழங்கும் செயற்பாடு ஜனாதிபதி மைத்திரியின் தலைமையில் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வந்தது. அவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் மீள் குடியேறுவதற்கான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வந்தன. இதுவரையிலும் வடக்கு கிழக்கில் 85 வீதமான மக்களின் காணிகள் அவர்களுக்கு மீளவும் கையளிக்கப்பட்டிருப்பது விசேடமாக குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். அதிலும் குறிப்பாக யாழ் வலி.வடக்கின் 75 வீதமான காணிகள் இவரை விடுவிக்கப்பட்டிருக்கின்றன.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹசைன் அவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தபோது “படையினரின் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவித்து உள்நாட்டில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களிலும் வேறு இடங்களிலும் தற்காலிகமாக தங்கியுள்ள மக்களை விரைவாக மீள்குடியேற்றுங்கள்” என்று கோரிக்கையினையும் விடுத்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக 2015 டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரி தெல்லிப்பளை கோணப்புலம் பகுதியில் இருந்த அகதி முகாமுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நேரடியாக விஜயம் மேற்கொண்டு அம்மக்களின் அவலங்களை கண்கூடாக பார்த்திருந்தார். அதுமட்டுமல்லாது அம்மக்கள் தமது நிலங்களுக்கு மீண்டும் செல்லமுடியாமல் அகதி முகாமில் முகம்கொடுக்கும் அவல வாழ்க்கையினை தென்னிலங்கை மக்கள் அறிந்து கொள்ளுமாறு செய்த்துடன் இனவாதம் பேசும் அரசியல்வாதிகளையும் அகதி முகாம்களுக்கு வந்து இம்மக்கள் படும் அவல வாழ்க்கையினைப் பாருங்கள் என்றும் அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் நான் செய்து தருகிறேன் என்றும் கூறியிருந்தார்.

ஏனென்றால் வடக்கில் தமிழ் மக்களுடைய காணிகள் அவர்களுக்கு மீண்டும் அரசாங்கத்தினால் வழங்கப்படும்போது தெற்கின் இனவாதம் பேசும் அரசியல்வாதிகள் “வடக்கில் இராணுவ முகாம்கள் ஒவ்வொன்றாக மூடப்படுகின்றது. புலிகள் மீண்டும் உயிர்தெழப் போகின்றார்கள். தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து” என்றவாறு தென்னிலங்கை சிங்கள மக்களை பதட்டமடையச் செய்யும் முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்திருந்தமையே அதற்கு காரணம்.

ஆயினும் கடந்த இரண்டு வருடங்களில் படிப்படியாகவும் வேகமாகவும் விடுவிக்கப்பட்டு வந்த இந்த காணி விடுவிப்பில் சிறிய ஒரு தாமதம் ஏற்பட்டிருப்பது போன்றதான தோற்றப்பாடு தற்போது ஏற்பட்டிருக்கின்றது. அது உண்மையும் கூட. தம்முடைய அரசியலை முன்னெடுப்பற்காக மக்களை இன ரீதியில் பிரித்தாளும் சூழ்ச்சியினைக் கையாளும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் சிங்கள மக்கள் மத்தியில் இந்த காணி விடுவிப்பு தொடர்பில் ஏற்படுத்தியிக்கும் ஒரு அச்சநிலையே இதற்கு காரணமாகும்.

காணி விடுவிப்பு தொடர்பில் 2015, 2016 மற்றும் 2017 இல் சிங்கள மக்களிடையே இருந்த நிலைப்பாட்டுக்கும் உள்ளுராட்சி தேர்தலுக்கு பின்னரான 2018 இன் நிலைப்பாட்டுக்குமிடையில் பாரிய வேறுபாட்டினைக் காணமுடிகிறது. இதன் காரணமாகவே காணி விடுவிப்பு தொடர்ச்சியாக தாமதமடைந்து வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனாலும் ஜனாதிபதி தமிழ் மக்களின் காணிகள் அவர்களுக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உறுதியாகவே இருக்கின்றார். ஆனால் தென்னிலங்கையினை கவனமாக கையாண்டு அது தொடர்பில் அவர்களுக்கு பூரண தெளிவினை ஏற்படுத்திக் கொடுக்கும் அதேசமயம் எஞ்சியிருக்கும் தமிழ் மக்களின் காணிகளையும் வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் இருக்கின்றது.

இந்நிலையில் நல்லிணக்க அரசாங்கத்திற்கு இன்னும் இருப்பது 18 மாதகாலம்  மட்டுமே. ஆகவே தமிழ் அரசியல்வாதிகளின் பங்கு காணி விடுவிப்பு விடயத்தில் எவ்வாறு இருக்கப் போகின்றது என்ற கேள்விய இயல்பாகவே எழுகின்றது. காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடனும் அரசாங்கத்துடனும் இணைந்து தூரநோக்குடனும் இராஜதந்திர ரீதியிலும் பணியாற்ற வேண்டிய அவசர தேவை அவர்களுக்கு இருக்கின்றது. அவ்வாறு செயற்பட்டால்தான் காணி விடுவிப்பிற்கு தெற்கில் சிங்கள மத்தியில் எழுந்திருக்கும் சவால்களை முறியடித்து தமிழ் மக்களின் காணிகளை இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் முழுமையாக அவர்களுக்கு பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையினை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

(04.06.2018 ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த கட்டுரை)

27 மே 2018

உற்பத்தியில் தன்னிறைவடைவதற்கு உதவும் கிராமசக்தி மக்கள் செயற்திட்டம்



ஒரு நாடானது சமூக, கலை கலாசார மற்றும் பொருளாதார ரீதியில் அடைந்துகொள்ளும் தன்னிறைவை அபிவிருத்தி என்று கூறலாம். இதனை அடிப்படையாகக் கொண்டே ஒரு நாட்டினை அபிவிருத்தி அடைந்த நாடு, அபிவிருத்தி அடைந்துவரும் நாடு மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள நாடு என வகைப்படுத்தப்படுத்தலாம்.

எமது நாடு சுதந்திரமடைந்து 70 வருடங்கள் கடந்த நிலையில் இன்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடு என்றே அழைக்கப்படுகின்றது. எழுத்தறிவிலும் கலை கலாசார ரீதியிலும் நமது நாடு முன்னேற்றமடைந்து இருந்த போதிலும் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் இன்னும் தன்னிறைவை அடைய முடியாமலிருப்பதே இதற்கு பிரதான காரணமாகும்.

வரலாற்றுக் காலம்தொட்டே எமது நாடு விவசாயத்தினை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடாகவே இருந்து வந்தாலும் இன்னமும் விவசயத்துறையிலும் உள்ளுர் உற்பத்தித் துறையிலும் தன்னிறைவை அடையமுடியாமலே இருக்கின்றது.

ஆசியப் பிராந்தியத்தைப் பொறுத்தளவில் மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை நாம் உதாரணமாக எடுத்துக் கொண்டால் உள்ளுர் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் சிறந்த இடத்தினை மலேசியாவும் சேவை வழங்கும் நாடு என்ற வகையில் சிங்கப்பூரும் முன்னணியில் இருந்து வருகின்றன.

அதிலும் குறிப்பாக சிங்கப்பூரானது, துறைமுகம், கப்பற்துறை, எண்ணைய் சுத்திகரிப்பு மற்றும் வழங்கல், கல்வி, சுகாதாரம், விமான சேவை போன்ற துறைகளில் உலகின் முன்னணி சேவை வழங்குனராக செயற்பட்டு வருகின்றது. வெறுமனே 704 சதுர கிலோமீட்டர்கள் சுற்றளவைக் கொண்ட இந்த நாடு சுற்றுலாத் துறையிலும் அபரிமித வளர்ச்சியடைந்திருக்கின்றது.

எமது நாட்டைப் பொறுத்தவரை மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இருக்கும் அத்தனை சிறப்பம்சங்களையும் அது கொண்டிருப்பதுடன், கிழக்குலகையும் மேற்குலகையும் இணைக்கும் உலகத்தின் மிகமுக்கிய கேந்திர மத்திய நிலையமாக இருந்தும்கூட, பொருளாதார ரீதியில் ஏன் எமக்கு தன்னிறைவை அடைந்துகொள்ள முடியவில்லை என்ற கேள்வி எழுகின்றது. 

சுதந்திரமடைந்ததற்கு பின்னர்  முகம்கொடுக்க நேர்ந்த உள்நாட்டு பிரச்சினைகளே இதற்கான காரணம் என வெறுமனே கைகாட்டிவிட்டுப் தப்பிக்க முடியாது. உள்நாட்டு பிரச்சினைகளும் ஒரு காரணமாக இருந்துவருகின்ற போதிலும் அதற்கும்  புறம்பான காரணிகளும் இருக்கின்றன.

இலங்கையைப் பொறுத்தவரையில் விவசாயத்துறை பிரதான உற்பத்தித் துறையாக இருந்தபோதிலும், தேயிலை, இறப்பர், ஏலம், கராம்பு, கறுவாப்பட்டை போன்ற வாசனைத் திரவியங்கள், மாணிக்க கல் உற்பத்தி, சுற்றுலாத்துறை போன்ற துறைகளும் முக்கியமான துறைகளாகவே காணப்படுகின்றன. இவற்றில் தேயிலை உற்பத்தி மற்றும் சுற்றுலாத்துறை ஆகியனவற்றிற்கு உலகலாவிய ரீதியில் காணப்படும் உயரிய கிராக்கியின் காரணமாக இத்துறைகள் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளன. ஆயினும் மேற்குறிப்பிட்ட ஏனையவற்றிற்கும் உலகலாவிய ரீதியில் உயரிய சந்தை வாய்ப்புக்கள் இருக்கவே செய்கின்றன. ஆயினும் அவை கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தித் துறைகளாக இருப்பதனால் அபிவிருத்தி செய்யப்படாமலேயே இருந்து வருகின்றது.  

இத்துறைகளை சரியாக இனங்கண்டு அவற்றை அபிவிருத்தி செய்வதனூடாக தன்னிறைவடைவதை உறுதிப்படுத்தி ஏற்றுமதியினை அதிகரிக்கச் செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை ஆட்சிக்கு வந்த முன்னைய எந்த அரசாங்கங்களும் முன்னெடுத்திருக்கவில்லை. வறுமை ஒழிப்பு என்ற பெயரில் உதவிகளை வழங்குவதுடன் அவை நிறுத்திக் கொண்டுவிட்டன. இதன் காரணமாக மக்கள் உற்பத்தியில் தன்னிறைவை அடையாமல் அரசாங்கத்தில் தங்கிவாழும் நிலையே கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்தது. அதன் உச்சக்கட்டமாக அரிசியினையே இறக்குமதி செய்யவேண்டிய துற்பாக்கிய நிலைமைக்கு நம்நாடு தள்ளப்பட்டது.

இந்தக் குறைபாட்டினை சரியாக இனங்கண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, கிராமங்களை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளை பேண்தகு ரீதியில் அபிவிருத்தி செய்வதனூடாக வறுமையை ஒழித்து, உள்நாட்டில் தன்னிறைவை அடைக்கூடிய வழிவகைகளை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கில் கிராமசக்தி மக்கள் செயற்திட்டத்தினை தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கடந்த ஆண்டில் ஆரம்பித்திருந்தார்.

இச் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக இலங்கையின் 5000 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு, அக்கிராமங்களினூடாக மேற்கொள்ளக்கூடிய உற்பத்திகளை இனங்கண்டு அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதனூடாக உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்கான வழிவகைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒவ்வொரு பிரதேச செயலாளர்கள் பிரிவிலும் இனங்காணப்படும் கிராமங்களில் மக்களின் கூட்டு ஒத்துழைப்பின் மூலமே இந்த தன்னிறைவை ஏற்படுத்த முயல்வதே இத்திட்டத்தின் சிறப்ப்சமாகும். அவ்வாறு ஒரு குழுவாக இணையும் மக்கள் தமக்கான நிறுவனம் ஒன்றை உருவாக்கிக் கொள்வதுடன் உறுப்பினர் ஒருவருக்கு தலா எட்டாயிரம் ரூபாய் என்ற விகிதத்தில் கிராமசக்தி செயற்திட்டத்தினூடாக அந்நிறுவனத்தின் முதலீட்டுக்கு தேவையான நிதியுதவியும் அளிக்கப்படுகின்றது. அந்த நிதியினைக் கொண்டு அவர்கள் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டுமென்பதுடன் சந்தைவாய்ப்பு போன்ற தேவைப்படும் மேலதிக உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக தனியார் துறையினரின் பங்களிப்பும் பெற்றுக் கொடுக்கப்படும். இதற்கு உதரணமாக பதுளையில் உற்பத்தி செய்யப்படும் மலர்களுக்கான சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஊவா மாகாண கிராமசக்தி மலர் சங்கத்திற்கும் இலங்கையின் முன்னணி தனியார் நிறுவனமான ஹேலிஸ் தனியார் நிறுவனத்திற்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கடந்த 21 ஆம் திகதி பதுளையில் ஜனாதிபதி மைத்திரியின் தலைமையில் இடம்பெற்ற கிராமசக்தி முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டமையை குறிப்பிடலாம். 

ஹேலீஸ் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது

இந்த அடிப்படையில் 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் 332 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய 14,022 கிராம அலுவலர் பிரிவுகளிலும் கிராமசக்தி மக்கள் செயற்திட்டத்தினால் நிர்வகிக்கப்படும் சுமார் பதினைந்தாயிரம் நிறுவனங்களை நிறுவுவதனூடாக உற்பத்தியினை பெருக்குவதன் மூலம் பொருளாதாரத்தில் தன்னிறைவையடைந்த இலங்கையினை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டுப் போரினால் அதிகளவில் பாதிப்புக்களை சந்தித்த வடக்கு கிழக்கு மாகாணங்களின் அரச அதிகாரிகள் இந்த கிராமசக்தி செயற்திட்டத்தினை சிறந்த முறையில் உள்வாங்கி தத்தமது பிரதேசங்களில் செயற்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தில் நலிவடைந்திருக்கும் அப்பகுதி மக்களின் உற்பத்தியை ஊக்குவித்து, அவர்களுக்கு விமோசனத்தையும் பெற்றுக்கொடுக்கக் கூடிய சந்தர்ப்பமும் இச்செயற்திட்டத்தினால் தற்போது ஏற்பட்டிருக்கின்றது.

அத்தோடு இலங்கையின் அமைவிடம் கேந்திர முக்கியத்துவம்மிக்கதாக அமைந்திருப்பதால் கல்வி, சுகாதாரம், எண்ணைய் விநியோகம், கப்பற்துறை, விமானசேவை போன்ற துறைகளிலும் சிறந்த சேவை வழங்குனராக செயற்படகூடிய சந்தர்ப்பத்தினை உருவாக்கிக்கொள்ள கிராமசக்தி செயற்திட்டத்தினூடாக நிச்சயமாக வாய்ப்புக் கிட்டும்.

ஆகவே எல்லா வழிகளிலும் மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மையை பயற்கக்கூடிய இந்த கிரமசக்தி மக்கள் செயற்திட்டத்தினூடாக எம்மக்களை பற்றிப்பிடித்துள்ள வறுமையெனும் கொடிய அரக்கனை அகற்றி உற்பத்தியில் தன்னிறைவை பெற்றுக் கொள்வதன் மூலம் தேசிய பொருளாதாரத்திலும் தன்னிறைவை அடைந்து கொள்ளக்கூடிய நிலைமை உருவாகும்.

(27.05.2018 ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த கட்டுரை)