சிறுவர்களைப் பாதுகாப்போம் செயற்திட்டம் நாட்டின் பல பிரதேசங்களிலும் ஏற்கனவே
வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற அதேவேளை இந்த செயற்திட்டத்தின் கிளிநொச்சி
மாவட்ட மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கடந்த திங்கட்கிழமை
கிளிநொச்சி மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றதுடன்
வடக்கு மக்களுக்கு சாதகமான பல பலன்கள் ஜனாதிபதியின் கிளிநொச்சி வருகையினால் கிடைத்திருக்கின்றன.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நடைபெற்ற யுத்தம் நம்நாட்டின் சிறார்களை மிக மோசமாக பாதித்திருக்கிறது. குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசத்தின் சிறுவர்கள் உடல் உள ரீதியிலும் பௌதீக ரீதியிலும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
வடக்கில் இறுதி யுத்தம்
இடம்பெற்ற கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட சிறார்கள் உடல் உள ரீதியில் மாத்திரமன்றி
சமூக ரீதியிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுடைய
குடும்பத்தில் ஏதேனுமொரு இழப்பினை இந்த யுத்தம் அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது.
எனவே இச்சிறுவர்களை அரவணைத்துச் செல்லவேண்டிய பொறுப்பு அரசாங்கதிற்கு இருக்கின்றது.
இந்தப் பிரச்சினைகளை சரியாக புரிந்து கொண்டுள்ள ஜனாதிபதி வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தை தெரிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக போரினால் பெற்றோரை இழந்து
சிறுவர் இல்லங்களில் தங்கி கல்வி கற்றுவரும் சிறுவர்களை பாதுகாத்து அவர்களை உடல் மற்றும் உள ரீதியில்
மேம்படுத்தும் நோக்கில் குறித்த சிறுவர் இல்லங்களை மேம்படுத்துவதற்கு 4.85
மில்லியன் ரூபா நிதி ஜனாதிபதி அவர்களால்
அந்த நிகழ்வில் வைத்து வழங்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டம் மட்டுமன்றி முழு வடமாகாணத்திலும் போரின் காரணமாக அங்கவீனமடைந்துள்ள சிறுவர்கள் கல்வி கற்கும் தெரிவுசெய்யப்பட்ட 25 பாடசாலைகளில்
அவர்களுக்கான விசேட பாதைகளையும் விசேட மலசலகூடங்களையும் ஏனைய பௌதீக வசதிகளையும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் மேலும் 24.95 மில்லியன்
ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டது.
அதேபோல கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் சுத்தமான குடிநீர் தட்டுப்பாடு காரணமாக சிறுநீரக நோய் பரவி வருவதை கண்டறியப்பட்டிருக்கின்றது. ஆகையால் சிறிநீரக நோயிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு 1000 சிறிய நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் முதற்கட்டமாக
தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இந்நிகழ்வில் வைத்து வழங்கப்பட்டன. சிறுநீரக நோயின் பரவலை கட்டுப்படுத்தவும் தூய நீரின்
பயன்பாடு தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வினை
ஏற்படுத்தவும் இந்த செயற்பாடு ஒரு ஆரம்பமாக அமையும்.
ஒழுக்கமுள்ள எதிர்கால பிரஜைகளை நம்நாட்டில் உருவாக்க வேண்டுமாயின் சிறுவர்கள் தனது பாலர் வகுப்பிலிருந்தே ஒழுக்கத்தினையும் சமூகம் மீதான மனித நேயத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு அடித்தளமாக அமைவது இந்த
முன்பள்ளிக் கல்வியே. ஆகையினால் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முன்பள்ளிகளுக்கு தேவையான
வசதி வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பற்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு நடவடிக்கை
எடுத்திருந்தது. அந்த அமைச்சின் நிதியொதுக்கீட்டில்
தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளிகளுக்கு தேவையான நூல்கள், கற்றல் உபகரணங்கள் மற்றும் முன்பள்ளி
உபகரணங்கள் என்பன அன்றைய நிகழ்வின்போது ஜனாதிபதி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு கிளிநொச்சி
மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் பாதுகாப்பற்று வாழும் குடும்பங்களைச் சேர்ந்த
சிறார்களை இனங்கண்டு அவர்களை பொருளாதார மற்றும் பௌதீக ரீதியில் மேம்படுத்துவதற்காக சிறுவர் நன்நடத்தை மற்றும் சிறுவர்
பாதுகாப்பு சேவை திணைக்களத்தினால் பாதுகாப்பு
திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக சிறுவர்களின் பாதுகாப்பு குடும்பத்தினுள்ளேயே
உறுதிப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனடிப்படையில் அவ்வாறன
குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அக்குடும்பங்களுக்கு பொருளார உதவிகள் வழங்குவதற்கும்
தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 06 குடும்பங்களுக்கு
தலா 50 ஆயிரம் ரூபா வீதம் அன்றைய நிகழ்வில் ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இடம்பெற்ற இன்னுமொரு முக்கிய விடயமாக வடக்கு
மாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இராணுவக் கட்டுப்பாட்டு
பகுதிக்குள் இருந்துவந்த 120.89 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதை குறிப்பிடலாம். அவ்வாறு
விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை குறிப்பிட்ட மாவட்டங்களின் செயலாளர்களிடம்
கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் 62.95 ஏக்கர் காணியும் கிளிநொச்சியில் 5.94 ஏக்கரும்
முல்லைத்தீவில் 52 ஏக்கர் காணிகளுமே இவ்வாறு இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டது. ஆக
வடக்கு கிழக்கில் படையினரின் வசிருந்த 80 வீதமான பொதுமக்களின் காணிகள் இதுவரை மீண்டும்
அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத்திட்டதின் கிளிநொச்சி நிகழ்வுக்கு சமாந்தரமான
இன்னுமொரு முக்கியமான நிகழ்வும் கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலயத்தில் அன்றைய தினமே இடம்பெற்றது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி கிளிநொச்சியில்
அமைக்கப்பட்ட விசேட பொருளாதார
மத்திய நிலையத்தை திறந்து வைப்பதற்காக வருகை தந்த ஜனாதிபதி அவர்களிடம் பொருளாதார மத்திய
நிலையத்திற்கு மிக அண்மையில் அமைந்துள்ள கனகபுரம் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் “தமது பாடசாலைக்கு நிரந்த விளையாட்டு மைதானம் எதுவும்
இல்லை. ஆகவே எமது பாடசாலைக்கு ஒரு விளையாட்டு மைதானத்தை
அமைத்துத் தரும்படி வேண்டுகிறோம்” என்று ஜனாதிபதியிடம் தமது விளையாட்டு
மைதானக் கோரிக்கையை முன்வைத்தார்கள்.
மாணவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த ஜனாதிபதி அவர்கள் இலங்கை விமானப்படை தளபதி
கபில ஜயம்பதி அவர்களிடம்> கனகபுரம் மகா வித்தியாலயத்திற்கான விளையாட்டு
மைதானத்தை அமைத்துக் கொடுக்கும்படி உடனடியாகவே
ஆலோசனை வழங்கினார். பாடசாலைக்கு
அருகிலிருந்த அரச காணியினை கரச்சி பிரதேச செயலாளர் மற்றும் கிளிநொச்சி அரசாங்க அதிபர்
ஊடாகப் பெற்று சுமார் ஐந்து மில்லியன்கள் செலவில் விமானப்
படையினர் விளையாட்டு மைதானத்தை அமைத்து முடித்திருந்தனர். அதனை மாணவர்களுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வும் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசன அவர்களின் தலைமையில் இடம்பெற்றமை விசேட அம்சமகும்.
அந்த வகையில் ஜனாதிபதியின் கிளிநொச்சி விஜயமானது கிளிநொச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்லாது முழு வடமாகணத்திற்குமே நன்மையாகவே அமைந்திருந்தது.