வடபகுதியில்
தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்பான செய்திகள் கடந்த சில நாட்களாக
அதிகளவில் கவனிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. ஆரம்பத்தில்
முல்லைத்தீவின் கொக்கிளாய் நாயாறு போன்ற பிரதேசங்களிலேயே தென்பகுதி மீனவர்களுடைய
ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத மீன்பிடி இடம்பெற்று வந்தன.
தற்போதும் அது அவ்வாறு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த விடயம் பற்றி தமிழ்
ஊடகங்கள் பரந்த அளவில் அறிக்கையிட்டுக்
கொண்டு வருவதை காணக்கூடியதாக இருந்தன.
தற்போது
எழுந்துள்ள புதிய பிரச்சினை யாழ் வடமராட்சி கிழக்கில் வெளிமாவட்ட மீனவர்கள்
அத்துமீறி மீன்பிடி (கடலட்டை பிடித்தல்) நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்
என்ற குற்றச்சாட்டு ஆகும். தற்போது வடக்கில் பூதாகரமாகியுள்ள இவ்விடயம்
தொடர்பில் செய்திகள், ஆசிரியர்
தலையங்கங்கள், கட்டுரைகள்
ஆகியவற்றை தமிழ்ப் பத்திரிகைகளில் நாளாந்தம் காணக்கூடியதாக
இருக்கின்றது.
வடமராட்சி
கிழக்கின் கடற்கரையோர பகுதியில் உள்ள பாடுகளின்
(வாடியமைத்து மீன்பிடிக்கும் முறை) உரிமையாளர்கள் தமது பாடுகளையும்
அதற்கான கரையோரக் காணிகளையும் குத்தகை அடிப்படையில்
வெளிமாவட்ட மீனவர்களுக்கு வழங்கியிருப்பதாகவும் அவற்றைப் பெற்றுக் கொண்டவர்களே அங்கு
மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அறியக்கிடைத்தது. அதற்கான
சகல ஆவணங்களையும் உரிமையாளர்களே வைத்திருப்பதாக சம்பந்தப்பட்ட
குறிப்பிட்ட வெளிமாவட்ட மீனவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். அவ்வாறான ஒருவர் 11 இலட்சம் ரூபாயினை
உரிமையாளருக்கு கொடுத்தே குறிப்பிட்ட பாடுவினை வாங்கியிருப்பதாகவும்
குறிப்பிட்டிருக்கின்றார். இவ்வாறு அங்கு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும்
வெளிமாவட்ட மீனவர்கள் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட பாடுகளுக்கு இலட்சக்கணக்கில்
குத்தகைப் பணம் செலுத்தியே இவ்வாறு வாடியமைத்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு
வருகின்றார்கள் என்பது தெரியவருகிறது. அத்தோடு சில உள்ளுர் மக்களும்
உரிமையாளரிடம் பாடுவினை குத்தகைக்கு வாங்கி அதை மீண்டும் வெளிமாவட்ட
மீனவர்களுக்கு குத்தகைக்கு வழங்கியிருக்கும் சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
ஆயினும் இந்தக்
காணிகள் தொடர்பிலும் தற்போது சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இந்தக் காணிகளுக்கான
உறுதிகள் அவற்றிற்கான உரிமையாளர்களிடம் இருப்பதாக உரிமையாளர்கள்
குறிப்பிடுகின்றனர். இருப்பினும் இக்காணிகளுக்கு பதிலாக மாற்றுக் காணிகள்
உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதுடன் குறிப்பிட்ட காணிகள் அரச காணிகளாக வர்த்தமானி
மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மருதங்கேணி பிரதேச செயலக வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும்
வெளிமாவட்ட மீனவர்கள் பாரிய நிதிப் பலத்துடனும்
பெருமளவு நவீன உபகரணங்களைக் கொண்டும்
வாடியமைத்து இந்த கடலட்டை மீன்பிடியினை மேற்கொண்டு வருவதால் பாரம்பரியா
மீன்பிடி முறையில் அன்றாடம் மீன்பிடித்து தமது வாழ்க்கையினை கொண்டு நடத்தும் உள்ளுர்
மீனவர்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
வடமராட்சி
கிழக்கில் குத்தகைக்கு பாடுகளை எடுத்து இவ்வாறு
மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மன்னார் பிரதேச முஸ்லிம் மீனவர்களும்
புத்தளம் உடப்பு பகுதியைச் சேர்ந்த தமிழர்களுமேயாவார். குறிப்பிட்டளவு
சிங்களவர்களும் இதில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அவர்களும் கூலிக்கு இங்கே
அழைத்து வரப்பட்டிருப்பவர்கள் ஆகும். எவ்வாறாயினும்
இவ்வாறான அணுகுமுறைகளால் பாதிக்கப்பட்டிருப்பதும் பாதிக்கப்படப் போவதும் தமிழ்
பேசும் சமூகமே என்பதை நினைவில் கொண்டு அவர்களது வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு
ஏற்படாத வகையிலான ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதே இப்போது
தேவையாகின்றது.
இந்த
விடயம் தொடர்பாக யாழ்
மாவட்ட செயலகத்தில் கடந்த 4ஆம்
திகதி இடம்பெற்ற வடக்கின் அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டு, இந்த அத்துமீறிய மீன்பிடி
நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றை நாடப்போவதாக முதலமைச்சர் அறிவித்திருக்கின்றார்.
முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் மருதங்கேணி பிரதேச
செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்தப் பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்ததுடன்
கடற்தொழில் அமைச்சருடன் இதுதொடர்பில் கலந்துரையாடி தீர்வொன்றினைப் பெற்றுத்
தருவதாக கூறியிருக்கின்றார்.
ஆனாலும், பாடுகளின் தமிழ்
உரிமையாளர்கள் ஏன் அந்தப் பாடுகளை வெளிமாவட்ட மீனவர்களுக்கு
குத்தகைக்கு வழங்குகின்றார்கள் என்பதற்கான காரணங்களை கண்டறிவதற்கோ அல்லது பாரம்பரிய
மீன்பிடியில் ஈடுபடும் உள்ளுர் மீனவர்கள் மத்தியில் இவ்வாறான பாரிய நவீனரக மீன்பிடியினை
ஊக்குவிப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் வடமாகாண மாகாண மீன்பிடி அமைச்சின்
மூலம் மேற்கொள்ளக் கூடிய செயற்திட்டங்கள் தொடர்பில் கண்டறிந்து
முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி வடமாகாண முதலமைச்சரும்
மக்கள் பிரதிநிதிகளும் மெளனமாகவே இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
தென்னிலங்கை
சிங்கள மீனவர்களும், மன்னார், உடப்பு மற்றும் நீர்கொழும்பு போன்ற பிரதேசங்களின்
தமிழ் பேசும் சமூகங்களைச் சார்ந்த மீனவர்களும் வடக்கில் இவ்வாறு மீன்பிடியில்
ஈடுபடுவதற்கு வருவதற்கான முக்கிய காரணம் வடமாகாண மீன்பிடி அமைச்சின் வினைத்திறனற்ற
செயற்பாடேயாகும். வடமாகாணத்தின் எல்லைக்குள் கடல் வளத்தினால் பெற்றுக்கொள்ளக்
கூடிய பயன்கள் என்னவென்பதை தெளிவாக இனங்கண்டு அவர்களுக்கு விழிப்புணர்வு, அறிவு
மற்றும் வசதிகளை வழங்கி அவர்களுக்கும் பாரம்பரிய மீனபிடிக்கு மேலதிகமாக இவ்வாறான
பாரிய, நவீன மீன்பிடி முறைகளை மேற்கொள்ளத்தக்க வகையில் பொருளாதார ரீதியிலும் தொழில்நுட்ப ரீதியிலும்
உதவிகளை வழங்கி மேம்படுத்துவதே இந்தப் பிரச்சினைக்கு தீர்வாகும்.
வடக்கின்
இத்தகைய விடயங்கள் தொடர்பில் ஊடகங்களும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள
வேண்டும். அரசியல்வாதிகளும் “தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்” என்பதின் உண்மை
நிலையினை தெரிந்து கொள்ளாது கூறினால்
அப்படியே செய்தியாக்குவது ஊடக தர்மமல்ல.
ஏனென்றால் தென்னிலங்கை மீனவர்கள் என்ற சொற்பதம் தெற்கின் சிங்களவர்களை குறிப்பதற்கே
இவ்வளவு காலமும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது.
சிங்களவர்கள் நேரடியாக சம்மந்தப்படாத இந்தப் வடமராட்சி
கிழக்கு மீன்பிடிப் பிரச்சினையில் அவர்கள் மீது குற்றம் சுமத்துவதுபோன்று
அறியிக்கையிடுவது சிங்களவர்கள் மீது மேலும் தமிழ் மக்கள் வெறுப்பினை உமிழ்வதற்கே
காரணமாக அமையும். அது தமிழ் ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளுக்கு சாதகமானதாக
அமைந்தாலும் இனங்களுக்கிடையிலான பிளவினையே மேலும் அதிகரிக்க ஏதுவாக அமையும்.
இதன்
காரணமாகவே வடமராட்சி கிழக்கு பகுதியில் மீன்பிடித் தொழில் செய்யும் வெளிமாவட்ட மீனவர்கள் சிலர் வடமாகாண
சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களை சந்தித்து மனிதாபின அடிப்படையில் ஒரு
மாத கால அவகாசத்தை கோரியிருப்பதாகவும் அத்தோடு தாம் வடக்கின் மன்னார் மாவட்டத்தை
சேர்ந்த மீனவர்கள்
என்றும் தம்மை தென்னிலங்கை மீனவர்கள் என அழைக்க வேண்டாமெனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
தற்போது அவர்களுக்கு தமது தொழிலினை அங்கிருந்து அகற்றிக் கொள்வதற்காக இம்மாதம் 23
ஆம் திகதிவரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
ஆகவே
வடமராட்சி கிழக்கில் மீன் பிடிப்பவர்கள் மன்னார் மற்றும் புத்தளம் உடப்பு
பிரதேசங்களை சேர்ந்த மீனவர்களாகவும் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்களைச்
சேர்ந்தவர்களாகவுமே இருக்கின்ற நிலையில்
வடக்கின் அரசியல்வாதிகளும் தமிழ் ஊடகங்களும் தமது சுய இலாபங்களுக்காகவே
தென்னிலங்கை மீனவர்கள் என்ற சொற்பதத்தினை பாவிக்கின்றார்கள்
என்று கருதமுடிகின்றது. அரசியல்வாதிகள் அவ்வாறு அழைத்தாலும்
அதனை செய்தியாக அறிக்கையிடும் தமிழ் ஊடகங்கள் சரியாக அதனைப்
பிரசுரிக்க வேண்டியது அவசியமாகும்.
தமிழ்
ஊடகங்களின் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் இனங்களுக்கிடையில் வெறுப்பினை மேலும் அதிகரிக்கவே
செய்யும். ஆகவே உண்மையான சரியான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கவேண்டிய
பொறுப்பும் கடப்பாடும் தமிழ் ஊடகங்களுக்கு உள்ளது.
அத்தோடு வடமாகாண மீன்பிடி அமைச்சானது பாரம்பரிய மீன்பிடிக்கு
மேலதிகமாக இவ்வாறான சட்டரீதியாக மேற்கொள்ளக்கூடிய நவீனரக மீன்பிடிகளையும்
மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தேவையான
செயற்திட்ட வரைபொன்றை தயாரிக்கவும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அழுத்தங்களை
வழங்கவேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கும் இருக்கின்றது என்பதை உணர்ந்து செயற்படுவதே
சாலச்சிறந்தது.
-வதீஸ்
வருணன்-