A Promised Land

13 மே 2018

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தமிழ் மக்களுக்கு கூறிச்சென்றிருக்கும் விடயங்கள்

படம்:ஜனாதிபதி ஊடகப் பிரிவு


இலங்கை அரசியல் தளம் கடந்த மூன்று வருடங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த மே மாதம் 08 ஆம் திகதி மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது. எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஆரம்பமாகும் நாள் அதுவென்பதை விடவும், நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நிகழ்த்த இருந்தமையே இந்த பரபரப்புக்கு பிரதான காரணமாக இருந்தது.
எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஆரம்பமாகியிருந்த நிலையில், அதற்கு முந்திய நாளான ஏழாம் திகதி மட்டக்களப்பு மாவடிவேம்பு பிரதேசத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள், “2020 இல் நான் ஓய்வு பெறமாட்டேன், செய்யவேண்டிய பணிகள் இன்னும் நிறையவே இருக்கின்றதுஎன கூறியிருந்தார். இந்தப் பின்னணியிலேயே கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, என்ன கூறப்போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.  
நல்லாட்சி அரசாங்கத்தின் மீது வைக்கப்படும் முக்கிய விமர்சனம் கலந்த குற்றச்சாட்டு இந்த அரசாங்கம் எதையுமே செய்யவில்லைஎன்பதாகும். அதற்கு பதிலளிக்கும் விதமாகவே தனது கொள்கை விளக்க உரையினை பாராளுமன்றில் ஆரம்பித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள், தற்போதைய அரசுக்கு ஆணையினை பெற்றுக்கொடுத்த மக்களின் முக்கிய வேண்டுகோளாக இருந்த, இலங்கை சமூகத்தை மீண்டும் ஜனநாயக மயப்படுத்தி மனிதநேயமும் பொறுப்பும் மிக்க ஒரு சமூகமாக உருவாக்க வேண்டும் என்ற விடயம் கடந்த மூன்று வருடங்களுள் சிறந்த முறையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது என்று எடுத்துக் கூறியிருந்தார்.
முன்னைய ஆட்சிக் காகலத்தின்போது ஜனநாயக உரிமைகள் மதிக்கப்படாத்தோடு கருத்துச் சுதந்திரம் நசுக்கப்பட்டு, சுதந்திரமாகவும் அச்சமின்றியும் வாழ்வதற்கான சூழல் இலங்கை மக்களுக்கு கிடைக்காத நிலையே காணப்பட்டது.. நீதித்துறை தனது சுயாதீனத் தன்மையை இழந்து சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட முடியாத ஒரு சர்வாதிகார ஆட்சியே அப்போது நடைபெற்று வந்திருந்தது. அதனை மாற்றி ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் மீளவும் நிலைநாட்டி, சட்டத்தின் ஆட்சியை மீண்டும் உறுதிப்படுத்தி, நாட்டின் அனைத்து சமூகங்களுக்கிடையிலும் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவேன் எனக்கூறியே 2015 ஜனவரி 08 இல் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக மைத்ரிபால சிறிசேன, வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றார். அவர் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு ஜனநாயகமும் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாலேயே அவரால் மேற்கண்டவாறு கூறி தனது உரையினை ஆரம்பிக்க முடிந்தது.
கடந்த மூன்றாண்டு காலத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் மற்றும் சமூக ரீதியான அபிவிருந்தி செயற்திட்டங்களை இதன்போது விபரித்திருந்தார். ஔடத சட்டம், 19 ஆம் திருத்தச் சட்டம் என்பன அரசியல் ரீதியிலும் கொள்கை ரீதியிலும் நாட்டுக்கு மிக முக்கியமான சட்டங்களாகும். அதிலும் குறிப்பாக 19 ஆம் திருத்தச் சட்டத்தினை குறிப்பிடலாம். இதுவரையும் பதவிக்கு வந்த அரச தலைவர்கள் எவருமே செய்ய முயன்றிராத ஒரு விடயமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் என்ற விடயம் இருந்து வந்த்து. இந்த 19 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு கிடைத்திருந்த அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அவ்வதிகாரங்கள் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. இது இலங்கையின் அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற முக்கியமான ஒரு மாற்றமகும். இந்த 19 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலமாகவே சுயாதீன ஆணைக்குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
சிறுபான்மை மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் முன்னைய ஆட்சிக் காலத்தில் முகம்கொடுத்துவந்த பிரச்சினைகள், அதிலும் குறிப்பாக 2009 இல் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் தமிழ் மக்கள் ஒரு இறுக்கமான இராணுவ கட்டமைப்புக்குள்ளேயே வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுடைய ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு அச்சமின்றி சுதந்திரமாக நடமாட முடியாத சூழல் அன்று செயற்கையாகவே தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்தமை மறுக்க முடியாத உண்மையாகும். அதற்கு உதாரணங்களாக வடக்கின் நுழைவாயிலாக கருதப்படக்கூடிய ஓமந்தையில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ சோதனைச் சாவடியையும், உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் முப்படையினரும் பிடித்து வைத்திருந்த தமிழ் மக்களின் காணிகளையும் குறிப்பிடலாம்.
2015 ஜனவரி எட்டாம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றித்தின் பின்னர் அம்மாதமே உடனடியாக ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடியை நீக்குமாறு இராணுவத்திற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் உத்தரவிட்டதற்கமைய அச்சோதனைச் சாவடி உடனடியாக நீக்கப்பட்டது. அத்தோடு முன்னைய ஆட்சியாளர்களால் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரு அங்குலத்தையேனும் அதன் உரிமையாளர்களான தமிழ் மக்களுக்கு திருப்பி வழங்கமாட்டோம் என்று பிடித்து வைத்திருந்த காணிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையின் கீழ் மீண்டும் படிப்படியாக வழங்கப்பட்டு தற்போது வடக்கு கிழக்கில் சுமார் 85 வீதமான காணிகளும், யாழ்ப்பாணத்தில் சுமார் 75 வீதமான காணிகளும் அதன் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு அங்கே அவர்கள் மீளவும் குடியமர்த்தப்பட்டிருக்கின்றனர். எஞ்சியிருக்கின்ற பொதுமக்களின் காணிகளும் வெகுவிரைவில் அவர்களுக்கு மீள் அளிக்கப்படும் என்ற உறுதிமொழியும் வழங்கப்பட்டிருக்கின்றது.
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பொறுமை இழந்துள்ளனர். இதனை நிரந்தரமாக சமரசப்படுத்த வேண்டுமானால் அம்மக்களின் விருப்பத்தையும் இணக்கப்பாட்டையும் பெற்ற அரசியல் வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்க வேண்டும். இதனூடாகவே நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தக்கூடிய தேசிய நல்லிணக்கத்தை இலங்கையின் சகல இன மக்கள் மத்தியிலும் உருவாக்க முடியும். அதற்கு சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்மானங்களை இயற்றத்தக்க கட்டமைப்பினை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதை வெளிப்படையாகவே தன்னுடைய இந்த கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் கூறியிருந்தார். இதனூடாக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியிருந்ததுபோலவே இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு ஒன்றின் அவசியத்தையும் அவர் மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்களையும் தவிர இலங்கையின் வேறு எந்த ஜனாதிபதிகளோ பிரதமர்களோ தமிழ் மக்களுக்கு சமவுரிமை வழங்கவேண்டுமென வெளிப்படையாக இதற்கு முன்னர் கூறியிருக்கவில்லை.  
ஆகவே தமிழ் மக்களின் அரசியல் சமூகப் பிரச்சினைகளை தெளிவாக அறிந்து வைத்திருக்கும் ஒரு ஜனாதிபதியாகவே மைத்ரிபால சிறிசேன அவர்கள் இருந்து வருகிறார்.
இலங்கையில் பல தசாப்தங்களாக வேரூன்றியிரக்கும் இந்த அரசியல் பிரச்சினையை தீர்ப்பது அவ்வளவு சுலபமான விடயமல்ல. வடக்கில் தமிழ் மக்களின் காணிகளை மீண்டும் அவர்களிடம் கையளிக்கும் செயற்பாட்டின் போதேவடக்கில் இராணுவத்தினர் அகற்றப்படுகிறார்கள். இதனால் புலிகள் மீண்டும் வரப்போகிறார்கள்என தென்னிலங்கை பெரும்பான்மை சிங்கள மக்களை பயமுறுத்தி அவர்களிடத்தில் அச்சநிலையொன்றை தோற்றுவிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினர், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திற்கு பெரும் பங்கம் விளைவிக்கின்றார்கள்.
புதிய அரசியலமைப்பு விடயத்திலும் அவர்களால் பெரும்பான்மை சிங்கள மக்கள் தொடர்ச்சியாக அச்சமடையச் செய்யப்படுகிறார்கள். தான் மீண்டும் ஜனாதிபதியாகினால் புதிய அரசியலமைப்பை உருவாக்குவேன் என 2015 தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருந்த மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தற்போது புதிய அரசியலமைப்பு உருவாகினால்ஈழம்உருவாகிவிடும் என்ற பொய்யான கருத்தை தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் கூறி அவர்களை ஒரு அச்சநிலைக்குள் வைத்திருப்பதன் மூலம் தமது இனவாத அரசியலை வெற்றிகரமாக தென்னிலங்கையில் முன்னெடுத்துச் செல்கிறார். அதன் பிரதிபலன்களையே கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளினூடாக  எம்மால் காணக்கூடியதாக இருந்தது. 
எதிர்காலத்திலும் தேர்தல் ஒன்று வரும்போது இதே மஹிந்த தரப்பு தென்னிலங்கை சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு தேசப்பற்று முகத்தினையும் தமிழ் மக்களுக்கு மென்போக்கான ஒரு போலி முகத்தினையும் காட்டிக் கொண்டு வரக்கூடிய சந்தர்ப்பங்களே அதிகமாக காணப்படுகின்றன. இதை தமிழ் மக்கள் நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
நம்நாட்டில், அனைத்து இன மக்களும் சமவுரிமையுடனும் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் கருத்துச் சுதந்திரத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை உறுதிப்படுத்தக் கூடியது தனது தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமே என்பதை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் அவரது கொள்கை விளக்க உரையினூடாக தெளிவாகக் எடுத்துக் கூறியிருக்கிறார். ஆகவே அதை சரியாக கையாளும் தரப்பாக தமிழ்த்தரப்பு இருக்க வேண்டும். அதனூடாகவே பாதுகாப்பான எதிர்காலமொன்றை இலங்கைத் தமிழ் மக்கள் பெற்றுக்காள்ளக் கூடியதாக இருக்கும்.
(06.05.2018 ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த கட்டுரை)

06 மே 2018

இலஞ்சம் ஊழல் மோசடியற்ற இலங்கையை நோக்கி…


தொழில்நுட்பம் அபரிமிதமாக வளர்ச்சியடைந்துள்ள இந்த 21ஆம் நூற்றண்டிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் என்பன சட்டங்களால் கட்டுப்படுத்த முடியாதவையாகவே இருந்து வருகின்றன. உலகளாவிய ரீதியில் நாள்தோறும் மில்லியன் கணக்கான பணம் இலஞ்சம் என்ற போர்வையில் கைமாறிக் கொண்டிருக்கின்றது. 

இந்த இலஞ்சம் என்பது வெளிநாட்டு, உள்நாட்டு அரசியலில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தி வருவதை நாம் கண்கூடாக கண்டு வருகின்றோம். ஒரு நாட்டின் அரசியலை புரட்டிப் போடவும், அரசியல் தலைவர்களை இல்லாமல் செய்வதற்கும், ஆட்சியிலுள்ள அரசாங்கங்களை வீழ்த்தவும் இலஞ்சம் மற்றும் ஊழல் சம்பவங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

இலஞ்சம் மற்றும் மோசடிகள் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படுகின்றது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றால் அந்த நாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளை முதலில் இல்லாமல் ஒழித்தே ஆகவேண்டும். இது ஒரு இலகுவான விடயமல்ல. காரணம் ஊழல் மோசடிகளை மேற்கொள்பவர்கள் யார் என்றே ஊகிக்க முடியாத சிரமமான நிலையேயாகும். அரசியல்வாதிகள், அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் முதல் சாதாரண பொதுமக்கள் வரை இலஞ்ச ஊழல் மோசடிகளில் ஈடுபடுவது இன்று ஒரு சாதரண விடயமாகியிருக்கிறது. 

கடந்த வியாழக்கிழமை (மே 03) வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவரிடம் இருபது மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெறும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அலுவலகத்தின் பணிக்குழாம் பிரதானி மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோர் இலஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கொழும்பின் பிரபல சொகுசு ஹோட்டல் ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்கள். இந்த அரசாங்க உயரதிகாரிகளின் கைதும் இலங்கையில் மட்டுமில்லாது சர்வதேச ரீதியிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இலஞ்ச ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதற்கு ஒரு மனிதன் வகிக்கும் பதவிநிலையோ அல்லது சமூகத்தில் அவனுக்கு காணப்படும் அந்தஸ்தோ தடையாக இருப்பதில்லை என்பதற்கு இந்த சம்பவத்தை உதாரணமாகக் கூறலாம். 

இந்த கைது இடம்பெற்ற உடனேயே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் உடனடியாகவே குறிப்பிட்ட இரு அதிகாரிகளினதும் பதவிகளை இடைநிறுத்தியதுடன் எந்தவித அழுத்தங்களும் இன்றி  சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.  இது இலங்கையைப் பொறுத்தவரையிலேயே உண்மையில் புதிய ஒரு அரசியல் கலாசார விடயமாகவே கருதப்படுகின்றது. 

இதற்கு முன்னர் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அரசியல்வாதிகள், அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் இவ்வாறான இலஞ்ச ஊழல் மோசடிகளில் சிக்கும் போது அரசாங்கத்தின் உயர் மட்டங்கள் தமது அதிகாரங்களை பயன்படுத்தி குறிப்பிட்ட மோசடிக்காரர்களை பாதுகாக்கும் வேலையிலேயே ஈடுபட்டு வந்திருந்தமையை நாம் கண்கூடாக கண்டு வந்திருக்கின்றோம். ஆயினும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இந்த விடயத்தில் மாறுபட்டவராகவே இருக்கின்றார். எவர் தவறு செய்தாலும் குற்றம் குற்றமே என்ற நிலைப்பாட்டை அவர் கொண்டிருக்கின்றமை பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது இலங்கையில் ஊழல் மோசடிகளை ஒழிப்பது தனது பிரதான குறிக்கோள்களில் ஒன்றாகுமென பொதுமக்களுக்கு உறுதியளித்தே ஜனாதிபதியாக பதவியேற்ற அவர், தான் பொதுமக்களுக்கு உறுதியளித்தது போலவே இலஞ்ச ஊழலை  ஒழிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார் என்பதை அவருடைய இந்தச் செயற்பாடுகள் வெளிப்படுத்தி நிற்கின்றது. 

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அதுவரையும் அரசியல் தலையீடுகள் காரணமாக செயற்படாது காணப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களை 19 ஆம் சட்டதிருத்தத்தின் ஊடாக ஸ்தாபித்து ஆணைக்குழுக்களின் சுயாதீன செயற்பாடுகளை எவ்வித இடையூறுகளுமின்றி மேற்கொள்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். அத்தோடு 2016 ஆண்டு லண்டனில் இடமபெற்ற ஊழலுக்கெதிரான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு ஊழலை இல்லாதொழிப்பதற்காக அனைத்து தலைவர்களையும் ஒன்றுபடுமாறு ஜானாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார். இவ்வாறான பின்னணியிலேயே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் ஜனாதிபதி அலுவலகத்தின் உயரதிகாரியான பணிக்குழாம் பிரதானியையும் அரச மரக் கூட்டுத்தாபன தலைவரையும் எந்தவித அரசியல் தலையீடுகளும் இல்லாது கைது செய்ய முடிந்திருக்கின்றது. 

இதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக, “எமது ஆணைக்குழுவுக்கு பூரண அதிகாரங்களையும், சுதந்திரத்தையும்  தற்போதைய அரசு பெற்றுக் கொடுத்திருப்பதனால் தாம் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி சுயாதீனமாக செயற்படக்கூடிய சந்தர்ப்பம் எமக்கு கிடைத்திருக்கின்றது” என்ற இலஞ்ச ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் தலைவர் நெவில் குருகே அவர்களின் கூற்று அமைந்திருக்கின்றது. ஆணைக்குழுவின் சாதாரண விசாரணை அதிகாரியாக பணிபுரிந்து தற்போது ஆணைக்குழுவின் தலைவராக பணிபுரியும் இவர் இலங்கையில் இடம்பெறும் இலஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில் மிகுந்த அனுபவம் வாய்ந்த ஒருவர். 

இலஞ்ச ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்க உலகலாவிய ரீதியில் செயற்படும் ட்ரான்பரன்ஷி இன்டநேஷனல் அமைப்பின் தரவுகளின்படி தற்போது இலங்கையானது இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் நிறைந்த நாடுகளின் வரிசையில் 91 ஆவது இடத்தில் இருக்கின்றது.  இந்த 91 ஆவது நிலையிலிருந்து முதலாவது நிலையினை நோக்கி இலங்கை பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. ஆகையினால் தற்போது இலஞ்ச ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள “சுயாதீனமாக செயற்படக்கூடிய சந்தர்ப்பத்தை” சரியாகப் பயன்படுத்தி இலங்கையின் பொருளாதார அபிவிருத்திற்கு சவாலாக விளங்குகின்ற இலஞ்சம் மற்றும் ஊழலை முற்றாக இல்லாதொழிக்கும் நடவடிக்கையினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்பதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினதும் இலங்கை மக்களினதும் ஒரே எதிர்பார்ப்பாகும். 


(06.05.2018 ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த கட்டுரை)

04 மே 2018

நில் கவனி!

மூன்று தசப்பதங்களாக ஒட்டுமொத்த இலங்கையையும் ஆட்டிப்படைத்த யுத்தம் 2009 ஆம் ஆண்டு மே மோதம் 18 ஆம் திகதியன்று தமிழ் எதிர்காலத்தையும் அரசியல் அபிலாசைகளையும் படு பாதாளத்தில் தள்ளி முடிவுக்கு வந்ததுடன், மறுபுறத்தில் பிரிவினைவாத பயங்கரவாத யுத்தத்தினை வெற்றி கொண்டது இந்நாட்டின் சிங்கள பௌத்தர்களின் அதீத அர்ப்பணிப்பினாலே என்றும் அதற்கு வழிவகுத்தது மகிந்த ராஜபக்ஷவே என்ற கருத்தும் அன்று இந்நாட்டில் மிக ஆணித்தரமாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்த யுத்த வெற்றி மயக்கத்தில் முழுநாடுமே சிங்கள இனவாதத்தின் ஆதிக்கத்துக்குள் கொண்டுவருவதற்கு மகிந்த ராஜபக்ஷ எடுத்த முயற்சிகள் நூற்றுக்கு நூறு வீதம் கைகொடுத்ததனாலேயே யுத்த களத்தில் யுத்தத்தை வென்ற முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை 2010 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் படுதோல்வியடையச் செய்து சிறையில் அடைத்து சகல உரிமைகளையும் பறித்து ஜம்பர் அணிய வைப்பதற்கு தென்னிலங்கை சமூகத்தின் அமோக ஆதரவு மகிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்தது.
இந்தப் பின்னணியில் யுத்த வெற்றியின் மயக்கத்தில் கிடக்கும் தென்னிலங்கை சமூகத்தின் ஆதரவை சகாவரமாக பெற எண்ணிய மகிந்த ராஜபக்ஷ தமது தரப்பைத் தவிர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளையும் சின்னாபின்னமாக்கி, நீதியரசரை தூக்கி எறிந்து நீருக்காக போராட்டம் நடத்திய தமது சொந்த மக்களையே வெடிவைத்துக் கொன்று நாட்டை ஏகாதிபத்திய பாதையில் இட்டுச் செல்லும் நோக்கில் 18ஆவது சீர்திருத்தத்தினை மேற்கொண்டு சாகும்வரை இந்த நாட்டின் மன்னனாக இருப்பதற்கு திட்டம் வகுத்தார். அதன் பலனாகவே இரண்டு வருடங்கள் தமக்கான ஆட்சி அதிகாரம் இருக்கும் போதே அவற்றை மிக உச்சக்கட்டமாக உபயோகப்படுத்தி தமது பலத்தை உயிர் இருக்கும் வரை தம்வசம் ஆக்கிக் கொள்வதற்காக 2015 ஜனவரி மாதம் 08 ஆம் திகதி தேர்தலை பிரகடனப்படுத்தினார்.
மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக களறங்கிய தெற்கின் சிங்கள பெரும்பான்மையினரின் யுத்த வீரனான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஏற்பட்ட நிலையைக் கண்டு கதிகலங்கியிருந்த தென்னிலங்கை அரசியல் சமூகத்திற்கு, மகிந்தவுக்கு எதிராக 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதானது தமது சிரத்தையே தம் கரங்களால் சிதைத்துக் கொள்வதற்கு சமமாகும் என்ற நிலை ஏற்பட்டிருந்தது.
மிக மோசமான பயங்கரமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதும் தானும் தான் சார்ந்த ஒட்டுமொத்த சொந்தங்களும் விபரிக்க முடியாத விபரீதங்களுக்கு முகம்கொடுக்க நேரிடுவதும் நிச்சயப்படுத்தப்பட்ட பின்னணியிலேயே மகிந்த ராஜபக்கவுக்கு எதிராக எதிர்த்துப் போட்டியிட மன உறுதிமிக்க மைத்ரிபால சிறிசேன களமிறங்கினார்.
அவ்வாறு அன்று அவர் மகிந்த ராஜபக்ஷவை விட்டு வெளியேறும்போது மகிந்தவின் பெயரைக் கேட்டதுமே அஞ்சி நடுங்கும் பின்னணியில் அவரது கட்சியின் எவருமே மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு ஆதரவு வழங்க மாட்டார்கள் என்பது வெளிப்படையான உண்மையாக இருந்தது. அதனால் அவரது சொந்த குடும்பத்தை சேர்ந்தவகளைத் தவிர அவருக்கு ஆதரவு வழங்க முன்வந்த ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் ஆதரவிலேயே அவர் வெற்றிபெற வேண்டியிருந்தது. அதன் பலனாகவே 2015 ஆம் ஆண்டு சிங்கள அடிப்படைவாதத்தை அடித்தளமாகக் கொண்டு இனவாத பரப்புரையும் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த மகிந்த ராஜபக்ஷ பெற்ற 5768090 வாக்குகளைவிட 6217162 வாக்குகளைப் பெற்று மைத்ரிபால சிறிசேன அவர்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
அத்தேர்தலில் தோல்வியென்பது மரணமே என்பதை நிச்சயிக்கப்பட்டிருந்த பின்னணியில் மைத்ரிபால சிறிசேன அவர்கள் களமிங்காது விட்டிருப்பின் இன்று ஐக்கிய தேசியக் கட்சி என்ற ஒன்று இருந்த இடம் இல்லாது போயிருக்கும் என்பது திண்ணம், யுத்தம் முடிவடைந்து 06 ஆண்டுகள் கடந்தும் அந்த யுத்த அகதிகளை அடிமைகளாக நடத்திவந்த, தமிழ் சமூகத்தை தரைமட்டமாக்குவதற்கான உச்சக்கட்ட அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த பின்னணியில் இன்று தமிழ் சமூகம் அனுபவித்துவரும் சுதந்திரமும் மீளப் பெறப்பட்டுவரும் உரிமைகளும் திரும்பக் கிடைக்கப் பெற்றுவரும் அவர்களது சொந்த நிலங்களும் நிம்மதியான வாழ்க்கையும் நிறைவேறாத கனவாகவே இருந்து வந்திருக்கும் என்பது உறுதியாகும்.
பேருவளையில் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் இனவெறியாட்டம் நாடெங்கும் பரவி இந்நாட்டு முஸ்லிம் மக்களை, உரிமைக்காக போராடிய தமிழ் மக்கள் விழுந்திருக்கும் படுகுழியை விட படுபாதாளத்தில் தள்ளுவதற்கான நடவடிக்கைகள் நிச்சயம் எடுக்கப்பட்டிருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை. யுத்த களத்தில் தமிழர்களுக்கு எதிராக தயவு தாட்சணையின்றி ஏவிவிடப்பட்ட அடக்குமுறைகள் தென்னிலங்கையில் உரிமைக்காக வாய்திறக்கும் ரத்துப்பஸ்வல சிங்களவர்களைப் போன்று கொன்று குவித்து அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
அந்தவகையில் 2015 ஜனவரி 08ஆம் திகதி இந்த நாட்டையும் இந்த நாட்டு மக்களையும் அரக்கர்களிடமிருந்து காப்பாற்றியவர் வெற்றி நிச்சயம் என்ற மன உறுதியுடனும் கறை படியாத தூய்மையான அரசியல் பின்னணியினை மாத்திரம் தமது பக்கபலமாகக் கொண்டு களமிறங்கிய மைத்ரிபால சிறிசேன அவர்களே என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மையாகும்.
அன்று தமக்கென எந்தவிதமான வாக்கு வங்கியும் இன்றி பிறரை நம்பி களமிறங்கிய மைத்ரிபால சிறிசேன அவர்கள், அன்று இந்த நாட்டு மக்களைக் காப்பாற்றிய நன்றியை மறவாத சுமார் 18 இலட்சம் வாக்காளர்கள் இன்று பலத்த இனவாத கோசங்களுக்கு மத்தியிலும் மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதி அவர்களுக்கு பக்கபலமாக இருக்கின்றார்கள் என்பது கடந்த மூன்றாண்டு காலத்தில் ஜனாதிபதியாக அவர் பெற்ற மகத்தான வெற்றியாகும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இந்த 18 இலட்சம் வாக்குகளானது முற்றுமுழுதாக மைத்ரிபால சிறிசேன எனும் தனிமனிதனுக்கு கிடைத்த வாக்குகளேயாகும். அந்தவகையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமது குடும்பத்தின் சொந்த வாக்குகளை மாத்திரம் தனதாக்கிக் கொண்டிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் 18 இலட்சம் வாக்காளர்களின் நம்பிக்கைளை வென்றிருப்பதுடன் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் அவரால் முன்னெடுக்கப்படும் நாட்டு மக்களின் நலனுக்கான நடவடிக்கைகள் இத்தொகையினை இரண்டு மூன்று மடங்காக அதிகரிக்கச் செய்யுமென்பதில் ஐயமில்லை.
30 ஆண்டுகால யுத்தம் எமது நாட்டை நாசப்படுத்தியதை விட மிகப் பாரதூரமாக எமது நாட்டை நாசப்படுத்தி வருவது அரசியல்வாதிகளினால் மேற்கொள்ளப்படும் இலஞ்சமும் ஊழலும் மோசடிகளும் திருட்டுமே ஆகுமென்பதை மிகத் தெளிவாக உணர்ந்த ஜனாதிபதி அவர்கள் அவற்றை ஒழிப்பதற்கு இலங்கை வரலாற்றில் இதுவரை எந்த அரச தலைவரும் எடுக்காத பல துணிவுமிக்க முடிவுகளை எடுத்துவரும் பின்னணியிலேயே, அந்த நிலை நீடிக்குமாயின் இந்த நாட்டை சூறையாடுவதை அரசியல் என அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கும் திருட்டு அரசியல்வாதிகளுக்கு விமோசனம் இல்லையென்பதை நன்றாக உணர்ந்த திருட்டுக் கும்பலின் கொதிப்பையும் கொந்தளிப்பையுமே நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் முடிவுகள் எடுத்துக் காட்டியிருக்கின்றது.
இந்த நாட்டை இனவாதிகளுக்கும் மனித கொலைகளுக்கும், திருட்டுக்கும், ஏகாதிபத்தியத்திற்கும், ஏமாற்று வித்தைகளுக்கும், தம்மைத் தாமே மன்னர்களாக வர்ணித்தக் கொள்ளும் குடும்ப ஏகாதிபத்தியத்திற்கும் அடிமைப்படுத்துவதா அல்லது 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி மைத்ரிபால சிறிசேன அவர்களை வெற்றிபெறச் செய்து நாட்டை விடிவுப் பாதையில் முன்னெடுத்து வருகையில் முகம்கொடுக்க நேர்ந்திருக்கும் சந்தர்ப்பவாதிகளின் சூழ்ச்சி வலையில் நாட்டையும் நமது எதிர்காலத்தையும் சிக்க வைப்பதா என்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள் நீங்களே?

22 ஏப்ரல் 2018

Beyond the Clouds!



புகழ்பெற்ற ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கியுள்ள ஹிந்தித் திரைப்படம்தான் இந்த Beyond the Clouds! இவர் இந்தியாவின் மும்பையை களமாகக் கொண்டு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் என அறிந்தபோதே இந்தப்படத்தை பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் என்றுள் இயல்பாகவே ஏற்பட்டது. அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் இருந்த இன்னுமொரு காரணம் இப்படத்திற்கு இசை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். 

தாரா மற்றும் அமீர்
மும்பையின் ஒரு  அடையாளமாகத் திகழும் டோபி காட் பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு அக்காவுக்கும் (தாரா) தம்பிக்குமிடையிலான (அமீர்) உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் மும்பையின் மறுபக்கத்தையும், நல்லதொரு வாழ்க்கையை எப்படியாவது அடைந்துவிட ஓடிக்கொண்டிருக்கும் அந்நகரத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையையும் அழகாக பிரதிபலிக்கின்றது. அத்தோடு மும்பையில் வாழ்ந்து கொண்டிருக்கும் வெளிமாநில மக்களையும் இந்தப்படம் விட்டுவைக்கவில்லை. அதிலும் குறிப்பாக தமிழ் மனிதன் ஒருவரே இப்படத்தின் கதையின் திருப்புமுனையாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றார் என்பது சிறப்பு அம்சமாக இருக்கிறது.  

வாழ்க்கையின் கடினமான சூழ்நிலை காரணமாக பிரியும் தாராவும் அமீரும்  எதிர்பாராமல் சந்திக்கும் சூழ்நிலையில் இக்கதை என்னை ஆட்கொள்ள ஆரம்பித்தது. தாராவோ பாலியல் தொழில் செய்தாவது  வாழ்க்கையை வென்றுவிடவேண்டுமென்று பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், அமீரோ போதைப்பொருள் கடத்தியாவது பணக்காரனாகிவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் போராடிக் கொண்டிருக்கிறான். 

தாரா, தன்னை பலாத்காரமாக அடைய நினைக்கும் ஒருவனை, தான் தப்பிப்பதை  நோக்காகக் கொண்டுதாக்கும் சந்தர்ப்பத்தில் அவன் மரணப் படுக்கையில் விழவும் அவள் சிறைக்கு செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றாள். மரணப் படுக்கையில் விழுந்தவன் அதிலிருந்து மீண்டு வாய்திறந்தால் மட்டுமே அவள் சிறையிலிருந்து வெளிவர முடியும் என்கின்ற நிலையில் எப்படியாவது மரணப்படுக்கையிலிருந்து அவனைக் காப்பாற்றி வாய் பேச வைக்கும் முயற்சியில் அமீர் ஈடுபடத் தொடங்கும் போதுதான் மரணப்படுக்கையில் விழுந்தவனின் குடும்பம் தமிழ் நாட்டிலிருந்து மும்பை வந்து அமீருக்கு அதிர்ச்சி வைத்தியம் குடுக்கின்றது. 

படத்தின் காட்சி ஒன்று

அதிக கதாபாத்திரங்களை கட்டமைத்து கதையின் கருவை சிதறவிடாது, கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பினூடு சாதாரண மக்களின் உணர்வுகளை இயக்குனர் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

தாரா சிறையிலிருந்து வெளியில் வந்தாளா? அமீர் அந்தத் தமிழ்க் குடும்பத்தால் என்னவானான் என்பதை இயக்குனர் மிகுந்த உணர்வுபூர்வமாக  இப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கின்றார். 

ஒளிப்பதிவும் இசையும் இப்படத்திற்கு மேலும் வலுச் சேர்க்கின்றது என்று கூறினால் அது மிகையாகாது. சில இடங்களில் கமரா கோணங்கள் பார்வையாளனை அப்படியே கட்டிப்போடுகின்றது. அதேபோல் பின்னணி இசையும் கதைக்கு தேவையான அளவு சிறப்பாக இருக்கின்றது. 

இதில் நாயகனாக நடிக்கும் இஷான் உள்ளிட்ட பலர் புதுமுகங்கள். அனைவரும் சிறப்பாகவே நடித்திருக்கின்றனர். தாராவாக நடிக்கும் மலையாள நடிகையான மாளவிக்கா மோகனன் தனது நடிப்பால் அனைவரையும் கவர்கின்றார். ஏற்கனவே சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றில் திரையிடப்பட்டு பாராட்டுக்களைளை பெற்றுள்ள இத்திரைப்படம் கொழும்பில் MC Colombo - Platinum திரையரங்கில் திரையிடப்பட்டு வருகிறது. இப்படத்தை நீங்களும் ஒருமுறை பார்த்துவிடுங்கள். 

படப்பிடிப்பின் போது இயக்குனர் மஜித்
நடிகை மாளவிக்காவுக்கு காட்சியினை விபரிக்கிறர்

படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டின் போது
இயக்குனர் மஜித், இசையமைப்பாளர் ரஹ்மான் மற்றும் நடிகர்கள்



18 ஏப்ரல் 2018

விக்ரம்...!




நடிகர் விக்ரம்!, தன்னுடைய அபரிமிதமான அர்ப்பணிப்பான  நடிப்பால் தமிழ் சினிமா இரசிகர்களை மட்டுமல்லாது உலக சினிமா இரசிகர்களையும் கவர்ந்தவர்.  ரசியில்லா நடிகர் என தமிழ் சினிமா ஓரங்கட்டியபோது அது தவறு என கண்முன் நிரூபித்துக் காட்டிய ஒரு கலைஞன். இயக்குனர் பாலாவால் சேது படத்தின் மூலம் செதுக்கப்பட்ட முத்து. வலகது கை செய்வதை இடது கை அறியாமல் இருக்கட்டும் என்று ஒரு பண்டையகூற்று எம்மத்தியில் இருக்கின்றது. அதற்கேற்றது போலவே  சத்தமில்லாமல் பலருக்கு உதவிகள் செய்து விட்டு அமைதியாக இருக்கும் ஒரு நல்ல மனிதன். நடிகர் கமலஹாசனுக்கு பின்னர் நான் விரும்பும் நடிகன். இப்படி நான் இரசிக்கும் நடிகர் விக்ரமைப்பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். 

நேற்று (ஏப்ரல் 17) விக்ரமின் பிறந்தநாள். 

விக்ரம் என்றவுடன் எனக்கு உடனேயே ஞாபகம் வருவது விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் இயக்குனர் பாலாவின் "இவன் தான் பாலா"  புத்தகத்தில் விகரம் தொடர்பில் இயக்குனர் பாலா சிலாகித்து எழுதியிருக்கும் குறிப்புக்கள்தான் காலத்தால் அழியதவை. 

பாலா தனது சேது படத்தின் படப்பிடிப்பு சினிமா தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் நின்று போனதால் மனமுடைந்து போயிருந்த நேரத்தில் தன் பிரச்னையை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத விக்ரம் ஒருநாள் பாலவிடம் வந்து ‘வீட்ல கொஞ்சம் கஷ்டமா இருக்கு பாலா. ராதிகா ஒரு டெலிஃபிலிம் பண்ணக் கூப்பிடறாங்க. போனா, கொஞ்சம் பைசா கிடைக்கும்!’’ என்று கேட்கவும் அதில் நடிப்பதற்கு உடனேயே விக்ரமை பாலா அனுப்பி வைத்திருக்கிறார். விக்ரம் அந்த டெலிஃபிலிம் முடித்துவிட்டு  திரும்பி வந்தபோது சம்பளமாக கிடைத்த அறுபதாயிரம் ரூபாவையும் கொண்டுவந்து ‘பாலா, நீங்களும் பணத்துக்கு சிரமப்படறீங்கதானே. அறுபதாயிரம் ரூபா குடுத்தாங்க. இதுல எனக்கு பாதி, உங்களுக்குப் பாதி’’ என வலுக்கட்டாயமாக பாலவின் கையில் திணித்துவிட்டுப் போயிருக்கிறார். 

தன்னுடைய கஸ்டத்திலும் மற்றவருடைய கஸ்டத்தையும் புரிந்துகொண்டு உதவி செய்த நல்ல மனம் கொண்ட விக்ரம் இன்று இந்தளவு தூரம் உயர்ந்திருப்பது அவரது மனிதத்தன்மைக்கு இயற்கை கொடுத்த பரிசே! 

மேலும் மேலும் சிகரம் தொட வாழ்த்துக்கள்! 

பிதாமகன் விக்ரமுடன் இயக்குனர் பாலா