A Promised Land

22 ஏப்ரல் 2018

Beyond the Clouds!



புகழ்பெற்ற ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கியுள்ள ஹிந்தித் திரைப்படம்தான் இந்த Beyond the Clouds! இவர் இந்தியாவின் மும்பையை களமாகக் கொண்டு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் என அறிந்தபோதே இந்தப்படத்தை பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் என்றுள் இயல்பாகவே ஏற்பட்டது. அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் இருந்த இன்னுமொரு காரணம் இப்படத்திற்கு இசை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். 

தாரா மற்றும் அமீர்
மும்பையின் ஒரு  அடையாளமாகத் திகழும் டோபி காட் பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு அக்காவுக்கும் (தாரா) தம்பிக்குமிடையிலான (அமீர்) உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் மும்பையின் மறுபக்கத்தையும், நல்லதொரு வாழ்க்கையை எப்படியாவது அடைந்துவிட ஓடிக்கொண்டிருக்கும் அந்நகரத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையையும் அழகாக பிரதிபலிக்கின்றது. அத்தோடு மும்பையில் வாழ்ந்து கொண்டிருக்கும் வெளிமாநில மக்களையும் இந்தப்படம் விட்டுவைக்கவில்லை. அதிலும் குறிப்பாக தமிழ் மனிதன் ஒருவரே இப்படத்தின் கதையின் திருப்புமுனையாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றார் என்பது சிறப்பு அம்சமாக இருக்கிறது.  

வாழ்க்கையின் கடினமான சூழ்நிலை காரணமாக பிரியும் தாராவும் அமீரும்  எதிர்பாராமல் சந்திக்கும் சூழ்நிலையில் இக்கதை என்னை ஆட்கொள்ள ஆரம்பித்தது. தாராவோ பாலியல் தொழில் செய்தாவது  வாழ்க்கையை வென்றுவிடவேண்டுமென்று பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், அமீரோ போதைப்பொருள் கடத்தியாவது பணக்காரனாகிவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் போராடிக் கொண்டிருக்கிறான். 

தாரா, தன்னை பலாத்காரமாக அடைய நினைக்கும் ஒருவனை, தான் தப்பிப்பதை  நோக்காகக் கொண்டுதாக்கும் சந்தர்ப்பத்தில் அவன் மரணப் படுக்கையில் விழவும் அவள் சிறைக்கு செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றாள். மரணப் படுக்கையில் விழுந்தவன் அதிலிருந்து மீண்டு வாய்திறந்தால் மட்டுமே அவள் சிறையிலிருந்து வெளிவர முடியும் என்கின்ற நிலையில் எப்படியாவது மரணப்படுக்கையிலிருந்து அவனைக் காப்பாற்றி வாய் பேச வைக்கும் முயற்சியில் அமீர் ஈடுபடத் தொடங்கும் போதுதான் மரணப்படுக்கையில் விழுந்தவனின் குடும்பம் தமிழ் நாட்டிலிருந்து மும்பை வந்து அமீருக்கு அதிர்ச்சி வைத்தியம் குடுக்கின்றது. 

படத்தின் காட்சி ஒன்று

அதிக கதாபாத்திரங்களை கட்டமைத்து கதையின் கருவை சிதறவிடாது, கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பினூடு சாதாரண மக்களின் உணர்வுகளை இயக்குனர் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

தாரா சிறையிலிருந்து வெளியில் வந்தாளா? அமீர் அந்தத் தமிழ்க் குடும்பத்தால் என்னவானான் என்பதை இயக்குனர் மிகுந்த உணர்வுபூர்வமாக  இப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கின்றார். 

ஒளிப்பதிவும் இசையும் இப்படத்திற்கு மேலும் வலுச் சேர்க்கின்றது என்று கூறினால் அது மிகையாகாது. சில இடங்களில் கமரா கோணங்கள் பார்வையாளனை அப்படியே கட்டிப்போடுகின்றது. அதேபோல் பின்னணி இசையும் கதைக்கு தேவையான அளவு சிறப்பாக இருக்கின்றது. 

இதில் நாயகனாக நடிக்கும் இஷான் உள்ளிட்ட பலர் புதுமுகங்கள். அனைவரும் சிறப்பாகவே நடித்திருக்கின்றனர். தாராவாக நடிக்கும் மலையாள நடிகையான மாளவிக்கா மோகனன் தனது நடிப்பால் அனைவரையும் கவர்கின்றார். ஏற்கனவே சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றில் திரையிடப்பட்டு பாராட்டுக்களைளை பெற்றுள்ள இத்திரைப்படம் கொழும்பில் MC Colombo - Platinum திரையரங்கில் திரையிடப்பட்டு வருகிறது. இப்படத்தை நீங்களும் ஒருமுறை பார்த்துவிடுங்கள். 

படப்பிடிப்பின் போது இயக்குனர் மஜித்
நடிகை மாளவிக்காவுக்கு காட்சியினை விபரிக்கிறர்

படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டின் போது
இயக்குனர் மஜித், இசையமைப்பாளர் ரஹ்மான் மற்றும் நடிகர்கள்



கருத்துகள் இல்லை: