A Promised Land

03 ஜூலை 2010

உங்களுக்கு இலங்கை தமிழர் நாங்கள்தானா கிடைத்தோம் ?

"இலங்கைத்தமிழர்" தமிழ் உணர்வு" இலங்கையில் நடைபெறும் விழாக்களில் கலந்துகொள்ளும் சினிமா துறையினருக்கு தடை" "இலங்கைக்கு சென்றால் தடை" இலங்கை "இலங்கை" இவ்வாறான சொற்களை கேட்டு இணையங்களில் பார்த்து எனக்கு அலுத்துவிட்டதுடன் சம்பந்தப்பட்வர்களின்மீது கோபமும்தான் வருகின்றது. இன்று தமிழ் நாட்டில் அரசியல் செய்யவேண்டும் என்றால் ஏதோ ஒரு வகையில் இலங்கை பிரச்சனையை கையில் எடுக்க வேண்டிய நிலையில் தமிழ் நாட்டின் அரசியல் கலாச்சாரம் மாறிவிட்டதோ என எண்ணத்தோன்றும் அளவிற்கு நிலமை சென்றுவிட்டது.

இந்த எதிர்ப்பு அரசியல் கலாச்சராம் சில ஆண்டுகளுக்கு முன்னமே மிகவும் மும்முரமாக வெளித்தெரிய ஆரம்பித்தது என்றாலும் ஆரம்பம்தொட்டு சிறு சிறு எதிர்ப்புக்கள் இருந்தன ஆனாலும் இவ்வளவு தூரத்திற்கு அவை இருக்கவில்லை. எதிர்ப்புக்களால் மேலும் மேலும் துன்பப்படபோவது இங்கிருக்கும் தமிழ் மக்கள் என்பதை எல்லோரும் உணர்ந்துகொள்ள வேண்டும். வடபகுதியில் எரிக்கும் வெயிலின் மத்தியிலும் கொட்டும் மழையின் வெள்ளத்திலும் பொருளாதார ரீதியாகவும் எல்லா வகையாலும் நாளாந்தம் தங்கள் வாழ்க்கையினை நடத்துவதற்கு அம்மக்கள் படும்பாடு குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து அறிக்கைகளை வெளியிடும் தமிழ் உணர்வாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் எங்கு தெரியப்போகின்றது. இவர்களுடைய ஒரே நோக்கம் இலங்கைத்தமிழரை பயன்படுத்தி சந்தர்ப்ப அரசியல் செய்வதுதான். இந்த எதிர்ப்பரசியலுக்குள் தற்போது தமிழ் சினமாவும் சிக்கியிருப்பது பெரும் வேதனையான விடயம் என்றாலும் தமிழ் சினிமாவில் அரசியல் கலந்திருப்பது சாராதரணமான ஒன்றுதானே.

இவற்றைபற்றி பந்தி பந்தியாக எழுதுவதற்கு எனக்கு உடன்பாடு இல்லை. எனக்குள்ளும் இவர்களின் மேல் இந்த சமூகத்தின்மேல் பல உலக நியதிகளின்மேல் நியாயமான கோபம் இருக்கிறது ஆனாலும் நியாயமான கோபங்களுடன் வாழும் சாமானியன் என்று என்னால் கூறமுடியாமல் இருக்கிறது ஏனென்றால் தொழிலால் நான் ஒரு ஊடகவியலாளன். தமிழ் உணர்வாளர்களின் எதிர்புக்களை இலங்கையில் இருக்கும் பெரும்பாலான தமிழர்கள் விரும்பவில்லை என்பதையும் உங்கள் எதிர்ப்புக்களால் தொடர்ந்தும் பாதிக்கப்படபோவது இலங்கையில் இருக்கும் தமிழர்களாகிய நாங்களே என்பதை எதிர்பாளர்களும் சம்பந்தப்பட்வர்களும் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே எனது கோரிக்கை.

05 ஜூன் 2010

பிறந்தநாள் வாழ்த்து -வயசை மட்டும் கேட்காதீங்கப்பா?

ஊடக உலகிலும் பதிவுலகிலும் நன்கு அறியப்பட்ட எல்லோருடனும் இயல்பாகவும் நட்பாகவும் பழகும் அறிவிப்பாளர் பதிவர் நண்பர் லோஷன் அண்ணா அவர்களுக்கு பிறந்தநாள் வாழத்துக்கள்...



எலே இதுக்குப்பிறகும் யாரும் வயசை கேட்பீங்களா?

31 மே 2010

அங்காடித்தெருவும் பதிவுலக விருதுகளும் - சே! வடைபோச்சே


வெளிவந்து பலநாட்களாகியும் எனக்கு பார்ப்பதற்கு நேற்றுவரையும் சந்தர்ப்பம் இல்லாதுபோன திரைப்படம்தான் அங்காடித்தெரு. மிக இயல்பான பல விடயங்களை ஆழமாக கூறும் ஒரு திரைப்படம்தான் இது.பார்த்தவுடன் பிடித்துப்போய்விட்ட நல்ல ஒரு சினிமாவை எங்களுடைய கண்முன்நிறுத்திய பட இயக்குனர் வசந்தபாலனுக்கு பாராட்டுகள்.இப்படத்தில் நடித்த நடிகர்களுடைய இயல்பான நடிப்பு, இசை போன்றவற்றை இரசிக்கலாம். படம்வெளிவந்து இவ்வளவு நாட்களுக்கு பின் அதைப்பற்றி விமர்சனம் எழுதுவது எனக்கு சரியாக படவில்லை. ஆனாலும் எனக்கு வடைபோச்சே...ஏனென்று கேட்கிறீர்களா?
பதிவர் சதீஷ் மற்றும் பலரும் தற்போது இணையத்தில் ஆரம்பித்த முயற்சிதான் திரையுலகுக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் - 2010. மிகவும் பாரிய விளம்பரங்களுடன் பதிவர்களால் நடத்தப்பட்டுவரும் இவ்விருது வழங்கும் முயற்சிபாராட்டத்தக்க விடயம்தான். அதில் சிறந்த திரைப்படத்திற்கு வாக்களித்தவிட்டுதான் அங்காடித்தெருவை பார்த்தேன். மனது கனத்துவிட்டது. அட இந்தப்படத்திற்கு வாக்கிளிக்க முடியாமல் போய்விட்டதென்று.ம்...பார்ப்போம் இன்னும் 3வாரங்கள் இருப்பாதாக கூறுகின்றார்கள். நண்பர்கள், ஓட்டுப்போடுபவர்கள் இந்தப்படத்திற்கு எப்படியும் அமோக ஆதரவினை வழங்குவார்கள் என நான் நம்புகின்றேன். உங்களுடைய பொன்னான வாக்குகளையும் நீங்களும் அளிக்கலாம்...நீங்களும் வாக்களிக்க இங்கே கிளிக்குங்கள்

09 மார்ச் 2010

தமிழ் அரசியல் தலைவர்களும் கூட்டமைப்பும்....

இம்முறை பாராளுமன்ற தேர்தல் இடம் பெறப்போவதாக அறிவித்த நாளில் இருந்து பரபரப்புக்களுக்கு பஞ்சமில்லை. இதில் பத்திரிகைகளில் அனேகமாக தமிழ் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றிய செய்திகளையே அதிகமாக தாங்கி வருகின்றன. இம்முறை தமிழ் பிரதேசங்ககளில் போட்டியிடுவதற்கு பல கட்சிகளும் சுயேட்சையாக ஏராளமான வேட்பாளர்களும் போட்டியிடுகின்றார்கள்.

2004 ம் ஆண்டு இடம் பெற்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 22 ஆசனங்களை வடகிழக்கில் பெற்று அமோக வெற்றியை பெற்றிருந்தது. இந்த வெற்றியினை இல்லாமல் செய்வதற்காகவே இவ்வாறு ஏராளமானோர் வடகிழக்கில் சுயேட்சையாக போட்டியிடுகின்றார்கள்(போட்டியிட வைக்கப்படுகின்றார்கள்) போலத்தான் எனக்கு புலப்படுகின்றது. காசு கொடுத்து அரசு சுயேற்சை குழுக்களை போட்டியிட வைக்கின்றது என யாழ் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்ணணி வேட்பாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட அண்மையில் யாழ்நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். அதேபோல மற்றுமொரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அரியநேந்திரன் அண்மையில் தமிழ் வாரவெளியீடு ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்யுமாறு சுயேற்சை வேட்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றார். இவர்களுடைய கருத்துக்களையும் உதாசீனம் செய்துவிட முடியாது.

இன்னுமொரு முக்கியமான விடயம்தான் கடந்த தேர்தலில் விடுதலைப் புலிகளால் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு தமிழ் தேசியகூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட பலரை கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றியமை. இது பல மட்டங்களில் பெரும் சர்ச்சையை அண்மையில் கிளப்பிவிட்டிருந்தது. இதன் காரணமாக வெளியேற்றப்பட்டவர்கள் தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்ணணி என்ற பெயரில் வடகிழக்கில் போட்டியிடுகின்றார்கள். இதன் மூலம் தற்போதைக்கு அந்த விவகாரம் அப்படியே தணிந்திருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இவர்களுக்கும் இடையே ஊடக அறிக்கை மூலமான விவாதங்கள் இடம்பெற்றுவருகின்றமையை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

இதனிடையே தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது விழுந்திருக்கும் இன்னுமொரு குற்றச்சாட்டுதான் தமிழ் மக்களுடைய ஏக பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக இருந்த கொள்கைகளை கைவிட்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகாளால் நிராகரிக்கப்பட்ட ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையில் பேசுவதற்கு தயார் என்று அறிவித்திருப்பதாக தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்ணணி தெரிவிக்கின்றது. ஒஸ்லோ பிரகடனத்தை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டார்களா இல்லையா என்று விவாதிப்பதற்கா நேரம் இதுவல்ல. உலக அரங்கில் இலங்கை தமிழர்களுடைய அரசியல் ஸ்திரத்தினை தெளிவாக நிரூபிக்க வேண்டிய காலம் இது. 2004ம் ஆண்டு உலக நாடுகளுக்கும் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகள் தங்களுடைய அரசியல் பலத்தினை நிரூபிக்க வேண்டியமை எவ்வளவு முக்கியமானதாக இருந்ததோ அதைவிடவும் தற்போது நிரூபிக்க வேண்டிய தேவையிருப்பதாக நான் கருதுகின்றேன்.

மற்றையது பிராந்தய வல்லரசு அயல்நாடு என்பதையும் கடந்து இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை என்று வரும்போது இந்தியாவின் செல்வாக்கானது மிகமுக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. என்னை பொறுத்தவரையில் தமிழ் Nசிய கூட்டமைப்பு இதனை தெளிவாக புரிந்துகொண்டுள்ளது போன்றுதான காணப்படுகின்றது. சுட்டமைப்பானது ஈழப்பிரச்சனை தொடர்பில் இந்தியாவிடம் இருந்து எதனையோ எதிர்பார்ப்பது அல்லது இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதற்கு முயற்சிக்கினறது போலத்தான் புலப்படுகின்றது. இதன் ஒரு நடவடிக்கையாகத்தான் புதுடில்லியில் அர்களுடைய காரியாலயம் ஒன்றை நிறுவது தொடர்பான திட்டம் என்றுகூட கூறலாம். கடந்த நாட்களில் கூட இந்திய வெளியுறவு செயலர் நிருபமாராவ் இலங்கைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதியுடனும் அரசியல் கட்சிகள் சிலவற்றுடனும் பேச்சு நடத்தியிருந்தார்.

எது எவ்வாறாயினும் விடுதலைப்புலிகள் இருந்த காலப்பகுதியில் ஒன்றாக ஒற்றுமையாக(?) இருந்த தமிழ் தலமைகள் விடுதலைப்புலிகளுடைய வீழ்ச்சியின் பின்னர் இவ்வாறு பிளவுபட்டு நிற்பது தமிழ் மக்களுடைய அரசியல் போராட்டத்துக்கும் ஒரு பெரும் பின்னடைவே. எது எப்படியோ தமிழ் கட்சிகளுக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த பிளவுகள் தமிழ் மக்களுடைய அரசியல் ஸ்;திரத்தில் பாரிய தாக்கத்தினை எதிர்காலத்தில் செலுத்தப்போகின்றது என்பதுதான் உண்மை என்பதனை தமிழ் மக்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ் தலமைகள் ஐக்கியப்பட்டு ஒற்றுமையாக இருப்பார்களெயனால் தமிழ் மக்களுக்கான உரிமைகள் அபிலாசைகளை பற்றி இலங்கையின் அரசியல் தலமைகளுடன் கதைப்பதற்கு இலகுவானதாகும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

04 மார்ச் 2010

தேர்தல் கூத்துக்கள்

தேர்தல் என்று ஒன்று வந்தவிட்டாலே பரபரப்புக்களுக்கு குறைவிருக்காது. கட்சி தாவல்கள் அடிதடி சண்டைகள் என்று இவற்றை அடுக்கிக்கொண்டு போகலாம். ஆனால் இங்கு நான் சொல்லப்பொவது எனக்கு தெரிந்த கூத்துக்களைதான்

தேர்தலில் வேட்பாளருக்குரிய இலக்கங்களை பெறும்போது கட்சிகளினால் மேற்கொள்ளப்படும் கூத்துக்கள். இது சம்பந்தமாக நான் சில நாட்களுக்கு முன்னமே அறியக்கூடியதாக இருந்தது. அதாவது மலையகத்தில் போட்டியிடும் ஒரு பிரபல்ய தமிழ் கட்சிக்கு எப்போது தேர்தலில் 8ம் 9ம் 10 வது இலக்கங்களை கட்டாயமாக வழங்க வேண்டுமாம். அதேபோல மற்றும் ஒரு கட்சிக்கு 2ம் 3ம் 4ம் இலக்கங்களை கட்டாயம் வழங்க வேண்டுமாம். இந்த இருகட்சிகளுக்கும் வழங்கப்படும் இந்த இலக்கங்களை தவிர்ந்து ஏனைய இலக்கங்களைத்தான் ஏனையோருக்கு தேர்தல் அலுவலகம் வழங்க வேண்டுமாம். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாது 1வது இலக்கத்தை பெறுவதற்காக தங்களுடைய முதல் எமுத்துக்களை மாற்றிகொள்பவர்களும் வேட்பாளர்களாக எமது நாட்டில் இருக்கின்றார்கள். அதாவது ஆங்கில முதல் எழுத்தான “A” யை தனது பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வார்களாம். இதனால் 1வது இலக்கம் தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை. ஏனென்றால் இலக்கங்கள் வழங்கும்பொது ஆங்கில எழுத்துக்களின் வரிசையிலேயே இலக்கங்கள் வழங்கப்படுவது வழமையானதினாலாகும்.

இப்படி எனக்கு தெரிந்த தேர்தல் கூத்துக்கள் இவை. ஆனால் இன்னும் எத்தனையோ கூத்துக்கள் தில்லுமுல்லுகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. உங்களுக்கும் இவ்வாறான கட்சிகளின் தில்லுமுல்லுக்ள ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள் எங்களுக்கும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். ஏனென்றால் பொதுமக்களுக்கு அரசியல்வாதிகள் கட்சிகளின் பல விடயங்கள் தெரிந்திருப்பதில்லை. இவ்வாறான ஆக்கங்கள் மூலமாகவாவது வேட்பாளர்கள் கட்சிகள் அடிக்கும் கூத்துக்களை அவர்களும் தெரிந்து கொள்ள முடியும்.

என்னை அடிக்கடி உறுத்தும் ஒரு கேள்விதான் தேர்தலில் ஒருவேட்பாள் மக்களின்மூலம் வராமல் ஏன் கட்சி தலைவர்கள் மூலம் தெரிவு செய்யப்படுகின்றார்கள் என்பதுதான். இவ்வாறு கட்சி தலைவரினால் ஒரு வேட்பாளர் நேரடியாக தெரிவு செய்யுமிடத்து அவர் மக்களுக்கு சேவைசெய்ய வேண்டிய அல்லது மக்களுக்கு பதில் சொல்ல அவசியமில்லாமல் போகின்றது. அந்த வேட்பாளர் தன்னை தெரிவு செய்த கட்சிக்கோ அல்லது தலைவருக்கே பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு இதன்மூலம் தள்ளப்படுகின்றார். ஆனால் எது எப்படியானாலும் மக்கள்தான் வாக்களிக்கவேண்டும். அது அவர்களுடைய ஜனநாயக கடமை என்பதோடு மட்டுமே நின்று விடுகின்றது அவர்ககளுடைய பங்கு. இதனால் மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் தேர்தலின் பின்னர் தவிடுபொடியாகி விடுகின்றது.

04 பிப்ரவரி 2010

இலங்கை தமிழ் அரசியல் கைதிகள்

எங்களுடைய நாட்டில் என்று அவசரகால சட்டமும் பயங்கரவாத தடைச்சட்டமும் கொண்டுவரப்பட்டதோ அன்றிலிருந்து சந்தேகத்தின் பெயரில் ஒருவரை தடுத்து வைத்திருப்பதென்பது இயல்பாகி போனதொன்றாகிவிட்டது. எத்தனையோ தாய் தந்தையர் தங்களுடைய பிள்ளைகளுக்காகவும் பல மனைவிமார் தங்களது கணவர்களையும் பிள்ளைகள் அப்பாவையும் சிறையிலே சென்று பார்பதை தவிர அவர்களுக்கு முன்னால் வேறுஒர தெரிவும் இல்லாமல் இருக்கிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பலர் விடுதலை செய்யப்பட்டாலும் இன்னும் விசாரணைகள் இன்றி எத்தனைபேர் சிறைகளில் வாடுகின்றனர். இவர்கள்மீது முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டாக விடுதலைப்புவிகளுக்கு உதவி செய்தனர் அல்லது பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணைபோயினர் என்று சொல்லப்படுகின்றது. இவர்கள் தொடர்பான ஒரு சிறிய தொகுப்பு யா ரிவி நிறுவனத்தினால் அண்மையில் தயாரிக்கப்பட்டது. அந்த தொகுப்பையும் பாதிக்கப்பட்டவர்ளின் அழுகுரலையும் இந்த நாட்டு அரசியல் தலைவர்களுக்கு அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளும் இதோ இந்த காணொளியில்...

16 ஜனவரி 2010

மாற்றம் ஏற்படாது தடுக்க வேண்டும்

தலைப்பை பார்த்தவுடனேயே ஏதோ அரசியல் பதிவு என்று நினைக்கவேண்டாம். இது இயற்கையுடன் சம்பந்தப்பட்ட ஒரு பதிவு. அதாவது தற்போது புவியானது நாளுக்கு நாள் வெப்பமடைந்து வருகின்றது. இதற்கு முக்கியமான காரணமாக மனிதனது செயற்பாடுகளை கூறலாம். அதிகரித்து வரும் நகர மயமாக்கல் இதற்கு முக்கியமான காரணமாகும்.
காலநிலை மாற்றத்தைால் எரிர்காலத்தில் புவியானது பாரிய சவால்களை சந்திக்க வேண்டி வரும். எனவே எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு தற்போதே சரியான திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும். இயற்கை சூழலை பாதுகாக்க வேண்டும். அதற்கு புவியில் உள்ள ஒவ்வொருவருடைய பங்களிப்பும் முக்கியம் .

இயற்கையை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு www.earthlanka.net எனும் இணையத்தளம் செயற்பட்டு வருகின்றது. தற்போது கொழும்பில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் EDEX 2010 கண்காட்சியில் Earthlanka தனது கண்காட்சி கூடத்தினை Green Zone ல் நிறுவியிருக்கின்றது. நீங்களும் EDEX 2010 கண்காட்சிக்கு சென்றால் ஏர்த்லங்காவின் Green Alliance கண்காட்சி ‍கூடத்திற்கு சென்று மேலதிக விபரங்களை பெற்று கொள்ளலாம்.
உங்களது கருத்துக்களை அவர்களுடைய கீழ்வரும் வலைப்பதிவிற்கு சென்று பதியலாம். உங்களுடை பெறுமதியான கருத்துக்கள் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றகண்காணிப்பு குழுவினருக்கு அனுப்பிவைக்கப்படும்.
வலைப்பதிவு இங்கே அழுத்தவும்
www.earthlanka.com
Join Earthlanka Fan Club on Facebook "One Earth" Click Here