யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணாண்டோ அவ்வாறு நீதிமன்றில் தெரிவித்திருந்தமை தவறான விடயம். மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. (நேற்று (25) அவர் நீதிமன்றில் அவ்வாறு குறிப்பிட்டமைக்கு அதே நீதிமன்றில் மன்னிப்பு கோரியுள்ளார்.
அவர் புட்டு, பிட்ஸா உதாரணங்களை குறிப்பிட்டதன் மூலம் குறிப்பிட வருவது என நான் ஊகிக்கும் விடயம் என்னவென்றால் இலங்கையின் வடபகுதி மூடிய பொருளாதாரத்தில் இருந்ததென்றும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து திறந்த பொருளாதரத்தை நாமே வடக்கிற்கு கொண்டுவந்தோம் என்ற இறுமாப்பான அறிக்கையே அது.
கேரளாவுடன் இருக்கும் வரலாற்றுத் தொடர்பு காரணமாக கேரளாவின் உணவுப் பழக்கவழக்கங்கள், விவசாய முறைமைகள் சில பேச்சு வழக்குகள், யாழ்ப்பாணத் தமிழர்களுடைய வாழ்வியலில் நிரம்பியே காணப்படுகின்றது. இதை மறுப்பதற்கு இல்லை.
80 களின் நடுப்பகுதியின் பிறந்தவன் என்ற ரீதியின் என்னுடைய 23 வருடங்கள் போருடனான வாழ்க்கையுடனேயே கழிந்திருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து 1995 இல் இடம்பெயர்ந்து வன்னிக்குச் சென்று புதுக்குடியிருப்பில் 7 வருசங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் வசித்த அனுபவம் கொண்டவன் என்ற ரீதியில் அதாவது, இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார தடை விதிக்கப்பட்டிருந்த வன்னிப் பெருநிலப்பரப்புக்குள் வாழ்ந்தவன் என்ற ரீதியில் ஒரேயொரு விடயத்தை இங்கு குறிப்பிடவேண்டும்.
அதாவது மூடிய பொருளாதார சூழ்லையில் நாம் அரிசி தேங்காய் மரக்கறி போன்றவற்றை மிகவும் குறைந்த விலையில் வன்னிக்குள் எம்மால் பெறமுடிந்தது. அரிசி கிலோ 8 ரூபாய்க்கும் தேங்காய் 6–8 ரூயாக்கும் வாங்க முடிந்ததற்கான காரணம் இதே மூடிய பொருளாதாரம்தான். கடலில் இலங்கைக் கடற்படையின் அச்சுறுத்தலால் கடலுணவுக்கள் விலை கொஞ்சம் அதிகம்.
ஆகவே திறந்த பொருளாதாரத்தால் விலைவாசி உயர்ந்ததே தவிர குறையவில்லை என்பதே உண்மை. நான் பொருளாதாரம் படித்தவனோ அல்லது பொருளாதார வல்லுனனோ இல்லை அதனால் இந்த திறந்த/மூடிய பொருளாதாரம் தொடர்பில் சாதக பாதகம் தொடர்பில் அதிகம் பேசாமால் எனது அனுபவத்தினை இங்கே கூறியிருக்கிறேன்.
ஆகவே திறந்த பொருளாதாரத்தால் மக்களுக்கு நன்மையைவிட தீமைய அதிகம். இதை பிரசாத் பெர்ணாண்டோ புரிந்திருந்தால் அப்படியொரு இறுமாப்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்திருக்கமாட்டார்.
பி.கு :-
பிட்ஸா நிறுவனத்தின் இலங்கை விற்பனை முகவரும் ( Franchise) தமிழரே. இலங்கையில் உள்ள கார்கில்ஸ் புட் சிட்டி சூப்பர்மாட்கட் நிறுவனம் அந்த உரிமையையும் வைத்திருக்கின்றது. யாழ்ப்பாணத்தின் மானிப்பாயை பூர்வீகமாக சேர்ந்த பேஜ் குடும்பத்தின் சொத்தே இந்த கார்கில்ஸ் நிறுவனமும் அதன் பிட்ஸா கடைகளும் என்பதையும் இங்கே குறிப்பிட்டுக் கூறவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக