A Promised Land

குடியரசு தலைவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குடியரசு தலைவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 நவம்பர் 2020

நான் உரையாடிய பிரபல்யமான நபர் - கலாநிதி அப்துல் கலாம்

 என்னுடைய வாழ்க்கையில் நான் பல பிரபலங்களை சந்தித்திருந்தாலும் மறக்க முடியாத சந்திப்பாக அமைந்திருந்தது இந்த்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் கலாநிதி அப்துல் கலாம் அவர்களை சந்தித்த நிகழ்வுதான்.


(Dr. Abdul Kalam in Colombo)

2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 & 27 ஆந் திகதிகளில் இலங்கையின் கொழும்பு நகரில் "மின்வலு மற்றும் சக்திவலு அமைச்சு" ஏற்பாடு செய்திருந்த “An energy approach towards a Knowledge based economy” எனும் தொனிப்பொருளிலான மாநாட்டின் சிறப்பு அதிதியாக கலாநிதி அப்துல் கலாம் கலந்து கொண்டிருந்தார்.

இந்த காலப்பகுதியில் நான் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினுடைய ஊடகப் பிரிவில் ஊடக இணைப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்த காரணத்தினால் கலாநிதி அப்துல் கலாம் அவர்கள் கந்துகொள்ளும் அந்த மாநாட்டுக்கு செல்வதற்கான சந்தர்ப்பம் மின்வலு மற்றும் சக்திவலு அமைச்சரின் ஆலோசகரால் எனக்கு கிடைத்திருந்தது.

இந்த மாநாட்டை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 2015 ஜூன் 26 மாலை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஏற்பாடாகியிருந்தது. கலாநிதி அப்துல் கலாம் அவர்கள் நிகழ்வுக்கு வருகை தந்து மாநாட்டை ஆரம்பித்து வைத்ததுடன் தனது முதன்மையுரையையும் ஆற்றிவிட்டு அதற்கு பின்னர் இரவுணவையும் முடித்துவிட்டு குறிப்பிட்ட மண்டபத்தைவிட்டு வெளியேறுகையில் நானும் எனது நண்பர்கள் இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்த மேசைக்கு அருகில் வரும்போது தாமாகவே எம்மருக்கில் நின்று "How is the Food? என்று சிரித்த முகத்துடன் கேட்டார்.

இன்ப அதிர்ச்சியில் தட்டுத் தடுமாறி எழுந்து அவருடன் தமிழில் ஒரு 45 செக்கன்கள் உரையாடினேன். எனது ஊர் யாழ்ப்பாணம் என்பதையும் கூறினேன். "அம்மா அப்பா எல்லாம் யாழ்ப்பாணத்திலையா இருக்கிறார்கள்" என்று கேட்டார். மிகவும் மென்மையாகவும் சிரித்த முகத்துடனும் கதைத்துவிட்டு சென்றார். உண்மையிலேயே இப்போது நினைத்தாலும் உடலெல்லாம் புல்லரிக்கும் ஒரு சம்பவம் அது.

ஆனால் மிகப்பெரிய கவலை என்னவென்றால் சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளையில் கலாநிதி அப்துல் கலாம் அவர்கள் எம்முடன் உரையாட வந்ததால் கைலாகு கொடுத்து அவருடன் உரையாடவோ அல்லது அந்த அவசரத்தில் புகைப்படம் எடுத்துக்கொள்ளவோ முடியாமல் போய்விட்டது.

ஆனாலும் இந்தியாவின் தலைசிறந்த எளிமையான மனிதனான கலாநிதி அப்துல் கலாம் அவர்களை நேரில் சந்தித்து உரையாடிவிட்டேன் எனும் பெருமை எனக்குள் இப்போதும் எப்போதும் இருந்துகொண்டேயிருக்கும்.


எதிர்பார்பில் பராக் ஒபாமாவின் "A Promised Land” புத்தகம்