தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தின்
பலாலிப் பிரதேசத்தில் நிலைகொண்டிருந்த படையினர் புலிகளுக்கு எதிரான போர் என்ற கோசத்துடன்
மெல்ல மெல்ல முன்னேறி தமிழ் மக்களின் நிலங்களை பிடித்துக் கொண்டு வந்தனர். அப்போது
உங்களது உயிர்களை காப்பாற்றிக் கொள்ள இடம்பெயர்ந்து செல்வதற்கு தயாரானபோது உங்களுடைய
பாட்டன், பாட்டி அல்லது வயதான பெரியவர்கள், தமது சொந்த ஊரைவிட்டு நிலத்தைவிட்டு வரமாட்டோம் என்று
அடம்பிடித்திருப்பார்கள். அவர்களது மனதை மாற்றுவதற்கு எவ்வளவுதான் பல காரணங்கைளை கூறினாலும்
அவர்கள் தமது முடிவில் உறுதியாக நின்றிருப்பார்கள். அதனால் வலுக்கட்டாயமாக அவர்களையும்
அழைத்துக் கொண்டு முன்னேறி வரும் படையினரின் தாக்குதல்களில் இருந்து உயிரைப் பாதுகாத்துக்
கொள்வதற்காக உங்கள் வீட்டையும், ஊரையும் உடமைகளையும் அப்படியே விட்டுவிட்டு இடம்பெயர்ந்து
இருப்பீர்கள். யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது இலங்கையின் ஏனைய இடங்களில் இடப்பெயர்வுகளை
சந்தித்தவர்கள் இப்படியான ஒரே அனுபவத்தைத்தான் கொண்டிருப்பார்கள்.
வரலாற்றுக் காலம்தொட்டு மனிதன்
தனது வாழ்க்கை முறையினை தான் வாழ்ந்த நிலத்தினை அடிப்படையாகக் கொண்டே அமைத்து வந்திருக்கிறான்.
அவனுக்கும் அவன் சார்ந்த நிலத்துக்குமிடையிலான தொடர்பு மிகவும் நெருக்கமானதாகவும் உணர்வுபூர்வமானதாகவும்
ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்ததாகவே அமைந்திருந்தது.
இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கும்
மேலான உள்நாட்டு யுத்தம் வடக்கு கிழக்கில் பல்லாயிரக் கணக்கானவர்களை அகதிகளாக்கியது.
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இதன் பாதிப்பு அதிகமாகவே இருந்த்து. யாழ்ப்பாணத்தின்
விவசாய உற்பத்தி வளம் பொருந்திய வலிகாம் வடக்கு பகுதியில் மாத்திரம் பல்லாயிரக்கணக்காண
குடும்பங்கள் தமது வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்து அகதி முகாம்களிலும் வேறு இடங்களிலும்
வசிப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
2009 இல் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன்
பின்னர் தமது சொந்த இடங்களில் மீளக் குடியேறி தமது வாழ்க்கையினை ஆரம்பிக்கலாம் என்ற
எதிர்பார்ப்பு இடம்பெயர்ந்திருந்த மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது. ஆனால் அவர்களுடைய
அந்த எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்து தனது நாட்டு மக்களின் வாழ்க்கைப் பிரச்சினையை
தீர்ப்பதற்கு மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னைய அரசாங்கம் போதுமான முனைப்புக்களை மேற்கொண்டிருக்கவில்லை.
பெயரளவில் சிறிதளவு காணிகளை விடுவித்துவிட்டு ஏனைய வளம் நிறைந்த தமிழர்களின் பிரதேசங்களை
உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே தொடர்ந்தும்
வைத்திருந்தது. இராணுவம் இன்னுமொருபடி மேலே சென்று இனியும் தமிழர்களின் இடங்களில் ஒரு
அங்குலத்தைக்கூட அவர்களுக்கு மீண்டும் வழங்க முடியாது என வெளிப்படையாகவே அறிவித்திருந்தது.
இதன் காரணமாக தமது பூர்வீக நிலங்களுக்கு மீண்டும்
சென்று குடியேறுவதற்கு காத்திருந்த மக்கள் மிகுந்த விரக்திக்கு ஆளாகியிருந்தனர்.
இந்த நிலையிலேயே 2015 ஜனவரி மாதம்
இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் அமோக ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேன
இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். தமது நிலங்கள் தமக்கு கிடைக்குமா கிடைக்காதா
என்றே தெரியாமல் விரக்தியில் இருந்த மக்களுக்கு இந்த மாற்றம் ஒரு புது நம்பிக்கையை
ஏற்படுத்தியது.
அந்த நம்பிக்கையினை வீணாக்காது
உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த பொதுமக்களின் காணிகளை மீண்டும் அவர்களுக்கு வழங்கும்
செயற்பாடு ஜனாதிபதி மைத்திரியின் தலைமையில் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வந்தது. அவ்வாறு
விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் மீள் குடியேறுவதற்கான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு
வந்தன. இதுவரையிலும் வடக்கு கிழக்கில் 85 வீதமான மக்களின் காணிகள் அவர்களுக்கு மீளவும்
கையளிக்கப்பட்டிருப்பது விசேடமாக குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். அதிலும் குறிப்பாக யாழ்
வலி.வடக்கின் 75 வீதமான காணிகள் இவரை விடுவிக்கப்பட்டிருக்கின்றன.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய
நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹசைன் அவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன அவர்களை சந்தித்தபோது “படையினரின் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவித்து
உள்நாட்டில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களிலும் வேறு இடங்களிலும் தற்காலிகமாக தங்கியுள்ள
மக்களை விரைவாக மீள்குடியேற்றுங்கள்” என்று கோரிக்கையினையும் விடுத்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக 2015 டிசம்பர்
மாதம் 22 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரி தெல்லிப்பளை
கோணப்புலம் பகுதியில் இருந்த அகதி முகாமுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நேரடியாக
விஜயம் மேற்கொண்டு அம்மக்களின் அவலங்களை கண்கூடாக பார்த்திருந்தார். அதுமட்டுமல்லாது
அம்மக்கள் தமது நிலங்களுக்கு மீண்டும் செல்லமுடியாமல் அகதி முகாமில் முகம்கொடுக்கும்
அவல வாழ்க்கையினை தென்னிலங்கை மக்கள் அறிந்து கொள்ளுமாறு செய்த்துடன் இனவாதம் பேசும்
அரசியல்வாதிகளையும் அகதி முகாம்களுக்கு வந்து இம்மக்கள் படும் அவல வாழ்க்கையினைப் பாருங்கள்
என்றும் அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் நான் செய்து தருகிறேன் என்றும் கூறியிருந்தார்.
ஏனென்றால் வடக்கில் தமிழ் மக்களுடைய
காணிகள் அவர்களுக்கு மீண்டும் அரசாங்கத்தினால் வழங்கப்படும்போது தெற்கின் இனவாதம் பேசும்
அரசியல்வாதிகள் “வடக்கில் இராணுவ முகாம்கள் ஒவ்வொன்றாக மூடப்படுகின்றது. புலிகள் மீண்டும்
உயிர்தெழப் போகின்றார்கள். தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து” என்றவாறு தென்னிலங்கை சிங்கள
மக்களை பதட்டமடையச் செய்யும் முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்திருந்தமையே அதற்கு
காரணம்.
ஆயினும் கடந்த இரண்டு வருடங்களில்
படிப்படியாகவும் வேகமாகவும் விடுவிக்கப்பட்டு வந்த இந்த காணி விடுவிப்பில் சிறிய ஒரு
தாமதம் ஏற்பட்டிருப்பது போன்றதான தோற்றப்பாடு தற்போது ஏற்பட்டிருக்கின்றது. அது உண்மையும்
கூட. தம்முடைய அரசியலை முன்னெடுப்பற்காக மக்களை இன ரீதியில் பிரித்தாளும் சூழ்ச்சியினைக்
கையாளும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் சிங்கள மக்கள் மத்தியில் இந்த காணி விடுவிப்பு
தொடர்பில் ஏற்படுத்தியிக்கும் ஒரு அச்சநிலையே இதற்கு காரணமாகும்.
காணி விடுவிப்பு தொடர்பில்
2015, 2016 மற்றும் 2017 இல் சிங்கள மக்களிடையே இருந்த நிலைப்பாட்டுக்கும் உள்ளுராட்சி
தேர்தலுக்கு பின்னரான 2018 இன் நிலைப்பாட்டுக்குமிடையில் பாரிய வேறுபாட்டினைக் காணமுடிகிறது.
இதன் காரணமாகவே காணி விடுவிப்பு தொடர்ச்சியாக தாமதமடைந்து வருகின்றது என்பது மறுக்க
முடியாத உண்மை.
ஆனாலும் ஜனாதிபதி தமிழ் மக்களின்
காணிகள் அவர்களுக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும்
உறுதியாகவே இருக்கின்றார். ஆனால் தென்னிலங்கையினை கவனமாக கையாண்டு அது தொடர்பில் அவர்களுக்கு
பூரண தெளிவினை ஏற்படுத்திக் கொடுக்கும் அதேசமயம் எஞ்சியிருக்கும் தமிழ் மக்களின் காணிகளையும்
வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் இருக்கின்றது.
இந்நிலையில் நல்லிணக்க அரசாங்கத்திற்கு
இன்னும் இருப்பது 18 மாதகாலம் மட்டுமே. ஆகவே
தமிழ் அரசியல்வாதிகளின் பங்கு காணி விடுவிப்பு விடயத்தில் எவ்வாறு இருக்கப் போகின்றது
என்ற கேள்விய இயல்பாகவே எழுகின்றது. காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடனும் அரசாங்கத்துடனும்
இணைந்து தூரநோக்குடனும் இராஜதந்திர ரீதியிலும் பணியாற்ற வேண்டிய அவசர தேவை அவர்களுக்கு
இருக்கின்றது. அவ்வாறு செயற்பட்டால்தான் காணி விடுவிப்பிற்கு தெற்கில் சிங்கள மத்தியில்
எழுந்திருக்கும் சவால்களை முறியடித்து தமிழ் மக்களின் காணிகளை இந்த நல்லாட்சி அரசாங்கத்தின்
கீழ் முழுமையாக அவர்களுக்கு பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையினை
ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
(04.06.2018 ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த கட்டுரை)