A Promised Land

27 மே 2018

உற்பத்தியில் தன்னிறைவடைவதற்கு உதவும் கிராமசக்தி மக்கள் செயற்திட்டம்



ஒரு நாடானது சமூக, கலை கலாசார மற்றும் பொருளாதார ரீதியில் அடைந்துகொள்ளும் தன்னிறைவை அபிவிருத்தி என்று கூறலாம். இதனை அடிப்படையாகக் கொண்டே ஒரு நாட்டினை அபிவிருத்தி அடைந்த நாடு, அபிவிருத்தி அடைந்துவரும் நாடு மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள நாடு என வகைப்படுத்தப்படுத்தலாம்.

எமது நாடு சுதந்திரமடைந்து 70 வருடங்கள் கடந்த நிலையில் இன்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடு என்றே அழைக்கப்படுகின்றது. எழுத்தறிவிலும் கலை கலாசார ரீதியிலும் நமது நாடு முன்னேற்றமடைந்து இருந்த போதிலும் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் இன்னும் தன்னிறைவை அடைய முடியாமலிருப்பதே இதற்கு பிரதான காரணமாகும்.

வரலாற்றுக் காலம்தொட்டே எமது நாடு விவசாயத்தினை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடாகவே இருந்து வந்தாலும் இன்னமும் விவசயத்துறையிலும் உள்ளுர் உற்பத்தித் துறையிலும் தன்னிறைவை அடையமுடியாமலே இருக்கின்றது.

ஆசியப் பிராந்தியத்தைப் பொறுத்தளவில் மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை நாம் உதாரணமாக எடுத்துக் கொண்டால் உள்ளுர் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் சிறந்த இடத்தினை மலேசியாவும் சேவை வழங்கும் நாடு என்ற வகையில் சிங்கப்பூரும் முன்னணியில் இருந்து வருகின்றன.

அதிலும் குறிப்பாக சிங்கப்பூரானது, துறைமுகம், கப்பற்துறை, எண்ணைய் சுத்திகரிப்பு மற்றும் வழங்கல், கல்வி, சுகாதாரம், விமான சேவை போன்ற துறைகளில் உலகின் முன்னணி சேவை வழங்குனராக செயற்பட்டு வருகின்றது. வெறுமனே 704 சதுர கிலோமீட்டர்கள் சுற்றளவைக் கொண்ட இந்த நாடு சுற்றுலாத் துறையிலும் அபரிமித வளர்ச்சியடைந்திருக்கின்றது.

எமது நாட்டைப் பொறுத்தவரை மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இருக்கும் அத்தனை சிறப்பம்சங்களையும் அது கொண்டிருப்பதுடன், கிழக்குலகையும் மேற்குலகையும் இணைக்கும் உலகத்தின் மிகமுக்கிய கேந்திர மத்திய நிலையமாக இருந்தும்கூட, பொருளாதார ரீதியில் ஏன் எமக்கு தன்னிறைவை அடைந்துகொள்ள முடியவில்லை என்ற கேள்வி எழுகின்றது. 

சுதந்திரமடைந்ததற்கு பின்னர்  முகம்கொடுக்க நேர்ந்த உள்நாட்டு பிரச்சினைகளே இதற்கான காரணம் என வெறுமனே கைகாட்டிவிட்டுப் தப்பிக்க முடியாது. உள்நாட்டு பிரச்சினைகளும் ஒரு காரணமாக இருந்துவருகின்ற போதிலும் அதற்கும்  புறம்பான காரணிகளும் இருக்கின்றன.

இலங்கையைப் பொறுத்தவரையில் விவசாயத்துறை பிரதான உற்பத்தித் துறையாக இருந்தபோதிலும், தேயிலை, இறப்பர், ஏலம், கராம்பு, கறுவாப்பட்டை போன்ற வாசனைத் திரவியங்கள், மாணிக்க கல் உற்பத்தி, சுற்றுலாத்துறை போன்ற துறைகளும் முக்கியமான துறைகளாகவே காணப்படுகின்றன. இவற்றில் தேயிலை உற்பத்தி மற்றும் சுற்றுலாத்துறை ஆகியனவற்றிற்கு உலகலாவிய ரீதியில் காணப்படும் உயரிய கிராக்கியின் காரணமாக இத்துறைகள் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளன. ஆயினும் மேற்குறிப்பிட்ட ஏனையவற்றிற்கும் உலகலாவிய ரீதியில் உயரிய சந்தை வாய்ப்புக்கள் இருக்கவே செய்கின்றன. ஆயினும் அவை கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தித் துறைகளாக இருப்பதனால் அபிவிருத்தி செய்யப்படாமலேயே இருந்து வருகின்றது.  

இத்துறைகளை சரியாக இனங்கண்டு அவற்றை அபிவிருத்தி செய்வதனூடாக தன்னிறைவடைவதை உறுதிப்படுத்தி ஏற்றுமதியினை அதிகரிக்கச் செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை ஆட்சிக்கு வந்த முன்னைய எந்த அரசாங்கங்களும் முன்னெடுத்திருக்கவில்லை. வறுமை ஒழிப்பு என்ற பெயரில் உதவிகளை வழங்குவதுடன் அவை நிறுத்திக் கொண்டுவிட்டன. இதன் காரணமாக மக்கள் உற்பத்தியில் தன்னிறைவை அடையாமல் அரசாங்கத்தில் தங்கிவாழும் நிலையே கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்தது. அதன் உச்சக்கட்டமாக அரிசியினையே இறக்குமதி செய்யவேண்டிய துற்பாக்கிய நிலைமைக்கு நம்நாடு தள்ளப்பட்டது.

இந்தக் குறைபாட்டினை சரியாக இனங்கண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, கிராமங்களை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளை பேண்தகு ரீதியில் அபிவிருத்தி செய்வதனூடாக வறுமையை ஒழித்து, உள்நாட்டில் தன்னிறைவை அடைக்கூடிய வழிவகைகளை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கில் கிராமசக்தி மக்கள் செயற்திட்டத்தினை தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கடந்த ஆண்டில் ஆரம்பித்திருந்தார்.

இச் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக இலங்கையின் 5000 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு, அக்கிராமங்களினூடாக மேற்கொள்ளக்கூடிய உற்பத்திகளை இனங்கண்டு அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதனூடாக உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்கான வழிவகைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒவ்வொரு பிரதேச செயலாளர்கள் பிரிவிலும் இனங்காணப்படும் கிராமங்களில் மக்களின் கூட்டு ஒத்துழைப்பின் மூலமே இந்த தன்னிறைவை ஏற்படுத்த முயல்வதே இத்திட்டத்தின் சிறப்ப்சமாகும். அவ்வாறு ஒரு குழுவாக இணையும் மக்கள் தமக்கான நிறுவனம் ஒன்றை உருவாக்கிக் கொள்வதுடன் உறுப்பினர் ஒருவருக்கு தலா எட்டாயிரம் ரூபாய் என்ற விகிதத்தில் கிராமசக்தி செயற்திட்டத்தினூடாக அந்நிறுவனத்தின் முதலீட்டுக்கு தேவையான நிதியுதவியும் அளிக்கப்படுகின்றது. அந்த நிதியினைக் கொண்டு அவர்கள் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டுமென்பதுடன் சந்தைவாய்ப்பு போன்ற தேவைப்படும் மேலதிக உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக தனியார் துறையினரின் பங்களிப்பும் பெற்றுக் கொடுக்கப்படும். இதற்கு உதரணமாக பதுளையில் உற்பத்தி செய்யப்படும் மலர்களுக்கான சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஊவா மாகாண கிராமசக்தி மலர் சங்கத்திற்கும் இலங்கையின் முன்னணி தனியார் நிறுவனமான ஹேலிஸ் தனியார் நிறுவனத்திற்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கடந்த 21 ஆம் திகதி பதுளையில் ஜனாதிபதி மைத்திரியின் தலைமையில் இடம்பெற்ற கிராமசக்தி முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டமையை குறிப்பிடலாம். 

ஹேலீஸ் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது

இந்த அடிப்படையில் 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் 332 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய 14,022 கிராம அலுவலர் பிரிவுகளிலும் கிராமசக்தி மக்கள் செயற்திட்டத்தினால் நிர்வகிக்கப்படும் சுமார் பதினைந்தாயிரம் நிறுவனங்களை நிறுவுவதனூடாக உற்பத்தியினை பெருக்குவதன் மூலம் பொருளாதாரத்தில் தன்னிறைவையடைந்த இலங்கையினை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டுப் போரினால் அதிகளவில் பாதிப்புக்களை சந்தித்த வடக்கு கிழக்கு மாகாணங்களின் அரச அதிகாரிகள் இந்த கிராமசக்தி செயற்திட்டத்தினை சிறந்த முறையில் உள்வாங்கி தத்தமது பிரதேசங்களில் செயற்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தில் நலிவடைந்திருக்கும் அப்பகுதி மக்களின் உற்பத்தியை ஊக்குவித்து, அவர்களுக்கு விமோசனத்தையும் பெற்றுக்கொடுக்கக் கூடிய சந்தர்ப்பமும் இச்செயற்திட்டத்தினால் தற்போது ஏற்பட்டிருக்கின்றது.

அத்தோடு இலங்கையின் அமைவிடம் கேந்திர முக்கியத்துவம்மிக்கதாக அமைந்திருப்பதால் கல்வி, சுகாதாரம், எண்ணைய் விநியோகம், கப்பற்துறை, விமானசேவை போன்ற துறைகளிலும் சிறந்த சேவை வழங்குனராக செயற்படகூடிய சந்தர்ப்பத்தினை உருவாக்கிக்கொள்ள கிராமசக்தி செயற்திட்டத்தினூடாக நிச்சயமாக வாய்ப்புக் கிட்டும்.

ஆகவே எல்லா வழிகளிலும் மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மையை பயற்கக்கூடிய இந்த கிரமசக்தி மக்கள் செயற்திட்டத்தினூடாக எம்மக்களை பற்றிப்பிடித்துள்ள வறுமையெனும் கொடிய அரக்கனை அகற்றி உற்பத்தியில் தன்னிறைவை பெற்றுக் கொள்வதன் மூலம் தேசிய பொருளாதாரத்திலும் தன்னிறைவை அடைந்து கொள்ளக்கூடிய நிலைமை உருவாகும்.

(27.05.2018 ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த கட்டுரை)

22 மே 2018

இக்கா (விக்கல்) - கனவுகளை தொலைக்கவிரும்பாதவனின் கதை



உலகின் மிகவும் பலம்பொருந்திய காட்சி ஊடகமான திரைப்படத்துறையில் இயக்குனராகுவது என்பது அவ்வளவு எளிதான விடயமல்ல. அதுவும் சினிமா வர்த்தக ரீதியில் வளர்ச்சியடையாத, வெறுமனே திரைப்பட விழாக்களையும் சிறப்புக் காட்சிகளிலும் தங்கியிருக்கின்ற இலங்கைபோன்ற ஒரு நாட்டில் இருந்துகொண்டு ஒரு திரைப்பட இயக்குனராக வர விரும்புவது என்பது கடிமானதும் வலியானதுமான விடயமாகும். 

இந்த வலியினை ஒரு இளம் இயக்குனர் தனது முதலாவது படைப்பிலேயே வெளிப்படுத்துவதென்பது இலகுவான விடயமல்ல. அவ்வாறு ஒரு கதையினை கூறும் “இக்கா” (விக்கல்) தனது நட்பு வட்டத்தின் உதவியுடன் இணைந்து உணர்வுபூர்வமாக திரைப்படமாக்கியிருக்கிறார் நம்நாட்டின் புதுமுக இயக்குனரான கௌசல்ய மாதவ பத்திரண. இளையோர் ஒன்றுபட்டால் எந்த தடைகள் வந்தாலும் ஒரு விடயத்தை செய்து முடிக்கலாம் என்பதற்கு இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பு அண்மையா காலங்களின் மிகச்சிறந்த உதாரணம்.
இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர்
இலங்கையின் பிரபல தொலைக்கட்சியான தெரண வருடந்தோறும் நடத்திரும் திரைப்பட விருதுவழங்கும் விழாவில் “Cinema of Tomorrow” என்ற விருதுக்கு போட்டியிடும் திரைப்படங்கள் கடந்தவாரம் (மே 19,20) இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தரங்கனி திரையரங்கில் காண்பிக்கப்பட்டது. அந்த திரையிடலில் இந்த “இக்கா” திரைப்படத்தினையும் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. 

ஒரு திரைக்கதையினை வைத்துக்கொண்டு அதனை படமாக எடுப்பதற்கு தயாரிப்பாளர்களைத் தேடி நாயாக அலையும் ஒரு சிங்கள இளைஞனை மைய்யமாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. நானும் அவ்வாறு தயாரிப்பாளரை தேடியலையும் ஒரு இளைஞன் என்ற வகையில் எனக்கு மிகவும் நெருக்கமாக இத்திரைப்படம் அமைந்தது. 

தான் சந்திக்கும் தயாரிப்பாளர்கள் தமக்கு விரும்பியபடி தன்னுடைய கதையை மாற்றி எடுக்கும் படி நிர்பந்தப்படுத்துவதும், அந்தக் கதைக்கு உண்மையிலேயே தேவையான பணத்தினை வழங்கத் தயாராக இல்லாமல் குறைந்த செலவில் படத்தினை எடுக்க நிர்ப்பந்தித்தாலும் கதை விடயத்தில் எந்தவித சமரசத்தையும் மேற்கொள்ளாது அவன் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதன் காரணமாக தனது படத்திற்கான சரியான தயாரிப்பாhளரொருவரை கண்டுபிடிப்பதற்கே சிரமப்படுகின்றான. 

மறுபுறத்தில் அவனது காதலியோ நீ வேலையொன்றைத் தேடிக்கொள், வீடு வாகனம் என்று எல்லா வசதிகளும் உன்னைத் தேடிவரும் அதுக்கு பின்னர் நீ விரும்புவதுபடி ஒரு படமல்ல பத்து படங்களையும் எடுக்கலாம் என ஆசைவார்த்தை காட்டுகிறாள். அதற்கும் மசியாத அவன் தனது கொள்கையில் விடாப்பிடியுடன் நிற்கிறான். தனது தந்தையிடமிருக்கு கிடைக்கும் இருபத்தைந்து இலட்சத்தையும் நவீன பொருளாதாரத்தின் சுரண்டலால் ஒரிரவிலேயே இழந்துவிட்டு அவன் நிற்கும்போது அவன் மீது எந்தவிதக் கோபமும் ஏற்படாது அரசியல் பொருளாதார முறைமையின் மீது தான்பார்வையாளனுக்கு அறக்கோபம் ஏற்படுகின்றது. 

அவனது வீட்டுக்கு அருகிலிருக்கும் கடையொன்றில் வேலைசெய்யும் தமிழ் இளைஞன் ஒருவன் தமிழ் மக்களின் நகைகள் குறிப்பிட்டதோர் இடத்தில் புதைக்கப்பட்டிருப்பதாகவும் அதை எடுத்தால் நீ விரும்புவதுபோல் படத்தினை எடுக்க முடியுமெனனக் கூறவும், வேறு எல்லா வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில் அப்படியாவது தன்னுடைய கனவுப் படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசையில் மட்டக்களப்பிலுள்ள கிராமமொன்றிற்கு பயணிக்கின்றான். 

அவ்வாறு சென்றவன் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுடைய நகைகளை எடுத்து தன்னுடை கனவுத் திரைப்படத்தை இயக்க முடிந்ததா இல்லையா என்பதையும் மிகவும் அழகாக 83 நிமிடங்களுக்குள் சொல்லிவிட்டுச் செல்கின்றார்.

இதில் சினிமா எடுக்க முயற்சிக்கும்; அந்த இளைஞனாக நடித்திருக்கும் கலன என்ற நடிகர் தன்னுடைய இயல்பான நடிப்பினூடாக கதைக்கு உயிரோட்டம் அளிப்பதுடன் பார்வையாளர்களை திரைப்படத்துடன் கட்டிப் போடுகின்றார். தமிழ் இளைஞனாக நடித்திருக்கும் தம்பி ஆகாஸ் தனது இயல்பான நடிப்பினூடாக அனைவரையும் கவர்கின்றார். ஒளிப்பதிவும் இசையும் படத்துக்கு மேலும் பலம் சேர்க்கின்றது.  

ஆகாஸ் தியாகலிங்கம்
இலங்கையில் தற்போது வாழும் பெரும்பாலன இளைஞர்கள் தமது கனவுகளை தொலைத்துவிட்டு வாழ்க்கையை முன்கொண்டு செல்வதற்காக வேறு ஏதோவொன்றை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டே வருகின்றார்கள். அவர்களைச் சுற்றி அரசியல் பொருளாதார வலைகள் சூழ்ச்சிகரமாக பின்னப்பட்டு தமது கனவுகளின் பின்னால் அவர்களை ஓடவிடாடமல் தடுப்பதிலேயே இந்த காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றது. 

இக்கா திரைப்படம் திரைத்துறையில் கால்பதிக்க விரும்பும் இளைஞனொருவன் முகம்கொடுக்கும் சவால்களை கதைக்கருவாகக் கொண்டிருந்தாலும் தமது கனவுகளை தொலைக்க விரும்பாமல் தொடர்ந்தும் போராடிவரும் ஏனைய எல்லாத் துறைகளின் இளையேரையும் பிரதிநிதித்துவப்படுத்திகின்றது..

நம்நாட்டின் நாளைய சினிமா தொடர்பில் பிரகாசமான நம்பிக்கையினை ஏற்படுத்தும் இத்திரைப்படத்தை இயக்கிய இயக்குனருக்கும் இத்திரைப்படத்தில் பங்குபற்றிய கலைஞர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். 

திரையிடலின் பின்னரான கலந்துரையாடலின்போது

21 மே 2018

"பாங்ஷு" - நீதி மறுக்கப்பட்ட இருண்ட யுகத்தை நோக்கிய ஒரு மீள்பயணம்


தென்னிலங்கையின் பிரபல சிங்கள தொலைக்காட்சியான தெரண டீவி வருடந்தோறும் சினிமா விருது நிகழ்வினை நடத்தி வருகின்றது. அதில் ஒரு விருது பிரிவுதான் "Cinema of Tomorrow" விருது. இதில் நம்நாட்டின் இளம் திரைப்பட நெறியாளர்களின் முதலாவது அல்லது இரண்டாவது திரைப்படத்தை மதிப்பிட்டு அவற்றில் சிறந்த திரைப்படத்திற்கு விருதும் ஐந்து மில்லியன் ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டு வருகின்றது. சிங்களஇ தமிழ் மொழி வேறுபாடின்றி இலங்கைக்கு உரித்தான திரைப்படங்கள் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றமை இந்த விருது வழங்கும் விழாவின் விசேட அம்சமாகும். 

இந்த வருடத்திற்கான திரைப்பட விருது வழங்கும் விழா எதிர்வரும் சனிக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ள நிலையில் "Cinema of Tomorrow" விருது போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள 06 திரைப்படங்களின் திரையில் நேற்றும் (மே-20) நேற்று முந்தினமும் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி திரையரங்கில் திரையிடப்பட்டது. 

ஒவ்வொரு காட்சியும் பார்வையாளர்களால் நிரம்பி வழிந்தது. இம்முறை தமிழ் நெறியாளர்களான சுமதி சிவமோனின் புதிய திரைப்படமான "Son's and Fathers" திரைப்படமும் விசாகேச சந்திரசேகரத்தின் "பாங்ஷு" திரைப்படமும் இந்த "Cinema of Tomorrow" விருதுக்கான போட்டிக்கு தெரிவாகியிருந்த திரைப்படங்களில் இருந்தமை விசேடமானதாகவும். இதில் பாங்சு சிங்கள திரைப்படமாவும் அமைந்திருந்தது. 

இந்த திரையிடலின் நேற்றைய (மே 20) இரு திரைப்படங்களின் காட்சிகளுக்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.  அதில் முதலாவது திரைப்படமாக இளம் இயக்குனர் கெளசல்ய மாதவ பத்திரணவின் "இக்கா" (விக்கல்) திரைப்படத்தையும் விசாகேசா சந்திரசேகரத்தின் பாங்சு திரைப்படத்தையும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. 

இதில் நெறியாளர் விசாகேசா சந்திரசேகரத்தின் "பாங்ஷு" திரைப்படம் பார்வையாளர்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன் இலங்கையின் நாளைய சினிமா தொடர்பிலான ஒரு நம்பிக்கையினை இட்டுச் சென்றிருக்கின்றது. 

சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்திற்கு எதிராக ஜேவிபியினரால் முன்னெடுக்கப்பட்டு கொடூரமாக அடக்கப்பட்ட 1971 ஆண்டு கிளர்ச்சியையோ அல்லது ஜே.ஆர். ஜயவர்த்தன - ஆர். பிரேமதாச அரசுக்கு எதிராக ஜேவிபியினர் முன்னெடுக்கப்பட்டு மிலேச்சத்தனமாக அடக்கி ஒழிக்கப்பட்ட 1988/89 கிளர்ச்சி பற்றியோ 80களின் பிற்பகுதியில் பிறந்தவர்கள் பெரிதாக அறிந்திருக்க சந்தர்ப்பம் இல்லை. 

அக்கிளர்ச்சி தொடர்பில் எழுதப்பட்ட புத்தகங்களை வாசிப்பதனூடாகவோ அதனுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தரையாடுவதனூடாகவோ அந்த கிளர்ச்சியினைப் பற்றி தெரிந்துகொள்ளக் கூடியதாக இருப்பினும் நாம் வாசிக்கும் அல்லது கேட்கும் அந்த கதைகள் எவ்வளவு தூரம் எம்மில் தாக்கம் செலுத்தும் என்பதை நிச்சயமாக கூறமுடியாது. ஆனாலும் அவற்றைப் பற்றி நேர்மையாக எடுக்கப்படும் ஒரு திரைப்படம் அதிர்ச்சியையும் தாக்கத்தையும் மிக இலகுவாக ஏற்படுத்தி விடும் என்பதற்கு நேற்று நான் பார்த்த பாங்சு திரைப்படம் ஒரு முன்னுதாரணம். 

“Frangipani” எனும் திரைப்படத்தினூடாக இலங்கையின் சினிமாத் துறையில் கால்பதித்த நெறியாளர் விசாகேசா சந்திரசேகரம் அவர்களின் இரண்டாவது படைப்புத்தான் இந்த "பாங்ஷு" திரைப்படம். இத்திரைப்படம் ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாகிக்கியதன் காரணமாகவோ என்னவோ திரைப்படம் முடிந்து சுமார் மூன்றி நிமிடங்களாகியும் கூடியிருந்த சுமார் நானூறு பேரின் கைதட்டல்களால் தரங்கனி திரையரங்கு அதிர்ந்தது.

Filmmaker Visakesa Chandrasekaram

"பாங்ஷு" திரைப்படம் 1988/89 இல் இடம்பெற்ற ஜேவிபி கிளர்ச்சியில் பங்கெடுத்த ஒரு இளைஞனின் தாயாரின் கதாபாத்திரத்தை மைய்யாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதே இந்தப் படத்திற்கான விசேட அம்சமாகும். சிங்கள சாதியக் கட்டமைப்பில் சலவைத் தொழில் செய்யும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த அத்தாய் தனது ஒரேயொரு அருமை மகன் தனது கண்முன்னேயே இனம் தொரியாத ஆயுததாரிகளால் தரதரவென்று இழுத்துச் செல்லும்போது அதைத் தடுத்து நிறுத்தமுடியாத கையாலாகாதவளாக நிற்கிறாள். தனது மகனைத்தேடி இரணுவ முகாம்களுக்கு செல்லும் அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆறு வருடங்களுக்கு பிறகு மகனுடைய எலும்புக்கூட்டினை காணும்போது விம்மி வெடித்து அழ முயற்சித்தும் கண்களில் கண்ணீர் வரண்டுபோனதால் விறைப்பாக நின்றாலும் பார்வையாளனின் கண்களில் கண்ணீரை  வரவழைத்து விடுகிறாள்.

ஆறு வருடங்களுக்கு பின்னர் உருவாக்கப்படும் காணமல் போனோரைக் கண்டறியும் விசாரணை ஆணைக்குழுவோ அத்தாய்க்கு மரணச் சான்றிதளையும் நஷ்ட ஈடாக 25 ஆயிரம் ரூபா பணத்தையும் வழங்கும்போது அதை வாங்காமல் அப்படியே திரும்பிச் செல்லும்போது பிள்ளையை தொலைத்த அத்தாயின் மனவேதனையை பார்வையாளனால் உணரக்கூடியாக இருக்கின்றது.

நீதிமன்றின் ஊடாக தன்னுடைய மகனுனின் சாவுக்கு நீதி கிடைக்கும் என்று நம்பும் அந்தத் தாய் நீதிமன்றத்தை நாடுவதுடன், தனது மகனை கடத்திச் சென்ற இராணுவ வீரனையும் அடையாளம் காட்டுகின்றாள். இராணுவ வீரனின் சகா நீதிமன்றினுள் வைத்து மிரட்டியும் அசைந்து கொடுக்காத அவள்இ நிறைமாதக் கற்பிணியான இராணுவ வீரனின் மனைவியின் “தனது கணவனுக்கு மன்னிப்பை கொடுங்கள்” என்ற இடைவிடாத கோரிக்கைக்கு அசைந்து கொடுக்கிறாளா இல்லையா என்ற முடிவுடன் திட்டமிட்டு நீதி மறுக்கப்பட்டுஇ மறக்கடிக்கப்பட்ட ஒரு துன்பரகமான வரலாற்றை மீள் பதிவுசெய்திருக்கிறது இந்த "பாங்ஷு" திரைப்படம். 

கதாபாத்திரங்களின் தெரிவு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை போன்ற எல்லாமே திரைப்படத்தின் இயக்குனர் கூறவரும் செய்தியை பார்வையாளனுக்கு எடுத்துச் செல்வதையே குறிக்கோளாக கொண்டிருக்கின்றது. அந்தளவுக்கு இந்த திரைப்படம் மிகவும் நேர்ந்தியாக எடுக்கப்பட்டிருப்பதுடன் 80களின் பிற்பகுதியில் பிறந்த என்னைப் போன்றவர்களை மீண்டும் 80களின் இருண்ட பக்கத்திற்கு மீள்பிரவேசம் செய்ய வைத்திருக்கின்றது என்று கூறினால் அது மிகையாகாது. அந்தவகையில் துணிச்சலாக இந்தக் கருவினை திரைப்படமாக கொண்டுவந்திருக்கும் இயக்குனருக்கும் இதில் பங்குபற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் சிரம் தாழ்த்தி பாராட்டுக்களை சொல்லியாக வேண்டும்.

வெளிவரும்பபோது ஒவ்வொருவரும் கட்டாயமாக  இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும். ஏனெனில் இத்திரைப்படம் சமூகமட்டத்தில் பல தளங்களில் கலந்துரையாடலுக்கு வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அத்தோடு தற்போதைய காலத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று.  இந்த வரலாற்று மீள்பிரவேசம் இனவாதத்தில் ஊறிக்கிடக்கின்ற பெரும்பான்மையான தென்னிலங்கை சிங்கள இளையோரின் கருத்தியலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நிற்சயம் வழிகோலும் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. 

அண்மையில் அமைச்சர் ராஜித சேனாரத்த,  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு அளித்த பதில் 1971 மற்றும் 1988/89 கிளர்ச்சி தொடர்பிலான சரியான வரலாற்றை அறிந்திராத தென்னிலங்கை பெரும்பான்மை இளைஞர்களை கொந்தளிக்க வைத்திருந்தது. அவ்வாறு கொந்தளித்து இனவாதத்தை கக்கியவர்களை இத்திரைப்படம் வெளிவரும்போது அதிர்ச்சிக்கு உள்ளாக்கத்தான் போகிறது. அதனாலேயே தற்காலத்துக்கு மிகவும் தேவையான திரைப்படமாக இத்திரைப்படத்தை கருத வேண்டியதாக அமைக்கிறது. 

இந்த திரைப்படத்தை பார்த்தாவது தமது சொந்த இனத்துக்கு நடந்த அநீதியினைப் தேடியறிந்து தெரிந்துகொண்டு, அதேபோலவே தமிழ் மக்களுக்கும் நடந்த அநீதியினை உணர்ந்து கொள்வார்களாக இருந்தால் அதுவே இந்த திரைப்படத்துக்கும் இயக்குனருக்கும் மாபெரும் வெற்றியாக அமையும்.

காட்சி ஊடகம் என்பது மிகவும் பலமானதொன்று. அக்காட்சி ஊடகம் சமூகங்களில் காத்திரமான மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதை நாம் கடந்தகால வரலாறுகளினூடாக கண்டுவந்திருக்கிறோம். 2000 ஆண்டுகளில் இயக்குனர் அசோக ஹந்தகமவின் “மே மகே சந்தாய்” (இது எனது சந்திரன்) திரைப்படத்தின் வருகையினூடு இலங்கையின் சினிமா புதிய பரிணாமத்தை அடைந்திருந்ததுபோல, இயக்குனர் விசாகேசா சந்திரசேகரத்தின் "பாங்ஷு" திரைப்படத்தின் வருகையுடன் தற்கால இலங்கையின் சினிமா தன்னை மீண்டும் புதுப்பித்துக்கொண்டு புதிய பரிமாணத்தில் பயணிக்க ஆரம்பித்திருக்கின்றது என்றே கூறவேண்டும்.



20 மே 2018

ஜனாதிபதி மைத்திரியின் ஈரானிய விஜயம்


                   
இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த வாரம் இரண்டு நாள் அரசமுறைப் பயணமாக ஈரான் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுகானியின் அழைப்பினையேற்றே அவர் ஈரானுக்குசென்றிருந்தார்இரண்டு வருடங்களுக்கு முன்னர் 2016 இல் இந்த அழைப்பு ஜனாதிபதிக்கு கிடைத்திருந்ததிலும் வேலைப்பழு காரணமாக 2017 ஆண்டு நவம்பர் மாத இறுதியிலேயே ஈரானுக்கான விஜயம் தொடர்பில் சரியான ஒரு தேதியை ஜனாதிபதி அவர்களினால் தீர்மானிக்க முடிந்ததுஅதனடிப்படையிலேயே கடந்தவாரம் ஜனாதிபதி ஈரானுக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

இலங்கை மற்றும் ஈரானுக்கிடையில் 1950 களின் பிற்பகுதியிலிருந்தே தொடர்புகள் இருந்துவந்த போதிலும் 1975 ஆம் ஆண்டில் ஈரான் தனது தூதரகத்தினை இலங்கையில் நிறுவியதிலிருந்தே உத்தியோகபூர்வ இராஜதந்திர ரீதியிலான தொடர்புகள் ஆரம்பமானது. ஆயினும் 1990 ஆம் ஆண்டிலேயே ஈரானுக்கான இலங்கைத் தூதரகம் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நிறுவப்பட்டது.

ஈரான் நாட்டைப் பொறுத்தவரையில் அது இலங்கைக்கான கச்சா எண்ணைய் இறக்குமதியிலும் சுத்திகரிப்பிலும் செல்வாக்கை செலுத்துவதுடன் இலங்கையின் தேயிலை ஏற்றுமதியிலும் முக்கிய இடத்தினை வகித்து வருகின்றது.

இப்பின்னணியில் இவ் விஜயம் இரு நாடுகளுக்குமிடையில் அரசியல் மற்றும் பொருளாதார விடயங்களில் கூட்டு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவதுடன் இலங்கையில் பொருளாதார, சுகாதார, கலை மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் அபிவிருத்தியினை நோக்காக கொண்டதாகவே அமைந்திருந்தது.

அத்தோடு, ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரவுகானியுடனான சந்திப்பின்போது சுகாதாரம், மருத்துவ விஞ்ஞானம், மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், தரப்படுத்தல், அளவையியல் பயிற்சி, சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை ஒழித்தல், திரைப்படம், தொலைக்காட்சி, கலாசாரம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்குமிடையில் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்தாகியிருந்தன.

ஈரான் ஜனாதிபதிபதியுடனான சந்திப்பு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், இலங்கையில் பொருளாதார அபிவிருத்திக்கு ஈரானிய அரசாங்கத்தின் உதவிகளை எதிர்பார்ப்பதாகவே ஈரானிய ஜனாதிபதியுடனான சந்திப்பில் கூறியிருந்தார். இலங்கையில் எரிபொருள் விலையினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கும், ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியை அதிகரிப்பதை நோக்கமாக் கொண்டும், ஈரானிய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கும் குறிப்பிட்ட துறைகளில் இருநாடுகளுக்குமிடையிலுள்ள ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டே அவ்வாறு அவர் கூறியிருந்தார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை திடீரென அதிகரித்தமையின் காரணமாக இலங்கையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாய தேவை  ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக அரசு உள்நாட்டில் மக்களிடமிருந்து பாரிய எதிர்ப்பையும் சம்பாதித்து வருகிறது. இதனால் கச்சா எண்ணைய் இறக்குமதியில் ஈரானிய அரசின் ஒத்துழைப்பினை உடனடியாக பெற்றுக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகின்றது. இதனால் இவ்விடயம் தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவினால் அச்சந்திப்பின் அக்கறை செலுத்தப்பட்டது.

கச்சா எண்ணையை நேரடியாகவே இறக்குமதி செய்து இலங்கையில் அதனை சுத்திகரிப்பு செய்தவதே நம்நாட்டுக்கும் இலாபகரமானதாகும். எனவே இலங்கையில் எண்ணை சுத்திகரிப்புத் துறையினை நவீனமயப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்குமான தொழில்நுட்ப உதவிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈரான் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது கோரியிருந்தார். அதற்கு சாதகமான பதில் கிடைத்திருக்கின்றது.

இதேவேளை கப்பல்களில் கொண்டுவரப்படும் கச்சா எண்ணையை கடலிலிருந்தே சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நேரடியாக விநியோகிக்கும் கடலடி குழாய் தொழில்நுட்ப முறையினை வழங்குவதற்கும் தாம் தயாராக இருப்பதாக தென்கொரியாவுக்கு அண்மையில் விஜயம் செய்ய ஜனாதிபதி அவர்களிடம் தென்கொரிய அரசாங்கம் உறுதியளித்திருந்த பின்னணியிலேயே எண்ணைய் சுத்திகரிப்பு துறையை நவீன மயப்படுத்துவதற்காக ஈரானிய உதவியும் கோரப்பட்டுள்ளது.

இந்த எண்ணை சுத்திகரிப்பு தொழில்நுட்பம் மேம்படுத்தப்படுமிடத்து உள்நாட்டில் எண்ணைய் விலைகளை உள்நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக்கூடிய நிலைமை ஏற்படும். அது தற்போது எரிபொருள் விலைகளின் உயர்வால் பாதிப்பை சந்தித்திருக்கும் மக்களுக்கு ஆறுதலாக அமையும்.

இலங்கையின் தேயிலை மீதான கேள்வி சர்வதேச ரீதியில் தற்போது இறங்குமுகமாகவே இருந்து வருகின்றது. அண்மையில் ரஷ்யா இலங்கையின் தேயிலை ஏற்றுமதியினை நிறுத்தியிருந்தமையடுத்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டீனை தொடர்புகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அந்தத் தடையினை வாபஸ் வாங்குமாறு கேட்டிருந்ததும், தற்போது அத்தடை நீக்கப்பட்டு தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகின்றமையும் அறிந்ததே.

ஐரோப்பியா, ரஷ்யாவைப் போலவே மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானும் இலங்கையின் தேயிலையை கொள்வனவு செய்யும் முக்கிய நாடாக இருக்கின்றது. இதனால் ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியினை அதிகரிப்பதன் மூலம் தேயிலையால் இலங்கை ஈட்டும் வருமானத்தை நிலையானதாக வைத்துக் கொள்ளவதற்கான அல்லது அதிகரித்துக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும்.

இலங்கை வருமானத்தை ஈட்டும் இன்னுமொரு துறை சுற்றுலாத்துறையாகும். ஈரானிய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பது பற்றியும் ஜனாதிபதி மைத்திரி, இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்தியிருந்தார். வருடாந்தம் சுமார் 5000 ஈரானிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதாகவும் இந்த எண்ணிக்கையை 30000 ஆக அதிகாத்துக் கொள்வது தொடர்பிலும், சுற்றுலாத் துறையில் இரு நாடுகளுக்குமிடையில் இருந்துவரும் ஒத்துழைப்புக்களை மேலும் மேம்படுத்திக் கொள்வதோடு இரு நாடுகளுக்கும் இடையில் நேரடி விமானச் சேவையினை ஆரம்பிப்பது தொடர்பிலும் ஜானாதிபதியின் இந்த விஜயத்தின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு இலங்கையின் ரயில் பாதை முறைமையினை மேம்படுத்துவதற்கான ஈரானிய அரசாங்கத்தின் உதவியினை பெற்றுக்கொள்ளவது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை ஈரானின் மிகவும் பலம்பொருந்திய ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சந்தித்தார். ஈரானிய ஜனாதிபதியையும் விட பலம்பொருந்திய ஆன்மீகத் தலைவர், ஈரானின் முப்படைகளின் தளபதி என்பதோடு ஈரான் அரசாங்கத்தின் பல நிறுவனங்களையும் ஈரானிய கொள்கை மற்றும் வெளியுறவு செயற்பாடுகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றார். அவருடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அமைந்தது.
ஆன்மீக தலைவருடனான சந்திப்பின்போது

பூகோள ரீதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடங்களில் இருநாடுகளும் அமைந்திருப்பதனால் இருநாடுகளின் அபிவிருத்தி தொடர்பிலும் இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்தியுடனான சந்திப்பில் ஆன்மீகத் தலைவர் சுட்டிக்காட்டியிருந்தார். 

இதேவேளை அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையில் செய்துகொள்ளப்பட்டிருந்த அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததன் பின்னர் ஈரானுக்கு விஜயம் செய்த முதலாவது அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆவார் எனவே சர்வதேச ரீதியில் இவ்விஜயம் அரசியல் அவதானிகளால் முக்கியமாக கூர்ந்து அவதானிக்கப்படுகிறது.

ஆயினும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் அனைத்து நாடுகளுடனும் நட்புறவை பேணும் வெளிநாட்டுக் கொள்கையினை கொண்ட ஒரு அரச தலைவர் என்ற ரீதியிலும், இந்த விஜயம் ஏற்கனவே திட்டமிட்ட விஜயம் என்ற ரீதியிலும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியினை இலக்காகக் கொண்டு ஈரானுக்கான தனது விஜயத்தை மேற்கொண்டிருந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அவ்வாறு பார்க்குமிடத்து ஜனாதிபதியின் இந்த ஈரான் விஜயம் இலங்கைக்கு பொருளாதார ரீதியில் சாதகமாகவே அமைந்திருந்தது மறுப்பதற்கில்லை.


(20.05.2018 ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த கட்டுரை)