A Promised Land

22 ஜனவரி 2013

தற்போதைய சூழலும் தேசியமட்ட பிரச்சினையும்...!

இலங்கையின் செய்தி இணையத்தளமான தமிழ்மிரரில் வெளிவந்த என்னுடைய ஆக்கத்தின் மீள்பதிவே இது.


விடுதலைப் போராட்டம் ஒன்று தோற்கடிக்கப்பட்டால் அந்த குழு சார்ந்த மக்களுடைய அபிலாசைகள், கோரிக்கைகள் வென்றவர்களால் செவிசாய்க்கப்படாது. இது மன்னர் காலங்களில் இருந்தே கடைப்பிடித்து வந்த ஒரு நடைமுறை. ஆனால் வெற்றிபெற்ற கில்லாடி ஆட்சியாளர்கள் அபிவிருத்தி என்ற பெயரில் தங்களது செயற்றிட்டங்களை பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் முன்னெடுத்துச் செல்வார்கள். ஆனால் அந்த அபிவிருத்தி திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு சிறிய புள்ளியாகவே இருப்பார்கள். அவர்களுடைய வீடுகள் சாதாரணமானவையாகவோ ஓலைக்குடிசைகளாகவோ அல்லது தறப்பாளால் மூடப்பட்டவையாகவோ அல்லது தகரங்களினால் வேயப்பட்டதாகவே காணப்படும். 

ஆனால் அவர்களுடைய குடிசைகளை சூழ இருந்த சாதாரண செம்மண் பாதைகள் பிரதான பாதைகளாக அபிவிருத்தி அடையும். புதிய புதிய பிரமாண்டமான கட்டடங்கள் கட்டப்படும். 24 மணிநேர மின்சார வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும். அவர்களுடைய வாழ்க்கையை  மேம்படுத்துவதே தங்களது உச்ச குறிக்கோளென கூறிக்கொண்டு அந்த மக்களுடைய குறைந்தபட்ச வருமானத்தையும் பிடுங்கும் நோக்கில் அவர்களைச் சூழ புதிது புதிதாக லீசிங் மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் முளைக்கும். அம்மக்களோ இண்ஸ்டோல்மெண்டில் ரிவி பெட்டி வாங்கி தங்களது ஆஸ்த்தான நாயகர்கள் எதிரிகளை பறந்து பறந்து பந்தாடும் காட்சிகளையும் பாடல் காட்சிகளையும் பார்த்து புல்லரித்துப்போவார்கள்.

இவற்றையெல்லாம் அப்பிரதேசத்தால் பயணம் செய்பவர்களும் பார்த்து பூரித்துப்போவார்கள். இந்த புல்லரிப்பையும் பூரிப்பையும்தான் ஆள்பவர்களும் எதிர்பார்த்திருப்பார்கள். ஆகவே அவர்களும் பூரிப்படைவார்கள்.

இந்தப் புல்லரிப்புக்களுக்கும் பூரிப்புக்களுக்கும் இடையில் பாதிக்கப்பட்ட இனக்குழுவைச் சார்ந்த பாதிக்கப்படாத மக்கள் - பாதிப்புக்குள்ளாகாத பிரதேசங்களில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். பாதிப்புக்கு உள்ளானவர்களும் பாதிப்படையாதவர்களும் (பெரும்பான்மையானோர்) சாதிப் பிரச்சினையை வீட்டுக்குள்ளும் உரிமைப் பிரச்சினையை வெளியிலுமாக காட்டிக்கொண்டிருப்பார்கள். அவர்களைச் சுற்றி கொலை, கொள்ளை, வன்புணர்வு, பால்நிலை சமத்துவமின்மை, பிரதேசவாதம் போன்ற பல கொடிய விடயங்கள் சிறிது சிறிதாக ஆரம்பித்து பூதாகரமாக பெரியளவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்.

இவற்றையெல்லாம் பார்த்து, கேட்டு “எங்கட கலாசாரம் நாசமாக போகுது” என்று கூக்குரல் இட்டுக்கொண்டிருப்பார்கள். இவ்வாறு சமூகப் பிரச்சினைகள் அதிகரிக்க அதிகரிக்க தேசிய மட்டத்தில்
இனப் பிரச்சினைக்காக குரல்கொடுக்கும் தன்மையில் பாரிய மாற்றமொன்று ஏற்படும். இது ஆரோக்கியமான ஒன்று அல்ல.

இனப்பிரச்சினை காணப்படுகின்ற இலங்கை போன்ற நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மையினரின் மத்தியில் மேலே குறிப்பிட்டது போன்ற சமூகப்பிரச்சினைகள் ஏற்படுவது சிறந்ததன்று. ஏனென்றால் சமூகப்பிரச்சினைகளை மூடி மறைத்துக்கொண்டு தேசிய மட்டத்தில் பிரச்சினையை கதைப்பதற்கோ தீர்ப்பதற்கோ செல்லமுடியாது. அப்படிப் போனால் மீண்டும் ஆரம்ப புள்ளிக்கே வந்து நிற்கவேண்டிவரும் (இப்போது நிற்பதுபோல).

தற்போதைய சூழலுக்கு ஏற்ப உலக அரசியலை விளங்கிக்கொண்டு இலங்கைத் தமிழர்களுடைய உரிமை பிரச்சினையை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்லவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. ஆனால் அதற்கு முன்னர் சமூகப் பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய கட்டாயம் மிகப்பெரிய சவாலாக இலங்கை தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் காணப்படுகின்றது. ஆகவே சமூகப் பிரச்சினைகள் தோன்றும் மூல காரணியை கண்டுபிடித்து அதை கேள்வி கேட்கவேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் இருக்கின்றது.

http://tamil.dailymirror.lk/2010-08-31-14-50-37/57399-2013-01-21-13-25-43.html