A Promised Land

11 செப்டம்பர் 2008

மிதிவெடி


இன்று எமது நாட்டில் பல பகுதிகளிலும் மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஒன்று மிதிவெடி. வடக்கின் யாழ் மாவட்டதத்திலும் அதிகளவு உள்ளது.இன்று மிதிவெடிகளால் பாதிக்கப்பட்ட நிறைய பேர் எம்முடன் வாழ்ந்து வருகின்றார்கள்.மிதிவெடிகளை கண்டுபிடித்து எடுத்து அழிப்பதற்கு பல உள்நாட்டு,வெளிநாட்டு நிறுவனங்கள் யாழ் மாவட்டத்தில் செயற்பட்டு கொண்டு இருக்கின்றார்கள்.பெரும்பாலும் கிரமப்புறங்களிலேயே இவை அதிகமாக காணப்படுகின்றது.ஆனால் நானும் ஒரு கிராமத்தை சார்ந்தவன் என்ற வகையில் கிரமப்புற மக்களுக்கு மிதிவெடிகள் பற்றிய விழிப்புணர்வு பெரிதாக இல்லை என்றே கூறலாம். மிதிவெடி பற்றி எவ்வளவு அறிந்து வைத்திருக்கின்றார்கள் என்பதற்கு ஒரு சிறிய சம்பவம் ஒன்றை இங்கு பதியலாம் என்று ஒரு ஆவல்.

2007ம் ஆண்டின் முற்பகுதியில் நான் கரிதாஸ் கியூடெக் நிறுவனத்தின் சமாதான நிகழ்ச்சி திட்டத்தில் இணைந்து இருந்தேன்.அக்காலப்பகுதியில் சிறுவர்களுக்கான "மகிழ்களம்" என்ற ஒரு நிகழ்ச்சிச் திட்டத்தை கியூடெக் நிறுவனத்தின் சமாதான பிரிவு வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு கிராமத்தில் ஏற்பாடு செய்திருந்தது.(அந்த கிராமத்தை சூழ மிதிவெடி அகற்றும் பணி நடை பெற்றுக்கொண்டிருந்தது)
இதற்காக நானும் எங்கள் குழுவில் உள்ள ஏனைய பல நண்பர்களும் சென்றிருந்தோம்.அந்தக் கிராமத்தில் ஏறத்தாழ சுமார் 50க்கு மேல் சிறிய பிள்ளைகள் இருப்பதாக கூறினார்கள்.அங்கு காலையில் சென்றபோது 25க்கும் குறைவான சிறுவர்களே வந்திருந்தார்கள்.இதனால் ஏனைய சிறுவர்களையும் நிகழ்ச்சியில் பங்கேற்க வைப்பதற்காக எம்முள் சிலரை சிறுவர்களுடன் விட்டு விட்டோம்.பின் நாங்கள் சிறு சிறு குழுக்களாகச் சென்று வீட்டில் நிற்கும் சிறுவர்களை நிகழ்வுக்கு அழைத்து வருவதே நமது நோக்கம்.அதன்படி பல குழுக்களாக ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்றோம். நாங்கள் சென்ற இரண்டாவது வீட்டின் முன்பகுதியிலே கோழிக் கூடு ஒன்று அமைந்திருந்தது. அதை பார்த்த எங்களுக்கு ஒரே ஆச்சரியம் ஏனென்றால் அந்த கோழிக் கூடு மிதிவெடிகளை அடையாளப்படுத்தி மிதிவெடி அகற்றும் பணியாளர்களால் நாட்டப்படும் சிவப்பு வெள்ளை நிறத்திலான கோல்களால்/தடிகளால் செய்யப்பட்டிருந்தது.உடனேயே நாங்கள் அந்த வீட்டின் பெரியவரை பார்த்து இது என்னவென்று தெரியுமா என கேட்ட போது அவர் "இதுகள் உங்க எல்லா இடத்திலேயும் அந்த ஆட்கள்(மிதிவெடி அகற்றும் பணியாளர்களால்) நட்டு இருக்கிறார்கள் நாங்கள் அங்கால் பக்கம் போய் வரும்போது எடுத்தவை" என்று கூறிய பதில் எங்களை மேலும் வியப்பில் ஆழ்த்தியது.அவர் மிதிவெடியை பற்றியோ அல்லது அதற்கு பயன்படும் அந்த சிவப்பு வெள்ளை கோல்களை பற்றியோ தெளிவாக அறிந்து இருக்கவில்லை..பின்பு அவருக்கு இதைப்பற்றி சிறிய விளக்கத்தை அளித்து விட்டு ஏனைய சிலவீடுகளுக்கும் சென்றோம்.

பின்னர் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு திரும்பிய பின் இவற்றை பற்றி சிறுவர்களுக்காவது பூரண விளக்கத்தை அளிக்க வேண்டுமென முடிவு செய்தோம்.பின்னர் சிறுவர்களை அமர்த்தி அந்த சிவப்பு வெள்ளை நிற தடியை காட்டி உங்கள் வீட்டில் இதைப்போல் கோல்கள் இருந்தால் கையை உயர்த்துங்கள் என கூறியவுடன் ஏறத்தாழ எல்லா சிறுவர்களுமே கையை உயர்த்தினார்கள்.அத்துடன் சிறுவர்கள் மிதிவெடிகள் பற்றி எதுவுமே அறிந்து இருக்கவில்லை.வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறினால் தானே சிறுவர்கள் அதை பற்றி தெரிந்து கொள்ள முடியும்.அங்கே பெரியவர்களுக்கே மிதிவெடி பற்றிய பூரண அறிவு இல்லை எனும் போது சிறுவர்களுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை. எனவே மிதிவெடி பற்றி,அந்த கோல்களை பற்றி ஓரளவு தெளிவாக சிறுவர்களுக்கு புரியும் வகையில் அந்தவேளையில் எங்களால் விளக்கம் அளிக்க முடிந்தது.மிதிவெடி பற்றிய அறிவை வழங்குவதற்கு பல நிறுவனங்கள் செயற்பட்டு கொண்டுதான் இருக்கின்றார்கள்.ஆனாலும் இவ்வாறு எமக்கு தெரியாமல் மிதிவெடி பற்றிய விழிப்புணர்வு அற்ற மக்களாக எத்தனையோ பல கிராம மக்கள் இன்றும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். இந்த மிதிவெடி தொடர்பாக அறிவை பெறுவதற்கு நிறுவனங்களைத் தேடி ஒரு போதும் மக்கள் வரமாட்டார்கள் மாறாக அந்த மக்களை தேடிச் சென்று தான் விழிப்புணர்வை வழங்க வேண்டும்.ஆனால் நாடு தற்போது இருக்கும் நிலையில் இது எவ்வாறு சாத்தியமாகும் என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியே?????

கருத்துகள் இல்லை: