A Promised Land

27 ஆகஸ்ட் 2008

தமிழர் நாட்டுப்புற விளையாட்டுகள்-2


சடுகுடு

இவ்விளையாட்டு பலிஞ்சடுகுடு எனவும், பலீன் சடுகுடு எனவும் வழக்கில் வழங்கப்
பெறும். பலிஞ்சப்பளம் என ஆந்திராவிலும், வங்காளத்திலும், குடுடுடூ என
மகாராட்டிரத்திலும் அழைக்கப்பட்டு வருகிறது.

பழந்தமிழ்நாட்டில் அரசர்களிடையே நிரைகளைக் கவருபவர் (வெட்சித்திணை) கவரப்பட்ட
நிரைகளை மீட்பவர் (கரந்தைத் திணை) என இரு கட்சியினர் இருந்தனர். இது
தரப்பினருக்குமிடையே அவரவர் நாட்டின் எல்லைக் கோடு அமைந்திருக்கும். நிரை கவர
வருபவர்களை வரவிடாமல் வீரர்கள் காவல் காத்து நிற்பர். காவலைக் கடந்து
நிரையினைக் கவர்ந்து வருதல் வேண்டும். நிரைகளை (மாட்டு மந்தையை) கவர வருபவர்
தம்மை வளைத்துப் பிடிக்கும் எதிர்கட்சி வீரரிடம் போரிட்டுத் திரும்ப மீள்வர்.
மீறிவந்து தம் நாட்டு எல்லையினை அடைந்து விட்டால் எதிர்படையினர் ஒன்றும் செய்ய
இயலாது. மாறாக, எல்லைக் கோட்டை அடையும் முன் பிடிபட்டு விட்டால்
சிறையிலிடப்படுவார். போர் முடிந்தவுடன் சிறைபட்ட வீரர் மறுபடியும் தம் நாட்டை
அடைவர். நிரைகவர அல்லது நிரை மீட்கச் சென்றதால் ஏற்பட்ட போரின் முடிவு வெற்றி
அல்லது தோல்வியில் முடிவுறும். போருக்கு செல்வதற்கு முன் தங்கள் பக்கமே
வெற்றி கிட்ட வேண்டுமென்று இருதரப்பினருமே காளியை வணங்கினர். இச்சமயம்
சடுகுடுப்பை அல்லது குடுகுடுப்பை என்ற பறையால் ஒலியெழுப்பி, பலி கொடுத்து
வழிபட்டனர். இப்போர்ச் செயல் பாட்டின் தொடர்ச்சியால் பலிஞ்சடுகுடு என்ற பெயர்
கொண்ட விளையாட்டு பழந்தமிழரிடையே உருவானது. இன்றும் தமிழ்நாட்டு கிராமங்களில்
விளையாடப்படுகிறது. வரையறுக்கப்பட்ட ஆடுகளத்தில் இருகட்சியினரையும் பிரிக்கும்
விதமாய் நடுக்கோடு வரையப்பட்டிருக்கும். விளையாடுகையில் சடு...குடு...குடு
என்றோ கிராமத்துப் பாடல்களையோ, வேறு நையாண்டிப் பாடல்களையோ மூச்சை
அடக்குவதற்காகப் பாடுவது மரபாக உள்ளது. நடுக் கோட்டிலிருந்து பாடிப் போகிறவரை
எதிர்கட்சிக்காரர்கள் பிடித்து விட்டால் அவர் களத்திலிருந்து வெளியேறி
விடவேண்டும். பாடிப்போனவர் எதிர்க்கட்சிக்காரரைத் தொட்டு விட்டு பிடிபடாமல்
மூச்சடக்கி வந்து நடுக்கோட்டினைத் தொட்டு விட்டால், தொடப்பட்டவர்
களத்திலிருந்து வெளியேறிக் கொள்ள வேண்டும். பாடிப்போகிறவர் பாடும்
பாடல்களுக்கு எடுத்துக்காட்டுகள் கீழ்வருமாறு:


(1) சடுகுடு மலையிலே ரெண்டாளு
அதிலே ஓராளு குண்டாளு
அக்கா புருஷன் கோமாளி
தங்கச்சி புருஷன் தக்காளி..... தக்காளி


(2) நான்தான் ஒப்பன்டா
நல்லமுத்து பேரண்டா
வெள்ளிச் சிலம்பெடுத்து
விளையாட வாரெண்டா
தங்கச் சிலம்பெடுத்து
தாலிக்கட்ட வாரென்டா...வாரென்டா
ஆடவர் விளையாட்டான சடுகுடு சிறுவர்களிடையேயும் இடம் பெறுகிறது. பழந்தமிழர்
காலத்திலிருந்து விளையாடப் பெறும் சடுகுடுவின் தொடர்ச்சியாய் தற்போதைய
விளையாட்டான கபடி விளங்குகிறது. கபடி விளையாட்டு இப்போது உலகம் முழுவதும்
விளையாடப்படுகிறது. விளையாடுகையில் மூச்சினை அடக்குவதற்கு கபடி....கபடி என்ற
பொருளற்ற சொல் பாடப்படுவதால் இவ் விளையாட்டு கபடி என்று பெயர் பெற்றது. உலகப்
பொதுவான விதிமுறைகள் கொண்டு கபடி விளையாட்டு திகழ்கிறது.

1 கருத்து:

சிவத்தமிழோன் சொன்னது…

தமிழரின் நாட்டுப்புற விளையாட்டுகளைத் தொகுத்து எழுதிய தங்கள் பதிவுகளைக் கண்டேன். மகிழ்ந்தேன். காலத்திற்கு தேவையான பதிவு. தமிழன் எல்லாத்துறைகளிலும் சாதித்தான் என்ற கருத்தை இன்று பலர் நம்ப மறுகின்றனர். காரணம் வாசிப்பறிவு இல்லை. இரண்டாவது அன்னிய மோகத்துள் மூழ்கியுள்ள நமது செய்தி ஊடகங்கள். எல்லாத்துக்கும்மேலாக நமது கல்விதிட்டத்தில் உள்ள குறைபாடு.

தங்கள் எழுத்து தமிழன் தலைநிமிர்ந்து நடக்க உதவுவது கண்டு உவகையடைகிறேன்.
வாழ்த்துகள்