A Promised Land

03 மார்ச் 2012

மெரினா - விமர்சனமல்ல ஒரு பார்வை



சமுதாயத்திற்கு ஆக்கபூர்வமான விடயங்களை சொல்லும் திரைப்படங்கள் தமிழ்சினிமாவில் வெளிவருவது குறைவு. அப்படி வரும் படங்கள் மக்களால் இரசிக்கப்படுபவையாகவும் அவர்களுடைய மனங்களில் என்றும் இடம்பிடிப்பவையாக இருந்திருக்கின்றது. அத்தோடு விருதுகளும் வாங்கியிருக்கின்றன. அந்தவகையில் கடந்தமாதம் வெளியான திரைப்படம்தான் மெரினா.



பசங்க படத்தின்மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமாகி அந்தப்படத்திற்கு தேசிய விருதையும் பெற்று இந்திய சினிமாவையே தனதுபக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவரான இயக்குனர் பாண்டிராஜின் இன்னுமொரு காத்திரமான படைப்புத்தான் இந்த மெரினா. தனது படங்களில் சிறந்த திரைக்கதையையும் அலட்டல் இல்லாத இயல்பான நடிப்பை நடிகர்களிடமிருந்து பெற்று சிறந்த படமாக வழங்கும் இவர் மெரினாவிலும் இதே பாணியினை கையாண்டிருக்கிறார். அத்துடன் இவரே தயாரித்து வெளியிட்டு இருக்கும் படம் என்பதும் சிறப்பு.



இயக்குனர் உண்மையான கதாபாத்திரங்களை கதைக்குள் புகுத்தி அதை கதைக்கு ஏற்றதுபோல மெருகூட்டி அலட்டல் இல்லாத நடிப்பை அந்தந்த கதாபாத்திரங்கள்மூலம் திரைப்படமாக வழங்கியிருப்பது நன்றாக இருக்கிறது. படத்தில் அம்பிகாபதியினை சுற்றியே திரைக்கதை அமைக்கப்பட்டு அந்த கதாபாத்திரத்துன் ஏனைய துணைக்கதாபாத்திரங்களை திரைக்கதையில் கொண்டுவந்திருப்பது சிறப்பானதாக இருக்கின்றது. அம்பிகாபதியாக வரும் பக்கடா பாண்டி அம்பிகாபதி என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறான். அத்தோடு ஏனைய சிறுவர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.  ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நச்சென்று பதிந்துபோகும் வகையில் இருப்பது இயக்குனருடைய திறமை.


சிவகார்த்திகேயன் செந்தில்நாதன் எனற கதாபாதத்திரத்தில் நன்றாக செய்திருக்கிறார். ஏற்கனவே சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள்மூலம் தனது திறமைகளால் சிறியோர் முதல் பெரியவர்களின் மனங்களில் இடம்பிடித்த ஒருவராக இருந்துகொண்டு வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் இவருடை முதல்படமே நல்ல ஒரு இயக்குனருடைய வித்தியாசமான படமான அமைந்திருப்பது இவருக்கு எதிர்காலத்தில் நல்ல ஒரு இடத்தினை தமிழ் சினிமாவில் தேடிக்கொள்ள ஆணிவேராக அமைந்திருக்கிறது. இவர் வரும் இடங்களிலெல்லாம் சிரிப்போ சிரிப்பு. பிரகாசமான எதிர்காலம் சிவகார்த்திகேயனுக்கு காத்திருக்கு என்பதில் எந்தவித ஐயமில்லை. ஓவியாவுடனும் கதைக்கேற்றபடி நன்றாக நடித்திருக்கிறார். ஓவியாவும் அலட்டிக்கொள்ளாத நடிப்பால் கவர்கின்றார். அதேபோல் செந்தில்நானுடைய நண்பனாக வரும் சதீசும் கலக்கியிருக்கிறார். அவர் இவர் என்று குறிப்பிட்டு சொல்லாமல் அந்த வயது போன பெரியவர் தொடக்கம் நடனமாடும் அந்த சிறுமிவரை நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.


தொழில்நுட்ப விடயங்கள் என்று பார்க்கும்போது ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் நன்றாக இருக்கிறது. இருவரும் புதுமுகங்கள் என்றாலும் சிறப்பாக தங்களது வேலையை செய்திருக்கிறார்கள். இதே வேளை இசையினைப்பற்றியும் சொல்லவேண்டும் சிறிய வயதேயான புதுமுகம்  "க்ரிஷ் ஜி" ம் அசத்தியிருக்கிறார். பின்ணணி இசையும் நன்றாக இருக்கிறது. "வணக்கம் வாழவைக்கும் சென்னை" மற்றும் "காதல் ஒரு தேவதையின் கனவா" என்றபாடலும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துகள் க்ரிஷ நல்ல ஒரு எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கின்றது.

இன்னொரு முக்கியமான விடயத்தினையும் இங்கே கட்டாயம் நான் குறிப்பிடவேண்டும். ஊடகங்கள் சிவகார்த்திகேயனை மெரினாவினுடைய ஹீரோவாக சித்தரித்தாலும திரைக்கதையில் ஹீரோ பக்கடா பாண்டிதான். சிவகார்த்திகேயனையும் ஓவியாவையும் ஏனையவர்களையும் ஏஜண்ட் கதாபாத்திரங்களாகவே இயக்குனர் திரைக்கதையில் பயன்படுத்தியிருக்கிறார் என்பதுதான் உண்மை.


மொத்தத்தில் இயக்குனர் பாண்டிராஜின் மெரினா அசத்தலான தற்போதைய சூழ்நிலையில் சமூகத்திற்கு தேவையான நல்ல ஒரு காத்திரமான படைப்பு.





*என்னுடைய 4 வருட பதிவுலக வாழ்க்கையில் ஒரு திரைப்படத்தைப்பற்றி எழுதும் முதலாவது பதிவு இதுதான்.*

06 பிப்ரவரி 2012

பொறாமை - சிறிய ஒரு கதை


ஆரோக்கியமான போட்டி ஒருவரை அவருடைய நல்லநிலைமைக்கும் அவனுடைய முன்னேற்றத்திற்கும் காரணமான அமைந்துவிடும். ஆனால் பொறாமை என்பது மிகவும் ஆபத்தான ஒன்று. அது மனிதர்களுடன் இயல்பாகவே இருக்கும் ஒன்றாகும். இந்தப் பொறாமை பலருடைய வாழ்க்கையையே தலைகீழாக திருப்பிபோட்டுவிடக்கூடியது. வகுப்பில் சகமாணவர்களுடன் போட்டி போட்டு படிக்கவேண்டும் பொறாமை இருக்கக்கூடாது என்று என்னுடைய ஆரம்பக்கல்வி தமிழ் ஆசிரியர் வகுப்பில் கூறியது இப்போதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது

சிறிய ஒரு கதை


ஒரு ஊரிலே ஒரு பரம ஏழை அன்றாடம் ஒருவேளை உணவுக்கே அல்லல்பட்டுக்கொண்டு இருக்கின்றான். ஒருநாள் அந்தக்கிராமத்திற்கு கொடைவள்ளலான சாமியார் ஒருவர் வருகின்றார். அவரைப்பார்ப்பதற்கு சென்ற அந்த ஏழை குடியானவன் அந்த சாமியாரை பசந்தித்து தனக்கு செல்வங்கள் கிடைத்து தான் நன்றாக வாழ வரமருளவேண்டும் என்று அவரை கோருகின்றான். அவனது கோரிக்கைக்கு இரக்கப்பட்ட சாமியார் அவனைப்பார்த்து உனக்கு நான் சகல சௌபாக்கியங்களும் கிடைத்து வளமான வாழ்க்கை வாழ்வதற்காக நீ கேட்பதை  தருவேன் ஆனால் ஒரு நிபந்தனையோடுதான் தருவேன் எனக்கூறுகின்றார். அந்த நிபந்தனை என்னவென்றால் நீ உன்னுடைய செழிப்பான வாழ்க்கைக்கு எவ்வளவு செல்வங்களை கேட்கின்றாயோ அதேபோல இரண்டு மடங்கானவற்றை உன்னுடைய எதிர் வீட்டுக்காரன் பெறுவான் என்ற நிபந்தனையை போடுகின்றர். அதற்கு அந்தக் ஏழைக்குடியானவன் கலவரமடைந்து யோசிப்பதைப்பார்த்த சாமியார் நீ இன்று வீடு சென்று நன்றாக சிந்தித்து உனக்கு என்ன வேண்டும் என நாளை நீ என்னிடம் வந்து கூறு ஆனால் நீ கேட்பதைப்போல இருமடங்கு உன் எதிவீட்டுக்காரனுக்கு கிடைக்கும் என்று கூறி அனுப்பிவைக்கின்றார். அதேபோல அடுத்தநாளும் அந்தக்ஏழைக்குடியானவன் சாமியாரைப் பார்ப்பதற்கு வருகின்றான. சாமியார் அவனைப்பார்த்து உனக்கு என்ன வேண்டும் என தீர்மானித்து விட்டாயா என கேட்கின்றார் அதற்கு அந்த ஏழைக் குடியானவன் எனது ஒரு கண்ணை எடுத்துவிடுங்கள் நான் சந்தோசமாக இருப்பேன் என்று கூறுகின்றான். இதைத்தான் பொறாமையின் உச்சக்கட்டம் என்று கூறுமுடியும். தனக்கு கிடைப்பதைப்போல இருமடங்கு எதிர்வீட்டுக்காரனுக்கு கிடைக்கும் என்று தெரிகின்றபோது அவனுடைய பொறாமையின் உச்ச வெளிப்பாடக தனது ஒரு கண்ணை எடுத்துவிடும்படி கேட்கின்றான்.

இது ஒரு நான் கேள்விப்பட்ட கற்பனைக்கதையாக இருந்தாலும் பொறாமையின் உச்சக்கட்டத்தை கூறிநிற்கின்றது. பொறாமை என்பது ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமின்றி சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் பரந்துபட்டு இருக்கின்றது. மனிதர்கள் பொறாமையை விட்டு ஆரோக்கியமான போட்டியுடன் செயற்பட்டால் நல்லஒரு நிலையை அடைமுடியும் என்பது வெளிப்படை உண்மை.

02 டிசம்பர் 2011

இனி அவன்... Him, Here after...


இலங்கையின் பிரபல சிங்கள இயக்குனர் அசோக ஹந்தகம இயக்கியிருக்கும் முற்றுமுழுதாக தழிழ்க் கலைஞர்களை வைத்து யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் யுத்தத்திற்கு பின்னரான தமிழ் மக்களுடைய இன்றைய நிலையினை சித்தரிக்கவிருக்கின்றது.

இவர் இதற்கு முன்னர் 2003ம் ஆண்டில் "இவ்வழியால் வாருங்கள்" மற்றும் 2005ம் ஆண்டில் "கிழக்குக்கடற்கரையின் அழைப்பு" என்ற இரு தொலைக்காட்சி நாடகங்களை தமிழில் இயக்கியிருக்கிறார்.

இவர் தற்போது இயக்கி வெளிவரவிருக்கும் திரைப்படத்தின் Trailer...





19 பிப்ரவரி 2011

உலககிண்ண கிரிக்கட் 2011

உலககிண்ண கிரிக்கட்போட்டி ஆரம்பமானப்போகின்றது எங்கு பார்த்தாலும் கதைத்தாலும் கிரிக்கட்தான். இந்தமுறை இந்தியா இலங்கை வங்கதேசம் ஆகிய மூன்று தென்னாசிய நாடுகள் இணைந்து உலகக்கிண்ண கிரிக்கட்போட்டியை நடத்துவது சிறப்பு. எனக்கு கிரிக்கட் விளையாடுவதில் அவ்வளவு ஈடுபாடு இல்லாவிட்டாலும் தொலைக்காட்சியில் கிரிக்கட் பார்ப்பவன். இலங்கை கிரிக்கட் அணியினுடைய இரசிகன். எனக்கு தெரிந்து பல பதிவுலக நண்பர்கள் நாளாந்தம் இதுதொடர்பாக விரிவாகவும் விலாவாரியாகவும் பதிவு எழுதிவருகின்றார்கள். 


இதுவரைகாலமும் ஒரு சர்வதேச போட்டியைகூட நேரடியாக ஆடுகளங்களில் பார்த்ததில்லை இப்பபோது முதன்முறையாக சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது அதுவும் என்னுடைய நண்பர்களுடன் சென்று பார்ப்பதற்கான சந்தர்ப்பம். இலங்கையில் உலகக்கிண்ணப்போட்டியொன்று நடைபெறும்போது அதை தவறவிடக்கூடாது என்று நினைத்திருந்தேன் இப்போது லோஷன் அண்ணா மற்றும் கோபியின் தயவில் கையில் ரிக்கட்டுகள் கிடைத்திருக்கின்றன அதுவும் இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி.
நல்ல ஒரு விறுவிறுப்பான போட்டியாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.


இந்தமுறை உலககிண்ணத்தை இலங்கையே வெல்லவேண்டும் என்பது என்னுடை எதிர்பார்ப்பு. ஆனால் மற்றைய அணிகளையும் குறைத்து மதிப்பிடமுடியாது இலங்கை தவிர இந்தியாவுக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றது அதைவிட நான் எதிர்பார்ப்பது பாக்கிஸ்தான் அணியினரை ஏனென்றால் அவர்கள் எப்போது வெல்வார்கள் எப்போது தோற்பார்கள் என்று கூறமுடியாதிருக்கின்றது அதனால் இந்தமுறை பாக்கிஸ்தானையும் கிண்ணத்தை கைப்பற்றும் அணியினுடைய பட்டியலுக்குள் நான் வைத்திருக்கின்றேன். இதற்கு மற்றுமொரு காரணம் பாக்கிஸ்தான் அணித்தலைவர் அப்ரிடி.



எந்த அணிகிண்ணத்தை சுவீகரித்தாலும் சந்தோஷம்தான் அதிலும் குறிப்பாக இலங்கை கிண்ணத்தை கைப்பற்றினால் இலங்கை அணியினுடைய இரசிகன் என்ற வகையில் மேலும் சந்தோஷப்படுவேன். பொறுத்திருந்து பார்ப்போம் எந்த அணி வெற்றி பெறுகின்றதென்று.... 

30 ஜனவரி 2011

உண்மையில் பாக்கு நீரிணையில் என்னதான் நடக்கிறது?

சமூக இணையமான பேஸ்புக்கில் தற்போதைய பிரச்சனையான மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக நான் இட்ட கருத்துரையும் அதற்கு என்னுடைய நண்பர்கள் வழங்கிய பதில்களையும் உங்களுக்கு தருகிறேன்

18 ஜனவரி 2011

வெள்ள அனர்த்தத்திற்கு பின்னர் கிழக்கு எதிர்கொள்ளப்போகும் சவால்கள்...

அண்மையில் கிழக்குமாகாணம் பாரியதொரு வெள்ள அனர்த்தத்தை சந்திருந்தது. இன்னமும் பல பிரதேசங்களில் 2 அடிக்கும் அதிகமான நீர் தேங்கிநிற்கின்றது. இதனால் அவ்வப்பிரதேசங்களிலிருந்து வெளியேறி பாடசாலைகளிலும் ஏனைய இடங்களிலும் தங்கியிருப்பவர்கள் தொடர்ந்தும் தமது வீடுகளுக்கு திரும்பமுடியாதிருக்கின்றனர். பல கிராமங்களின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த வெள்ளஅனர்த்தம் கிழக்கு மக்களை இருவகையில் பாதித்திருக்கின்றது அதாவது ஒன்று வெள்ளம் ஏற்பட்டபோது சந்தித்த பாதிப்புக்கள் இரண்டாவது வெள்ளத்திற்கு பின்னர் அம்மக்கள் எதிர்கொள்ளப்போகும் பாதிப்புக்கள்.
வெள்ளம் ஏற்பட்டபோது சந்தித்த பிரச்சனைகளை ஓரளவுக்கு சிறப்பானமுறையிலே அங்குள்ள அரசாங்கபிரிவும் தொண்டர் அமைப்புக்களும் எதிர்கொண்டிருந்தன. இடம்பெயர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதிலிருந்து அவர்களுக்கு தேவையான உணவு குடிநீர் போன்றவை வழங்கி அவை ஓரளவுக்கு சிறப்பாக செயற்பட்டன என்றுதான் கூறலாம் ஆனால் அனர்த்தத்திற்கு பின்ன் அம்மக்கள் சந்திக்க இருப்பவைதான் முக்கியமானதாகும். இதில் அம்மக்களுடைய ஜீவனோபாயம், கல்வி சுகாதாரம் போன்றவை மிகமுக்கியமாக இருக்கப்போகின்றது. 

இவ்வனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் கூடுதலாக விவசாயத்தினை ஜீவனோபாயமாக கொண்டவர்கள் அத்தோடு மீன்பிடி, கால்நடைவளர்ப்பு, சுயதொழில்கள் என்பனவும் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. பொங்கலோடு வெள்ளாமையினையும் அறுவடையையும் செய்வோம் என்று காத்திருந்த மக்களுக்கு இவ்வனர்த்தம் மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்திவிட்டது. இடம்பெயர்ந்த முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் வீடுதிரும்பியதும் தங்களுடைய நாளாந்த வாழ்க்கையினை கொண்டுசெல்வதற்கு மிகவும் சிரமங்களை சந்திக்கப்போகின்றார்கள். ஏனென்றால் அம்மக்கள் தங்களுடைய ஜீவனோபாயதொழில்களை நம்பி அன்றன்றாடம வாழ்ந்துகொண்டிருந்த மக்கள். இதனால் இன்னும் ஒரு மூன்றுமாதங்களுக்கு அம்மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்படபோகின்றார்கள்.

பொருளாதார ரீதியான பாதிப்பு ஏற்படும்போது அது அப்பிரதேசங்களில் கல்விநிலையில் அது பாரிய தாங்கங்களையும் ஏற்படுத்தும். பாடசாலை சிறார்களினுடைய புத்தகங்கள் சீருடைகள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. புதிதாக புத்தகங்கள் அப்பியாசக்கொப்பகளை வாங்கிகொடுப்பதற்கு பெற்றோரிடம் பணமில்லை ஆகவே பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பமுடியாதநிலைதான் பெற்றோருக்கு ஏற்படும் இதன்காரணமாக பிள்ளைகளில் கல்வி ஆர்வம் குறைவதற்கு வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. "பிள்ளைகளின்ட கொப்பிபுத்தகங்கள் எல்லாம் வெள்ளத்தில அடிப்ட்டு போயிட்டுது இனி யுனிசெவ் ஆக்களிட்டத்தான் ஏதாவது கேட்கவேணும்" என்று ஒரு பாடசாலை அதிபருடன் கதைத்தபோது கூறினார். சடுதியான கல்வி வீழ்ச்சியினை தடுப்பதற்காகவே உடனடியாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு இருப்பதாக கல்வி திணைக்கள அதிகாரி ஒருவர் கூறினார். சில பாடசாலைகளில் இரண்டு மூன்று கட்டடங்களை இடம்பெயர்ந்தவர்களுக்கு கொடுத்துவிட்டு ஏனைய கட்டடங்களில் பாடசாலையை நடாத்துகின்ற நிலமைதான் தற்போது கிழக்கு மாகாணத்தின் இருக்கின்றது. ஆனாலும் எத்தனை பிள்ளைகள் பாடசாலைகளுக்கு வருவார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

இதேவேளை தேங்கிநிற்கின்ற நீரினுள் கால்நடைகள் இறந்து மிதப்பதினால் நீர் மாசுபட்டு காணப்படுகின்றது பாரிய சுகாதாக பிரச்சனைகளுக்கு அம்மக்கள் முகம்கொடுக்கவேண்டிய நிலைகாணப்படுகின்றது. பலருக்கு கால்களில் புண்கள்கூட ஏற்பட்டிருக்கின்றது
காலில் புண்ஏற்பட்டிருக்கிறது

உற்பத்தி துறையிலே ஐந்தாவது இடத்திலிருந்த கிழக்குமாகாணம் சடுதியாகவீழ்ச்சியினை சந்திக்கப்போகின்றது. பல கட்டுமானப்பணிகள் முற்றாக சேதமாகியிருக்கின்றன. இந்தநேரத்தில்தான் அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவை அப்பிரதேசங்களில் ஏற்பட்டிருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையினை கட்டியெழுப்புவதற்கு அரசா சாற்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பும் அவசியமானதாக இருக்கின்றது. ஆனால் ஏற்கனவே அரசு பல அரசசார்பற்ற நிறுவனங்களுடன் முரண்பட்டு அவற்றை நாட்டைவிட்டே வெளியேற்றியிருக்கின்றது இந்த நிலையில் இங்கு எஞ்சியிருக்கும் ஒரு சில அரசசார்பற்ற நிறுவனங்களினால் ஒரேநேரத்தில் பாதிக்கப்பட்ட எல்லாமக்களுக்கும் உரிய தேவைகளை நிவர்த்திசெய்யமுடியாது என்பது மறுக்கமுடியாத உண்மை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுத்து கிழக்கு மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கையை கல்வியை மீளக்கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே எல்லோருடைய அவா...