A Promised Land

14 பிப்ரவரி 2009

ஊடகத்துறையில் பத்திரிகைகள் (இலங்கையில்)



இன்றைய இயந்திர உலகத்தில் மிகவும் முக்கியமான எல்லோராலும் விரும்பப்படும் துறையாக ஊடகத்துறை விளங்குகிறது. அதிலும் பத்திரிகைத்துறை என்பது கல்வியறிவு உள்ள எல்லோராலும் விரும்பப்படுகின்ற ஒரு துறை ஆகும்.அதனாலேயே பத்திரிகைத்துறையை பற்றி நான் இங்கே எழுத தலைப்பட்டுள்ளேன்.

ஆரம்ப காலத்தில் அரசியலின் மற்றும் ஒரு கருவியாக இருந்த பத்திரிகைத்துறை நாளடைவில் மருகி இப்பொழுது பெரும்பாலும் மக்களுக்காகவே நடாத்தப்படும் ஒரு துறையாக காணப்படுகிறது.இந்த பத்திரிகைத்துறை இவ்வளவு வளர்ச்சி பெற்றதற்கு காரணம் மக்களின் படிப்பறிவு/எழுத்தறிவு வளர்ச்சியை கூறலாம்.

தொலைக்காட்சி,வானொலி ,இணையம் போன்ற மக்கள் தொடர்பு ஊடகங்கள் இன்று எவ்வளவோ இருந்தாலும் பத்திரிகைகளுக்கு மக்களிடத்தில் உள்ள முக்கியத்துவம் இன்றும் குறையவில்லை.மாறாக அதிகரித்து உள்ளதென கூறலாம் .இதற்கு காரணம் மக்களின் மனச்சாட்சிகளாக திகழ்பவை இந்தப் பத்திரிகைகள் தான் என்பதை கூறினால் அது மிகையாகாது.அதற்காக ஊடகத்துறையில் உள்ள ஏனையவற்றை குறைத்தும் மதிப்பிட முடியாது என்பதையும் இங்கே சுட்டிககாட்டப்பட வேண்டியுள்ளது.

இன்று பல நாடுகளின் தலைவிதியை தீர்மானிக்கவும் கூட இந்த பத்திரிகைகளால் தான் முடியும் என்பதும் இந்தப் பத்திரிகைத் துறைக்கான முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும்.மேலும் இன்றைய நிலையில் பத்திரிகைகளுக்கு சமூக,இன,மொழி நோக்கு ஒரு புறம் இருந்தாலும் கூட மற்றைய தொழில்களை போல இதுவும் ஒரு முக்கிய தொழிலாக மாறிவிட்டது. ஆனாலும் இதற்கு ஒரு சமூகக் கடமை இருக்கின்றது என்பதை ஒருபோதும் மறந்து விடக் கூடாது.அத்துடன் பத்திரிகைகளின் மீது மக்களுக்கு உள்ள நம்பகத்தன்மைக்கு பாதகம் இல்லாமல் செய்திகளை வெளியிடுவது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.

இவ்வளவு பெருமை பெற்ற இந்தத் துறைக்கு எதிராக இன்று செய்தித்தணிக்கை, அலுவலக்கங்கள் மீது தாக்குதல், உண்மையை கூறினால் தடை,சிறை, ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்,கொலை, அடக்குமுறை,வாய்ப்பூட்டு, போன்ற இன்னும் பல தண்டனைகளும், கண்டனங்களும், தாக்குதல்களும்,இவைக்கு எதிராக இன்று காத்துக்கொண்டு நிற்கின்றது.இதனாலேயே பத்திரிகையில் வேலை என்றதும் இலங்கையில் பலர் தலை தெறிக்க ஓடுவதும் இலங்கையில் பத்திரிகைத்துறைக்கான எதிர்காலத்தை கேள்விக்குரியதாக்கி உள்ளது.

பத்திரிகைத்துறையானது துணிச்சல் மிகுந்த,சவாலான,மகிழ்ச்சியான பணித்தான் ஆனாலும் இலங்கையை பொறுத்த வரையில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பணியாற்றும் ஒரு துறையாக மாறியிருக்கிறது.

காதல்

உன் உள்ளங்கையின் உஷ்ணத்தில்
இன்னும் ஊறிக்கொண்டிருக்கிறது
என் உடல்…!

உன் கரு வட்ட விழிகளுக்கு நடுவே
சிக்கிக்கொண்டுள்ளது
என் மனது…!

உன் உதட்டு சிவப்பில் ஒட்டி,
ஒளிந்துகொண்டுள்ளது
என் வயது…!

உன் கூந்தல் முடிகளுக்கு பின்னால்
அலைந்துகொண்டிருக்கிறது
என் வாழ்க்கை…!

உன் கன்னக் குழிகளில்
புதைந்து இறந்து போகிறது
என் கோபம்…!

உன் வார்த்தைகளின் இடைவெளிகளில்
மறைந்து கொள்கிறது
என் மௌனம்…!

உன் கன்னம் கிள்ளிவிட்ட என் விரல்களில்
ஒட்டிக்கொண்டுள்ளது
நம் காதல்…!

இன்று காதலர் தினத்தை கொண்டாடும்
அனைத்து உள்ளங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.
http://flashman.blogspot.com/2007/10/blog-post.html

06 பிப்ரவரி 2009

புகைப்படம் சொல்லும் உண்மை

இன்றைய சூழலில் சஞ்சிகைகளின் பங்களிப்பு

இன்றைய காலப்பகுதி இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு மிகவும் முக்கியமான காலப்பகுதியாகும். வடக்கில் தமிழ் மக்கள் அன்றாடம் மடிந்துகொண்டிருக்க தெற்கிலோ ஊடகங்களின் முதுகெலும்பு உடைக்கப்பட்டு பல வாய்ப்பூட்டுக்கள் போடப்பட்டு ஒரு இக்கட்டாநிலை காணப்படும் இந்த சூழ்நிலையில் ஊடகத்துறையின் ஒரு அங்கமாக விளங்கும் சஞ்சிகைகளின் பணியானது மிகமுக்கியமானதாக கருதப்படுகின்றது.

பொதுவாக ஊடகம் எனும்பொழுது அவை மக்களுக்காக செயற்படும் ஒன்றாக அன்றிலிருந்து இன்றுவரை காணப்படுகின்றது. ஊடகத்திலும் குறிப்பாக பத்திரிகைகள் சஞ்சிகைகளை நாம் பார்த்தோம் என்றால் ஒரு மொழியின் வளர்ச்சிக்கு இவை பிரதான பங்கு வகிக்கின்றது. எழுத்து என்பது ஒவ்வொரு இனத்துக்கும் அவ்வினத்தின் மொழியினுடைய வளர்ச்சிக்கும் முக்கியமானதொன்று. ஒவ்வொரு இனத்தினுடைய வரலாறுகளையும் கலாச்சாரம் பண்பாடுகளையும் அவற்றினுடைய தனித்துவங்களையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்லக்கூடிய உன்னதமான பணியினைச் செய்யக்கூடய ஒன்றாக இந்த ஊடகப்பணி காணப்படுகின்றது. இதிலும் சஞ்சிகைகளுக்கு முக்கியமானதொரு இடமுண்டு.

இன்று இலங்கையில் சுமார் 15 சஞ்சிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
பல சஞ்சிகைகள் தொடர்ச்சியாகவும், சில தடங்கல்கள் தாமதங்களுடன் வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் அவை பற்றி எங்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்றால் அது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதற்கான முதற்காரணமாக இவைகள் மக்களை சென்றடையும் வழிமுறைகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இரண்டாவது பல சஞ்சிகைகள் தங்களுக்கென்று எல்லைகளை வகுத்துக்கொண்டு அந்த வட்டங்களுக்குள் உள்ள வாசகர்களை திருப்திபடுத்த முயல்வதே ஆகும்.இவ்வாறான பல காரணங்களுக்காக நாட்டிலுள்ள ஏனைய தமிழ் பேசும் மக்களின் கைகளை அவை சென்றடைவதில்லை.

ஜனரஞ்சகத் தன்மையையும் தாண்டி காலத்தின் கண்ணாடியாக சஞ்சிகைகள் இருக்கவேண்டும் .அந்தந்தக் காலங்களில் நடப்பவற்றை எதிர்காலத்தில் உள்ளவர்களும் அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை இந்த சஞ்சிகைகள் வழங்க வேண்டும் என்பதே என்னுடைய அவா. இற்றைக்கு 2000ம் வருடங்களுக்கு முன்னர் திருவள்ளுவர் குறள்பாக்களை ஓலைச்சுவடிகளில் எழுதி வைக்காமல் வெறுமனே பாடிவிட்டு போயிருந்தால் இன்று எங்களுக்கு திருக்குறள் என்ற ஒன்று இல்லாமலேயே போயிருக்கும். அதே போலத்தான் மற்றமற்ற வரலாறுகளுக்கும் எமக்கு கிடைத்திருக்காது.

எனவே இன்றைய பதற்றமான சூழ்நிலையில் கொலைகள் அச்சுறுத்தல்கள் சவால்கள் இவையெல்லாவற்றையும் தாண்டி வெறுமனே இந்தியாவில் வெளியிடப்படும் சஞ்சிகைளைப் போலஅல்லாது தமிழ் பேசும் மக்களின் முகவரியாக தனித்துவமாக இவை அமையவேண்டும். அதே போல நாங்களும் அவற்றிற்கு எமது பங்களிப்புக்களை செலுத்தி இவற்றின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்க வேண்டும். இந்தியாவிலிருந்த வெளிவரும் சஞ்சிகைகளை பலமடங்கு பணம் செலவு செய்து ஓடர் கொடுத்து வாங்கிப் படிக்கும் எங்களுக்கு சராசரி விலைகளில் கிடைக்கும் உள்ளுர் சஞ்சிகைகளை வாங்குவதற்கு தயக்கமாக இருக்கிறது. முதலில் இந்தியா மோகத்திலிருந்து நாங்கள் விடுபட வேண்டும்.எங்களுடைய உள்ளுர் படைப்புக்களுக்கு நாம் ஆதரவளிப்போம். உள்ளுர் படைப்புக்களின் வளர்ச்சிக்கு நாங்களே பங்களிப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் அழிவடைந்துவரும் தழிழரின் வரலாறுகள் தமிழ் மொழியின் சிறப்புக்கள எதிர்காலத்தில் நிலைத்திருக்கும்.

28 ஜனவரி 2009

வானொலி நாடக எழுத்தாளர்களுக்கான சந்தர்ப்பம்

யங் ஏசியா தொலைக்காட்சி நிறுவனம் ஆரம்பிக்கவுள்ள வானொலி நாடக நிகழ்ச்சித்தொடருக்கான நாடக எழுத்தாளர்களை தேர்ந்தெடுக்கும் நோக்கில் திறந்த போட்டிக்கான விண்ணப்பமும் கோரப்படுகிறது.

வானொலி நாடக பிரதி எழுதுவதில் ஆர்வமுள்ளவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். நீங்கள் விரும்பும் தலைப்பில் வானொலி நாடகத்திற்கு பொருத்தமான கதையொன்றினை 1500 – 2000க்கு இடைப்பட்ட சொற்கள் கொண்டதாக சிங்களம் அல்லது தமிழ் மொழியில் தெளிவான கையெழுத்தில் எழுதி யங் ஏசிய டெலிவிஷன் நிறுவன முகவரிக்கு அனுப்பவும்.

இந்தப் போட்டியில் தெரிவு செய்யப்படும் 8 பேருக்கு வானொலி நாடக எழுத்தாக்கம் தொடர்பான பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ளும் வாய்ப்பை நாம் வழங்குவதோடு இந்த பயிற்சிப்பட்டறையில் தெரிவுசெய்யப்படும் 6 பேருக்கு சுமார் 2 வருடங்கள் முழுநேர வானொலி நாடக எழுத்தாளராக யங் ஏசியா டெலிவிஷன் நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பும் வழங்கப்படும்.

வானொலி நாடக கதையுடன் உங்களது சுயவிபரக் கோவையை 2009 பெப்ரவரி 20ம் திகதிக்கு முன் “வானொலி நாடக பிரதியாக்கல் போட்டி”, யங் ஏசியா டெலிவிஷன், இல 713, டி. பி. விஜேசிங்க மாவத்தை, பெலவத்தை, பத்தரமுல்லை எனும் முகவரிக்கு எழுதியனுப்பவும்.

20 ஜனவரி 2009

அருகிவரும் தமிழரின் அடையாளங்கள்


பேஸ்புக் இணையத்தளத்தில் இலங்கையிலிருந்து ஒலிபரப்பாகும் வெற்றி எப் எம் வானொலியின் குழுவில் குழும அங்கத்தவர் ஒருவர் கேட்டிருந்த கேள்வி காரணமாகவே இப்படியொரு பதிவெழுதுவதற்கு எனக்கு தோன்றியது. தமிழர்கள் தற்போது இருக்கும் சூழ்நிலையில் இது போன்ற பொங்கல் விழா தேவையா என்று அந்த நண்பர் கேள்வியை கேட்டு விமர்சித்திருந்தார். ஏனென்றால் வெற்றி வானொலி தைப்பொங்கல் தினத்தன்று பொங்கல் போட்டியொன்றை கதிரேசன் ஆலயத்தில் ஒழுங்கு செய்திருந்தது. எனவே இவற்றை பற்றி ஒரு பதிவினை கட்டாயம் இடவேண்டும் என எனக்கு தோன்றியது.

தமிழர்களுடைய கலாச்சாரங்களை பண்பாடுகளை அவர்களுடைய தனித்துவமான அடையாளங்களை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வாகவே பொங்கல் போன்ற இவ்வாறான பண்டிகைகள் காண்படுகின்றன. தமிழன் ஆதிகாலந்தொட்டே இவ்வாறான கலாச்சாரங்களை
வெளிப்படுத்தும் விழாக்களை நடத்தி வந்திருக்கின்றான். அத்துடன் எங்களுடைய அடுத்த தலைமுறைகளுக்கும் எங்களுடைய தமிழ் கலாச்சாரங்களையும் பண்பாடுகளையும் கொண்டுசெல்வதற்கு பாதையாக உள்ள ஒரு வழியாகவும் இவை காணப்படுகின்றது. ஆரம்பகாலத்தில் தமிழர்கள் பொங்கலை வெகுவிமர்சையாக கொண்டாடியிருந்தார்கள். அதிகாலையிலேயே எழுந்து முற்றத்திலே கோலம் போட்டு மண்பானையில் அவர்களுடைய சுற்றத்தாருடன் மகிழ்ச்சியாக பொங்கினார்கள். அதன் பிற்பாடு தமிழர்களுடைய வீர விளையாட்டுக்களை கிராமத்தாருடன் போட்டியாக விளையாடி தங்களது அன்றைய நாளை சிறப்பாக கொண்டாடினார்கள்.

ஆனால் இன்று சூரிய ஒளிகூட புகமுடியாத மாடிமனைகளுக்குள் முற்றம் என்றால் என்னவென்று தெரியாத பிள்ளைகளுடன் சமையல் எரிவாயு அடுப்புக்களில் நான்கு சுவர்களுக்குமிடையில் பொங்கவேண்டிய சூழலுக்கு உள்ளாகியிருக்கிறோம். அதன்பிறகு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சிகளையும் கண்குளிரப் பார்த்துவிட்டு அன்றைய நாளை அப்படியே கழித்துவிடுகின்றோம். மிகவும் வருத்தம் தரும் விடயம் என்னவென்றால பணப்பரிசு கொடுத்துத்தான் தற்போது பொங்கலை பொதுஇடத்தில் பொங்கவேண்டியிருக்கிறது. பொங்கல் நாளுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கல் பற்றி பலபேருக்கு தெரியாது. இதனல் இப்போது உள்ள இளைய சந்ததிகள் இவ்வாறான விழாக்களைப்பற்றி சரியாக தெரிந்துகொள்ள முடியாதவர்களாய் அறியதவர்களாக உள்ளனர் என்பது எதிர்காலத்தில் தமிழர்களுடைய கலாச்சாரங்கள் எப்படியிருக்கப் போகின்றது என்பதை அனுமானிக்க கூடியதாக உள்ளது.

இவ்வாறான நிலமை ஏற்படுவதற்கு யாரையும் குற்றம் கூறமுடியாது. ஏனென்றால் கலாச்சாரங்கள் அருகி வருவதற்கு பல காரணங்களை குறிப்பிடலாம். இலங்கையை பொறுத்தவரையில் யுத்தமும் அதன்மூலம் ஏற்படுகின்ற புலம்பெயர்வுகளுமே முதற்காரணமாக காணப்படுகின்றது. அதன்பிறகு ஏனைய கலாச்சாரங்களின் தாக்கம் சினிமா போன்றவற்றையும் குறிப்பிட்டு கூறலாம். ஆனாலும் வருடத்தில் ஒரு நாள் இவ்வாறு வருகின்ற விழாவைக்கூட பண்பாமுகளுடன் முன்னெடுக்க முடியாதவர்களாய் இருக்கின்றோமா என சிந்திக்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது.

எனவேதான் இவ்வாறான விழாக்களை முன்னெடுப்பதற்கும் தமிழ் கலச்சாரங்கள் அழிவடைந்து விடக்கூடாது என்பதற்காக இவ்வாறான விழாக்களை பொதுவான ஓர் இடத்தில் நடாத்தவேண்டிய நிலை காணப்படுகின்றன. அவ்வாறு இல்லாமல் போனால் எதிர்காலத்தில் "பொங்கலோ அப்படியெண்டால் என்ன?" என்று கேட்கும் நிலை உருவாகும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும். தமிழர்கள் தற்போது இருக்கும் நிலையில் ஆடம்பரங்களை தவிர்த்து விழாக்களை சிறப்பாக கொண்டாடினால் மிகவும் சிறப்பாக இருக்கும். எனவே தமிழர்களுடைய பாரம்பரிய விழாக்களை முன்னெடுப்பதற்கு யாரும் பின்னிற்க கூடாது. இவற்றை முன்னெடுத்து அதன்மூலம் எங்களுடைய தனித்துவங்களை எதிர்கால சந்ததிகளும் தெரிந்துகொள்ளும் வழிவகைகளை மேற்கொள்ளும் கடப்பாடு எங்களுக்கு உள்ளதென்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடவும் கூடாது.