A Promised Land

06 பிப்ரவரி 2009

இன்றைய சூழலில் சஞ்சிகைகளின் பங்களிப்பு

இன்றைய காலப்பகுதி இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு மிகவும் முக்கியமான காலப்பகுதியாகும். வடக்கில் தமிழ் மக்கள் அன்றாடம் மடிந்துகொண்டிருக்க தெற்கிலோ ஊடகங்களின் முதுகெலும்பு உடைக்கப்பட்டு பல வாய்ப்பூட்டுக்கள் போடப்பட்டு ஒரு இக்கட்டாநிலை காணப்படும் இந்த சூழ்நிலையில் ஊடகத்துறையின் ஒரு அங்கமாக விளங்கும் சஞ்சிகைகளின் பணியானது மிகமுக்கியமானதாக கருதப்படுகின்றது.

பொதுவாக ஊடகம் எனும்பொழுது அவை மக்களுக்காக செயற்படும் ஒன்றாக அன்றிலிருந்து இன்றுவரை காணப்படுகின்றது. ஊடகத்திலும் குறிப்பாக பத்திரிகைகள் சஞ்சிகைகளை நாம் பார்த்தோம் என்றால் ஒரு மொழியின் வளர்ச்சிக்கு இவை பிரதான பங்கு வகிக்கின்றது. எழுத்து என்பது ஒவ்வொரு இனத்துக்கும் அவ்வினத்தின் மொழியினுடைய வளர்ச்சிக்கும் முக்கியமானதொன்று. ஒவ்வொரு இனத்தினுடைய வரலாறுகளையும் கலாச்சாரம் பண்பாடுகளையும் அவற்றினுடைய தனித்துவங்களையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்லக்கூடிய உன்னதமான பணியினைச் செய்யக்கூடய ஒன்றாக இந்த ஊடகப்பணி காணப்படுகின்றது. இதிலும் சஞ்சிகைகளுக்கு முக்கியமானதொரு இடமுண்டு.

இன்று இலங்கையில் சுமார் 15 சஞ்சிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
பல சஞ்சிகைகள் தொடர்ச்சியாகவும், சில தடங்கல்கள் தாமதங்களுடன் வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் அவை பற்றி எங்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்றால் அது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதற்கான முதற்காரணமாக இவைகள் மக்களை சென்றடையும் வழிமுறைகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இரண்டாவது பல சஞ்சிகைகள் தங்களுக்கென்று எல்லைகளை வகுத்துக்கொண்டு அந்த வட்டங்களுக்குள் உள்ள வாசகர்களை திருப்திபடுத்த முயல்வதே ஆகும்.இவ்வாறான பல காரணங்களுக்காக நாட்டிலுள்ள ஏனைய தமிழ் பேசும் மக்களின் கைகளை அவை சென்றடைவதில்லை.

ஜனரஞ்சகத் தன்மையையும் தாண்டி காலத்தின் கண்ணாடியாக சஞ்சிகைகள் இருக்கவேண்டும் .அந்தந்தக் காலங்களில் நடப்பவற்றை எதிர்காலத்தில் உள்ளவர்களும் அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை இந்த சஞ்சிகைகள் வழங்க வேண்டும் என்பதே என்னுடைய அவா. இற்றைக்கு 2000ம் வருடங்களுக்கு முன்னர் திருவள்ளுவர் குறள்பாக்களை ஓலைச்சுவடிகளில் எழுதி வைக்காமல் வெறுமனே பாடிவிட்டு போயிருந்தால் இன்று எங்களுக்கு திருக்குறள் என்ற ஒன்று இல்லாமலேயே போயிருக்கும். அதே போலத்தான் மற்றமற்ற வரலாறுகளுக்கும் எமக்கு கிடைத்திருக்காது.

எனவே இன்றைய பதற்றமான சூழ்நிலையில் கொலைகள் அச்சுறுத்தல்கள் சவால்கள் இவையெல்லாவற்றையும் தாண்டி வெறுமனே இந்தியாவில் வெளியிடப்படும் சஞ்சிகைளைப் போலஅல்லாது தமிழ் பேசும் மக்களின் முகவரியாக தனித்துவமாக இவை அமையவேண்டும். அதே போல நாங்களும் அவற்றிற்கு எமது பங்களிப்புக்களை செலுத்தி இவற்றின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்க வேண்டும். இந்தியாவிலிருந்த வெளிவரும் சஞ்சிகைகளை பலமடங்கு பணம் செலவு செய்து ஓடர் கொடுத்து வாங்கிப் படிக்கும் எங்களுக்கு சராசரி விலைகளில் கிடைக்கும் உள்ளுர் சஞ்சிகைகளை வாங்குவதற்கு தயக்கமாக இருக்கிறது. முதலில் இந்தியா மோகத்திலிருந்து நாங்கள் விடுபட வேண்டும்.எங்களுடைய உள்ளுர் படைப்புக்களுக்கு நாம் ஆதரவளிப்போம். உள்ளுர் படைப்புக்களின் வளர்ச்சிக்கு நாங்களே பங்களிப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் அழிவடைந்துவரும் தழிழரின் வரலாறுகள் தமிழ் மொழியின் சிறப்புக்கள எதிர்காலத்தில் நிலைத்திருக்கும்.

கருத்துகள் இல்லை: