இன்றைய இயந்திர உலகத்தில் மிகவும் முக்கியமான எல்லோராலும் விரும்பப்படும் துறையாக ஊடகத்துறை விளங்குகிறது. அதிலும் பத்திரிகைத்துறை என்பது கல்வியறிவு உள்ள எல்லோராலும் விரும்பப்படுகின்ற ஒரு துறை ஆகும்.அதனாலேயே பத்திரிகைத்துறையை பற்றி நான் இங்கே எழுத தலைப்பட்டுள்ளேன்.
ஆரம்ப காலத்தில் அரசியலின் மற்றும் ஒரு கருவியாக இருந்த பத்திரிகைத்துறை நாளடைவில் மருகி இப்பொழுது பெரும்பாலும் மக்களுக்காகவே நடாத்தப்படும் ஒரு துறையாக காணப்படுகிறது.இந்த பத்திரிகைத்துறை இவ்வளவு வளர்ச்சி பெற்றதற்கு காரணம் மக்களின் படிப்பறிவு/எழுத்தறிவு வளர்ச்சியை கூறலாம்.
தொலைக்காட்சி,வானொலி ,இணையம் போன்ற மக்கள் தொடர்பு ஊடகங்கள் இன்று எவ்வளவோ இருந்தாலும் பத்திரிகைகளுக்கு மக்களிடத்தில் உள்ள முக்கியத்துவம் இன்றும் குறையவில்லை.மாறாக அதிகரித்து உள்ளதென கூறலாம் .இதற்கு காரணம் மக்களின் மனச்சாட்சிகளாக திகழ்பவை இந்தப் பத்திரிகைகள் தான் என்பதை கூறினால் அது மிகையாகாது.அதற்காக ஊடகத்துறையில் உள்ள ஏனையவற்றை குறைத்தும் மதிப்பிட முடியாது என்பதையும் இங்கே சுட்டிககாட்டப்பட வேண்டியுள்ளது.
இன்று பல நாடுகளின் தலைவிதியை தீர்மானிக்கவும் கூட இந்த பத்திரிகைகளால் தான் முடியும் என்பதும் இந்தப் பத்திரிகைத் துறைக்கான முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும்.மேலும் இன்றைய நிலையில் பத்திரிகைகளுக்கு சமூக,இன,மொழி நோக்கு ஒரு புறம் இருந்தாலும் கூட மற்றைய தொழில்களை போல இதுவும் ஒரு முக்கிய தொழிலாக மாறிவிட்டது. ஆனாலும் இதற்கு ஒரு சமூகக் கடமை இருக்கின்றது என்பதை ஒருபோதும் மறந்து விடக் கூடாது.அத்துடன் பத்திரிகைகளின் மீது மக்களுக்கு உள்ள நம்பகத்தன்மைக்கு பாதகம் இல்லாமல் செய்திகளை வெளியிடுவது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.
இவ்வளவு பெருமை பெற்ற இந்தத் துறைக்கு எதிராக இன்று செய்தித்தணிக்கை, அலுவலக்கங்கள் மீது தாக்குதல், உண்மையை கூறினால் தடை,சிறை, ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்,கொலை, அடக்குமுறை,வாய்ப்பூட்டு, போன்ற இன்னும் பல தண்டனைகளும், கண்டனங்களும், தாக்குதல்களும்,இவைக்கு எதிராக இன்று காத்துக்கொண்டு நிற்கின்றது.இதனாலேயே பத்திரிகையில் வேலை என்றதும் இலங்கையில் பலர் தலை தெறிக்க ஓடுவதும் இலங்கையில் பத்திரிகைத்துறைக்கான எதிர்காலத்தை கேள்விக்குரியதாக்கி உள்ளது.
பத்திரிகைத்துறையானது துணிச்சல் மிகுந்த,சவாலான,மகிழ்ச்சியான பணித்தான் ஆனாலும் இலங்கையை பொறுத்த வரையில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பணியாற்றும் ஒரு துறையாக மாறியிருக்கிறது.