
அண்மையில் என்னுடைய அலுவலக பணிp நிமித்தம் ஹட்டன் நகருக்கும் பின்னர் அக்கரபத்தன நகருக்கும் சென்றேன். நாங்கள் புதிதாக தொடங்கவிருக்கும் பெண்களும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளும் என்ற தொனிப் பொருளை கொண்ட நிகழ்ச்சிக்கு தேவையான தகவல்களை திரட்டுவதே அந்த பயணத்தின் நோக்கம். மலையகத்தை சார்ந்த பெண்களே குடும்ப மற்றும் சமூக வன்முறைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள்.
அங்கு சென்று கதைக்க போதுதான் எங்களுக்கு இன்னுமோர் விடயமும் தெரிய வந்தது. அதாவது பெண்களின் தோட்ட சம்பளத்தை ஆண்களே பெற்றுக் கொள்ளும் துரதிஸ்டவசமான நிலை. பல பெண்களோடு கதைத்த போது அவர்கள் கூறியது எங்ளுக்கு எவ்வளவு சம்பளம் என்று தெரியாது. ஆம்பிளைங்கதான் எங்களுடைய சம்பளத்தையும் சேர்த்து எடுப்பார்கள். கேட்ட பொழுது சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
இதைப்பற்றி சில ஆண்களையும் கேட்ட போது அவர்களும் பெண்களுடைய சம்பளத்தை பரம்பரை பரம்பரையாக ஆண்கள் நாங்கள்தான் எடுத்திட்டு வாறோம். பெண்கள் சம்பளம் எடுக்க போகின்றது இல்லை. இவ்வாறு கிடைத்தது பதில். மலையகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க பாடுபடும் சில சமூக சேவையளர்களும் இதே பதிலை எமக்கு கூறியது மேலும் எமக்கு அதிர்ச்சியாகவிருந்தது. ஏன் பெண்களை அவர்களே உழைத்து பெறும் சம்பளத்தை பெற்றுக்கொள்ள அனுப்பக்கூடாது என திரும்பவும் கேட்டால் ஒரே பதிலைத்தான் அர்களிடமிருந்தும் பெற்றுகொள்ள முடிந்தது.
பெரும்பாலனா ஆண்கள் சம்பளத்தை எடுத்துக் கொண்டு நகர்ப்புற மதுபானசாலைகளை நோக்கித்தான் செல்வார்களாம். வீட்டில் மனைவி சம்பளத்தை பற்றி கேட்டால் பெரிய ரணகளத்தையே உருவாக்கி விடுவார்களாம் நம்முடைய குடிமக்கள். அதைவிட பெரிய சம்பவம் என்னவென்றால் மலையகத்திற்கு விடிவை பெற்றுதருவோம் என மேடைகளில்; வீராவேசப் பேச்சுகளை பேசும் அரசியல்வாதிகளும் கூட தங்களுடைய வெற்றிக்காக மதுபானத்தை வாரியிறைப்பதும் தாரளாமாக கடந்த தேர்தல்களிலும் நடந்திருக்கிறது.
வன்முறைகளை பற்றி பொலிஸில் ஏன் முறைபாடு செயவதில்லையென்றால் குடும்ப கௌரவம் போய்விடும் எனும் பயம்தான் காரணமென பெரும்பாலானவர்கள் கூறுகின்றார்கள். இவ்வாறு பலவாறான பிரச்சனைகளை நாளுக்கு நாள் சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள் மலையகமும் அங்கு வாழும் பெண்களும். இவற்றிலிருந்து விடுபட அவர்கள் தெளிவடைய வேண்டும்.

2 கருத்துகள்:
நான் ஒரு விடயம் கேள்விப் பட்டிருக்கிறன்; பெண்கள் பெறும் சம்பளத்தை ஆண்கள் பறிப்பது மது அருந்துவது. பொதுவாக எல்லா இடங்களிலும் நடக்கும் கொடுமை இது.
நன்றி சிந்து
மலையகத்தில் இது சற்று அதிகம்.
கருத்துரையிடுக