A Promised Land

22 ஆகஸ்ட் 2016

நான் எழுதிய புலமைப்பரிசில் பரீட்சை - (சுய புராணம்)




நான் புலமைப்பரிசில் பரீட்சை எழுதியது 1996 ஆம் ஆண்டு. அவ்வருடம்தான் நாங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து பூநகரி ஊடா புதுக்குடியிருப்புக்கு பயணித்து புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலய தற்காலிக முகாமில் தங்கியிருந்தோம். யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டு புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்றது. அத்தோடு 1995 ஆம் ஆண்டு பரீட்சையினை தவறவிட்டவர்களுக்கும் 1996 ஆம் ஆண்டே பரீட்சை இடம்பெற்றிருந்தது.

நிற்க, என்னுடைய சொந்த ஊர் இளவாலை. போரின் காரணமாக 1991 இல் இடம்பெயர்ந்து ஊரைவிட்டு ஓடத்தொடங்கி சில்லாலை மானிப்பாய், பருத்தித்துறை என பல இடங்களில் தற்காலிகமாக தங்கியிருந்து 1996 இல் நாம் வன்னிக்கு இடம்பெயர்ந்து சென்றிருந்தோம். பருத்தித்துறையில் வசிக்கும்போதே புலமைப்பரிசில் பரீட்சைக்கான தயார்ப்படுத்தல்களில் என்னுடைய தாயார் என்னை ஈடுபடுத்தியிருந்தார். 1994 என நினைக்கின்றேன் பருத்தித்துறை கலட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த என்னை ஸ்கொலஷிப்ல சித்தியடைய வைக்கவேணும் எண்டதுக்காக தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்திலும் சேர்த்திருந்தார். அப்போது கணபதிப்பிள்ளை என்ற அதிபரே அங்கு கடமையாற்றியிருந்தார். புலமைப்ரிசில் பரீட்சைக்கு ஆயத்தம் என்று அம்பிகைபாகனின் பயிற்சிப் புத்தகங்கங்களாக வாங்கிக் குவித்து ஒவ்வொருநாளும் பயிற்சி. அத்துடன் விசேட ரியூசன். (இடையே நான் செய்த குழப்படிகள் தாங்காமல் மானிப்பாயிலுள்ள அம்மப்பாவின் வீட்டுக்கு அனுப்பி படிப்பிச்சதெல்லாம் பெரிய கதை)

இப்படி படித்துக்கொண்டு இருந்த சந்தர்ப்பத்தில்தான் 1995இன் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் இலங்கை இராணுவத்தின் ஒப்பரேசன் ரிவிரச என்று நினைக்கின்றேன். அந்த ஆயுத நடவடிக்கை ஆரம்பமானது. இதனால் மானிப்பாயிலிருந்த அம்மப்பா அம்மம்மா மற்றும் பெரியம்மா கும்பத்தினரும் பருத்தித்துறையிலுள்ள எம்முடன் வந்துவிட்டனர். விடுதலைப்புலிகளும் தாம் யாழ்ப்பாணத்தைவிட்டு பின்வாங்ப் போவதாகவும் மக்கள் எல்லோரையும் தம்முடன் வரும்படி அறிவித்திருந்த நேரம். ஏற்கனவே பல ஆயிரக்கணக்கான மக்கள் வன்னிக்கு சென்றுவிட்டிருந்தனர். சென்று கொண்டிருந்தனர். நாம் இறுதியாகவே 1996 இன் நடுப்பகுதியில் (ஆனி மாதம் என்று நினைக்கின்றேன்) யாழிலிருந்து இடம்பெயர்ந்து கிளாலி ஊடாக பூநகரி சென்று அங்கிருந்து பாராவூர்தியில் புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணியம் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாமிலேயே தங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது.

அங்கு தங்கியிருக்கும் போதுதான் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவேண்டி ஏற்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து நாங்கள் இடம்பெயர்ந்திருந்ததால் நான் ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேட பரீட்சை நிலையத்திலேயே பரீட்சை எழுதியிருந்தேன். நாம் தங்கியிருந்த புதுக்குடியிருப்பிலிருந்து ஒட்டுசுட்டானுக்கு செல்ல விசேட பேரூந்தும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. யார் அதனை ஒழுங்கு செய்திருந்தார்கள் என்று ஞாபகமில்லை. தற்காலிக முகாமில் தங்கியிருந்த பல மாணவர்களும் என்னுடன் சேர்ந்து பரீட்சை எழுதியிருந்தார்கள். கிட்டத்தட்ட 8 மாதங்களாக படிக்கவில்லை. எந்தவித முன்னாயத்தங்களும் இல்லாமலேயே அப்பரீட்சைக்கு நான் தோற்றியிருந்தேன்.

பரீட்சை மண்டபத்திற்குள் நுழையும்போதே என்னுடைய பெயரிலை ஏதோ பிரச்சனை. அதையெல்லாம் சரிசெயது பரீட்சை மண்டபத்தில் அமர்ந்து பரீட்சைத் தாளை கையில் வாங்கி அவசர அவரமாக தெரிந்த கேள்விகளுக்கெல்லாம் விடையெழுதி தெரியாதவைகளுக்கு குருட்டு மதிப்பிலும் ஊகத்திலும் விடையெழுதி கடைசிப் பக்கத்தை திருப்பினால் சிங்கள மொழியிலும் கேள்கிகள் சில கேட்கப்பட்டிருந்தன. சில நிமிடங்கள் அந்த சிங்கள எழுத்துக்களை கூர்ந்து அவதானித்தேன். இப்பவும் சரியாக ஞாபகமிருக்கின்றது. ஒன்றுமே தெரியாது. நான் செய்தவேலை சிங்களத்தில கேடட்கப்பட்ட கேள்விகளை அப்படியே பார்த்து அதை விடை எழுதும் பகுதியில் அப்படியே எழுதிவிட்டேன்.

பரீட்சை எழுதி முடித்துவிட்டு நாம் மீண்டும் தற்காலிக முகாமுக்கு வந்து அதன்பிறகு 4ஆம் வட்டாரத்தில் இருந்த அம்மப்பாவிடம் படித்த மாணவன் ஒருவரின் தயவில் அவரின் வளவுக்குள் வீடு ஒன்றை அமைத்து அங்கே தங்கியிருந்தோம். சில மாதங்களில் புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளும் வெளியாகியிருந்தன. ஆனால் என்னுடைய பரீட்சை முடிவோ பருத்தித்துறை தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்திற்கு சென்றிருந்தது. அதனால் நான் சித்தி பெற்றுவிட்டேனா அல்லது சித்தியடையவில்லையா என்று தெரியாமல் போய்விட்டது. தற்போது இருப்பதுபோல் எந்தவிதத் தொலைத்தொடர்புகளும் இல்லாத நிலையில் கடிதம்மூலம் எனது தாயார் என்னுடைய பரீட்சை முடிவுகளைப் பற்றி அதிபரிடம் விசாரித்திருந்தார்.



கிட்டத்தட்ட மூன்று நான்கு மாதங்களுக்கு பின்னர் சிவப்பிரகாச அதிபரான கணபதிப்பிள்ளை அவர்களிடமிருந்து கடிதம் வந்திருந்தது. அம்மாவும் நாமும் மிகுந்த பரபரப்புடன் கடிதத்தை பிரித்தோம். 'உங்கள் மகன் 113 புள்ளிகள் பெற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருக்கின்றார்' என்று அதிபர் கணபதிப்பிள்ளை அவர்கள் அறிவித்திருந்தார். அத்துடன் அந்த வருடத்திற்கான யாழ் மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ள 96 என்றும் தெரிவித்திருந்தார். அதன் பிறகு அதிபர் எமக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஊக்கத்தொகைக்கான படிவங்கள் உள்ளிட்டவற்றை கடிதம்மூலம் அனுப்பியிருந்தார். பின்னர் 2001 இல் நான் யாழ்ப்பாணம் சென்றபோது அந்தப் பணத்தினை மொத்தமாக எடுக்கக்கூடியதாக இருந்தது. இதுதான் நான் புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய வரலாறு.

26 ஏப்ரல் 2016

பாதுகாப்பான ஜனநாயக நாடுகளில் இருந்துகொண்டு ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடத் தூண்டாதீர்!


அண்மையில் கனடாவில் இடம்பெற்ற ஈ-குருவி நிகழ்வின் சிறப்புப் பேச்சாளராக இலங்கையின் ஊடகவியலாளரான திரு நிலாந்தன் அவர்கள் பங்குபற்றி நீண்ட உரையொன்றினை நிகழ்த்தியிருந்தார். இந்த உரையானது இந்தியத் தமிழர்கள் மத்தியில் எவ்வளது தாக்கத்தை செலுத்தியதோ தெரியாது ஆனால் இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஓரளவு தாக்கத்தினை செலுத்தியது எனக் கூறலாம்.

அவர் தன்னுடைய உரையின் பிரதானமான விடயமாக ஈழத் தமிழர்கள் (இந்த “ஈழத் தமிழர்” எனும் சொற்பதம் இன்னமும் இலங்கையில் நீண்ட கலந்துரையாடலுக்கு உட்படுத்த வேண்டிய விடயம்) தமிழகத் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் இந்த மூன்று பிரிவினரும் ஒன்றுபட்டு ஒரே தேசமாக சிந்திக்கவேண்டும் அதனடிப்படையிலேயே செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் அப்படி செயற்படாவிட்டால் ஈழத் தமிழர்களுக்கு விடிவு கிடைக்காது, அதற்கு இந்த மூன்று தரப்பினரும் எவ்வகையான ரீதியில் செயற்படவேண்டும் என்றவாறாக தன்னுடைய உரையினை நிகழ்த்தியிருந்தார்.

திரு நிலாந்தன் அவர்கள் குறிப்பிட்டபடி இந்த மூன்று பிரிவினரும் ஒன்றுபட்டு சிந்தித்து செயலாற்ற முடியுமா என்பது மிகப்பிரதானமான கேள்வி. குறைந்த பட்சம் இலங்கையில் இருக்கும் தமிழர்களும் புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களும் ஒன்றுபட்டு செயற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். ஆனால் இந்தியத் தமிழர்களை இந்த இலங்கை மற்றும் புலம்பெயர் ஆகிய இரண்டு தரப்பினருடனும் ஒன்றிணைக்க முடியுமா என்பது சந்தேகமே. ஆனால் இந்தியத் தமிழர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களுடன் இணைந்து செயலாற்றும் சந்தர்ப்பங்கள் அதிகமாகவே காணப்படுகின்றது. தற்போதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த இரண்டு தரப்பினரும் செயற்பட்டு வருகின்றார்கள்.

ஆகவே இலங்கை இந்திய புலம்பெயர் ஆகிய மூன்று தமிழ்த் தரப்பினரும் இலங்கையில் தமிழ்த் தேசியத்தினை கட்டியெழுப்ப ஒரே ரீதியில் செயற்பட முடியுமா என்பது சந்தேகமே! காரணம் இந்தியத் தமிழர்கள் செல்லும் பாதையோ முற்றிலும் வேறுபட்டது. அப்படி ஒருவேளை இந்தியத் தமிழர்கள் இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழர்களுடன் செயற்பட ஆரம்பிக்கின்றார்கள் என்று வைத்துக்கொண்டால் சீனாவின் மேலாதிக்கத்தை வென்று ஆசியாவின் சண்டியனாக இல்லையில்லை வல்லரசாக முயற்சிக்கும் இந்தியா அதை எப்படி கையாளும் என்று சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை.

ஆகவே சாத்தியமில்லாத முன்று தரப்புக்களின் ஒன்றிணைவை கையில் வைத்துக்கொண்டு இந்த மூன்று தரப்பினரும் ஒன்றுபட்டால்தான் இலங்கையில் தமிழ்த் தேசியத்தினை கட்டியெழுப்ப முடியும் என்ற ஒரு மாயையினை தொடர்ந்தும் மக்கள் மத்தியில் தக்க வைத்திருக்க முயற்சிப்பதும் அபாயமானது. இலங்கையில் தமிழர்கள் தாங்களும் இலங்கையர், ஒரு தேசிய இனம் என்று கருதி செயற்படத் தொடங்கினாலேயே மாற்றங்களை காணமுடியும் என்பது என்னுடைய நம்பிக்கை. ஆனால் இந்தக் கூட்டிணைவு என்ற மாயை எப்போதும் அவர்களை அவ்வாறு சிந்தித்து செயற்படவிடாதோ என்ற அச்சம் இயல்பாகவே எழுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகின்றது.

திரு நிலாந்தன் அவர்கள் இந்த உரையாடலில் சில விடயங்களை மிகவும் நுணுக்கமான கோரிக்கையாக புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி முன்வைத்திருந்தார்.

அதில் பிரதானமான இரண்டு விடயங்களைக் குறிப்பிடலாம். முதலாவது “மிகவும் உச்சபட்ச ஜனநாயக முறைமையுள்ள நாடுகளில் மிகுந்த பாதுகாப்பாக நீங்கள் இருந்து கொண்டு, எம்மை அதாவது இலங்கையில் இருப்பவர்களை ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்காதீர்கள்" அது உங்களுடன் இணைந்து எம்மை செயலாற்றவைப்பதற்கு தடையான ஒரு காரணியாக அமைந்துவிடும்.

இரண்டாவது புலம்பெயர்ந்து வாழும் இரண்டாம் மூன்றாம் தலைமுறை தமிழர்கள் இலங்கை வந்து பணியாற்றவும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை.

உண்மையிலேயே திரு நிலாந்தன் அவர்களால் முன்வைக்கப்பட்ட சில கோரிக்கைகளில் இந்த இரண்டு கோரிக்கைகளுக்கு உள்ளும் ஆழமான அர்த்தங்கள் பொதிந்து நிற்கின்றன. இந்த இரண்டு கோரிக்கைகளையும் புலம்பெயர் தமிழர்களும் இலங்கையிலுள்ள தமிழர்களும் உள்ளாந்தமாக சரிவரப் புரிந்து கொண்டு செயற்படுவார்களெனில் இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் எதிர்காலத்தில் நன்மை கிட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவே காணப்படுகின்றது.

ஒரு நாட்டின் அரசில் எப்போதுமே வரையறையின்றி செல்வாக்குச் செலுத்துபவர்கள் அந்தந்த நாடுகளின் சிறுபான்மை மக்களான வியாபார பணக்காரர்களே என்ற உண்மை இலங்கையிலிருக்கும் தமிழர்களுக்கும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கும் சரிவரை மண்டைக்குள் உறைக்காதவரை இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்கள் எப்போதுமே தாம் தாழ்வுச் சிக்கல் நிலைக்குள் இருந்துகொண்டு  உலகத்தின் முன்னோக்கிய பயணத்தில் பின்னோக்கியே போய்க்கொண்டிருப்பார் என்பது நிஜம்.

20 ஏப்ரல் 2016

தெறி - வயது வந்தவர்களுக்கு மட்டுமான திரைப்படம்!





கடந்த புத்தாண்டில் வெளியாகி தற்போது திரையரங்குகளில் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தெறி திரைப்படத்தினை நேற்றுத்தான் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது.
சினிமா விமர்சகர்கள், விமர்சகரல்லாதோர், பேஸ்புக் ருவிட்டர் என்று எழுதித்தள்ளும் அனைவரும் விமர்சனங்களை பல கோணங்களில் எழுதி முடித்தும்விட்டார்கள்.
ஆனாலும் இந்தப்படத்தை பார்க்கும்போது என்னை உறுத்தில சில விடயங்களை எழுதவேண்டும் எனத் தோன்றியது.

இந்தப்படத்தின் கதைக்குள் மூன்றே விடயங்கள் காணப்படுகின்றது. முதலாவது பழிவாங்கும் கொடூரமான வன்முறை, இரண்டாவது செண்டிமண்ட், மூன்றாவது மீனாவின் பொண்ணு.

உண்மையிலேயே வன்முறைகள் அதிகமாக காணப்படும் படமொன்றை பார்ப்பதற்கு சிறுவர்கள் அனுமதிக்கப்படுவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாததொன்று.

இந்தப்படத்தில் வன்முறையையும் வைத்துவிட்டு சிறுவர்களை தியட்டருக்கு வரவைப்பதற்காக மீனாவின் மகளை நடிக்க வைத்திருக்கின்றார்கள். அந்தப் பிள்ளை பேசுறது முக்கால்வாசி விளங்குதுமில்லை. இவ்வாறான வன்முறையான திரைப்படங்களை பார்வையிடும்போது சிறுவர்கள் இயல்பாகவே வன்முறையை இரசிக்க ஆரம்பித்துவிடுகின்றார்கள். ஆகவே குறைந்த பட்சம் 13 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரமே இவ்வகையான வன்முறைகள் நிரம்பிய படங்களை திரையிடுவதற்கான தணிக்கையினை வழங்கவேண்டும்.

ஆனால் துரதிஷ்டவசமாக சிறுவர்களின் சமூகத்தின் உளவியலைப் புhஜந'துகொண்டு தணிக்கை வழங்குவதற்கான தணிக்கையாளர்கள் இல்லையென்பதே உண்மை.

அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படமும் இதே வகையறாதான்.

தெறிபடத்தில் இவற்றை விட ஏற்கனவே பலர் விமர்சனங்களில் குறிப்பிட்டதுபோல காட்சிகள் வசனங்கள் என்பவை இதற்கு முதல் வெளிவந்த பல படங்களை நினைவுபடுத்தி நிற்கின்றன.

அவ்வளவுதான்!

03 ஜனவரி 2016

ஜனாதிபதியின் கடந்தவருட (2015) ஜனவரி மாத நாட்குறிப்பு

ஜனவரி 2015

08 - இலங்கையின் 7வது ஜனாதிபதியினைத் தெரிவு செய்வதற்கான  ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்றது.


09 - இலங்கையின் 6வது நிவைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியாக கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 




  • மாலையில் உயர் நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் முன்னிலையின் ஜனாதிபதியாக மைத்ரிபால சிறிசேன அவர்கள் பவதிப்பிரமாணம் செய்துகொண்டார்.   



  • ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க அவர்கள் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.  







11 - கண்டி தலதா மாளிகையிலிருந்து ஜனாதிபதி அவர்கள் நாட்டுமக்களுக்கு உரையாற்றினார். 






 






12 - 27 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 10 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 8 பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில்
 ஜனாதிபதி கௌரவ மைதரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.





13 - காலையில் இலங்கைக்கு விஜயம்செய்த பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்களை ஜனாதிபதி அவர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார். 


  • மாலை பரிசுத்த பாப்பரசர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம் பெற்றது. 





16 - ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக ஜனாதிபதி அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். 

20 - ஜனாதிபதி தலைமையிலான புதிய பாராளுமன்றம் கூடியது.

21 - முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா அவர்களை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலுமிருந்து விடுவித்து ஜனாதிபதி அவர்களால் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டது. 

23 - மத்திய வங்கியின் ஆளுனராக அர்ஜுன் மகேந்திரன் அவர்கள் ஜனாதிபதி
அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

29 - ஜனாதிபதி அவர்களின் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

30 - இலங்கையின் 45வது பிரதம நீதியரசராக கே.ஸ்ரீபவன் அவர்கள் ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். 



02 ஜனவரி 2016

மட்டத்தேள் கடியும் பச்சை மிளகாய் விலையும்


மிகுந்த கோலாகலமாக 2016ம் ஆண்டும் வெகுவிமாசையாக மலந்துள்ளது. 2015ம் வருடத்தினைப் போலல்லாது இந்த வருடமானது  மக்களின் மனங்களில் பயங்கள் இல்லாமல் சுதந்திரமாக வருடப் பிறப்பினை வெடி கொழுத்தி கொண்டாடக்கூடியதாக இருந்தது எனும் பொழுது சற்று ஆறுதல். 

இந்தப் புத்தாண்டு மட்டத்தேள் கடியுடன்தான் ஆரம்பித்திருக்கின்றது. புத்தாண்டு விடுமுறையில் ஊருக்கு வந்து காலாறியபோது விசமற்ற மட்டத்தேள் ஒன்று (கடிச்சு 18 மணித்தியாலம் தாண்டியும் இன்னமும் உயிரோட இருக்கிறதால)  சமையம்பார்த்து காலைக் கவ்விவிட்டது. வழமையான கட்டெறும்பு கடிபோலல்லாது கொஞ்சம் வித்தியாசமாக கடுமையாக வலிக்கும்போதுதான் கடிச்சது மட்டத்தேள் என்பதை கண்டுபிடித்து அதற்கு மரண தண்டனை கொடுக்கக்கூடியதாக இருந்தது. 



என்னடாப்பா வருசத்தண்டே "மட்டத்தேள் கடி, மரண தண்டனை" எல்லாம்
நன்மைக்குத்தான் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டு கண்ணயர்ந்து கண்முழித்தால் இன்று மதிய சமையலுக்கு மரக்கறி வாங்க கடைக்கு போட்டு வா என்று அம்மா கோரிக்கை. சரியெண்டு பையினையும் தூக்கிக்கொண்டு ஊரிலையே மிகவும் பிரபல்யமான “மலர் கடை” க்கு போய் 100கிராம் பச்சமிளகாய் போடுங்கோ எண்டால் பதிலுக்கு 100 கிராம் பச்சமிளகாயின்ட விலை 100 ரூபாய் கிலோ 1000 ரூபாய் போடட்டா என்று பதிலுக்கு கேட்கவும் அப்படியே புது வருடத்தின் இரண்டாவது அதிர்ச்சி. பச்சமிளகாய்கு அடிச்ச காலம் என்று நினைத்துக்கொண்டு 50 கிராம் தாங்கோ எண்டு வாங்கிக்கொண்டு வீட்டபோய் அம்மாட்டை சொன்னால் உனக்கு தெரியாதே எண்டு சாராதரணமாகக் கேட்கிறா. (வருசம் முழுக்க கடையிலையே சாப்பிட்டா பச்சமிளகாய்ட விலை எப்படித் தெரியும்)

மக்களே பச்சைமிளகாய் ஆராட்சியாளர்களின் ஆராட்சியின்படி 6000 ஆண்டு காலத்திற்கும் முன்பிலிருந்தே காரத்தை உணவில் அதிகரிப்பதற்காக உணவில் பயன்படுத்தும் இந்தப் பச்சை மிளகாய் விலை இப்படி கிடுகிடுவென  ஏறியதால் நீங்கள் ஒவ்வொருவரும் வீடுகளில் பச்சமிளகாயனை உற்பத்தி செய்தால் உங்களுடைய வீட்டுத் தேவைக்கான பச்சமிளகாய்களை நீங்களே உற்பத்தி செய்துகொள்ளக் கூடியதாக இருக்கும். வீணான செலவினையும் குறைத்துக் கொள்ளலாம். இதை இந்த 2016ம் ஆண்டின் மிகமுக்கியமான தீர்மானமாக எடுத்துக்கொள்ளுங்கள். 

வருடம் பிறந்து 2வது நாளெண்டாலும் பரவாயில்லை இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்களே!