A Promised Land

21 ஜனவரி 2013

“சித்தார்த்தனும்” “கௌதம புத்தரும்”



எதிர்வரும் வாரம் முதல் இலங்கையின் திரையரங்குகளில் “சித்தார்த்த” என்ற சிங்களப்படம் திரைக்கு வரவிருக்கின்றது. யார் இந்த கௌதம சித்தார்த்த என்றால் கி.மு 500ம் ஆண்டுகளில் நேபளத்தின் லும்பினி எனுமிடத்தையாண்ட அரசனின் புத்திரன். தன்னுடைய வாழ்க்கையில் பெறக்கூடிய அதியுச்ச இன்பங்களையெல்லாம் உட்சபட்சமாக அனுபவித்த அரசிளங்குமாரன். அதன் பின்னரே அவனுக்கு ஆசைகளின் மேல் வெறுப்பு ஏற்பட்டு அரண்மனை சொகுசு வாழ்க்கையினைவிட்டு வெளியேறி துறவு பூண்டு அரசமரத்தின் கீழ் ஞானம் அடைந்து கௌதம புத்தரானவர் என்று வரலாறுகள் கூறுகின்றன. இது தொடர்பான தகவல்களை  http://ta.wikipedia.org/s/58x  இந்த விக்கிபீடியா முகவரியில் விரிவாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

இந்த சித்தார்த்தரை பற்றிய திரைப்படமே வெளிவரவிருக்கின்றது. இது தொடர்பாக இந்த திரைப்படத்தினுடைய இயக்குனர் அண்மையில் ஊடகமொன்றுக்கு பேட்டிகொடுத்திருந்தார். அதில் அவர் இந்த சித்தார்த்த திரைப்படத்தினுடைய கதையினை இந்தியாவில் இருக்கின்ற ஒரு இயக்குனரிடம் காட்டியதாகவும் அதற்கு அவர் இதை நல்ல ஒரு திரைக்கதை எழுத்தாளரிடம் கொடுத்த எழுதும்படியும் கூறியிருக்கின்றார். அதன்பிரகாரம் பொலிவூட் திரைக்கதை எழுத்தாளரினைக் கொண்டு சித்தார்த்த திரைக்கதை எழுதப்பட்டிருக்கின்றது. ஆனால் அந்த எழுத்தாளர் எழுதிய திரைக்கதை எமது நாட்டுக்கு உகந்தது அல்ல என்று கூறி மீண்டும் திரைக்கதையினை இயக்குனரும் அவருடைய குழுவினரும் இங்கேயே எழுதி அதனையே படமாக்கியிருக்கின்றார்கள்.

உண்மையில் அந்த பொலிவூட் எழுத்தாளர் எழுதிய திரைக்கதை உண்மையில் சித்தார்த்தருடைய வாழ்க்கையினை சரியான முறையில் சொல்லியிருந்திருக்க வேண்டும். ஆனால் அது இவர்களுக்கு பிடிக்காமல் போனதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஏனென்றால் இலங்கையை பொறுத்தளவில் பிறந்த நாளிலிருந்தே புத்தர் ஞானமடைந்தவர் என்பதாகவே இலங்கை பௌத்தர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே “சித்தார்த்த” திரைப்படத்தினுடைய கதை நிற்சயமாக இலங்கையில் வாழுகின்ற பௌத்தர்களை திருப்பத்திப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டிருக்கும் என்பதை இயக்குனரின் பேட்டியிலிருந்து ஊகிக்கலாம். அதுமட்டுமல்லாது இந்த திரைப்படத்தினை 30ஆயிரம் பௌத்த துறவிகளுக்கு இலவசமாக திரையிட்டுக் காட்டப்போகின்றார்களாம். ஆகவே 30 ஆயிரம் பௌத்த துறவிகளும் 30 ஆயிரம் விகாரைகளில் இதைப்பற்றி சொன்னார்களானால் படம் நிற்சயம் இலங்கையில் சுப்பஹிட்ஸ் ஆகிவிடும். அடுத்த 3 மாதத்திற்கு இலங்கையின் திரையரங்குகளில் “சித்தார்த்த” தான்.



20 ஜனவரி 2013

"யாழ்ப்பாணமும்" உடைக்கட்டுப்பாடும்


முற்குறிப்பு -  இது ஒரு கட்டுரையல்ல என்னுடைய ஆதங்கம். விரும்பினால் தொடர்ந்து வாசியுங்கள் இல்லாவிட்டால் தயவுசெய்து வாசிக்காதீர்


அண்மையில் இணையத்தில் ஒரு செய்தியினை பார்க்கக்கிடைத்தது. “யாழில் குட்டைப் பாவாடைஅணியும் பெண்களுக்கு எச்சரிக்கை” என்ற தலைப்பிலேயே அந்த செய்தியினை பார்க்கமுடிந்தது. உள்ளே சென்று பார்த்தால் ஆங்கே ஆண்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த இணையத்தளத்தில் செய்தியினைப்போட்டவன் பெண்களை மட்டும் குறிவைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது போலவாகவே தலைப்பினை அமைத்திருந்தான். இந்த செய்தியினை நான் பேஸ்புக்கில் பகிரும் போது “யாழில் இருக்கின்ற மனநோய் வியாதியுள்ள நாய்களில் சிலதுதான் இப்படியான சுவரொட்டியுடன் சம்பந்தப்பட்டிருக்கும்” என்று கூறியிருந்தேன்.

இந்த செய்தியைப்பார்த்தவுடன் எனக்கு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது அவர்கள் உடைதொடர்பாக போட்டிருந்த சட்டங்களும் அந்தசட்டங்களை அமுல்படுத்தில விதமும்தான் நினைவுக்கு வந்தன. அதுவும் ஆண்களுக்குத்தான்  விசேடமாக உடைதொடர்பான கட்டுப்பாடுகள் அங்கே காணப்பட்டன. (வன்னியில் இருந்தவர்களை;தவிர எத்தனை பேருக்கு அப்படியான சட்டங்கள் அங்கு இருந்தனவென்று தெரியுமோ தெரியாது) ஏனென்றால் இந்த சட்டத்தால் என்னுடைய உறவுக்கார அண்ணா ஒருவர் நேரடியாக பாதிக்கப்பட்ட சம்பவம் ஞாபகத்திற்கு வந்ததுதான் காரணம். இந்த சம்பவம் இடம்பெற்றது 2000ம் ஆண்டு காலப்பகுதி.
அதுவும் புதுக்குடியிருப்பில் இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்திய “கானகன்” என்ற காவல்துறை உறுப்பினரைத்தான் எனக்கு உடனடியாக ஞாபகம் வந்தது. எனக்கு உறவினர்முறையான ஒரு அண்ணாவின் அம்மா வவுனியா சென்று திரும்பிவரும்போது கொண்டுவந்த இருபக்;கமும் வெளிப்புறமாக பொக்கட்டுக்கள் உள்ள ஒரு நீளக்காற்சட்டையினையே (ஜீன்ஸ்) அவர் அன்று போட்டுக்கொண்டு வீதிக்கு வந்திருந்தார். அவருடன் நானும் செல்லும்போது வீதியில் நின்ற கானகன் இதைகண்டுவிட்டான். உடனேயே அண்ணாவை மறிச்சு பேசிவிட்டு தன்னிடம் இருந்த பிளேட் ஒன்றினால் வெளியில் இருந்த காற்சட்டை பொக்கட்டுக்களை வெட்டி எடுத்துவிட்டு இனி இப்படியான உடுப்பு போட்டால் உள்ளுக்கதான் இருக்க வேண்டிவரும் என்று எச்சரிக்கை செய்துவிட்டு அனுப்பினான். நாம் எதுவும் பேசமால் வாய்மூடி மௌனியாக சென்றுவிட்டோம். அன்று அந்த அண்ணா திருப்பி ஏதாவது கதைக்க போயிருந்தா “பற்பொடி தரேக்குள்ளதான் விடிஞ்சுட்டுது” என்று தெரிந்துகொள்ளும் நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கும்.


இவ்வாறு வன்னிக்குள் நாங்கள் இடம்பெயர்ந்து 6 வருடங்கள் இருந்தபோது விரும்பியோ விரும்பாமலோ வெளி உலகுடன் தொடர்பற்ற ஒரு மூடிய இறுக்கமான கட்டமைப்புக்குள் வாழவேண்டிய நிலையொன்று ஏற்பட்டது. அதனாலேயே 2003ம் ஆண்டு சமாதானப்பேச்சுவார்த்தை ஆரம்பித்து பாதை திறந்தவுடன் “யாழ்ப்பாணத் தமிழர்களகளாகிய” நாம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீண்டும் இராணுவக்கட்டுப்பாடான யாழ்ப்பாணத்திற்கு ஓடவேண்டிய நிலை ஏற்பட்டது. (போராளி, மாவீரர் குடும்பங்களை தவிர)


இதை நான் ஏன் இங்கு சொல்லுகின்றேன் ஏன்றால் சமூகப்பிரச்சனைகள் அதிகரிக்க அதிகரிக்க அவற்றின் ஆரம்ப காரணிகளை பிற்போக்குத்தனங்களை கண்டுபிடித்து அதை இல்லாமல் செய்வதற்கு முயற்சிக்காமல் இவ்வாறு போஸ்டர் அடித்து சமூகத்தை பயமுறுத்தி அதன் ஊடான காரியம் சாதிக்க நினைப்பது படுமுட்டாள்தனம். குட்டைப்பாவாடை அணிவதால்தான் அல்லது உள்ளாடை வெளியில் தெரிய போவதால்தான் யாழ்ப்பாணக் கலாச்சாரம்(?) அழிகின்றது என யாரும் நினைத்தாலே அவன் உண்மையிலேயே ஒரு மனநோய் வியாதி உள்ளவன்தான். இப்படியான மனநோய் வியாதி உள்ளவர்கள் இப்போது சமூகத்தில் அதிகரித்து செல்வது ஆரோக்கியமான விடயமல்ல.

ஏராளமான குப்பைகளை உள்ளே மூடிமறைத்துக்கொண்டு வெளியே போலியான ஒரு பொய் வாழ்க்கையினையே நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இந்த போலிப் பொய் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு எம்மத்தியில் இருக்கும் சமூகத்தில் இருக்கும் பிற்போக்குத்தனங்களை அதுவும் முதலில் தமது குடும்ப மட்டத்திலிருந்து அகற்ற முயற்சிசெய்யவேண்டும். அவ்வாறு செய்தாலே ஆரோக்கியமான சமூகம் ஒன்று எதிர்காலத்தில் தோன்றும்.

பிற்குறிப்பு : விடுதலைப் புலிகளைப்பற்றி சொல்லியிருக்கிறேன் யாழ்ப்பாணத்தைப்பற்றி புலம்பியிருக்கிறேன் ஆனா யாழில நிக்கிற ஆமிக்காரரைப்பற்றி ஒண்டுமே சொல்லேல்லையே எண்டு யாராவது நினைச்சா அது உங்கட முட்டாள்தனம்தான். 

19 டிசம்பர் 2012

"இனி அவன்" திரைப்படம் டிசம்பர் 21ம் திகதி முதல் நாடுமுழுவதும்...





கான்ஸ் சர்வதேச திரைப்பட விழா, ரொரண்டோ சர்வதேச திரைப்பட விழா,  டோக்கியோ சர்வதேச திரைப்பட விழா, உட்பட உலகம் முழுவதும் பல திரைப்படவிழாக்களில் காண்பிக்கப்ட்டு பெரும் வரவேற்பினைப்பெற்ற இயக்குனர் அசோக ஹந்தகமவின் புத்தம் புதிய திரைப்படம் “இனி அவன்” டிசம்பர் 21ம் திகதி முதல் இலங்கை இரசிகர்களுக்காக இலங்கை முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தமிழ் மக்களுடைய வாழ்க்கையினை பிரதிபலிக்கக்கூடிய இப்படம் சர்வதேச ரீதியில் இடம்பெற்ற திரைப்பட விழாக்களில் கவனத்தை ஈர்த்ததோடு மட்டுமல்லாது இலங்கையில் முதன்முறையாக இன மொழி வேறுபாடுகளற்ற வகையில் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் இரசித்துப் பார்க்கக்கூடியவகையில் “இனி அவன்” திரைப்படம் இலங்கை சினிமா இரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தினை வழங்கவிருக்கிறது.


இலங்கையின் புகழ்பெற்ற இயக்குனர் அசோக ஹந்தகமவின் இயக்கத்தில் இலங்கை நடிகர்களான தர்ஷன் தர்மராஜ், சுபாஷினி பாலசுப்ரமணியம், நிரஞ்சனி சண்முகராஜா, ராஜா கணேசன், மல்கம் மசாடோ மற்றும் கிங் ரட்ணம் உட்பட பலர் இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்கள். அத்தோடு ஒளிப்பதிவு சண்ண தேசப்பிரிய, இசை கபில பூகலஆராச்சி, படத்தொகுப்பு அஜித் ராமநாயக்க, கலை சுனில் விஜேரத்ன ஆகியோருடன் ஈ - கல்ச்சர் புரொடக்ஷன் வழங்கும் “இனி அவன்” திரைப்படத்தினை ஜகத் வெள்ளவத்தை மற்றும் அனுர பெர்னாண்டோ ஆகியோர் தயாரித்திருக்கின்றார்.



09 நவம்பர் 2012

நான்!




"நான்" என்பது வெறும் இரண்டெழுத்து சொல் என்று நானே கருதினால் என்னைவிட இந்த உலகத்தில் முட்டாள் யாருமில்லை என்றுதான் அர்த்தம். "நான்" என்னும் இரண்டெழுத்து அர்த்தப்படுத்திய அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கின்ற அல்லது அர்தப்படுத்தப் போகின்ற விடயங்கள் எதிர்காலத்தில் என்னைச்சார்ந்த வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக இருக்கப்போகும் ஒன்று. எப்போது எனக்குள், நான் யார்? நான் என்ன செய்யவேண்டும்? எனத்தேடத்தேடத் தொடங்ங்கும்போதே பகுத்தறிவு என்ற ஒன்று இருப்பதை உணர்ந்துகொள்ள முடிகின்றது...

ஆரம்பத்தில் நான் யார் என்று தேட ஆரம்பித்தபோது என்னுடைய ஒவ்வொரு அசைவுகளையும் தீர்மானிப்பது சமூகம் என்ற ஒரு மாயை என்பதை புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. நான் யார் என்பதை தீர்மனிக்கும் புள்ளி எனக்குள் இல்லாமல் எனக்கு வெளியே இருப்பதை உணர்ந்தபோது அதனுளிலிருந்து வெளியேறவேண்டும் என்ற ஒரு உத்வேகம் என்னுள் ஏற்படுகின்றது.  ஆனாலும் இந்த சமூகம் என்னை ஒரேயடியாக அவ்வளவு இலகுவில் வெளிவர அனுமதி மறுத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு காரணம் என்னுடைய தெரிவுகளை வலுக்கட்டாயமாக இந்த சமூகம் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கின்றது.  இந்த மாயையிலிருந்து வெளிவரும்போது "நான்" என்பதற்கான அர்த்தத்தினை தேடி இலகுவில் பயணிக்கலாம் என்று புலப்படுகின்றது.

தேடல் பயணம் தொடரும்...

15 ஜூலை 2012

தலைப்பு...???


வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகின்றான் என்ற ஒரு பழமொழி தமிழில் இருப்பது எல்லோரும் அறிந்த ஒரு விடயம். எனக்கு சிறு வயதுமுதலே வாசிப்பதில் ஈடுபாடு இருக்கின்றது அவற்றில் ஒன்றுதான் நாவல்கள் படிப்பது. நாவல்கள் படிப்பது எனக்கு மிகவும் விருப்பமான பொழுதுபோக்கு. எழுத்தாளர் சாண்டிலியன் அவர்களுடைய நாவல்களை விரும்பி படிப்பேன். நான் என்னுடைய வாழ்நாளில் முதன்முதலாக படித்த நாவல் சாண்டிலியனின் “கடற்புறா” இதுவே எனக்கு எழுத்தாளர் நாவலாசிரியர் சாண்டிலியனை அவருடைய படைப்புக்களை விரும்புவதற்கு முதற்காரணமாக இருக்கலாம் என்று நினைக்கின்றேன்.


“பெரிய மனிதர்கள் எப்பேர்பட்ட பெரிய காரியத்தை சாதித்தாலும் அதைப்பற்றி பிரஸ்தாபிக்காமல் அடக்கமாகவே இருப்பார்கள்.  அவர்கள் சாதித்த காரியத்தைப்பற்றி யாராவது பேச முற்பட்டாலும் அந்தப் பேச்சில் கலந்துகொள்ள வெட்கப்படுவார்கள். ஏனென்றால் பெரிய காரியங்களை சாதிப்பது அவர்களுக்கு சர்வசாதாரணம். சின்ன மனிதர்களில் நிலமை வேறு. சாதாரண காரியங்களை சாதிப்பதே அவர்களுக்குப் பிரம்ம பிரயத்தனமாகையினால் தாங்கள் எதைச்செய்தாலும் அதை பிரமாதமாகவே நினைக்கின்றார்கள். இதனால் தலை கிறுக்கேறி அவர்களது மனேநிலை புரண்டுவிடுவதால் சந்தர்ப்பா சந்தர்ப்பமில்லாமல் தாங்கள் செய்த காரியங்களைப்பற்றிப் பெருமை அடித்து கேட்பவர்களு எரிச்சலை உண்டு பண்ணுவதோடு தங்களையும் பெரிய சங்கடத்தில் மாட்டிவைத்துக்கொள்கிறார்கள்.”


மலைவாசல் நாவலின் ஒரு அத்தியாயத்தை நாவலாசிரியர் சாண்டிலியன் மேலுள்ள இந்த பந்தியோடு ஆரம்பிக்கின்றார். எவ்வளவு அழகான ஒரு உண்மையை தனது நாவலின் ஒரு கதாபாத்திரத்தின் செயற்பாட்டை சொல்லவரும்முன் இந்த ஒரு பந்திமூலம் அழகாக கூறுகின்றார். இன்று வாசித்து முடித்த மலைவாசல் நாவலில் காணப்பட்ட எங்களுடைய வாழ்க்கைக்கு மிகமுக்கியமான இந்த நல்ல கருத்தினை எல்லோருக்கும் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற காரணத்தினால் பதிவேற்றுகின்றேன்.



03 மார்ச் 2012

மெரினா - விமர்சனமல்ல ஒரு பார்வை



சமுதாயத்திற்கு ஆக்கபூர்வமான விடயங்களை சொல்லும் திரைப்படங்கள் தமிழ்சினிமாவில் வெளிவருவது குறைவு. அப்படி வரும் படங்கள் மக்களால் இரசிக்கப்படுபவையாகவும் அவர்களுடைய மனங்களில் என்றும் இடம்பிடிப்பவையாக இருந்திருக்கின்றது. அத்தோடு விருதுகளும் வாங்கியிருக்கின்றன. அந்தவகையில் கடந்தமாதம் வெளியான திரைப்படம்தான் மெரினா.



பசங்க படத்தின்மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமாகி அந்தப்படத்திற்கு தேசிய விருதையும் பெற்று இந்திய சினிமாவையே தனதுபக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவரான இயக்குனர் பாண்டிராஜின் இன்னுமொரு காத்திரமான படைப்புத்தான் இந்த மெரினா. தனது படங்களில் சிறந்த திரைக்கதையையும் அலட்டல் இல்லாத இயல்பான நடிப்பை நடிகர்களிடமிருந்து பெற்று சிறந்த படமாக வழங்கும் இவர் மெரினாவிலும் இதே பாணியினை கையாண்டிருக்கிறார். அத்துடன் இவரே தயாரித்து வெளியிட்டு இருக்கும் படம் என்பதும் சிறப்பு.



இயக்குனர் உண்மையான கதாபாத்திரங்களை கதைக்குள் புகுத்தி அதை கதைக்கு ஏற்றதுபோல மெருகூட்டி அலட்டல் இல்லாத நடிப்பை அந்தந்த கதாபாத்திரங்கள்மூலம் திரைப்படமாக வழங்கியிருப்பது நன்றாக இருக்கிறது. படத்தில் அம்பிகாபதியினை சுற்றியே திரைக்கதை அமைக்கப்பட்டு அந்த கதாபாத்திரத்துன் ஏனைய துணைக்கதாபாத்திரங்களை திரைக்கதையில் கொண்டுவந்திருப்பது சிறப்பானதாக இருக்கின்றது. அம்பிகாபதியாக வரும் பக்கடா பாண்டி அம்பிகாபதி என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறான். அத்தோடு ஏனைய சிறுவர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.  ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நச்சென்று பதிந்துபோகும் வகையில் இருப்பது இயக்குனருடைய திறமை.


சிவகார்த்திகேயன் செந்தில்நாதன் எனற கதாபாதத்திரத்தில் நன்றாக செய்திருக்கிறார். ஏற்கனவே சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள்மூலம் தனது திறமைகளால் சிறியோர் முதல் பெரியவர்களின் மனங்களில் இடம்பிடித்த ஒருவராக இருந்துகொண்டு வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் இவருடை முதல்படமே நல்ல ஒரு இயக்குனருடைய வித்தியாசமான படமான அமைந்திருப்பது இவருக்கு எதிர்காலத்தில் நல்ல ஒரு இடத்தினை தமிழ் சினிமாவில் தேடிக்கொள்ள ஆணிவேராக அமைந்திருக்கிறது. இவர் வரும் இடங்களிலெல்லாம் சிரிப்போ சிரிப்பு. பிரகாசமான எதிர்காலம் சிவகார்த்திகேயனுக்கு காத்திருக்கு என்பதில் எந்தவித ஐயமில்லை. ஓவியாவுடனும் கதைக்கேற்றபடி நன்றாக நடித்திருக்கிறார். ஓவியாவும் அலட்டிக்கொள்ளாத நடிப்பால் கவர்கின்றார். அதேபோல் செந்தில்நானுடைய நண்பனாக வரும் சதீசும் கலக்கியிருக்கிறார். அவர் இவர் என்று குறிப்பிட்டு சொல்லாமல் அந்த வயது போன பெரியவர் தொடக்கம் நடனமாடும் அந்த சிறுமிவரை நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.


தொழில்நுட்ப விடயங்கள் என்று பார்க்கும்போது ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் நன்றாக இருக்கிறது. இருவரும் புதுமுகங்கள் என்றாலும் சிறப்பாக தங்களது வேலையை செய்திருக்கிறார்கள். இதே வேளை இசையினைப்பற்றியும் சொல்லவேண்டும் சிறிய வயதேயான புதுமுகம்  "க்ரிஷ் ஜி" ம் அசத்தியிருக்கிறார். பின்ணணி இசையும் நன்றாக இருக்கிறது. "வணக்கம் வாழவைக்கும் சென்னை" மற்றும் "காதல் ஒரு தேவதையின் கனவா" என்றபாடலும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துகள் க்ரிஷ நல்ல ஒரு எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கின்றது.

இன்னொரு முக்கியமான விடயத்தினையும் இங்கே கட்டாயம் நான் குறிப்பிடவேண்டும். ஊடகங்கள் சிவகார்த்திகேயனை மெரினாவினுடைய ஹீரோவாக சித்தரித்தாலும திரைக்கதையில் ஹீரோ பக்கடா பாண்டிதான். சிவகார்த்திகேயனையும் ஓவியாவையும் ஏனையவர்களையும் ஏஜண்ட் கதாபாத்திரங்களாகவே இயக்குனர் திரைக்கதையில் பயன்படுத்தியிருக்கிறார் என்பதுதான் உண்மை.


மொத்தத்தில் இயக்குனர் பாண்டிராஜின் மெரினா அசத்தலான தற்போதைய சூழ்நிலையில் சமூகத்திற்கு தேவையான நல்ல ஒரு காத்திரமான படைப்பு.





*என்னுடைய 4 வருட பதிவுலக வாழ்க்கையில் ஒரு திரைப்படத்தைப்பற்றி எழுதும் முதலாவது பதிவு இதுதான்.*