A Promised Land

09 நவம்பர் 2012

நான்!




"நான்" என்பது வெறும் இரண்டெழுத்து சொல் என்று நானே கருதினால் என்னைவிட இந்த உலகத்தில் முட்டாள் யாருமில்லை என்றுதான் அர்த்தம். "நான்" என்னும் இரண்டெழுத்து அர்த்தப்படுத்திய அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கின்ற அல்லது அர்தப்படுத்தப் போகின்ற விடயங்கள் எதிர்காலத்தில் என்னைச்சார்ந்த வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக இருக்கப்போகும் ஒன்று. எப்போது எனக்குள், நான் யார்? நான் என்ன செய்யவேண்டும்? எனத்தேடத்தேடத் தொடங்ங்கும்போதே பகுத்தறிவு என்ற ஒன்று இருப்பதை உணர்ந்துகொள்ள முடிகின்றது...

ஆரம்பத்தில் நான் யார் என்று தேட ஆரம்பித்தபோது என்னுடைய ஒவ்வொரு அசைவுகளையும் தீர்மானிப்பது சமூகம் என்ற ஒரு மாயை என்பதை புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. நான் யார் என்பதை தீர்மனிக்கும் புள்ளி எனக்குள் இல்லாமல் எனக்கு வெளியே இருப்பதை உணர்ந்தபோது அதனுளிலிருந்து வெளியேறவேண்டும் என்ற ஒரு உத்வேகம் என்னுள் ஏற்படுகின்றது.  ஆனாலும் இந்த சமூகம் என்னை ஒரேயடியாக அவ்வளவு இலகுவில் வெளிவர அனுமதி மறுத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு காரணம் என்னுடைய தெரிவுகளை வலுக்கட்டாயமாக இந்த சமூகம் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கின்றது.  இந்த மாயையிலிருந்து வெளிவரும்போது "நான்" என்பதற்கான அர்த்தத்தினை தேடி இலகுவில் பயணிக்கலாம் என்று புலப்படுகின்றது.

தேடல் பயணம் தொடரும்...

15 ஜூலை 2012

தலைப்பு...???


வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகின்றான் என்ற ஒரு பழமொழி தமிழில் இருப்பது எல்லோரும் அறிந்த ஒரு விடயம். எனக்கு சிறு வயதுமுதலே வாசிப்பதில் ஈடுபாடு இருக்கின்றது அவற்றில் ஒன்றுதான் நாவல்கள் படிப்பது. நாவல்கள் படிப்பது எனக்கு மிகவும் விருப்பமான பொழுதுபோக்கு. எழுத்தாளர் சாண்டிலியன் அவர்களுடைய நாவல்களை விரும்பி படிப்பேன். நான் என்னுடைய வாழ்நாளில் முதன்முதலாக படித்த நாவல் சாண்டிலியனின் “கடற்புறா” இதுவே எனக்கு எழுத்தாளர் நாவலாசிரியர் சாண்டிலியனை அவருடைய படைப்புக்களை விரும்புவதற்கு முதற்காரணமாக இருக்கலாம் என்று நினைக்கின்றேன்.


“பெரிய மனிதர்கள் எப்பேர்பட்ட பெரிய காரியத்தை சாதித்தாலும் அதைப்பற்றி பிரஸ்தாபிக்காமல் அடக்கமாகவே இருப்பார்கள்.  அவர்கள் சாதித்த காரியத்தைப்பற்றி யாராவது பேச முற்பட்டாலும் அந்தப் பேச்சில் கலந்துகொள்ள வெட்கப்படுவார்கள். ஏனென்றால் பெரிய காரியங்களை சாதிப்பது அவர்களுக்கு சர்வசாதாரணம். சின்ன மனிதர்களில் நிலமை வேறு. சாதாரண காரியங்களை சாதிப்பதே அவர்களுக்குப் பிரம்ம பிரயத்தனமாகையினால் தாங்கள் எதைச்செய்தாலும் அதை பிரமாதமாகவே நினைக்கின்றார்கள். இதனால் தலை கிறுக்கேறி அவர்களது மனேநிலை புரண்டுவிடுவதால் சந்தர்ப்பா சந்தர்ப்பமில்லாமல் தாங்கள் செய்த காரியங்களைப்பற்றிப் பெருமை அடித்து கேட்பவர்களு எரிச்சலை உண்டு பண்ணுவதோடு தங்களையும் பெரிய சங்கடத்தில் மாட்டிவைத்துக்கொள்கிறார்கள்.”


மலைவாசல் நாவலின் ஒரு அத்தியாயத்தை நாவலாசிரியர் சாண்டிலியன் மேலுள்ள இந்த பந்தியோடு ஆரம்பிக்கின்றார். எவ்வளவு அழகான ஒரு உண்மையை தனது நாவலின் ஒரு கதாபாத்திரத்தின் செயற்பாட்டை சொல்லவரும்முன் இந்த ஒரு பந்திமூலம் அழகாக கூறுகின்றார். இன்று வாசித்து முடித்த மலைவாசல் நாவலில் காணப்பட்ட எங்களுடைய வாழ்க்கைக்கு மிகமுக்கியமான இந்த நல்ல கருத்தினை எல்லோருக்கும் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற காரணத்தினால் பதிவேற்றுகின்றேன்.



03 மார்ச் 2012

மெரினா - விமர்சனமல்ல ஒரு பார்வை



சமுதாயத்திற்கு ஆக்கபூர்வமான விடயங்களை சொல்லும் திரைப்படங்கள் தமிழ்சினிமாவில் வெளிவருவது குறைவு. அப்படி வரும் படங்கள் மக்களால் இரசிக்கப்படுபவையாகவும் அவர்களுடைய மனங்களில் என்றும் இடம்பிடிப்பவையாக இருந்திருக்கின்றது. அத்தோடு விருதுகளும் வாங்கியிருக்கின்றன. அந்தவகையில் கடந்தமாதம் வெளியான திரைப்படம்தான் மெரினா.



பசங்க படத்தின்மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமாகி அந்தப்படத்திற்கு தேசிய விருதையும் பெற்று இந்திய சினிமாவையே தனதுபக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவரான இயக்குனர் பாண்டிராஜின் இன்னுமொரு காத்திரமான படைப்புத்தான் இந்த மெரினா. தனது படங்களில் சிறந்த திரைக்கதையையும் அலட்டல் இல்லாத இயல்பான நடிப்பை நடிகர்களிடமிருந்து பெற்று சிறந்த படமாக வழங்கும் இவர் மெரினாவிலும் இதே பாணியினை கையாண்டிருக்கிறார். அத்துடன் இவரே தயாரித்து வெளியிட்டு இருக்கும் படம் என்பதும் சிறப்பு.



இயக்குனர் உண்மையான கதாபாத்திரங்களை கதைக்குள் புகுத்தி அதை கதைக்கு ஏற்றதுபோல மெருகூட்டி அலட்டல் இல்லாத நடிப்பை அந்தந்த கதாபாத்திரங்கள்மூலம் திரைப்படமாக வழங்கியிருப்பது நன்றாக இருக்கிறது. படத்தில் அம்பிகாபதியினை சுற்றியே திரைக்கதை அமைக்கப்பட்டு அந்த கதாபாத்திரத்துன் ஏனைய துணைக்கதாபாத்திரங்களை திரைக்கதையில் கொண்டுவந்திருப்பது சிறப்பானதாக இருக்கின்றது. அம்பிகாபதியாக வரும் பக்கடா பாண்டி அம்பிகாபதி என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறான். அத்தோடு ஏனைய சிறுவர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.  ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நச்சென்று பதிந்துபோகும் வகையில் இருப்பது இயக்குனருடைய திறமை.


சிவகார்த்திகேயன் செந்தில்நாதன் எனற கதாபாதத்திரத்தில் நன்றாக செய்திருக்கிறார். ஏற்கனவே சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள்மூலம் தனது திறமைகளால் சிறியோர் முதல் பெரியவர்களின் மனங்களில் இடம்பிடித்த ஒருவராக இருந்துகொண்டு வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் இவருடை முதல்படமே நல்ல ஒரு இயக்குனருடைய வித்தியாசமான படமான அமைந்திருப்பது இவருக்கு எதிர்காலத்தில் நல்ல ஒரு இடத்தினை தமிழ் சினிமாவில் தேடிக்கொள்ள ஆணிவேராக அமைந்திருக்கிறது. இவர் வரும் இடங்களிலெல்லாம் சிரிப்போ சிரிப்பு. பிரகாசமான எதிர்காலம் சிவகார்த்திகேயனுக்கு காத்திருக்கு என்பதில் எந்தவித ஐயமில்லை. ஓவியாவுடனும் கதைக்கேற்றபடி நன்றாக நடித்திருக்கிறார். ஓவியாவும் அலட்டிக்கொள்ளாத நடிப்பால் கவர்கின்றார். அதேபோல் செந்தில்நானுடைய நண்பனாக வரும் சதீசும் கலக்கியிருக்கிறார். அவர் இவர் என்று குறிப்பிட்டு சொல்லாமல் அந்த வயது போன பெரியவர் தொடக்கம் நடனமாடும் அந்த சிறுமிவரை நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.


தொழில்நுட்ப விடயங்கள் என்று பார்க்கும்போது ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் நன்றாக இருக்கிறது. இருவரும் புதுமுகங்கள் என்றாலும் சிறப்பாக தங்களது வேலையை செய்திருக்கிறார்கள். இதே வேளை இசையினைப்பற்றியும் சொல்லவேண்டும் சிறிய வயதேயான புதுமுகம்  "க்ரிஷ் ஜி" ம் அசத்தியிருக்கிறார். பின்ணணி இசையும் நன்றாக இருக்கிறது. "வணக்கம் வாழவைக்கும் சென்னை" மற்றும் "காதல் ஒரு தேவதையின் கனவா" என்றபாடலும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துகள் க்ரிஷ நல்ல ஒரு எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கின்றது.

இன்னொரு முக்கியமான விடயத்தினையும் இங்கே கட்டாயம் நான் குறிப்பிடவேண்டும். ஊடகங்கள் சிவகார்த்திகேயனை மெரினாவினுடைய ஹீரோவாக சித்தரித்தாலும திரைக்கதையில் ஹீரோ பக்கடா பாண்டிதான். சிவகார்த்திகேயனையும் ஓவியாவையும் ஏனையவர்களையும் ஏஜண்ட் கதாபாத்திரங்களாகவே இயக்குனர் திரைக்கதையில் பயன்படுத்தியிருக்கிறார் என்பதுதான் உண்மை.


மொத்தத்தில் இயக்குனர் பாண்டிராஜின் மெரினா அசத்தலான தற்போதைய சூழ்நிலையில் சமூகத்திற்கு தேவையான நல்ல ஒரு காத்திரமான படைப்பு.





*என்னுடைய 4 வருட பதிவுலக வாழ்க்கையில் ஒரு திரைப்படத்தைப்பற்றி எழுதும் முதலாவது பதிவு இதுதான்.*

06 பிப்ரவரி 2012

பொறாமை - சிறிய ஒரு கதை


ஆரோக்கியமான போட்டி ஒருவரை அவருடைய நல்லநிலைமைக்கும் அவனுடைய முன்னேற்றத்திற்கும் காரணமான அமைந்துவிடும். ஆனால் பொறாமை என்பது மிகவும் ஆபத்தான ஒன்று. அது மனிதர்களுடன் இயல்பாகவே இருக்கும் ஒன்றாகும். இந்தப் பொறாமை பலருடைய வாழ்க்கையையே தலைகீழாக திருப்பிபோட்டுவிடக்கூடியது. வகுப்பில் சகமாணவர்களுடன் போட்டி போட்டு படிக்கவேண்டும் பொறாமை இருக்கக்கூடாது என்று என்னுடைய ஆரம்பக்கல்வி தமிழ் ஆசிரியர் வகுப்பில் கூறியது இப்போதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது

சிறிய ஒரு கதை


ஒரு ஊரிலே ஒரு பரம ஏழை அன்றாடம் ஒருவேளை உணவுக்கே அல்லல்பட்டுக்கொண்டு இருக்கின்றான். ஒருநாள் அந்தக்கிராமத்திற்கு கொடைவள்ளலான சாமியார் ஒருவர் வருகின்றார். அவரைப்பார்ப்பதற்கு சென்ற அந்த ஏழை குடியானவன் அந்த சாமியாரை பசந்தித்து தனக்கு செல்வங்கள் கிடைத்து தான் நன்றாக வாழ வரமருளவேண்டும் என்று அவரை கோருகின்றான். அவனது கோரிக்கைக்கு இரக்கப்பட்ட சாமியார் அவனைப்பார்த்து உனக்கு நான் சகல சௌபாக்கியங்களும் கிடைத்து வளமான வாழ்க்கை வாழ்வதற்காக நீ கேட்பதை  தருவேன் ஆனால் ஒரு நிபந்தனையோடுதான் தருவேன் எனக்கூறுகின்றார். அந்த நிபந்தனை என்னவென்றால் நீ உன்னுடைய செழிப்பான வாழ்க்கைக்கு எவ்வளவு செல்வங்களை கேட்கின்றாயோ அதேபோல இரண்டு மடங்கானவற்றை உன்னுடைய எதிர் வீட்டுக்காரன் பெறுவான் என்ற நிபந்தனையை போடுகின்றர். அதற்கு அந்தக் ஏழைக்குடியானவன் கலவரமடைந்து யோசிப்பதைப்பார்த்த சாமியார் நீ இன்று வீடு சென்று நன்றாக சிந்தித்து உனக்கு என்ன வேண்டும் என நாளை நீ என்னிடம் வந்து கூறு ஆனால் நீ கேட்பதைப்போல இருமடங்கு உன் எதிவீட்டுக்காரனுக்கு கிடைக்கும் என்று கூறி அனுப்பிவைக்கின்றார். அதேபோல அடுத்தநாளும் அந்தக்ஏழைக்குடியானவன் சாமியாரைப் பார்ப்பதற்கு வருகின்றான. சாமியார் அவனைப்பார்த்து உனக்கு என்ன வேண்டும் என தீர்மானித்து விட்டாயா என கேட்கின்றார் அதற்கு அந்த ஏழைக் குடியானவன் எனது ஒரு கண்ணை எடுத்துவிடுங்கள் நான் சந்தோசமாக இருப்பேன் என்று கூறுகின்றான். இதைத்தான் பொறாமையின் உச்சக்கட்டம் என்று கூறுமுடியும். தனக்கு கிடைப்பதைப்போல இருமடங்கு எதிர்வீட்டுக்காரனுக்கு கிடைக்கும் என்று தெரிகின்றபோது அவனுடைய பொறாமையின் உச்ச வெளிப்பாடக தனது ஒரு கண்ணை எடுத்துவிடும்படி கேட்கின்றான்.

இது ஒரு நான் கேள்விப்பட்ட கற்பனைக்கதையாக இருந்தாலும் பொறாமையின் உச்சக்கட்டத்தை கூறிநிற்கின்றது. பொறாமை என்பது ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமின்றி சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் பரந்துபட்டு இருக்கின்றது. மனிதர்கள் பொறாமையை விட்டு ஆரோக்கியமான போட்டியுடன் செயற்பட்டால் நல்லஒரு நிலையை அடைமுடியும் என்பது வெளிப்படை உண்மை.

02 டிசம்பர் 2011

இனி அவன்... Him, Here after...


இலங்கையின் பிரபல சிங்கள இயக்குனர் அசோக ஹந்தகம இயக்கியிருக்கும் முற்றுமுழுதாக தழிழ்க் கலைஞர்களை வைத்து யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் யுத்தத்திற்கு பின்னரான தமிழ் மக்களுடைய இன்றைய நிலையினை சித்தரிக்கவிருக்கின்றது.

இவர் இதற்கு முன்னர் 2003ம் ஆண்டில் "இவ்வழியால் வாருங்கள்" மற்றும் 2005ம் ஆண்டில் "கிழக்குக்கடற்கரையின் அழைப்பு" என்ற இரு தொலைக்காட்சி நாடகங்களை தமிழில் இயக்கியிருக்கிறார்.

இவர் தற்போது இயக்கி வெளிவரவிருக்கும் திரைப்படத்தின் Trailer...





19 பிப்ரவரி 2011

உலககிண்ண கிரிக்கட் 2011

உலககிண்ண கிரிக்கட்போட்டி ஆரம்பமானப்போகின்றது எங்கு பார்த்தாலும் கதைத்தாலும் கிரிக்கட்தான். இந்தமுறை இந்தியா இலங்கை வங்கதேசம் ஆகிய மூன்று தென்னாசிய நாடுகள் இணைந்து உலகக்கிண்ண கிரிக்கட்போட்டியை நடத்துவது சிறப்பு. எனக்கு கிரிக்கட் விளையாடுவதில் அவ்வளவு ஈடுபாடு இல்லாவிட்டாலும் தொலைக்காட்சியில் கிரிக்கட் பார்ப்பவன். இலங்கை கிரிக்கட் அணியினுடைய இரசிகன். எனக்கு தெரிந்து பல பதிவுலக நண்பர்கள் நாளாந்தம் இதுதொடர்பாக விரிவாகவும் விலாவாரியாகவும் பதிவு எழுதிவருகின்றார்கள். 


இதுவரைகாலமும் ஒரு சர்வதேச போட்டியைகூட நேரடியாக ஆடுகளங்களில் பார்த்ததில்லை இப்பபோது முதன்முறையாக சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது அதுவும் என்னுடைய நண்பர்களுடன் சென்று பார்ப்பதற்கான சந்தர்ப்பம். இலங்கையில் உலகக்கிண்ணப்போட்டியொன்று நடைபெறும்போது அதை தவறவிடக்கூடாது என்று நினைத்திருந்தேன் இப்போது லோஷன் அண்ணா மற்றும் கோபியின் தயவில் கையில் ரிக்கட்டுகள் கிடைத்திருக்கின்றன அதுவும் இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி.
நல்ல ஒரு விறுவிறுப்பான போட்டியாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.


இந்தமுறை உலககிண்ணத்தை இலங்கையே வெல்லவேண்டும் என்பது என்னுடை எதிர்பார்ப்பு. ஆனால் மற்றைய அணிகளையும் குறைத்து மதிப்பிடமுடியாது இலங்கை தவிர இந்தியாவுக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றது அதைவிட நான் எதிர்பார்ப்பது பாக்கிஸ்தான் அணியினரை ஏனென்றால் அவர்கள் எப்போது வெல்வார்கள் எப்போது தோற்பார்கள் என்று கூறமுடியாதிருக்கின்றது அதனால் இந்தமுறை பாக்கிஸ்தானையும் கிண்ணத்தை கைப்பற்றும் அணியினுடைய பட்டியலுக்குள் நான் வைத்திருக்கின்றேன். இதற்கு மற்றுமொரு காரணம் பாக்கிஸ்தான் அணித்தலைவர் அப்ரிடி.



எந்த அணிகிண்ணத்தை சுவீகரித்தாலும் சந்தோஷம்தான் அதிலும் குறிப்பாக இலங்கை கிண்ணத்தை கைப்பற்றினால் இலங்கை அணியினுடைய இரசிகன் என்ற வகையில் மேலும் சந்தோஷப்படுவேன். பொறுத்திருந்து பார்ப்போம் எந்த அணி வெற்றி பெறுகின்றதென்று....